Wednesday, October 20, 2010

இளவரசி!

2006 ம் ஆண்டு நான்காம் பருவத் தேர்வு முடிந்தவுடன் நான் என் ஊருக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி விட்டேன். அவள் மறுதேர்வெழுத வரும்போது அவளிடம் இந்த கவிதையை கொடுத்து காதலையும் சொல்லி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கவிதையை கொடுக்கவோ காதலை சொல்லவோ அன்று எனக்கு தைரியம் வரவில்லை.


எனக்குத்தான் நீ அரசி!
எப்போதுமே இளவரசி!!
எனக்கு மட்டுந்தான் நீ அரசி!
எப்போதுமே இளவரசி! - என்விழிகளால்
உனைமெல்ல உரசி - கவிதைகள்
பலவடித்தேன் கலையரசி!!

கோட்டைக்கு நீதான் அரசி! - பட்டுக்
கோட்டைக்கு நீதான் அரசி! - என்
பாட்டுக்கு நீதான் தலைவி!

பகலெல்லாம் உன்பேச்சு!
இரவெல்லாம் உன்மூச்சு!!

உன்னைப்போலொரு குணவதியை
இவ்வுலகில் கண்டதில்லையடி!

அமைதியாகவும் இருக்கிறாயடி!
அழகாகவும் இருக்கிறாயடி! - என்னிடம்
பழகத்தான் மறுக்கிறாயடி! - என்னைவிட்டு
விலகத்தான் நினைக்கிறாயடி!

நாம் பழகியது கொஞ்சம்தானடி!
அதனால் இளகியது என்நெஞ்சம்தானடி!
கண்களின் மோதல்தானடி! - அதில்
கருவானது நம்காதல்தானடி!!

சத்தமில்லாப் பெண்ணிலவே!
நித்தமும் உன்நினைவே!!

என் கவிதைக்கொரு பரிசாய்
நீ உன்னைத்தருவாயா இளவரசி?

கவிதையான உன்னிடமே யாசிக்கிறேன்!
கவிதைஎழுதி உன்னை நேசிக்கிறேன்! - என்றும்
உன்மூச்சையே சுவாசிக்கிறேன்! - இரவில்
உன்பெயரையே வாசிக்கிறேன்!!

என் கவிதைக்கொரு பரிசாய்
நீ உன்னைத்தருவாயா இளவரசி?
என்னோடு வாழவருவாயா இளவரசி??

முதிர்ச்சி!

என் அண்ணன் சு. கார்த்திகேயனுக்காக நான் எழுதிய கவிதை


நீ பேசும் பேச்சு...
எனக்குத் தந்தது புதுமூச்சு!
நீ ஏற்றிய ஒளி...
எனக்குக் காட்டியது புதுவழி!
நீ கொடுத்த முயற்சி...
என்வாழ்வின் வளர்ச்சி!
நீ செய்த உதவி...
எனக்குத் தந்தது உயர்பதவி!
நீ கொடுத்த தோழமை...
எனக்குக் கொடுத்தது புதுக்கவிஞனை!
நீ சிரிக்கும் சிரிப்பு...
என் உள்ளத்தில் பூரிப்பு!
நீ வளர்த்த புலமை...
எனக்கு இன்னொரு கவிதை!
நீ பிரியும் தருணம்...
எனக்கு இன்னொரு மரணம்!!

Tuesday, October 19, 2010

உறுதிமொழி!

இந்தியா ஒளிர்கிறது என
மேடைகள் தோறும் முழங்கினர்
நம் அரசியல் மே(பே)தைகள்!

ஆனால்...
நடைமுறை உண்மை என்ன?
நான் சொல்லவா?

நாம் வணங்கும் கடவுளைப் போலவே
எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர்
பிச்சைக்காரர்கள்!

பிரணவ மந்திரத்தைவிட
உச்சஸ்தாயில் கேட்கிறது
பிச்சைக்காரர்களின் அழுகுரல்!

குடிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
குளிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
ஒருவேளை சாப்பிட உணவு இல்லாவிட்டாலும்
கவலையில்லை நம்நாட்டு குடிமகன்களுக்கு!
'மடக் மடக்' என்று
மாட்டு மூத்திரத்தை குடிப்பதுபோல்
குடிப்பதற்கு
சாராயம் மட்டும் கிடைத்துவிட்டால் போதும்!

உலகவங்கிக் கணக்கில்
நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு
நம் நாட்டின்மீது கடன்!
இப்படி பஞ்சப் பரதேசிகளாய்
வாழ்ந்துங்கூட
கேளிக்கை விருந்துகள்!
குத்தாட்ட நடனங்கள்!!

திருவோட்டோடு தெருவில் அலையும்
பிச்சைக்காரர்களுக்கு இணையாய்
கையில் சான்றிதழ்களுடன்
அலைகின்றனர்
வேலையில்லா பட்டதாரிகள்!!

கட்டிய மனைவியையே - காசுக்காக
கூட்டிக் கொடுக்கும்
கணவனைப் போல் 
பற்றிய கொள்கைகளையே
காற்றில் பறக்கவிடும்
பல அரசியல் கட்சிகள்!

நான்கு சுவர்களுக்குள்
கணவன் மட்டுமே காணவேண்டிய
உடல் வளைவுநெளிவுகளை
நாகரீகம் என்ற பெயரில்
ஊரார்முன்னே காட்டிக்கொண்டும்
ஆடைகளை கிழித்துக்கொண்டும்
குறைத்துக்கொண்டும்...
சிலபெண்கள்!

வேறுவழியில்லாமல்
கிழிந்த ஆடைகளை
அணிகின்றனர்
பிச்சைக்காரர்கள்!
பணத்தை செலவழிக்க
வழிதெரியாமல்
ஆடைகளை கிழித்துக்கொண்டு
அரைநிர்வாணமாய்...
சில பெண்கள்!!

இவர்கள்தான்
நம்நாட்டின் கண்கள்!
பாரதிகண்ட புதுமைப் பெ(பு)ண்கள்!
நாணத்தோடு வாழத்தேவையில்லை!
மானத்தோடுகூடவா வாழத்தேவையில்லை???????????????

வீட்டு வரி, தண்ணீர் வரி,
மின்சார வரி, வருமான வரி
என வரிவிதித்து வரிவிதித்து
நம் இரத்தத்தை உறிஞ்சுவிட்டு
கடமையைச் செய்யாமல்
இலவசங்களை அள்ளிவீசிவிட்டு
நம் மூளையை மழுங்கடித்து
நம்மை முதுகெலும்பு இல்லாதர்வளாய்
மாற்றுகின்றனர்
சில அரசியல் சாணக்கியர்கள்!

காற்று விரட்டித்தான்
கம்பத்தில் பறக்கிறது
நம்நாட்டின் தேசியக்கொடி!

மிட்டாய் வாங்க
மட்டுமே பயன்படுகிறது
நம் நாட்டின் சுதந்திர தினம்!!

நம் தேசத்தலைவர்கள் அனைவருமே
மதிப்புள்ள சிலைகளாய்
மதிப்பில்லாமல்...

காந்திஜெயந்தி அன்றுகூட
கொடிகட்டிப்பறக்கிறது
கள்ளச் சாராய வியாபாரம்!!

தம் இனமக்கள் அழிந்துங்கூட
என்னவென்று கேட்காமல்
ஏகாந்தமாய்
ஐம்புலன்களை அடக்கி
சமாதி நிலையில் தியானித்திருக்கும்
முனிவர்களைப் போலவே
சாந்தமாயிருக்கின்றனர்
நம் தமிழ்நாட்டு மக்கள்!
இன்னும் சிறிதுநாட்களில்
நம் தமிழினமே
சமாதி ஆகுமே என்ற
எதிர்கால கவலையின்றி...

படிக்கச் சொல்கிறது பள்ளிக்கூடம்! - சாராயத்தைக்
குடிக்கச் சொல்கிறது அரசாங்கம்!!

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!
வேதனையில் மனமோ வெந்தழல்காடு!!

ஏ இந்திய சமுதாயமே...
கொஞ்சம் நில்!
நான் கூறப்போகும் உறுதிமொழியை
கேட்டுவிட்டு செல்!!

எழிலுக்கு பஞ்சமில்லாத
என் இந்தியத்திருநாட்டில்
மேற்சொன்ன அத்தனை குறைகளும்
களையப்படும் வரை
நம் நாட்டை
பிச்சைக்கார நாடு என அழைப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்!!

Monday, October 18, 2010

அஞ்சாதே தமிழா...!

கடந்த 2009 ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தமிழீழத்தில் தமிழின அழிப்பை நிகழ்த்தியது சிங்களப் பேரினவாத இராணுவம். அதன் பிறகு பிரபாகரனையும் அவர்கள் கொன்றதாக செய்திகள் வெளியாயின. அப்போது எழுதிய கவிதை.


காக்கைக்கோர் துன்பமென்றால்
மற்ற காக்கைகள் கத்தும்!
துன்புறுத்திய மனிதனை
தேடிப்பிடித்து கொத்தும்!!
பசுவை வதைத்தால்கூட
கோபத்தில் முட்டவருமே!
உங்களை வதைத்தபோது
உங்களை மீட்க
யாருமே வரவில்லையே
ஏன்?

இருப்பவர்களில் யார்
நன்மை செய்வார்கள்
என்று பார்ப்பதை மறந்துவிட்டு
இருப்பவர்களில் யார்
குறைவாய் கொள்ளையடிக்கிறார்கள்
என்று பார்த்துப்பார்த்து
குருடர்களாய்ப் போனவர்கள்
நாங்கள்!!

ஏழைநாட்டில் - நாங்கள்
கோழைகளாகிப் போனோம்!
ஊனமல்ல எங்கள் உடலில்! - மனதில்
ஞானம் பிறந்தால் போதும்!!

சில ஆயிரம் ரூபாய்களை
அள்ளிவீசிப் போனானென்று
அள்ளி மடியில் போட்டவனுக்கே
வாயைப் பிளந்துகொண்டு
வாக்களித்து வாக்களித்து
எங்கள் வாய்க்குள் நாங்களே
வாய்க்கரிசியை அள்ளிப்போட்டுக்கொண்டோம்!!

எங்கள் நாட்டை
வெள்ளையர்கள் ஆண்டபோதுகூட
வீரனாய் வாழ்ந்து
அவர்களை எதிர்த்தோம்! - அரசியல்
கொள்ளையர்கள் ஆள்கிறார்கள்
கோழைகளாகிப் போனோம்
நாங்கள்!!

எங்கள் நாட்டில்
மறத்தமிழனுக்கு
மறந்துபோனது
மறம்!
ஈழத்தமிழனுக்குள்
இன்னமும் உயிர்வாழ்கிறது
வீரம்!!

எம் ஏழைநாட்டில்
ஒருவேளை உணவுகூட இன்றி
வறுமையின் பிடியில் சிக்கி
கோழைகளாய் சாகின்றோம்
நாங்கள்!
உம்நாட்டில் விடுதலைவேண்டி
சயனைடு குப்பிகளோடு
வீரர்களாய் சாகின்றீர்கள்
நீங்கள்!
உங்கள் வீரமரணத்திற்கு
எங்கள் சிரந்தாழ்ந்த அஞ்சலி!!

எங்களுக்கான
அத்தியாவசியப் பொருட்கள்
அனைத்தின் விலையையுமே
உயர்த்திக்கொண்டே போகின்றனர்
கோட்டையில் வாழும் கொள்ளையர்கள்!
தமிழனின் உயிர்மட்டும்
இன்னமும் விலைகுறைவாய்??

எங்களுக்கோர் நேதாஜிபோல்
உங்களுக்கோர் பிரபாகரன்!
தங்குதடையின்றி தமிழீழம்
உங்களுக்கு கிடைக்கும்!!

பலபொய்களுக்கு நடுவே
ஒரு உண்மை சிக்கித்தவிக்கிறது!

உங்கள் தலைவனும்
தலைகாட்டுவான்!
வீரனுக்கு என்றுமே
மரணம் இல்லை!
உம தலைவனைக்கண்டு
காலனே அஞ்சுவான்!
மாண்டு போகவில்லை அவன்! - உங்களை
ஆண்டவன் மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

காலம் பதில்சொல்லும்!
அஞ்சாதே தமிழா...
பொறுத்திரு தமிழா!!

உங்கள் மனமாறுதலுக்காய்
ஆறுதல் மட்டுமே
சொல்ல முடிகிறது
என்னால்!!

ஓங்கி ஒலித்தால் நம்குரல்
தாங்குமா இவ்வுலகம்?
ஏங்கித் தவிக்கிறது என்னுள்ளம்
தூங்க முடியவில்லை என்னால்

அழுது வடித்துவிட்டேன் - இக்கவிதையை
எழுதி முடித்துவிட்டேன்குறிப்பு: பிரபாகரன் உண்மையிலேயே உயிரோடிருந்தால் கீழ்க்கண்ட வரிகள் பொருந்தும்.

பலபொய்களுக்கு நடுவே
ஒரு உண்மை சிக்கித்தவிக்கிறது!

உங்கள் தலைவனும்
தலைகாட்டுவான்!
வீரனுக்கு என்றுமே
மரணம் இல்லை!
உம தலைவனைக்கண்டு
காலனே அஞ்சுவான்!
மாண்டு போகவில்லை அவன்! - உங்களை
ஆண்டவன் மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

பிரபாகரன் உண்மையிலேயே இறந்திருந்தால் மேல் சொன்ன வரிகளுக்கு பதிலாக கீழ்க்கண்ட வரிகள் பொருந்தும்.

மாண்டு போகவில்லை அவன்! - உங்களின்
ஆண்டவனே மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

Sunday, October 17, 2010

மகிழ்ச்சி!

தினம் தினம்
கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே
அதில் தெரியும்
என்னிடத்திலே
என்காதலை சொல்லிவிட்டு
உன்னிடத்தில் சொல்லியதாய்
மகிழ்கிறேன்!

ஏனெனில்
நம் காதலில்
நீ வேறில்லை
நான் வேறில்லையே...!!

காதல் கிறுக்கன்!

நான் எங்கே சென்றாலும்
என்னுடனேயே பேசிக்கொண்டே
செல்கிறேன்!

பார்ப்பவர்கள் அனைவரும்
எனை 'கிறுக்கன்'
என சொல்கின்றனர்!

அவர்களுக்கெப்படி தெரியும்
என்னுயிர் நீதானென்று...!!

காதல் சுகமானது!

உனக்கு
பத்துமாதந்தான்
பிரசவவலி!
உன்னை சுமக்கும்
எனக்கோ
ஜென்மஜென்மமாய்
இதயத்தில் வலி!!

வலிகூட சுகந்தான்!

என்னிதயம் வலிக்க
காரணமானவள்
நீ என்பதால்...

Saturday, October 2, 2010

கேள்வி?

காதலிப்பது சுகமா?
காதலிக்கப் படுவது சுகமா?

சொல்லிவிடு காதலி!

காதல்!

என் கண்களுக்கும்
உன் கண்களுக்கும்
மட்டுமே புலப்படும்
மானசீகக் கடவுள்!!

தொலைந்துபோன இதயம்!

மோதிரத்தை
பகலில் தொலைத்துவிட்டு
இரவில் தேடுபவனைப் போல்
என் இதயத்தை
உன்னிடத்திலேயே தொலைத்துவிட்டு
என்னிடத்திலே தேடுகிறேன்!
என்னிதயம் விரைவில்
கிடைக்கக் கூடாதெனவும்
வேண்டுகிறேன்!

கிடைக்காத தினங்களிலாவது
என் இதயத்திடம் பரிவுகாட்டுவாய்
என்ற நம்பிக்கையோடு...!!

மனமெனும் அற்புத சாதனம்!

உடலையும் உயிரையும்
இணைக்கும் அற்புத
சாதனம் இந்த மனம்!

உயிரினில் தோன்றும்
உணர்வினை உண்மையாய்
வெளிக்காட்டுமிந்த மனம்!

இரவில் கனவை
உற்பத்தி செய்து
பிறவிப்பயனை
படமாய்க் காட்டுமிந்த மனம்!

கண்களை மூடி
தியானத்திலிருந்தால் - நம்
கண்முன் கடவுளைக்
காட்டும் கண்ணாடி
இந்த மனம்!

மிருக குணத்தை
களையெடுக்கச் செய்து
கடவுள் குணத்தை
காப்பாற்றச் செய்வது
இந்த மனம்!

நீயும் கடவுள்! - உன்
உயிர்தான் கடவுள்!
உன்னை உணரச் செய்வது
இந்த மனம்!

அன்பே கடவுள்!
அறிவே பலம்!
உனக்கு சொல்லிக்கொடுப்பது
இந்த மனம்!!