Sunday, September 18, 2011

காதலனை தேடுகிறாள்!

தலைவனும் தலைவியும் உயிருக்குயிராய் காதலித்தனர். இணைபிரியாத துணையாக வாழ்ந்தனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த போது தலைவன் சொன்னான் ‘நான் பொருளீட்டி வந்தபிறகு நமக்கு திருமணம் நடைபெறட்டும். நான் இப்போது பொருளீட்ட வெளியூர் செல்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன்.’ என்று. தலைவியும் நம்பிக்கையோடு மூன்று வருடங்களாய் தலைவனுக்காய்க் காத்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் தலைவனைத் தேடி அவன் சென்ற ஊருக்கே போய் அவனை தேடுகிறாள். அப்போது பாடுகிறாள் இப்படி.


பாலமிட்ட பால்நிலவு பால்வெளியில் பாடுதடா!
கோலமிட்ட காதல்நிலா காதலனை தேடுதடா!!
கன்னத்தின் வீக்கத்தை கண்ணீரின் ஏக்கத்தை
எண்ணங்களை கவிதைகளாய் எழுதுதடா என்பேனா!!
பனிவாடைக் காடுகளில் பகல்நேரம் பாடுகிறேன்!
துணிவோடு நானுனையே துணையாகத் தேடுகிறேன்!!
வெயில்நேரம் வந்தபோதும் குயில்கூவும் சத்தம்!
உயிரோடு பதிந்ததடா உன்நினைவே நித்தம்!!
காற்றோடு பேசுகிறேன் கவிதைவழி பாடுகிறேன்!
நேற்றோடு போனவனே நெஞ்சோடு வாழ்பவனே!!
கொஞ்சிக்கொஞ்சிப் பேசவந்து காதல்தனை வளர்த்தவனே!
வஞ்சியென் மனங்கவர்ந்து வாழ்க்கைத்துணை தந்தவனே!!
மணமேடை ஏறும்முன்னே மணாளனேநீ போனதென்ன!
பிணவாடை வீசுவதுபோல் பிணமாகநான் ஆனதென்ன!!
செத்தாலும் சுகந்தருமே முத்தாக உன்முகம்வருமே
கத்தாத குயில்நானே பித்தாக ஆனேனே!!
மோனநிலை கனவுறக்கம் மங்கையென் உயிரிருக்கும்!
தேனொழுக நீபேச முத்துமுத்தாய் கவிபிறக்கும்!!
எங்கேயோ போனாயே என்னோடு வாநீயே!
மங்காத புகழோடு வாழ்வோம் இங்கேயே!!

No comments: