Thursday, June 24, 2010

இயற்கையை இரசிக்கலாமே!

யாரும் இராகம் கற்றுக்கொடுத்து
புதுக் கீதம் பாடவில்லை
குயில்!

யாரும் நடனம் கற்றுக்கொடுத்து
புது நாட்டியம் ஆடவில்லை
மயில்!

குளிர்தென்றல் மேனிதொட
மணம்வீசும் மழையை
தண்ணீராய்... - ஆனந்தக்
கண்ணீராய்...
மானுடத்திற்கு பொழியவிட்டு
மரஞ்செடிகொடிகளை தளிர்க்கவைத்து
உயிர்களின் உயிரைக்காத்து
சோகந்தனை சாகடித்து
தாகந்தனை தீர்த்துவைத்து
தேகம் சிலிர்க்கவைக்கிறது
மேகம்!

கூடிவாழும் வாழ்க்கையை
கோடிவருடத்திற்கு முன்பே
தேடிப்பிடித்து வாழ்கிறது
காகம்!

வேதியியல் மாற்றத்தால்
வீதிகளில் பரவுகிறது
மண்வாசம்!
சுவாசத்தில் மூச்சாகிறது
பூவாசம்!
என் தாய்த்தமிழால்
தலைநிமிரட்டும் நம்தேசம்!

ஆபத்துள்ள வீடுகளில்
குகைபோன்ற கூடுகளில்
சத்தமாய் ஒலிஎழுப்பி
சந்தோசமாய் வாழ்கிறது
தூக்கணாங்குருவி!
பூமித்தாயின் பாறைக்கருவில் பிறந்து
உற்சாகத்தை தற்செயலாய்த் தருகிறது
தூய்மையான அருவி! -பின்னர்
தரணியெங்கும் தண்ணீரால் சிறந்து
மானுடத்திற்கு வாழ்க்கைப்பாடத்தை
வெள்ளோட்டமாய் வாழ்ந்துகாட்டுகிறது
ஆறு!!

உழைத்துக் களைத்தவனுக்கு
இதமான குளிர்தென்றல் காற்றை - பல
விதமான பூக்களின் பாட்டை
நிழலோடு தருகிறது
மரம்!

இவையெல்லாம் கற்றுக்கொடுப்பதை
சற்றே உற்றுநோக்கினால்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான்!
செயற்கையோடு சேராத வாழ்க்கைதான்!!

மானுடப்பிறவிகளான நாமும்
எவரையும் எதிர்க்காமல்
எவரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால்
மறுப்பேதும் இல்லாமல்
வெற்றி நமக்குத்தான்!!

No comments: