Thursday, June 17, 2010

வெற்றிப்பாதை!

2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.


சிரிக்கப் பிறந்தவளே! - வெற்றியைப்
பறிக்கப் பிறந்தவளே!!

தோல்வியால் துவள்வதை மறந்தால்
மேற்கெங்கும் மறந்து
உதயமாகும் புதிய கிழக்கு! - இனிஉன்
வெட்கப் போர்வையை விலக்கு! - என்றும்
வெற்றி ஒன்றே உன் இலக்கு!!

துன்பம் தொற்றிக்கொண்டால்
தோழியிடம் சொல்லியழுதுவிடு!
நாளடைவில் துள்ளியெழுந்துவிடு!!

தோல்வியால் துவள்வது இயல்பு! - முயற்சி
வேள்வியால் வெல்வது சிறப்பு!!

தாய்தந்தையை தொழுதுவிட்டு
தலைநிமிர்ந்து தமிழ்மண்ணில் நில்!
வாழ்வியல் நடைமுறைகளை
தெரிந்து கொள்! - அடைந்த
தோல்விக்கு விடைகண்டு உலகை வெல்!!

உன் இலட்சிய வேர்களை விசாலமாக்கு!
விழுதுகளும் விருச்சமாகும்!

விண்மீன்களிடம் விடியலை...
மின்மினியிடம் ஒளியை...
கேசம் கலைக்கும் தென்றலை...
தேகம் சிலிர்க்க திருடிக்கொள்!

நடந்தவையெல்லாம்
கனவாய்ப் போகட்டும்! - இனி
நடப்பவையெல்லாம்
நல்லவை ஆகட்டும்!!

வெல்லப்போவது தமிழகம்! - ஆருடம்
சொல்லிப்பாடுது என் அகம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 27-08-2007

No comments: