Friday, June 18, 2010

வாருங்கள் தமிழர்களே...

என்னோடு 11 ம் வகுப்பிலிருந்து பழக்கமான நண்பன் முருகலோகேஷ்வரன். கல்லூரிப் படிப்பை நான் இராமநாதபுரத்திலும் இவன் மதுரையிலும் தொடர இருவரும் பிரிந்துவிட்டோம். இதற்கிடையில் பரமக்குடியில் இவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்திருந்தது போலும். நானும் அவனும் M.C.A entrance exam TANCET க்கு தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் அவன் என்னிடம் சொன்னான். அப்போது இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டதாகவும் சொன்னான். அவள் எழுதிய கடிதங்களை என்னிடம் படிக்கக் கொடுத்தான். நான் படிக்க மறுத்து விட்டேன். அவன் கடிதங்களில் 'இப்படிக்கு லோகேசுகி' என்று எழுதியிருந்தது. என்னவென்று கேட்டபோது 'அவள் பெயர் சுகிர்தா. என் பெயர் லோகேஸ்வரன். அதனால் அவள் என் பெயரோடு அவள் பெயரையும் சேர்த்து எழுதியிருக்கிறாள். அவளும் நானும் வேறு வேறு ஜாதி என்பதால் அவள் வீட்டில் அவளுக்கு சூடு போட்டார்களாம். நானும் மனம் கேட்காமல் விஷமருந்தி விட்டேன். என் பெற்றோர் என்னை காப்பாற்றி விட்டனர்.' என்று உருக்கமாகச் சொன்னான். அப்போதுதான் காதலின் மகத்துவம் எனக்குப் புரிந்தது. அனைவருமே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் ஜாதி ஒழிந்துவிடும் என்று தோன்றியது. அப்போது எனக்கு கவிதை எழுதத் தெரியாது. இந்த நினைவு என் உயிரின் மூளையில் ஆழமாக பதிந்துவிட்டது. 2005 ம் ஆண்டு ஒருநாள் அந்த நினைவின் தாக்கத்தில் என் நண்பன் எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்தபோது இந்த கவிதை தோன்றியது.


வாருங்கள் தமிழர்களே...
உண்மைக்காதல் செய்ய
வாருங்கள் தமிழர்களே...

ஜாதியை ஒழித்து
சாதிக்க நினைத்து
காதலிக்கப் புறப்பட்டேன்
என்னவளை!

ஆனால்...
விதி சாதியெனும்
ஆயுதத்தைக் கையிலேந்தி
என் காதலைத் துரத்துகிறது!
என்னுடல் மடிந்தாலும்
என் காதலும் கவிதைகளும்
உயிரோடுதான் இருக்கும்!!

இனிவரும் தமிழர்கள்
என் கவிதையின் கருப்பொருள்
புசித்து விட்டு - உண்மைக்
காதல் செய்ய புறப்படுவர்!!

அந்தச் சாதனைநாளில்
என் தமிழ்நாடு
தரணியில் சாதியற்ற
சொர்க்கபுரியாய்
பட்டொளிவீசும்!

இந்தச் சாதனைவெறி
தெரிகிறது
என் தமிழர்களின் கண்களில்!

வாருங்கள் தமிழர்களே...
உண்மைக்காதல் செய்ய
வாருங்கள் தமிழர்களே...

No comments: