Sunday, September 18, 2011

அழகு தேவதை!

காதலைப் பற்றி எழுதுவதில் எனக்கு அலாதி பிரியந்தான். தன் மேல் ஊடல்(கோபம்) கொள்ளும் பாட்டுடைத் தலைவியை இந்தப் பாடலைப் பாடி சமாதானம் செய்கிறான் பாட்டுடைத் தலைவன். (இந்தக் கதைச்சூழலும் பாடலும் எனக்குத் தோன்றிய கற்பனையே. உண்மை சம்பவமல்ல.) ௨௦௧௧ ல் எழுதிய பாடலிது.


பல்லவி:
அழகு தேவதை கண்ணில் வந்தாள்!
பழகும் போதிலே பாசம் தந்தாள்!
விலகி நின்றேனே விழிகளில் கண்ணீர்!
உலவும் காற்றைப்போல் உயிரினில் காதல்!!

சரணம் - 1
ஓர்நாள் உனையே பார்க்கா விடிலே...
கூர்வாள் எனையே கொய்யும் தினமே!
போர்வாள் இடையே தேர்போல் நடையே
சேர்வேன் உனையே சோர்வேன் மனமே...
(அழகு தேவதை...)

சரணம் - 2
மறந்தேன் உனையே என்றே நினைத்து
சிறப்பாய் நடிப்பாய் செருக்காய் நடப்பாய்!
இறந்தே கிடந்தேன் இருவிழி பட்டுப்
பிறந்தே விட்டேன் பார்மீ தினிலே...
(அழகு தேவதை...)

சரணம் - 3
கொஞ்சம் ஊடல் கொஞ்சம் கூடல்
தஞ்சம் கேட்டேன் தந்தாய் காதல்!
கண்கள் மோதல் கவிதைப் பாடல்
என்னுடைத் தேடல் நீதான் நீதான்!!
(அழகு தேவதை...)

சரணம் - 4
பூவைச் சூடிடும் பூவையும் நீதான்
தேவையும் நீதான் தேவதைத் தேன்தான்!
பாவையின் அழகினை பார்த்தேன் வியந்தேன்
சேவைகள் செய்திடும் சேவகன் நான்தான்!!
(அழகு தேவதை...)

பல்லவி:
அழகு தேவதை கண்ணில் வந்தாள்!
பழகும் போதிலே பாசம் தந்தாள்!
விலகி நின்றேனே விழிகளில் கண்ணீர்!
உலவும் காற்றைப்போல் உயிரினில் காதல்!!

குறிப்பு:
இந்தப் பாடல் முடிந்தவுடன் கதறி அழுதுகொண்டே ஓடிவருகிறாள் பாட்டுடைத் தலைவி, தலைவனைக் கட்டித் தழுகிறாள் ‘உனைப் பிரிந்து வாழமாட்டேன்டா செல்லம்’ என்று. பின் அவனின் கன்னங்களில் மாறி மாறி முத்த மழை பொழிய ஆரம்பித்தாள் அவள்.

No comments: