Sunday, September 18, 2011

முத்தங்கள் பலநூறு தா!

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சியை நினைத்து 2009 ம் ஆண்டு டிசம்பரில் எழுதிய பாடலிது.

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னோடு படித்த பெண்ணின் திருமணத்திற்கு என் காதல் தேவதை சேலை கட்டி வந்திருந்தாள். திருமணம் முடிந்தபிறகு ஒரு தோழியிடம் விடைபெறுவதற்காய் அந்தத் தோழியை நோக்கி நடந்தேன். அந்தத் தோழிக்கு நேரே பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். தன்னிடம்தான் பேச வருகிறான் என அவள் நினைத்து வெட்கப்பட்ட படியே ஓடிப்போய் சுவரின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அங்கிருந்து விடைபெறும்போது நான் மட்டும் வரவில்லை. வெட்கப்பட்ட என் குட்டிப்பாப்பாவையும் என் மூளைக்குள் சுமந்துகொண்டு விடைபெற்றேன். 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கற்பனையில் நான் உருவாக்கி வைத்திருந்த சாலையில் நடக்க வைத்தேன். அப்போது தோன்றிய பாடலிது. சேலை கட்டிய என் காதல் தேவதை, குட்டிப்பாப்பா தேவதை எவ்வளவு அழகாக இருப்பாள் தெரியுமா?


சேலைகட்டி வந்தமயில் சோலையிலே கூவும்குயில்
காலையிலே என்முன்னே நடந்தாள்! – நானும்
மாலையிடும் ஆசைகொண்டு வேளைவரும் நாளையெண்ணி
சாலையிலே அவள்பின்னே நடந்தேன்!!

கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை! – அவளைப்
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை!!

கச்சணிந்த முன்னழகில் மச்சமுள்ள இடையழகில்
மிச்சமுள்ள பெண்ணழகில் மயங்கி! – நானும்
கச்சணிந்த முன்னழகை மச்சமுள்ள இடையழகை
அச்சமுடன் பின்தொடர்ந்தேன் தயங்கி!!

கொஞ்சதூரம் போனபின்னே வஞ்சியவள் திரும்பிநிற்க
அஞ்சிநின்று வேறுதிசை பார்த்தேன்! – அவள்
நெஞ்சமதை நானறிய வஞ்சியவள் பெயரறிய
கொஞ்சதூரம் நடந்தபடி வேர்த்தேன்!!

தத்தையவள் எனைநோக்கிச் சித்திரமாய்த் திரும்பிவந்து
பத்திரமாய் ஒருசேதி உரைத்தாள்! – ‘நானுன்
அத்தையவள் பெற்றமகள் பைத்தியமா நீ?’என்று
புத்திமதி சொல்லிவிட்டு முறைத்தாள்!!

உண்மையது புரிந்தவுடன் மென்மையான பெண்மையிடம்
உண்மையான காதலென்று சொன்னேன்! – அவளும்
‘நானுமுனைக் காதலித்தேன் நாணமுற்ற நாள்தொடங்கி’
பெண்மையவள் மென்மையாகச் சொன்னாள்!!

முத்துரத வீதியிலே தத்திவிளை யாடுங்கிளி
சித்திரமாய் என்னருகே வந்தாள்! –அவள்
முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய்ப் பத்திரமாய்
முத்தங்கள் பலநூறு தந்தாள்!!

‘குழவியாகப் பார்த்தவுன்னை தலைவியாகப் பார்த்தவுடன்
குழம்பியது என்னறிவு’ என்றேன்! – என்
தலைவியான அவளோடு தலைகோதி சாய்ந்தபடி
மழலையாக வீடுநோக்கிச் சென்றேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012

No comments: