Wednesday, April 28, 2010

காதல் தேர்தல்!

என் இதயநாட்டில்
நடைபெற்ற தேர்தலில்
போட்டியின்றி வென்றவள்
என்னவளே...
நீ மட்டுந்தான்!!

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 04-06-2006

2. அறிமுகம் – 01-06-2009

3. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

உயிர்!

உனை
நிலவென்று சொல்லமாட்டேன்!
தேய்வதும் வளர்வதுமாய்
இருப்பதால்...!

உனை
மலரென்று சொல்லமாட்டேன்!
உதிர்வது மலர்வதுமாய்
இருப்பதால்...!

உனை
மழையென்று சொல்லமாட்டேன்!
கோடையில் பொழிய
மறுப்பதால்...!

உனை
என்னுயிரென்று சொல்வேன்!
நீ பிரிந்தால்
எனக்கு மதிப்பில்லை
என்பதால்...!!

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கோடை பண்பலை – 10-06-2006

நான் மட்டுந்தான்!

காதுகளால் சுவாசிக்கும்
ஒரே மனிதன்
இவ்வுலகில் நான்மட்டுந்தான்!

என்னவளே...
உன் காலடியோசையை
என்காதுகள் சுவாசித்துக்கொண்டே
இருப்பதால்....

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கோடை பண்பலை – 15-07-2006

காதல்!

என்னை தொடாமல்
தொட்டுவிட்டது
என் இதயத்தை!
காற்றல்ல...
காதல்!!

இறைத்தூதன் இயேசு!

மாட்டுத்தொழுவத்தில்
பிறந்து - மரியன்னையின்
மடியில் தவழ்ந்த
மகான்!

அன்பின் மகத்துவத்தை
அன்பினால் உணர்த்த
விண்ணிலிருந்து பிறந்த
வீரத்திருமகன்!

மக்களோடு மக்களாய்
மனிதருள் மாணிக்கமாய்
எக்காலமும் பேர்போற்ற
ஏசுவாய்ப் பிறந்த
மெசியா இவன்!

ஆதவன் உதிப்பது
அகிலம் சிறக்கத்தான்!
பிதாமகன் பிறந்தது
பேருலகம் உய்யத்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

காதல் பிறவி!

ஆசையைத் துறந்தவன்
முற்றுந்துறந்த துறவி! - தாய்
பாசையை மறந்தவன்
காதலில் பிறந்த பிறவி!!

தேடல்!

தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!
மடைதிறந்த வெள்ளம்போல்
மனக்கதவு திறந்ததடி!
படைகள்பல வந்தபோதும்
பாசம்மட்டும் மிஞ்சுதடி!
விடைகாணா கேள்விகளை
வினவமனம் அஞ்சுதடி!!

என்னுள்ளே கடவுளுமுண்டு!
என்னுள்ளே மிருகமுண்டு!
'நான் யார்?'என்ற கேள்விமட்டும்
நாட்கணக்காய் நீளுதடி!

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுதடி!
உண்மையிலா உலகத்திலே!!
கள்ளமும் கபடமும்
களியாட்டம் போடுதடி! - இதை
கவனிக்க யாருமிலையோ!!

தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!

காதல் தோல்வி!

என் மனக்குழந்தைக்கு
மீசை வளரும்முன்னே
தாடி வளர்ந்துவிட்டது!!

அன்பின் சின்னமாய்...!

எந்நேரமும்
உன் நினைவுகளிலேயே
உறைந்து கிடக்கிறேன்
நான்!

இன்று
ஒரு கைக்குழந்தையுடன்
எனைக் கடந்து
போகிறாய் நீ!
எனக்கு முன்னே
அதோ...
தூரத்தில்
மூதாட்டி ஒருத்தி
போய்க்கொண்டிருக்கிறாள்!

நீ என்னிடம் பேசிய
தொலைபேசி உரையாடல்கள்
இன்னும்
என் மூளைக்குள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!

காலங்கள் வேகமாய் கடந்தன! - என்
கால்களும் வேகமாய் நடந்தன!!
நடந்த வேகத்தில்
அம்மூதாட்டியை முந்திவிட்டேன்!

ஏதோஓர் உள்ளுணர்வு
அவள்முகம் பார்க்கச் சொன்னது!

திரும்பி நின்று
அவளைப் பார்த்தேன்!

கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!

அவளும் எனை வெகுநேரமாய்
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்!

அவள் கண்களில்
கண்ணீர்மழை!

தள்ளாடிவந்து
என்மார்மீது சாய்ந்தாள்!

அன்று
கைக்குழந்தையுடன் சென்ற நீ
இன்று
என் கைக்குழந்தையாய்
என் மார்மீது!!

Tuesday, April 27, 2010

இன்னும்...

உன்னை நினைத்து நினைத்தே
கீறல் விழுந்துபோன
இசைத்தட்டு நான்!

இன்னும்
சுற்றிக்கொண்டே இருக்கிறேன்!!

எங்கே நீ?

பச்சிளங்குழந்தை
தாயைத்தேடி அலைவது போல்
என் மனக்குழந்தை
உனை நினைத்து அழுகிறது!

உனைப் பற்றி யாரிடம் பேச...?
என்னருகில் இல்லையே நீ!!

Sunday, April 25, 2010

காதலே சுகம்!

கண்ணீர் வடித்து
வாழ்வதை விட
கவிதைகள் வடித்து
வாழ்வதில்
சுகமெனக்கு!

கடவுளை தொழுது
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!

காற்றை சுவாசித்து
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!!

இனியொரு புதுவிதிசெய்வோம்!

கடந்த 2009 ம் ஆண்டு ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை அறிந்தபோது எழுதிய கவிதை.கண்சிமிட்டும்
கருவறை மொட்டுகள்
கண்திறக்கும்முன்னே
கல்லறையில் பூத்ததென்ன?

மொழியறியாக் குழந்தைகள்
மொழியறியும்முன்னே - தமிழ்
மொழிபேசியதாய் காரணங்காட்டி
பலிகொடுக்கப்பட்டதென்ன?

கடலன்னை தாலாட்டும்
எழில்மிகு தீவு!
புத்தனை கடவுளாய்
வழிபடும் நாடு!
இரத்தத்தில் மிதக்கிறது
கண்டீர்!!

ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படாமலேயே
ஊர் அடங்கியது
உயிர்கள் பிரிந்தன
குட்டித்தீவில்...

அகதியாய் திரிந்த
நம் தாய்த்தமிழ்மொழிக்கு
அடைக்கலம் கொடுத்த
ஈழத் தமிழர்கள்
அகதிகளாய் அடைக்கலம்தேடி!

தமிழ்மொழியின் மானங்காத்த
ஈழ உறவுகள் ஈன உயிர்களாய்...!

போதும்
இனவெறியின் ருத்ரதாண்டவம்!
அந்தோ...
எம்தமிழ்மக்கள் உயிர்பாவம்!!

வீதிகளெங்கும் பிணக்குவியல்!
வறுமையால் அல்ல...
பிணியால் அல்ல...
இயற்கை சீற்றத்தால் அல்ல...
இனவெறியின் சேட்டையால்!!

தமிழகத்தின் மௌனம்!
விளைவு...
தமிழினத்தின் மரணம்!!

இத்தோடு போகட்டும்
இனப்படுகொலை!
அன்பிலே கிடைக்கட்டும்
விடுதலை!!

மனஉறையில் உள்ள
இனவெறிதனை
புதுப்பறை அடித்து
தனிச்சிறையில் வைப்போம்!!

இனியொரு புதுவிதிசெய்வோம்!!

மரங்களை வளர்ப்போம்!

யாருமே தவமிராமல்
இயற்கை நமக்களித்த
வரங்கள்!
மரங்கள்!!

உலக உயிர்களையெல்லாம்
காத்துக்கொண்டிருக்கிற
கடவுள் நீட்டிய
கரங்கள்!
மரங்கள்!!

காற்று வரும் திசையை
நம் கண்களுக்கு உணர்த்தும்
கலங்கரை விளக்கம்!
மரங்கள்!!

உழைத்துக் களைத்த
உழவன்
உறங்கத் துடிக்கும்
தாய்மடி!
மரங்கள்!!

நம் சுவாசக்காற்றை
சுத்திகரித்து அனுப்பும்
சுத்திகரிப்பு ஆலைகள்!
மரங்கள்!!

தாயில்லா குழந்தைகட்கும்
சேயில்லா தாய்தந்தையர்க்கும்
குடிசைகள்கூட இல்லா
ஏழைகட்கும்
தாயாய்... சேயாய்...
குடிசைகளாய்...
மரங்கள்!!

அன்பாலும் கருணையாலும்
பிறரிதயந்தொட்ட
ஞானிகளைப் போல்
இதமான தென்றலால்
வான் மேகங்களை
வருடிக்கொடுத்து
மழைபொழிய வைக்கும்
மகாத்மாக்கள்!
மரங்கள்!!

செடியாய் கொடியாய்
இலையாய் பூவாய்
காயாய் கனியாய்
விதையாய் விறகாய்
சருகாய் மருந்தாய்
தன்னையே அர்ப்பணிக்கும்
தியாகச் செம்மல்கள்!
மரங்கள்!!

ஜாதிமத இனமொழி
வேறுபாடின்றி
பாரினில் உயர்ந்த
நம் பாரத தேசத்தினைப்போல்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
உயிர்கள் அனைத்திற்கும்
அடைக்கலம் தரும்
ஆலயங்கள்!
மரங்கள்!!

மரங்களைப் பார்த்தாவது
மதங்கொண்ட மனிதர்களின்
மனங்கள் மாறட்டுமே!

மரங்களை வளர்ப்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 20-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011

3. காயல்பட்டினம் (இணைய இதழ்) - 31-01-2012

அன்பெனும் உணர்வு!

உன்னை நான்
'அம்மா' என்று
அழைக்கட்டுமா?

நீ என்
அன்னையாகவே
என்னுள் வாழ்கிறாய்!

உன்னைக் காதலிப்பதற்கான
காரணம் என்னவென்று
கேட்டாய் நீ!

காரணமின்றி
வருவது காதல்
என்றேன்!

உண்மைதான்!
காரணகாரியங்காட்டும்
பகுத்தறிவிற்கு அப்பாற்ப்பட்டது
அன்பெனும் உணர்வு!!

காதல் புயல்!

உன்னைப் பார்த்ததும்
உருவான புயல்சின்னம்
இன்னுங்கடக்கவில்லை
என் இதயககடலைவிட்டு...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் - 30-07-2006

2. முத்தாரம் - 06-08-2006

3. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

தனிமையில்...

2006 ம் ஆண்டு ஒருநாள் வகுப்புகள் முடிந்து வெளியே வரும்போது அவளிடம் பேச போனேன். அவளுடைய தோழிகள் அவளருகில் அதிகமாய் இருந்தனர். 'நான் தனியே இருக்கும்போது என்னோடு பேசு சுரேஷ்' என்று செல்லமாய் கடிந்துகொண்டாள். அவள் சொன்ன வார்த்தைகளை வைத்தே எழுதிய கவிதைஇது.


என் உத்தரவின்றி
என்னுள்ளே நுழைந்தவள்
நீ!

உத்தரவிடுகிறாய்
'என்னிடம்
தனிமையில் மட்டும்
பேசுடா' என்று!

அடிப் பைத்தியமே...
இத்தனை நாளாய்
தனிமையில் தானடி
பேசுகிறேன் உன்னிடம்!!

காதல்!

சூதும்வாதும் போய்
அன்பெனும் புதுவேதம்
ஓத வைப்பது...!!

காதல் கண்ணாடி!

என் முகம்காட்ட
இருக்கலாம்
ஆயிரம் கண்ணாடிகள்!

என்னை
அழகாய்க் காட்டும்
கண்ணாடி
என்னவள் மட்டுந்தான்!!

மனிதவிலங்கு!

மனிதா...
நீ ஒரு சமூகவிலங்கு!

அதனால்தானோ
உனக்கும் பிடிக்கிறது
'மதம்'!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப நாவல் – 01-10-2005

2. முத்தாரம் – 04-02-2007

அன்பின் தவிப்பில்...

பிரிவின் கொடுமையை
பிரியும் அக்கணத்தில்
உணரமுடிவதில்லை!

நான்கு சுவர்களுக்குள்
நானும் என்தனிமையும்!

ஊருக்குத் திரும்பும் நாளை
நாட்காட்டியில் எண்ணிக்கொண்டிருக்கும்போதே
நினைவுகள் கடந்தகாலத்தை நோக்கி...

அம்மாவின் அரவணைப்பிலும்
அப்பாவின் அதட்டலிலும்
வாழ்ந்தகாலம்!

அம்மாவின் அன்பு
மறுபிறப்பு எடுத்தது!
அக்காவின் வடிவில்...

அப்பாவின் அதட்டல்
அழியவில்லை அன்று!
அண்ணனின் கண்டிப்பில்...

தங்கையின் குறும்புகளில்
வாழ்ந்து கொண்டிருந்தது
என்சிறுவயது சேட்டைகள்!!

அன்னைதந்தையின் இழப்பு
அதிகம் பாதிக்கவில்லை
அன்றென்னை!

கடந்தகாலம் நிகழ்காலமாகி
நிகழ்காலம் நினைவுகளானது!!

உதிரத்தில் கலந்த உறவுகளை
உயிர்தேடி அலையும்போது
உணர்கிறது மனம்!
பிரிவின் கொடுமையை!!

எழுந்திரு தோழா! எழுந்திரு தோழி!!

எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!!

எதையும் முடிக்கும் இதயம் உன்னில்
இருப்பதை நானும் என்றோ கண்டேன்!
எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!! - மெய்க்
காதல் செய்யும் கலைகளை விடவும்
கடமைக ளுனக்கு கண்முன் இருக்கு!!
கவனித்திடு தோழா! கவனித்திடு தோழி!!

சிற்சில தோல்விகள் சீறிப்பாயும்!
சற்றே முயன்றால் சிதறி மாயும்!!
சிலிர்த்திடு தோழா! சிலிர்த்திடு தோழி!! - உலகில்
வேர்க ளில்லா மரங்க ளுண்டோ!
வேர்வையு மின்றி வெற்றிக ளுண்டோ!!
விழித்திடு தோழா! விழித்திடு தோழி!!

உன்னை உணரும் உன்னத சக்தி
உன்னி லிருக்கும் உண்மையை நீயும்
உணர்ந்திடு தோழா! உணர்ந்திடு தோழி!! - மனக்
கண்முன் விரியும் காட்சிகள் யாவும்
கனவுகள் அல்ல நனவாய் மாறும்!!
நம்பிடு தோழா! நம்பிடு தோழி!!

இன்று புதிதாய் மலர்ந்த மலர்போல்
நன்றாய் அகத்தை நலமுடன் பேண
சிரித்திடு தோழா! சிரித்திடு தோழி!! - பிறர்மேல்
அன்பை வளர்த்து அறவழி நடந்தால்
நன்மையும் உன்னை நாடும் இன்றே!!
நடந்திடு தோழா! நடந்திடு தோழி!!

எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!!

எதையும் முடிக்கும் இதயம் உன்னில்
இருப்பதை நானும் என்றோ கண்டேன்!

ஞாயிறு!

எந்திர வாழ்க்கைக்கு
இன்றொருநாள் விடுதலை!

பட்டம் விட்டு
கொட்டமடிக்கும்
சிறுவர்கள்...!

கடலை கொறிக்கும்
விடலைகள்...!

நெடுநாள் பிரிந்த
நண்பர்களின் கூட்டம்...!

கவிதை
எழுதத் தூண்டும்
வனப்பு...!

ஈரக்காற்றில்
மேனியின் சிலிர்ப்பு..!

இவையெல்லாமே
இயற்கையின் சிறப்பு...!!

கிழக்கே உதிக்கும் ஞாயிறால்
உலகிற்கு வெளிச்சம்!
வாரக்கணக்கில் உதிக்கும் ஞாயிறால்
மனதிற்கு வெளிச்சம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் - 31-01-2008

 2. மகாகவி - 28-05-2012

Saturday, April 24, 2010

ஞானகவி!

செறுக்குநடை
செந்தமிழ்க்கவிஞன்!
முறுக்குமீசை
முண்டாசுக்கவிஞன்!

அகத்தில் சினம்பிறக்க...
முகத்தில் அனல்பறக்க...
விழிகளில் கனல்தெறிக்க...
ஜாதிகளை சாய்க்கத்துடித்தான்!
மதங்களை மாய்க்கத்துடித்தான்!

மாற்றிவிட்டான் மனிதமனத்தை!
ஏற்றிவிட்டான் உள்ளொளியை! - உயிர்கட்கு
காட்டிவிட்டான் நல்வழியை!!

முண்டாசை இறுக்கிக்கட்டி
மீசையை முறுக்கித்தட்டி
பாடிவிட்டானே பரம்பொருளைப்பற்றி!

பிரபஞ்சத்தில் நீ!
உன்னில் பிரபஞ்சம்!
உணர்த்திவிட்டான் ஞானகவி!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 28-01-2008

2. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

சாபம்!

முன்னொரு காலத்தில்
தேவதைகள் வரம்கொடுத்ததாய்
கேள்விப்பட்டிருக்கிறேன்!

என் காதல்தேவதையே...
நீமட்டும் ஏனடிஎனக்கு
சாபத்தைக் கொடுத்துவிட்டுப்
போய்விட்டாய்?

ஆதிபராசக்தி!

அன்புவடி வானவளே
ஆதிபரா சக்தி!-உன்
பண்புதனை பாடிடவே
பாரில்நானும் வந்தேன்!! - பல
நன்மைகளை செய்திடவே
உதவிடுநீ தாயே! - மன
வன்மையினை பெருக்கிடவே
வழிவகுப்பாய் நீயே!!

வாழ்க நீ!

மோனநிலைச் சித்திரங்கள்!
முகம்காட்டும் அற்புதங்கள்!
கானமழை பொழிகின்ற
கவியழகே எனதுயிரே!
தேனொழுக நீபேசி
தெள்ளமுதைத் தந்தவளே!
வானழகைக் கண்டுநின்றேன்!
வாழியநீ பல்லாண்டு!!

தெரியுமா உனக்கு?

உனைப் பார்ப்பதற்காகவே
உன் வீட்டிற்கு வந்தேன்!
நுழைந்த உடனேயே
நலம் விசாரித்தாய்!

உன் முகம் பார்த்தேன்!
கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!

எனக்கு
அன்னமிட்டன
உன்னிரு கைகள்!

அள்ளி அள்ளி வைத்தாய்!
வயிறு நிறைந்தும்
போதுமென்று சொல்ல
மனம் வரவில்லை எனக்கு!

அங்கிருந்த
புகைப்படத்தில்
பள்ளிச்சீருடையணிந்து
நீ..!

திருடலாமென்று
தீர்மானித்தேன்!

உன் இதழோர
நகைப்பை மட்டுமே
திருட முடிந்தது என்னால்!

அங்கு நான்
வருவதற்கு முன்பிருந்தே
நானுனை நேசித்திருக்கிறேனென்று
தெரியுமா உனக்கு?!!

பொய்யான மாறுதல்!

உன் பிரிவைத்
தாங்கமுடியவில்லை
என்னால்!

உன் முகம்பார்த்து
கதறியழத் தோன்றுகிறது
எனக்கு!

நான் அழுவதைப் பார்த்தால்
நீயும் அழுதுவிடுவாயென்பதால்
என்னைச் சுற்றி
நீ இருக்கும்போதெல்லாம்
புன்முறுவல் செய்கிறேன்!!

காதல்!

உள்ளத்தில் தாக்கம்!
உயிரின் ஏக்கம்!
அன்பின் நோக்கம்!!

என்னோடு வா!

அரிதாரம் பூசாத
அழகியே!

என் மடிமீது சாயும்
மகாராணியே...!!

உன் கண்ணுக்கழகு
கண்ணாடியா?!
அழகுக்கே நீ
முன்னோடியா?!!

தரிசாய்க் கிடந்த என்னை
பரிசுவாங்க வைத்துவிட்டாய்!!

உன் வதனம்போலவே
உன் கையெழுத்தும் அழகானது!
என் தலையெழுத்தைப்போலவே
என் கையெழுத்தும் ஆனது!!

உன்
வெட்கச்சிவப்பைப்பார்த்து
மருதாணியும் தோற்றுவிட்டதடி!

உன்னைப் போலவே
என்னையும் அழகாக்க
என்னோடு வா!!

அநாதையா நான்?

அன்பான உறவுகள்
வெகுதொலைவில்!
அன்பெனும் உணர்வுமட்டும்
என்னருகில்!!

அன்பிற்காய் ஏங்கும்போதெல்லாம்
'நானொரு அநாதை'யெனவே
தோன்றுகிறது எனக்கு!!

காளியிடம் வேண்டல்!

சிந்தையைத் தெளிவாக்கி
சீர்மிகு ஆற்றல்கொண்டே
முந்தைத் தீவினைகள்யாவும்
மூழாதழிதல் வேண்டும்!
எந்தையும்தாயும் இவ்வுலகும்
இன்பமுற வேண்டிநின்றேன்!
சிந்தையிலே எப்போதும்வாழும்
சக்திகாளி சாமுண்டியிடம்!!

எப்படித் தெரியும்?

நாமிருவரும்
பிரிந்துவிட்டதாய்
அனைவரும் சொல்கிறார்கள்!

அவர்களுக்கெப்படித் தெரியும்?

இப்பொழுதும்
சிறுகுழந்தையான உன்னை
என் மடியில் தூக்கிவைத்து
கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்
என்று!!

அன்னையும் நீயும்!

என் சிறுவயதில்
என் அம்மா
எனை அவள்
இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சினாள்!

நானும் உன்னை
என் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சுமளவிற்கு
அன்பாய் இருக்கிறேன்
உன்மேல்!!

சொல்லியிருந்திருப்பாய்!

நாமிருவரும்
பழகிய காலம்
கொஞ்சந்தான்!

என் மனதில்
உன்மீதுள்ள அன்பை
முழுமையாய் புரிந்துகொள்ள
உனக்கு
வாய்ப்புகள் கிடைத்திருந்தால்
என்னிடம் நீ
இப்படித்தான் சொல்லியிருந்திருப்பாய்!

'உனைப்பிரிந்து
வாழமாட்டேன்டா செல்லம்'!!

உன்னையும்...

'அம்மா' என்று
அழைக்கும்போதெல்லாம்
என் அன்னையோடு சேர்த்து
நான் உன்னையும்
அழைப்பதாய் உணர்கிறேன்!!

என் அக்கா!

என் அம்மா
தொலைவில் வாழும்போது
என்னை
சிறுகுழந்தையாய்
தன் மடியில் உறங்கவைக்கும்
என் அம்மா!!

என் தங்கை!

தன்னைப் பற்றி
யோசிக்காமல்
என்னை சிரிக்கவைக்கும்
சுட்டிக்குழந்தை!!

ஏழை!

வறுமையோடு வாழும்
ஏழைகளோடு ஏழையாய்
அன்பைத்தேடும்
நானுமோர் ஏழை!!

காதலெனும் மதம்!

சிலைகளை வைத்து
வழிபடுவது
இந்துமதம்!

சிலுவையை வைத்து
வழிபடுவது
கிறித்துவமதம்!

உருவமில்லாமல்
திசைகளை வைத்து வழிபடுவது
இசுலாமிய மதம்!!

ஆனால்...
காதலெனும் மதத்தில்
மட்டுந்தான்
வழிபடும் நாமே
கடவுளாய்!

உதாரணத்திற்கு
என்மீது அன்புகாட்டுவதால்
நீ எனக்குக் கடவுள்!
உன்மீது அன்புகாட்டுவதால்
நான் உனக்குக் கடவுள்!!

காதல் கூட்டணி!

நாளிதழ், சுவரொட்டி,
ஒலிபெருக்கி, இணையதளம்,
வானொலி, தொலைக்காட்சி
இவற்றின் மூலம்
எத்தனையோ
அரசியல் கூட்டணிக்கட்சிகள்
பிரச்சாரம் செய்கின்றன!

ஆனால்...
ஒலியின்றியே
விழிகளால் மட்டுமே
பிரச்சாரம் செய்யும்
ஒரே கூட்டணி
நம் காதல்கூட்டணி!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

2. இராணிமுத்து – 16-12-2011

3. தமிழ்நலக்கழகம் - 01-01-2012

விஷம்!

காதலெனும்
விஷமருந்திவிட்டேன்!

உடனே கொன்றுவிடுமென
நினைத்திருந்தேன்!

அருந்திய பிறகுதான்
தெரிந்தது!

காதலென்பது
உடனே கொல்லும் விஷமல்ல...

அணுஅணுவாய்க் கொல்லும்
விஷமென்று!!

விஞ்ஞானக் காதல்!

பாடலை
காற்றில் ஒலிபரப்பினால்
கேட்கும் வானொலி! - உண்மைக்
காதலை
கண்களில் ஒளிபரப்பினாள்
என்னுயிர்க் காதலி!!

எதிர்பார்ப்பு!

உன்னிடத்தில்
பேசிய வார்த்தைகள்,
பழகிய நாட்கள்,
உனக்கான
தொலைபேசி அழைப்புகள்
இவை அனைத்துமே
என்னிடத்தில் உயர்திணையாய்...!

நான் இன்னும்
உன் மனதில்
அஃறிணையாய்...!!

பொய் சொல்லட்டுமா?

உன்னிடத்தில்
பொய் சொல்ல
விருப்பமில்லை எனக்கு!

ஆனாலும்
ஒரு பொய் சொல்லட்டுமா?

'நான்
நலமுடன் வாழ்கிறேன்'!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

பனித்துளி!

2006 ம் ஆண்டு ஒருமுறை நானும் என்னோடு படித்த பழனியும் என்னுடைய fourth sem ல் lab ல் work பண்ணிட்டு இருந்தோம். அவளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு arrears. அதை மாற்றுவதற்கு அவள் வெயிலில் நடந்து வந்து lab க்கு வெளியே நின்று கொண்டிருந்தாள். நானும் பழனியும் தற்செயலாக வெளியே வந்தோம். அவளை பார்த்தேன். அவள் தொப்பலாக நனைந்திருந்தாள். மணி 11 க்கு மேலேயே இருக்கும். வெளியே பார்த்தேன். மழை பெய்யவில்லை. வெயில் அடித்துக் கொண்டிருந்தது. என் செல்லக்குழந்தை மிகவும் மெலிந்த தேகம் உடையவள். என் குட்டிப்பாப்பா தேவதையின் உடலில் உள்ள வியர்வைத் துளிகளை பார்த்ததும் தோன்றிய கவிதை இது.உச்சிவெயிலில்
ஒருபூவின்மேல்
பனித்துளி!

அது
என்னவள் மேனியில்
வியர்வைத்துளி!!

பெருமை?

குடிமக்கள் என்று
வாழ்வதைவிட
நம்நாட்டின்
'குடி'மக்களாய் வாழ்வதில்
பெருமை கொள்கிறோம் நாம்!!

அன்னை தெரசா!

'அன்பே கடவுள்' என
அனைவரும் சொல்கிறார்கள்!

மனதால் உணரமுடிந்த
கடவுளை
கண்களால் காணமுடியவில்லை
எங்களால்!!

அன்னையே...
உன்னை காண்கிறோம்
அன்பின் கடவுளாய்!

Friday, April 23, 2010

நிலாச்சோறு!

அமுதுண்ண
ஆசைவந்ததில்லை
எனக்கு!

என் அம்மா ஊட்டிய
நிலாச்சோறை
உண்டதிலிருந்து..!!

ஹைக்கூ

நாத்திகன்கூட
வழிபடும் கடவுள்
அம்மா

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

3. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

4. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

5. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012

6. இலக்கியச்சோலை - 01-12-2012