Friday, June 25, 2010

மறக்கமுடியாது உன்னை!

தமிழகத்தின் தலைநகரம்
ஏற்றமிகு எழிலோடுஞ் சென்னை! - இந்தத்
தமிழ்மகனுக்கு என்றும் நீதானே அன்னை! - இம்மண்ணில்
கண்டதில்லை உன்னைப் போலொரு பெண்ணை! - பேருந்தில்
உன்னைக் கண்டவுடன் நம்பவில்லை என் கண்ணை! - யாருக்கும்
கொடுக்கமாட்டேன் நீ கொடுத்த தொலைபேசி எண்ணை!
என் உயிர்பிரிந்தாலும் மறவேனே உன்னை!!

ஏக்கம்!

எதிர்பார்ப்புகள்
ஏக்கமாகி
தூர்ந்துபோனது
என் தூக்கம்!
வேறொருத்தியை
எப்படி என்னிதயம்
ஏற்கும்?

உயிர்த்துடிப்பு!

உன்
இடுப்பு மடிப்பில்
என்னிதயத் துடிப்பு!!

காத்திருந்தேன்!

கோடைவெயிலிலும்
குளிர்ச்சி தருகிறது
உன் நினைவு!

என்மேனிதொடும்
தென்றலிலும்
சுவாசிக்கிறேன்
உன் மூச்சுக்காற்றை!

உன்
செவ்விதழிலிருந்து வரும்
தமிழ் வார்த்தைக்காகத்தான்
காத்திருந்தேன்
இருபத்தொரு வருடம்!!

என்ன சொல்லப்போகிறாய்?

நீ என்காதலை ஏற்பாயா? - இல்லை
நான் என்காதலில் தோற்பேனா?
அருகிலிருந்தே உடலை
வேகவைக்கிறாய்! - என்னை
விரும்பாமலே உயிரை
சாகவைக்கிறாய்!!

என் கண்ணில் விழுந்தது உன் பிம்பம்!
என் மனதில் என்றுமே தீராத துன்பம்!!

கண்களின் மோதலால் பிறந்த நம்காதல்
உள்ளங்களின் தேடலால் முடிவது வேண்டாம்
காதலி!

நிறைவேறாத காதல்!
கரைசேராத ஓடம்!
உவமையில் பழமை இருக்கிறது! - அந்தப்
பழமையில் புதுமை நம் காதல்!!

பேருந்து நகர - என்விழிகள்
உன்னை நுகர - என்னுள்
நுழைந்தது காதல்! - நமக்குள்
வேண்டாமே ஊடல்!!

உன் புகைப்படம்
வேண்டாமே கண்மணி!
உன் புன்னகை
மட்டும் போதும் வெண்மதி!!

உன்ன நெனச்சு...

அரியர் வச்சு நீ எழுத
உன்ன நெனச்சு நா அழுக - உன்னப்பா
கொரியர்ல பணம் அனுப்பியும்
அரியர் வச்சேதான் நீ எழுத
உன்ன நெனச்செதான் நா அழுக
கடல்நீர்மட்டம் பெருக
கண்ணீரில் நா உருக
சோகராகம் பாடுகிறேன்! - உன்னை
தேகமுருக தேடுகிறேன்!!

முயற்சி(யை) விதை!

உனக்குள் ஒருவன்
இருக்கிறான் என்பதை
உணர்ந்துகொள் நண்பா!

இருக்கும் ஒருவனை
சிறந்தவனாக்க
முடிவெடு நண்பா!

உயிரினில் கலந்த
உறவுகளை நினைத்து
வருந்தாதே நண்பா!

தற்செயல் தோல்விகளை
தூள்தூளாக்கு நண்பா!

முன்னேற்றக் கேள்விகளை
உன்னுள் கேட்டுப்பார் நண்பா!

முயற்சி விதையை
விதைத்துப்பார் நண்பா!

வியர்வைத் தண்ணீர்
பாய்ச்சு நண்பா!

நீ விடும் கண்ணீர்
வேலைக்கு ஆகாது நண்பா!

மிருக குணத்தை
களையெடு நண்பா!

கடவுள் குணத்தை
காப்பாற்று நண்பா!

காலங்கள் கனியும்
காத்திரு நண்பா!
வெற்றி கிட்டும்
மகிழ்ச்சிகொள் நண்பா!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இலங்கை வானொலி – 17-09-2006

பாவேந்தர்!

செந்தமிழால் புகழ்பெற்ற
பைந்தமிழ்ப் பாவலனே!
புவிதனை மாற்றவந்த - தமிழ்க்
கவித்தேனின் காவலனே!
பாருக்கு அதிபதியாம்
பாரதியின் தாசனே!
தமிழுக்கு அமுதென்று
பேர்படைத்த நாயகனே!
குடும்ப விளக்கேற்றி - தமிழ்க்
குடும்பம் காத்த திராவிடனே!
மூவேந்தனுக்கும் வேந்தனாய்
தமிழ்நாட்டு பாவேந்தனே!
வாழ்க நீபல்லாண்டு! - உன்புகழ்
வளர்க பலநூறாண்டு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 23-04-2007

2. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

உன் நினைவுகள்!

நித்தமும் நடந்தேன்! - உன்
நிழலாய்த் தொடர்ந்தேன்! - இரவு
நித்திரைக்கு பயந்தேன்! - படுக்கையில்
சத்தமின்றி விழுந்தேன்!! - இரவில்

சத்தமின்றி போர்செய்யும்
வித்தைக்காரி நீதான்! - என்னிடம்
கத்தைகத்தையாய் பணமிருந்தும்
மெத்தைமேல் முள்குத்துகிறது!! - நம்

இமையசைவில் உருவாகிய மோதலால்
இதயத்தில் கருவாகியது காதலே! - எனக்கு
சுமையாய் படர்ந்த நம்காதலை
சுகமாய்த் தொடர வைத்தாயே காதலி!!

சுத்தம் புதுசுகம் தருமாம்! - கனவில்
நித்தமும் உன்முகம் வருமாம்! - இரவு
பத்தரைமணி வருமாம்! - மரணம்
நித்திரைவடிவில் வருமாம்!!

எப்படி நுழைந்தாய்?

தாய்வயிற்றிலே பிறந்து – பெண்ணுனை
பேருந்திலே கண்டு
தமிழ்க் கவிதையால் சிறந்து - மண்ணுலகில்
தன்னிலையும் மறந்து - காதலால்
விண்ணிலே மிதந்து
வெற்றுடலாய் வாழ்கிறேன் நான்!

கரைமீறும் காட்சிக்கு வண்ணமாய்
தமிழ்க் கவிதை கிண்ணமாய்
காவியக் காதலின் சின்னமாய்
அழகுக்கொரு திண்ணமாய்
என்னுயிரில் கலந்த எண்ணமாய்
என்னுள் அமைதியாய் வாழ்கிறாய்!
என்றுமே அளவாய்த்தான் சிரிக்கிறாய்!!

என்னிடம் சொல்லாமலே சென்றாய்!
என்னைக் கொல்லாமலே வென்றாய்!
என்னுயிரைக் கொஞ்சம்கொஞ்சமாய் தின்றாய்!
விழிவழி தள்ளித்தான் நின்றாய்!!

நீ விழிவழி நுழைந்தவளா? - இல்லை
நீ விதிவழி நுழைந்தவளா??

மூளையும் உருகி வழிகிறது!
யோசிக்கிறேன் நான்! - என்னுள்
எப்படி நுழைந்தாய் நீ??

நூறுநூறு ஆசை!

நூறுநூறு ஆசை! - எல்லாமே
வேறுவேறு ஆசை!!

எல்லாரிடமும் அன்புடன் வாழ ஆசை!
நல்லார் போல் பண்புடன் வாழ ஆசை!
கல்லாமை இல்லாமையாக்க ஆசை! - காதலியின்
கடைக்கண் பார்வை கிடைக்க ஆசை!!

நண்பனைக்கூட சகோதரனாய் மாற்ற ஆசை!
நட்பில் கற்பை ஏற்ற ஆசை!
ஜாதியொழிய ஆசை! - நானும்
சாதிக்கத்தான் ஆசை!!
மதம்பிடிக்கா மனிதனைப் பார்க்க ஆசை! - காதல்
மதம்பிடித்த மனிதனைப்பார்க்க ஆசை!!

தமிழ்மண்ணில் என்னுடலை
புதைக்கச் சொல்ல ஆசை!
பரந்த விண்ணிலே என்னுயிரை
கண்ணீர் சிந்தச் சொல்ல ஆசை!!

நூறுநூறு ஆசை! - எல்லாமே
வேறுவேறு ஆசை!! - எல்லாமே
நிறைவேறாத ஆசைகள்தான்!!

எது காதல்?

கடலை போடச் சொல்வதல்ல
காதல்! - கண்ணீரில்
கவிதை பாடச்சொல்வதுதானே
காதல்!!

உடலைப் பார்த்து வருவதல்ல
காதல்! - உயிரை
உருக்கி எடுப்பதுதானே
காதல்!!

விடலையில் தோன்றும்
விஷப்பரு அல்ல
காதல்! - சிறு
விதையில் தழைக்கும் முளைக்கருதானே
காதல்!!

வறுமைக்கொரு பாடல்!

நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை!
நாளும் உழைத்தும்
வறுமையால் தொல்லை!!
கிராமங்கள்தானே
இந்தியாவின் செல்லப்பிள்ளை! - தமிழ்
அகராதியிலிருந் தகற்றுவோம்
வறுமையெனும் சொல்லை!
கண்ணீர் மட்டுந்தானா
உழைப்பவனின் எல்லை???
இல்லை இல்லை
தன்னம்பிக்கை நீண்டால்...
தன்னை நம்பி கைநீண்டால்
துயரமினி இல்லை!!

வறுமையின் நிறம் சிவப்பு!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்!
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

பச்சிளங்குழந்தை கதறினால்
பதறுவாள் தாய்! - தன்
குருதியை பாலாய் மாற்றுவாள்! - மன
உறுதியை பால்வடிவில் ஊட்டுவாள்!!

வயிற்றுப் பிழைப்பிற்காய்
கயிற்றில் நடக்கும் வாழ்க்கையை
பயிற்றுவித்தது வறுமை!

ஒருவேளை உணவிற்காய்
குருதியை பணமாக்கவைக்கிறது வறுமை! - மன
உறுதியை விற்கவைக்கிறது வறுமை!!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்! - உறுதியாய்
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

இரத்ததானம்!

கத்தும் குயிலுக்கு - யாரும்
இராகம் கற்றுக்கொடுப்பதில்லை!
நித்தம் தனம் வருமென்று - யாரும்
இரத்ததானம் செய்வதில்லை!!

சிவப்பணு இரத்தத்தின் சுவாசப்படை!
வெள்ளையணு இரத்தத்தின் அதிரடிப்படை!!
நம்நினைவில் என்றுமே குருதிக்கொடை!!

நித்தம் நித்தம் ஊறுதே இரத்தம்! - அதை
சத்தமின்றி கொடுப்பது நம் சித்தம்!!
வாழ்க்கைப்பாடங்கள் கொஞ்சமாய்க் கற்றும்
இரத்தத்தை விற்றால் அதுபெரும் குற்றம்!
இரத்ததானத்தின் புகழ் பரவட்டும் திக்கெட்டும்!
இத்துடன் இக்கவிதை முற்றும்!!

செத்த பிறகாவது...

என்னிடம் பேச
உன் நாணம் தடுக்கிறது!
நான் பிணமான பிறகாவது
என்னுடன் பேசுவாயா நீ?

உன்னைப் பற்றி!

அவளுடைய பிறந்தநாள் 15-01-1984. 2005 ம் ஆண்டு ஜனவரி 16 திங்களன்று அவளிடம் பிறந்த நாளுக்கு மிட்டாய் கேட்டேன். 'விடுதியில் உள்ளது' என பொய் சொல்லிவிட்டு போனாள். என் குழந்தை உள்ளம் ஏங்கி ஏமார்ந்து போனதை அவள் அறியவில்லை.

கண்களிலே ஓவியமாய் நுழைந்துவிட்டாய்!
இதயத்தில் காவியமாய் நிலைத்துவிட்டாய்!!
பட்டாம்பூச்சியாம் இம்மண்ணில் பறக்கிறாய்!
பார்வைகளால் என்மனக்கண்ணை திறக்கிறாய்!!
உன்னை மறக்கவும் முடியவில்லை!
இவ்வுலகில் இறக்கவும் முடியவில்லை!!
கறுப்பாய்த்தான் பிறந்துவிட்டேன்! - தமிழ்க்
கவிதையால்நான் சிறந்துவிட்டேன்!!
சுத்தமாய் உறக்கமே இல்லை! - உன்னிடம்
நித்தமும் இரக்கமே இல்லை!!
உன் அழகான முகத்தை இரசித்துக்கொண்டே
நீ பழகுவதில் பரிவுகண்டேன்!
மெல்லத்தான் சிரிக்கிறாய்! - எனைக்
கொல்லத்தான் சிரிக்கிறாய்!!
காலையில் பூவாய் பிறந்துவிடுவாய்!
என் கண்ணைவிட்டு
மாலையில் மாயமாய் மறைந்துவிடுவாய்!!
பார்க்குமிடமெங்கும் 'நலமா?' என்பாய்!
புகைவண்டி நிலையத்திலும்
புன்னகை சிந்துவாய்!
பிறந்த நாளுக்கு
இனிப்பு வாங்கித்தருவதாய்
இனிப்பாய்க் கூறுவாய்!
'இனிப்பு எங்கே?' என்று கேட்டால்
'தங்கிய இடத்திலிருக்கிறது' என்று
தயங்காமல் பொய் கூறுவாய்!!

உன்னை நினைக்கும்போது
உள்ளம் அழுகிறது!
உதடு சிரிக்கிறது!
கண்ணீரால் என் நெஞ்சம் நனைகிறது!
நம் காதலால் என் உயிர் வாழ்கிறது!!

Thursday, June 24, 2010

இயற்கையை இரசிக்கலாமே!

யாரும் இராகம் கற்றுக்கொடுத்து
புதுக் கீதம் பாடவில்லை
குயில்!

யாரும் நடனம் கற்றுக்கொடுத்து
புது நாட்டியம் ஆடவில்லை
மயில்!

குளிர்தென்றல் மேனிதொட
மணம்வீசும் மழையை
தண்ணீராய்... - ஆனந்தக்
கண்ணீராய்...
மானுடத்திற்கு பொழியவிட்டு
மரஞ்செடிகொடிகளை தளிர்க்கவைத்து
உயிர்களின் உயிரைக்காத்து
சோகந்தனை சாகடித்து
தாகந்தனை தீர்த்துவைத்து
தேகம் சிலிர்க்கவைக்கிறது
மேகம்!

கூடிவாழும் வாழ்க்கையை
கோடிவருடத்திற்கு முன்பே
தேடிப்பிடித்து வாழ்கிறது
காகம்!

வேதியியல் மாற்றத்தால்
வீதிகளில் பரவுகிறது
மண்வாசம்!
சுவாசத்தில் மூச்சாகிறது
பூவாசம்!
என் தாய்த்தமிழால்
தலைநிமிரட்டும் நம்தேசம்!

ஆபத்துள்ள வீடுகளில்
குகைபோன்ற கூடுகளில்
சத்தமாய் ஒலிஎழுப்பி
சந்தோசமாய் வாழ்கிறது
தூக்கணாங்குருவி!
பூமித்தாயின் பாறைக்கருவில் பிறந்து
உற்சாகத்தை தற்செயலாய்த் தருகிறது
தூய்மையான அருவி! -பின்னர்
தரணியெங்கும் தண்ணீரால் சிறந்து
மானுடத்திற்கு வாழ்க்கைப்பாடத்தை
வெள்ளோட்டமாய் வாழ்ந்துகாட்டுகிறது
ஆறு!!

உழைத்துக் களைத்தவனுக்கு
இதமான குளிர்தென்றல் காற்றை - பல
விதமான பூக்களின் பாட்டை
நிழலோடு தருகிறது
மரம்!

இவையெல்லாம் கற்றுக்கொடுப்பதை
சற்றே உற்றுநோக்கினால்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான்!
செயற்கையோடு சேராத வாழ்க்கைதான்!!

மானுடப்பிறவிகளான நாமும்
எவரையும் எதிர்க்காமல்
எவரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால்
மறுப்பேதும் இல்லாமல்
வெற்றி நமக்குத்தான்!!

காதல் யாசகம்!

உன்னை நினைத்து
கண்ணீர்வழி அழுகிறேன்!
கவிதைவழியும் தொழுகிறேன்! - காலையில்
காதல்வலியுடன் எழுகிறேன்!!

காதலைப் பற்றி யோசித்தேன்!
கன்னியுனை நேசிக்கிறேன்!!

தேங்கிய நீரில்
என்றுமே படியும் பாசம்! - என்னுடலில்
தேங்கிய உயிரில்
என்றுமே படியும் உன் பூவாசம்!
என்னகமெலாம் உன்வசம்!
என்றுமே நீதான் என்சுவாசம்!!

அழியாமல் வாழ்கிறது!

விண்ணில்
பறக்கும் பட்டமாய்
உன்னைச் சுற்றியே பறக்கிறது
என்னுயிர்!

குட்டிபோட்ட பூனைபோல்
உன்நிழலையே வட்டமடிக்கிறது
என்பார்வை!

நிறைமாத கர்ப்பிணிபோல்
என்நினைவுகளிலே சுமக்கிறேன்
உன்னை!

வாடாமலராய் பூத்துக்குலுங்கும்
பூஞ்சோலைபோல்
என்மனதில்
அழியாமல் வாழ்கிறது
உன்புன்னகை!!

குயில்!

இயற்கை வானொலியில்
இசையின்றி பாடும்
பாடகி!!

தமிழர் திருநாள்!

காலையில் முகம்மலர
ஏழையின் அகம்குளிர
ஜாதிமத பேதமின்றி
சங்கமிக்கட்டும் சகலமனங்கள்!
தைவரவால்
தித்திக்கட்டும் தைமாதங்கள்!
எத்திக்கும் பரவட்டும்
தமிழனின் நற்குணங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 14-01-2006

2. நம்மால் முடியும் தம்பி – 01-01-2008

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

4. இராணி - 15-01-2012

Wednesday, June 23, 2010

குடியரசை போற்றுவோம்!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!

விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! - அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! - இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! - மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! - இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! - நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) – 26-01-2012

இளைஞர்கள் தினம்!

இலட்சியக் கதவுகளை
இரும்புக்கரம் கொண்டு திறந்தால்
தீப்பொறி விழிகளில்
திருப்பூர்குமரன் குதிப்பான்!
சாந்தமுள்ள மனத்தில்
காந்தி கண்விழிப்பான்!
போராட்ட குணத்தில்
நேதாஜி வாழ்வான்!
நம்பிக்கை பூமியில்
நரேந்திரனும் பிறப்பான்!
விவேகமுள்ள இளைஞனும்
விவேகானந்தனாய் மாறுவான்!

எம்மிளைஞனின் உள்ளம்!
இதில் நாளும் அன்புவெள்ளம்!!
இளைஞர்படை தோற்கின்
எப்படி வெல்லும்??!!
எதிர்கால இந்தியா
இளைஞன்பேர் சொல்லும்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 20-02-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

கொடிகாத்த குமரன்!

வந்தே மாதரம்
வளர்க பாரதமென்று
இறுமாப்புடன் கொடியைப் பிடித்து...
இந்தியனுக்கு விடியலைத்தந்து...
அந்நியனால் தடியடிபட்டும்...
விடாமல் பிடித்தும் - கொடியை
விழாமல் பிடித்தும் - மண்ணில்
உதிரம் உதிர உயிர் நீத்தவன்!

திருப்பூர்குமரனின்
திருவுடல் சாய்ந்தாலும்
திருந்திய இந்தியாவில் - நம்
தேசக்கொடி திக்கெட்டும் பறக்கிறது!

கொடிதனை ஏற்றுவோம்! - தேசக்
கொடிதனை ஏற்றுவோம்! - மனித
மதங்களை தூற்றுவோம்! - குமரனின்
கொள்கைகளை போற்றுவோம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 13-01-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 22-01-2007

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

முகவரி!

பெண்ணிற்கு தாய்மை முகவரி! - இம்
மண்ணிற்கு உழவு முகவரி!!
மழைக்கு முகில் முகவரி! - கற்
சிலைக்கு உளி முகவரி!!
பயத்திற்கு மரணம் முகவரி!
வீரத்திற்கு தமிழ் முகவரி!!
மரத்திற்கு ஆணிவேர் முகவரி! - மனிதக்
கரத்திற்கு மனிதநேயம் முகவரி!!
கனவிற்கு தூக்கம் முகவரி! - தினம்தினம்
நனவிற்கு முயற்சி முகவரி!!
வெற்றிக்கு முதல்தோல்வி முகவரி! - புதுச்
சிற்பிக்கு நம்பி(க்)கை முகவரி!!
கடலுக்கு அலை முகவரி! - என்
உடலுக்கு தமிழ்நாடு முகவரி!
பயிருக்கு அறுவடை முகவரி! - என்
உயிருக்கு கண்ணீர்தானா முகவரி?

மகாத்மாவை நினைத்து...

குஜராத்தில் பிறந்து - தமிழ்க்
குமரிவரை சென்று திரும்பியவன்!
சாத்திரங்கள்பல கற்றுவிட்டு - அந்நியனின்
நித்திரையைக் கெடுத்தவன்!
தண்டியாத்திரை சென்று - இந்தியனை
கண்டித்தவனை தண்டித்தவன்!
தவழும் குழந்தைகலால்கூட
தாத்தா என்றழைக்கப்படுபவன்!
தமிழ்க்குடிமகன்காலும்
தேசத்தந்தை என்றழைக்கப்படுபவன்!
கந்தையை உடுத்திக்கொண்டு - நம்
சிந்தையில் என்றென்றும் நிற்பவன்!
பஞ்சுநூல் துணியணிந்து - நம்
நெஞ்சமெங்கும் நிறைந்தவன்!
அகிம்சைகளால் அடிகொடுத்து - அந்நியனுக்கு
இம்சைகளை அள்ளிக்கொடுத்தவன்!
கைத்தறியை கையிலேந்தி - நெஞ்சமெங்கும்
அன்புநெறியை நிறைத்தவன்!
இராட்டையை சுழற்றிக்கொண்டு - அகிம்சையால்
சாட்டையடி கொடுத்தவன்! - அந்நியனை
வேட்டையாடி விரட்டியவன்!!
மிதவாதத்தை ஆதரித்து - அன்றே
மதவாதத்தை எதிர்த்தவன்!
நிறப்பிரிவை எதிர்த்து - தென்னாப்பிரிக்காவில்
குரலுயர்த்தி அமர்ந்தவன்!
சுதந்திரம் அடைந்தபின்
குண்டடிபட்டிறந்தவன்!
காலங்கள் பல ஆனாலும்
காலங்காலமாய் காலமாகாதவன்!
இந்திய நாணயத்தில் வாழ்ந்து
அந்நியனுக்கு நாணயத்தை புகட்டுபவன்!
இறைத்தூதன் இயேசுவை
இன்னுமொருமுறை நினைவுபடுத்தியவன்!

காந்தியைப் பற்றி பாடுவோம்! - மனச்
சாந்தியை நாளும் தேடுவோம்!
அகிம்சையை போற்றுவோம்! - மண்ணுலகில்
அன்புஒளியை ஏற்றுவோம்!
ஆத்மராகம் பாடுவோம்! - என்றென்றும்
மகாத்மாவை போற்றுவோம்!!

Friday, June 18, 2010

உன் அழகு!

மின்னல்போன்ற பார்வை!
கன்னல்மொழிப் பேச்சு!
ஜன்னலோரக் கொஞ்சல்!
பின்னலிட்ட கூந்தல்!
முன்னால் போன நடை! - அவள்
பின்னால் இழுக்கும் இடை! - பேரும்
இன்னலுடன் நான்
உன்னழகை வர்ணித்தபடியே...

என் நிலை!

என்னில்
உன்பிம்பம் விழுந்தது! - என்
கண்ணில் ஊசி பாய்ந்தது! - இம்
மண்ணில் நான்
நடைபிணமாய் வாழ்கிறேன்!!

என் காதலி!

சிரித்த முகம்! - என்மனம்
பறித்த அகம் கொண்டவள்
என் காதலி!!

செண்பகப்பூ மணம்வீசும்
சேலைத்தலைப்பில் புதுவாசம் கொண்டவள்
என் காதலி!!

முல்லைக்கொடி போன்ற இடை!
மெல்ல அடியெடுத்து வைக்கும் நடை கொண்டவள்
என் காதலி!!

செங்காந்தழ் விரல்கள்!
செர்ரிப்பழ இதழ்கள் கொண்டவள்
என் காதலி!!

விடியாத உதயம்! - என்னிடம்
படியாத இதயம் கொண்டவள்
என் காதலி!!

அரும்பாத மொட்டு! - என்னை
விரும்பாத உள்ளம் கொண்டவள்
என் காதலி!!

வாருங்கள் தமிழர்களே...

என்னோடு 11 ம் வகுப்பிலிருந்து பழக்கமான நண்பன் முருகலோகேஷ்வரன். கல்லூரிப் படிப்பை நான் இராமநாதபுரத்திலும் இவன் மதுரையிலும் தொடர இருவரும் பிரிந்துவிட்டோம். இதற்கிடையில் பரமக்குடியில் இவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்திருந்தது போலும். நானும் அவனும் M.C.A entrance exam TANCET க்கு தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் அவன் என்னிடம் சொன்னான். அப்போது இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டதாகவும் சொன்னான். அவள் எழுதிய கடிதங்களை என்னிடம் படிக்கக் கொடுத்தான். நான் படிக்க மறுத்து விட்டேன். அவன் கடிதங்களில் 'இப்படிக்கு லோகேசுகி' என்று எழுதியிருந்தது. என்னவென்று கேட்டபோது 'அவள் பெயர் சுகிர்தா. என் பெயர் லோகேஸ்வரன். அதனால் அவள் என் பெயரோடு அவள் பெயரையும் சேர்த்து எழுதியிருக்கிறாள். அவளும் நானும் வேறு வேறு ஜாதி என்பதால் அவள் வீட்டில் அவளுக்கு சூடு போட்டார்களாம். நானும் மனம் கேட்காமல் விஷமருந்தி விட்டேன். என் பெற்றோர் என்னை காப்பாற்றி விட்டனர்.' என்று உருக்கமாகச் சொன்னான். அப்போதுதான் காதலின் மகத்துவம் எனக்குப் புரிந்தது. அனைவருமே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் ஜாதி ஒழிந்துவிடும் என்று தோன்றியது. அப்போது எனக்கு கவிதை எழுதத் தெரியாது. இந்த நினைவு என் உயிரின் மூளையில் ஆழமாக பதிந்துவிட்டது. 2005 ம் ஆண்டு ஒருநாள் அந்த நினைவின் தாக்கத்தில் என் நண்பன் எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்தபோது இந்த கவிதை தோன்றியது.


வாருங்கள் தமிழர்களே...
உண்மைக்காதல் செய்ய
வாருங்கள் தமிழர்களே...

ஜாதியை ஒழித்து
சாதிக்க நினைத்து
காதலிக்கப் புறப்பட்டேன்
என்னவளை!

ஆனால்...
விதி சாதியெனும்
ஆயுதத்தைக் கையிலேந்தி
என் காதலைத் துரத்துகிறது!
என்னுடல் மடிந்தாலும்
என் காதலும் கவிதைகளும்
உயிரோடுதான் இருக்கும்!!

இனிவரும் தமிழர்கள்
என் கவிதையின் கருப்பொருள்
புசித்து விட்டு - உண்மைக்
காதல் செய்ய புறப்படுவர்!!

அந்தச் சாதனைநாளில்
என் தமிழ்நாடு
தரணியில் சாதியற்ற
சொர்க்கபுரியாய்
பட்டொளிவீசும்!

இந்தச் சாதனைவெறி
தெரிகிறது
என் தமிழர்களின் கண்களில்!

வாருங்கள் தமிழர்களே...
உண்மைக்காதல் செய்ய
வாருங்கள் தமிழர்களே...

கதை கேளடி!

(2005 ம் ஆண்டு என் தோழி ஸ்வேதா தேவி ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அப்போது அவள் அழுவதைப் பார்த்தேன். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் எழுதிய கவிதை.)

கதைகேளடி தோழி! - புதுக்
கவிதைகேளடி தோழி!
கண்ணீர் ஏனடி தோழி?! - நமக்கு
நட்புதானே வேலி!!

நாளும்பொழுதும் நமக்குத்தான்! - நம்
நட்புகொடுக்கும் கவிதைத்தேன்!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்!
எங்கெங்கும் இனிபுது உதயந்தான்!!

நம்பிக்கை!

(2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.)

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!

அழுதகதை போதும்!
எழுந்துவா தோழி!!

மூடர்களின் வெட்டிக்கதைபேச்சு! - துணிந்து
முடிவெடுத்தால் வெறுங்கதையாய்ப் போச்சு!!

விழுந்தால் எழுந்திருப்பாய்! - நம்பிக்கை
விழுதிருந்தால் அழமாட்டாய்! - முயன்று
எழுந்தாலோ மீண்டும் விழமாட்டாய்!!

தினம்தினம் நம்பிக்கை நீண்டால்...
உன் உழைப்பைநம்பி கைநீண்டால்...
உள்ளத்தில் உத்வேகம்
வெள்ளமென உருவாகும்!!

விஜயனுக்கு வில் ஒரு ஆயுதம்! - என்
இளையவளுக்கு புல்லும் ஒரு ஆயுதம்!!

வான்மதி தேய்வதும்
விண்ணொளி கொடுக்கத்தான்!
தோற்றதை ஏற்றமெனக் கருது! - புது
வெற்றியை காலமாற்றமென கருது!!

குனிந்தால் தலையில் குட்டும் உலகம்! - நாம்
துணிந்தால் வழிகாட்டி விலகும்!
நிமிர்ந்தால் நிலைப்படி தலைதட்டும்! - அடக்கமாய்
அமர்ந்தால் நம்புகழ் வான்வரை எட்டும்!!

மனசாட்சிதான் நம் கடவுள்! - இதை
மறவாமல் நினைவில்கொள்!!

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. புதிய சிற்பி – 01-03-2006

Thursday, June 17, 2010

வெற்றிப்பாதை!

2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.


சிரிக்கப் பிறந்தவளே! - வெற்றியைப்
பறிக்கப் பிறந்தவளே!!

தோல்வியால் துவள்வதை மறந்தால்
மேற்கெங்கும் மறந்து
உதயமாகும் புதிய கிழக்கு! - இனிஉன்
வெட்கப் போர்வையை விலக்கு! - என்றும்
வெற்றி ஒன்றே உன் இலக்கு!!

துன்பம் தொற்றிக்கொண்டால்
தோழியிடம் சொல்லியழுதுவிடு!
நாளடைவில் துள்ளியெழுந்துவிடு!!

தோல்வியால் துவள்வது இயல்பு! - முயற்சி
வேள்வியால் வெல்வது சிறப்பு!!

தாய்தந்தையை தொழுதுவிட்டு
தலைநிமிர்ந்து தமிழ்மண்ணில் நில்!
வாழ்வியல் நடைமுறைகளை
தெரிந்து கொள்! - அடைந்த
தோல்விக்கு விடைகண்டு உலகை வெல்!!

உன் இலட்சிய வேர்களை விசாலமாக்கு!
விழுதுகளும் விருச்சமாகும்!

விண்மீன்களிடம் விடியலை...
மின்மினியிடம் ஒளியை...
கேசம் கலைக்கும் தென்றலை...
தேகம் சிலிர்க்க திருடிக்கொள்!

நடந்தவையெல்லாம்
கனவாய்ப் போகட்டும்! - இனி
நடப்பவையெல்லாம்
நல்லவை ஆகட்டும்!!

வெல்லப்போவது தமிழகம்! - ஆருடம்
சொல்லிப்பாடுது என் அகம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 27-08-2007

தைமகளே வா!

2006 ம் ஆண்டு எழுதிய கவிதை இது. ஒரு இளைஞன் தன் உறவுகள் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் தன் சொந்தங்களோடு வாழ்ந்தபோது நல்ல பணவசதியுடன் இருந்தபோது அனைவருக்கும் உதவினான். இப்போது அவன் ஏழையாகவும் அனாதையாகவும் ஆகியிருக்கிறான். அவன் பிழைக்க வழி தேடுகிறான். அன்று பொங்கல் வருகிறது. இது ஒரு கற்பனை கவிதை. இதற்கான கவிதை இதுதான்.வறுமைக்கனவுகளில் தூங்கியவன்
வெறுமை நினைவுகளில் ஏங்கினான்!
விடியலைக்கண்டு!!

இடக்கை அறியாமல்
கொடுத்தது வலக்கை!
கொட்டிக்கொடுத்ததால்
அன்று சிவந்தது
இவன் கை!
வறுமையால் விரிக்கமுடியவில்லையே
இன்றிவன் சிறகை!!
விண்ணொளி கொடுத்தது
புதுநம்பிக்கை!
விடியலை நம்பியே இருந்தது
இவனிரு கை!

பகலவன் ஒளிகொடுத்தான்!
இளையவன் முடிவெடுத்தான்!!

வேதனையை சுமந்துகொண்டு
சாதனைக்காய் புறப்பட்டான்!
மெதுவாய்க் கடந்தான் மனவெளியை!
புதிதாய்ப் பார்த்தான் புல்வெளியை!
அமிழ்தாய் இரசித்தான் பனித்துளியை!!

சாலையில் ஓடினான்!
வேலையைத் தேடினான்!
பசியால் வாடினான்!!

உற்றுப்பார்த்தான்!
சற்றே திரும்பினான்!
திரும்பிய திசையெங்கும்
கரும்பு! - மனம்
விரும்பும் மணம்வீசும்
மஞ்சள்!!
பார்க்குமிடமெங்கும்
பனைக்கிழங்கு!

எங்கெங்கும்
மக்கள் கூட்டம்!
வீதிகளெங்கும்
தமிழர்கள் நடமாட்டம்!

ஏழைகளின் அகமெங்கும் குளிர்ச்சி!
இளையவன் முகமெங்கும் மகிழ்ச்சி!!

'என்ன காரணம்?'
என்று கேட்டான்!
சென்றவன் சொன்னான்
'இன்றுதான் பொங்கல்!
தமிழன் உள்ளமெங்கும்
தங்கும் பொங்கல்!!'

உடலெங்கும் புத்துணர்ச்சி! - இளையவன்
உள்ளமெங்கும் புதுஎழுச்சி!!

கோடியில் புரண்டவனை
கோடியில் புரளவைத்தது காலம்!
கொட்டிக் கொடுத்தவனை
எட்டி உதைத்தது காலம்!!

இளையவனுக்கு
கைகொடுத்து கரைசேர்க்க
தைமகள் வந்துவிட்டாள்! - நம்
தமிழ்மகள் வந்துவிட்டாள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011
2. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011

வாழ்கிறேன்!

நீ நடந்தால்
உன் நிழலாய்
நானிருக்கிறேன்!

நீ சுவாசித்தால்
உன் மூச்சுக்காற்றில்
நான் கலந்திருக்கிறேன்!

நீ புன்னகைத்தால்தான்
என் ஆயுட்காலம் நீள்வதாய்
நான் உணர்கிறேன்!

நீ என்னுடன் பேசினாலோ
காற்றில் மிதப்பதாக
கனவுகள் பலகாண்கிறேன்!

நீ கேட்ட கேள்விகளுக்கு
பதில்கள் சொல்ல வாய்திறந்தால்
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்க...
திக்கித் தடுமாறுகிறேன்!

நீ
என் உயிராகவே இருப்பதால்
நான் இன்னும்
இம்மண்ணில் உயிர்வாழ்கிறேன்!!

காதல் ஓவியம்!

என் காதலை
சொல்லித்தான் பார்த்தேன்! - உன்னை
பார்த்தேதான் சொன்னேன்!!

நகைத்துவிட்டாய்! - முகம்
புதைத்துக்கொண்டாய்!!

பள்ளிக்குழந்தைபோல்
எள்ளி நகையாடினாய்!

மெல்லச்சிரித்த கள்ளியாய்
தள்ளித்தான் போனாய்!

எதையெதையோ நினைத்தாய்! - எனை
அள்ளிவந்து அணைத்தாய்!!

இதுதான் என் காதல் ஓவியம்!
நிஜமாகுமா என் காதல் காவியம்?

நீ பேசினாய்!

நீ என்னிடம்
'பள்ளத்தில் விழுந்துவிட்டாயா?
இல்லை என்
உள்ளத்தில் விழுந்துவிட்டாயா?'
என்றாய்!

'இரண்டில்
எதில் விழுந்திருந்தாலும்
எழுந்திருப்பது கடினம்'
என்றேன்!!

Wednesday, June 16, 2010

சுனாமியின் நினைவால்...

ஆழிநீர் பொங்கியதால்
விழிநீர் தேங்கியதோ...!
வழிகாட்ட வருகிறான்! - புது
ஒளியேற்ற வருகிறான்
எம்மிளைஞன்!
சீற்றம் ஓய்ந்தாலும் - சுனாமியின்
தாக்கம் ஓயவில்லை!
துன்பம் வேண்டாம்
தமிழ்ச்சிங்கங்களே!
கவலை வேண்டாம்
கடலோரக் கவிதைகளே!!
நம்பிக்கைப்படகிலே
வியர்வைத்துடுப்பெடுத்து
முயற்சிவலை வீசி - சுனாமியின்
நினைவலைகள் தாங்கி - மன
மகிழ்ச்சிமீன்களை பிடித்து
தைமகளை வரவேற்போம்! - வருந்
தைமகளை வரவேற்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011

நம்நினைவில் சுனாமி!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கரைமீறும் கண்ணீர்தான் ஏழையின் பாடு!
ஆழிக்குள் பூகம்பத்தின் நினைவோடு
நம்நினைவில் நம்பிக்கைகீதம்பாடு!
நினைத்துப் பார்த்தால் சோகம்! - சுனாமியை
நினைக்கமறந்தால் பாவம்!!
கண்ணீர்வழி உருகியது தேகம்!
சுனாமியால் பழியான உயிர்கள் போதும்!
கடலையால் இயற்கையின் சீற்றம்!
காலம் கொடுக்குமே புதுப்புது மாற்றம்!!
போதும்கண்ணே நம்மனதில் ஏக்கம்!
விடியும்வரை தாய்மடியில் தூக்கம்!!
இனிமாறிவிடும் தமிழனின் துக்கம்!
துணிந்தால் வெற்றியெல்லாம் நம்பக்கம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011

காதலே சொர்க்கம்!

கண்ணை காப்பது இமை!
உன்னைக் காப்பதென்ன சுமை?
கண்ணில் இல்லை புவிகாந்தம்!
உன்னில் கண்டேன் புதுசொந்தம்!!
உன்னைக்கண்டால் என்வாழ்வே சொர்க்கம்!
உன்னைக் காணாவிடில் அகிலமே அற்பம்!!

உனக்கொரு கடிதம்!

சுவரின்றி இல்லை சித்திரம்! - எனக்கு
நீயின்றி உலகிலில்லை விசித்திரம்!!
விண்ணில் கண்டேன் பலநட்சத்திரம்! - என்
கண்ணில் கண்டேன் ஒரு பெண்சித்திரம்!!
உன்னை பேருந்தில் கண்ட அத்தினம்
உன்நினைவே என்மனதில் நித்தம்நித்தம்!!

காதல்வெடி!

என் இதயமென்ற வெடியை
உன் கண்களென்ற திரியால்
பற்ற வைத்துவிட்டாய்!

அதனால்தானோ
துண்டுதுண்டாய் சிதறுகிறது
என்னிதயம்!!


இக்கவிதைகள்  வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

என் உயிர்!

உன்னை
மனித உயிர்களில்
ஜாதிமங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என்னுள்ளத்தில்
ஜாதிமல்லியாய் மணம்வீசுகிறாய்!

உன்னை
என்தங்கைக்கு
அண்ணியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் குடும்பத்திற்கே அன்னையாய்
மலர்ந்துவிட்டாய்!!

உன்னை
என்னிடம் அன்புகாட்டும்
மனைவியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரணுக்களில்
காதலியாகவே வாழப்பார்க்கிறாய்!!

உன்னை
என்னை கண்முன் நலமுடன் வாழும்
நங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரெனவே வாழ்கிறாய்!!

தீபாவளி!

சொந்தங்கள் நிலைக்க...
பந்தங்கள் சிறக்க...
இன்பத்தை நினைக்க...
துன்பத்தை மறக்க...
புத்தாடை மிளிர...
புன்னகை தவழ...
பொன்னகை ஒளிர...
வந்ததே தீபாவளி! - வாழ்வில்
தந்ததே தீப ஒளி!!

ஒளிந்திருக்கும் மானுடத்திற்கு
ஒளி கொடுக்கவந்தது
தீபாவளி!

மறைந்திருக்கும் மக்களுக்கு
புதுமறையாய் வந்தது
தீபாவளி!

காலையில் முகம்மலர...
மாலையில் அகம்குளிர...
வந்ததே தீபாவளி!
இதுகாட்டுமே நல்லவழி!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. வெற்றிநடை - 01-11-2012

2. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

அன்பான அறிவுரை!

மழைபோலே நீரூற்று! - கடல்
அலைமேலே ஈரக்காற்று!
சிறிதளவு விளையாட்டு! - நம்
சுவாசத்தில் பாசக்காற்று!
இவையெல்லாம் நீ கேட்டு
உன் எதிர்கால படகோட்டு!!

நீதான்!

அன்புக்கு என் அன்னை!
பண்புக்கு என் தந்தை!
அறிவுக்கு என் ஆசான்!
பரிவுகாட்ட என் தோழன்!
கனிவுக்கு என் தங்கை!
தனிமைக்கு என் கவிதை!
பொறுமைக்கு என் அக்கா!
அமைதிக்கு என் அண்ணன்!
இத்தனை உருவங்களும்
மொத்தமாய் நீதான்!
என்னவளே...
நீதான்!!

தமிழ்நாடு!

அள்ளிக்கொடுத்தால் சிவக்குமே
உள்ளங்கை!
அகிலத்தில் சிறந்த ஊர்
சிவகங்கை!!

பட்டுக்கோட்டை, தேவகோட்டை
புதுக்கோட்டை, நாட்டரசன்கோட்டை
இப்படி இருக்கலாம் பலகோட்டை! - நம்
தேசக்கொடியை பறக்கவிடுவது செங்கோட்டை!
தமிழன் என்றும் கட்டமாட்டான் மனக்கோட்டை!
இப்படித்தான் சொல்வேன் என் உள்ளப்பாட்டை!!

கைவைத்தவுடன் வந்ததே வைகை! -இன்றுநாம்
சைகை காட்டியும் வரவில்லையே வைகை! - இனிநாம்
செய்கையினால் வருமே வைகை!!

அங்குலம் அங்குலமாய்
பிரிகிறதே மனிதகுலம்! - நம்குலம்
தமிழ்க்குலமென்று சொல்லவேண்டுமே
மனிதகுலம்!

ஜாதி ஜாதியென்று
கூவவேண்டாமே! - புனித
ஜோதியில் உலகை ஆள்வோமே!!

ஜாதிமதந்தானே தமிழனக்கு முட்டுக்கட்டை!
இனியாவது வளர்ப்போமே நாட்டுப்பற்றை!!

நம் உயிர்புரட்டும் அமுத ஏடு! - அது
நம் உயிரில் கலந்த நம் தமிழ்நாடு!!

நட்பு!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரிசமமாய் கற்பு! - அந்த
கற்பின் உன்னதங்காப்பது
நட்பு!!

உள்ளத்தை உரசுவது
காதல்!
உயிரை உருக்குவது
நட்பு!!

அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்?! - புனித
நட்பிற்கும் உண்டோ
ஆண்பால் பெண்பால்?!!

தோல்வியில்
தோள்கொடுப்பான்!
நான் கண்ணீர் சிந்தினால்
அவன் செந்நீர் சிந்துவான்!!

சிரம் தாழும்போது
கரம் கொடுத்து - மனதில்
உரமேற்றுவான்!

கடலில் பூக்கும் பூ
உப்பு! - நம்
புன்னகையில் பூக்கும் பூ
நட்பு!!

வெளிச்சம் கொடுப்பவன் பகலவன்!
வீரத்தில் விளைந்தவன் நண்பன்!
நம் கண்முன் நிற்கும் நண்பன்
இவன் தான் உண்மையான இறைவன்!!

கற்சிலையை வணங்குவதை
நிறுத்திவிட்டு
கண்கண்ட கடவுளை
வணங்கேன் மானிடா!!

ஆடிக்காதல்!

ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்குமாம்! - உன்
மூச்சுக்காற்றில்
என்னிதயமே பறக்கிறதடி!!

Tuesday, June 15, 2010

வாருங்கள்!

இந்தியாவில்
சதிகளை சாய்க்க...
மதங்களை மாய்க்க...
தீவிரவாதத்தை தீர்க்க...
பெண்ணடிமை போக்க...
வரதட்சிணையை வேரறுக்க...
ஊழலை ஊதித்தள்ள...
கையூடலை கைகழுவ...
மனிதர்களே வாருங்கள்!
மனிதர்களாய் வாருங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 13-03-2006

2. முத்தாரம் – 16-07-2006

3. முத்தாரம் – 17-09-2006

4. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

Monday, June 14, 2010

என் காதலி!

தை பிறந்தால்
புதிய வழி பிறந்ததாம்! - என்
(அத்)தைமகள் நீபிறந்ததால்
இதயவளிதான் பிறந்தது
எனக்கு!!

அவள் வந்தாள்!

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னோடு படித்த பெண்ணுக்கு நடந்த திருமணத்தில் என் காதல் தேவதை சேலை கட்டி வந்திருந்தாள். அவள் வருவதை எதிர்பார்த்து காத்திருந்த நான் என் குட்டிப்பாப்பாவை பார்த்தவுடன் இந்த கவிதை தோன்றியது.

கலையாய் வந்தாள்! - கற்
சிலையாய் வந்தாள்! - கடல்
அலையாய் வந்தாள்!!

கவிதையைத் தந்தாள்! - புதுக்
கவிதையைத் தந்தாள்! - தமிழ்க்
கவிதையைத் தந்தாள்!!

தரணிதனில் வந்தாள்! - எனக்கு
பரணியைத் தந்தாள்!!

பாவையாய் வந்தாள்! - தமிழ்ப்
பாவையாய் வந்தாள்! - எனை
பார்வையால் கொன்றாள்!!

வேகமாய் வந்தாள்! - குளிர்
மேகமாய் வந்தாள்!!

கொடியாய் வந்தாள்! - பூங்
கொடியாய் வந்தாள்!
செடியை வளர்த்தாள்! - காதல்
செடியை வளர்த்தாள்!!

வெள்ளமாய் வந்தாள்! - அன்பு
வெள்ளமாய் வந்தாள்! - என்
உள்ளத்தை வென்றாள்! -என்
உயிரினில் கலந்தாள்!!

சொன்னார்கள் செய்கிறோம்!

அன்று சொன்னார்கள்!
இன்றும் செய்கிறோம் நாம்!!

நாணயத்தோடு வாழச்சொன்னார்கள்!
நாணயத்தை விற்று
நாணயமல்லவா வாங்குகிறோம் நாம்!!

சாதிக்கச் சொன்னார்கள்!
சாதிப்பதை பாதியில் நிறுத்தி
ஜாதியோடு அல்லவா வாழ்கிறோம் நாம்!!

மெய்சொல்லச் சொன்னார்கள்!
மெய்யை பொய்யாக்கி
மெய்யை அல்லவா காக்கிறோம் நாம்!!

விலங்கை காக்கச் சொன்னார்கள்!
விலங்குகளை துன்புறுத்தி
விலங்குடன் அல்லவா சிறைசெல்கிறோம் நாம்!!

மதத்தை மறக்கச் சொன்னார்கள்!
மதங்கொண்ட யானைபோல்
மதத்தோடு அல்லவா வாழ்கிறோம் நாம்!!

மனிதனாய் வாழ்ச்சொன்னார்கள்!
இனியாவது
மனிதனாய் வாழ்வோம்! - மனிதத்தின்
புனிதம் காப்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 06-03-2006

என் இளைஞனே!

தண்ணீரில் மணம்வீசுவது அகில்! - மழையாய்
கண்ணீரைச் சிந்துவது முகில்!!
இரவின் மரணம் பகல்! - நமக்கு
இரவின் ஒளியாய் அகல்!!
மன்னர்களுக்கு என்றுமே அரியாசனம்! - மனித
மதங்களுக்கு இனிமேல் சரியாசனம்!!
பாசத்திற்கு பிரிவு ஒருபாலம்! - நம்
தேசத்திற்கு இனிஇல்லை மரணஓலம்!
பயிர்களைக் காப்பவன் உழவனே! - உலக
உயிர்களை காக்கவாடா எம்மிளைஞனே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 03-12-2005

நீ!

அன்று UNIX வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அவள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். அவளின் பின்னழகை இரசித்தபடி அமர்ந்திருந்தேன். அவள் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது தோன்றிய கவிதை இது.

கைவளை குலுங்க...
கனியிதழ் சிரிக்க...
காற்சிலம்பு அழைக்க...
கொடியிடை தடுக்க...
விழிச்சிறை அடைக்க...
கார்கூந்தல் உலுக்க...
தனிநடை இழுக்க...
முகிலெடுத்து செய்த அகமோ!
அகிலேடுத்து செய்த முகமோ!!
என்உயிரெடுக்க வந்த தங்கமோ..!!
நீ!!!

கா(சா)தல் பார்வை!

ஒருநொடியில்
உன்பிம்பம்
என்கண்ணில் விழுந்தது!

மறுநொடியில்
என் இன்பம்
துன்பமாய் மாறியது!!

காதல் இனம்!

கோபப்படும்போது
நீ வல்லினமென்று
தோன்றினாய்!
அன்பாய் பேசியபோது
நீ மெல்லினமாய் தோன்றினாய்!

நீ
வல்லினமா?
மெல்லினமா?
குழப்பம் வந்தது
எனக்கு!

ஓர்நாள்
உன் இடையைப்பார்த்த போது
தெரிந்துகொண்டேன்!
நீ
இடையினமென்று!!

வாய்ப்பில்லை!

கொஞ்சுதமிழ் பேசும்
வஞ்சியுனைக்கான
படபடக்கும் நெஞ்சுடன்
அனைவரும் அஞ்சும் வெயிலில்
நிற்கிறேன்!

மௌனமாய் பயணிக்கிறாய்
எனைக்கடந்து!

என் நிழலிலிருந்து
கத்தியின்றி யுத்தமின்றி
சத்தமின்றி
நித்தம் நித்தம்
இரத்தம் வழிந்தோடுவதை
நீ
அறிந்திருக்க வாய்ப்பில்லை! - உனக்கு
புரிந்திருக்க வாய்ப்பில்லை!!

காதல் பாசறை!

உன்
மௌன யுத்தத்தில்
கொஞ்சம்கொஞ்சமாய்
தூக்கிலிடப்படுவது
என்
உறக்கங்கள் மட்டுமல்ல...
உயிரணுக்களும்தான்!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இராணி – 08-10-2006

என் வாழ்க்கை!

2005 ம் ஆண்டிலிருந்து நான் கவிதைகல் எழுத துவங்கினேன். நான் பலமுறை என்னுடைய கவிதைகளை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பியும் முதல் முறை வெளிவர சற்று கால தாமதமானது. அந்த வருத்தத்தில் நான் எழுதியது.


மாற்றத்தைத் தருவது பொதுவாழ்க்கை!
ஏமாற்றத்தைத் தருவது என்வாழ்க்கை!!
தூக்கத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
துக்கத்தைக் கொடுப்பது என்வாழ்க்கை!! - மனிதனோடு
ஒட்டிவாழவைப்பது பொதுவாழ்க்கை!
எட்டாக்கனியைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
அமுதத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
அழுகையைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
கதைசொல்ல வைப்பது பொதுவாழ்க்கை!
கவிதைசொல்ல வைப்பது என்வாழ்க்கை!!

விடியலை நோக்கி...

சிவம் பெரிதா?
சிலுவை பெரிதா?
தொழுகை பெரிதா?

நிறுத்துவோமே சமயப்பூசலை!
திறப்போமே இதயவாசலை!!

மனஉறையில் உள்ள
மதக்கறைகளை
புதுப்பறையடித்து
தனிச்சிறையில் வைப்போம்!

சமயம் பார்த்து
சமயங்களை சாய்ப்போம்!

சாதிக்காய்கள் போதைதருவதுபோல்
சாதிப்பேய்கள் பேதைகளாக்குகின்றன
நம்மை!
சாகடிப்போம் சாதியை!!

தீர்த்துக்கட்டும் தீவிரவாதத்தை
தீயிலிட்டுக் கொளுத்துவோம்!

உறுதிதரும் குருதியால்
உள்ளங்கள் இணையட்டும்! - அன்பு
வெள்ளங்கள் பொங்கட்டும்!!

சிரிப்பதை குறைப்போம்!
சிந்தித்து செயல்படுவோம்!!

இந்தியாவின் விடியல்
இளைஞர்கள் கைகளில்...