Monday, September 19, 2011

தீபமேற்றுவோம்!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயயெண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடிக் கடவுளையே நாமும்போற்றுவோம்!!

புத்தாடைகள் அணிந்தேநாமும் பாதம்பதிப்போம்!
பூமிப்பந்தைப் புரட்டிப்போட்டு நாமும்குதிப்போம்!
தத்துவங்கள் பொய்களல்ல மெய்யேதானென்ற
தாத்தாபாட்டி அறிவுரைகள் நாமும்மதிப்போம்!!

பலகாரங்கள் வகையாய்ச்செய்து நாமும்தின்னலாம்!
பக்கம்அக்கம் உள்ளோரிடம் பகிர்ந்தேஉண்ணலாம்!
சிலகாலங்கள் வாழ்ந்தேநாமும் போகும்முன்னரே
செயல்கள் நல்லசெயல்களையே நாமும்பண்ணலாம்!!

பட்டாசுகள் வாங்கிவாங்கிக் கொளுத்திப்போடுவோம்!
படபடவென்று வெடிக்கும்போது நாமும்ஆடுவோம்!
கடவுள்வேறாய் மதங்கள்வேறாய் நாமேபிரித்தோம்
கருணைஒன்றே அன்பேகடவுள் நாமும்பாடுவோம்!!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயயெண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும்போற்றுவோம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

2. வெற்றிநடை - 01-11-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

1 comment:

vetha (kovaikkavi) said...

''..தீயஎண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம் கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும்போற்றுவோம்!!...''
நல்ல எண்ணங்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http//www.kovaikkavi.wordpress.com