Wednesday, August 31, 2011

மழை!

மழையை தலைவியாகவும் காதலியாகவும் பூமியை மழைக்காதலியின் தலைவனாகவும் காதலனாகவும் உருவகப்படுத்தி எழுதிய கவிதை இது.


சிங்கத்தமிழனின்
அங்கமெலாம் நனைக்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

இடியிசை முழங்க
மின்னலெனும் ஒளிவாங்கி
வேகவேகமாய்
தாகம் தீர்க்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

அஞ்சியஞ்சி வந்து
கொஞ்சிக்கொஞ்சி விளையாடும்
பிஞ்சு முல்லைகளின்
நெஞ்சம் நனைக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கெஞ்சும் மழையே!!

மண்ணாய்க் கிடந்த மண்ணை
பொன்னாய் மாற்றவந்த
சின்ன மழையே! – எங்கள்
வண்ண மழையே!!

பயிர்களின் உயிர்காத்து – உலக
உயிர்களின் உயிர்காக்க வந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

பஞ்சம் பஞ்சம் என
தஞ்சம் கேட்டவர்கள்
எம் தமிழ்மக்கள்! – அம்
மக்களின் வாழ்க்கையை
வஞ்சம் தீர்க்கும் மாக்களை
கொஞ்சம் கொஞ்சமாய் தாக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கொஞ்சும் மழையே!!

பறவையை பறக்கவைப்பது
இறக்கை!
உன்னை பிறக்கவைப்பது
இயற்கை!!

மாதம் மும்மாரியாய் பொழிந்தவள் நீ
இன்று கருமாரியை வணங்கியும்
பூமியில் ஒருமாரியைக்கூட கொடுக்கவில்லையே...!!
பூமி உன் காதலனோ...
கார்காலத்தில் கூடலோ...
ஏர்காலத்தில் பாடலோ...
தவழ்கிறாயே அவன் மடியில்!!

கோடையில் ஊடலோ...
கோபமோ அவனுடன்...
சேர மறுக்கிறாயே...!!

உன் ஊடலில்
கோபம் கொள்வது
உன்னவன் மட்டுமல்ல...
உலக மக்களுந்தான்!!

No comments: