Sunday, May 16, 2010

பாரதி!

கவி பிறந்தான்! - மகா
கவி பிறந்தான்! - தமிழ்க்
கவி பிறந்தான்!!

அரிதாய்ப் பிறந்தவன் இவன்! - தமிழனின்
அச்சம் சாகப் பிறந்தவன் இவன்!!

பூமியில் உயர்ந்தவன் இவன்! - தமிழனின்
சாமியாய் வந்தவன் இவன்!!

செவி நனைத்தவன் இவன்! - கவித்தேனால்
செவி நனைத்தவன் இவன்!!

சிறுவயதில் சென்றானே பாடசாலை!
சென்றும் எழுதினானே கவிச்சோலை!!

பலமொழிகள் கற்றவன் என்றாலும்
விடவில்லை தொன்மொழி தாய்த்தமிழை!!

'காலத்தை மீறி கனவுகாணாதே...! - புதுக்
கோலக் கனவிலினி மிதக்காதே...!!
சொன்னானே இவன்தந்தை அறிவுரை! - சொல்லியும்
செய்யவில்லையே இவனுக்குள் பரிந்துரை!!

முடிந்தது இவன்தந்தை மரணஓலை! - முடிந்ததும்
தொடங்கியதே இவனுக்குத் திருமணமாலை!!

வந்தாளே மங்கையொருத்தி! - பணிவிடை
செய்தாளே உடல்வருத்தி! - குடும்பத்தைக்
காத்தாளே வழிநடத்தி!!

கவிதையும் பாடினான் இவன்! - தெருவில்
கழுதையும் சுமந்தான் இவன்!
அந்நியனை பயமுறுத்தியன் இவன்! - பாரினில்
இந்தியனை செயல்படுத்தியன் இவன்!!

கழியெடுத்தவன் இவன்! - தமிழுக்கு
ஒளிகொடுத்தவன் இவன்!!

இவனை ஊர்சொன்னதே...
கிறுக்குப் பிடித்தவனென்று!
இவன் இருந்தானே
முறுக்குமீசை கொண்டு!!

பார்வை கொண்டவன் இவன்! - நேர்கொண்ட
பார்வை கொண்டவன் இவன்! - புதிய
பார்வை கொண்டவன் இவன்! - பேரும்
பகைவனையே எரித்தவன் இவன்!
சூரியனையே சுட்டெரித்தவன் இவன்!!

கவிநூல் பலபடைத்தான் இவன்! - புதுப்
பூணூல் அணிவித்தான் இவன்! - தமிழனுக்கு
பூணூல் அணிவித்தான் இவன்!!

மதங்கொண்டான் இவன்! - மனித
மதம் கொன்றான் இவன்!!

களிறு அடித்துச் சாய்ந்தான் இவன்! - எனினும்
பிளிறவில்லையே இவன்!!

பணிசெய்தான் இவன்! - தமிழ்ப்
பணிசெய்தான் இவன்! - வறுமையால்
பிணிகொண்டான் இவன்!!

சாய்ந்துவிட்டான் இவன்! - புவியில்
சாய்ந்துவிட்டான் இவன்!!
சாய்ந்ததா ஜாதி?

மடிந்துவிட்டான் இவன்! - மண்ணுக்குள்
மடிந்துவிட்டான் இவன்!!
மடிந்ததா மதம்?

இவன் மரணம்
விதி செய்த சதியா?
சதி செய்த புதுவிதியா?
தமிழன்
தனிமதி கொண்டு
இவன்போல்
இனியொரு புதுவிதி செய்வானா?

பாருக்கு அதிபதியாய்...
புரட்சிக்கு பாரதியாய்...
பூவுலகில் சாரதியாய்...
ஜாதிகளை சாய்த்தால்...
மதங்களை மாயத்தால்... - மனித
மனங்களை மாற்றினால்... - புனித
குணங்களை ஏற்றினால்...
மனிதனாய் மாறுவான் தமிழன்! - பூவுலகின்
புனிதனாய் மாறுவான் தமிழன்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

2 comments:

Anonymous said...

அற்புதம் கவிஞரே. மென்மேலும் பல படைப்புகளை உங்களிடமிருந்து நாங்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.

Anonymous said...

அருமையான கவிதை. இன்னும் பல படைப்புகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் கவிஞரே.