Sunday, September 18, 2011

வீரவணக்கம்!

தமிழர்களே, தமிழச்சிகளே, சோகம் மறக்க, தேகம் சிலிர்க்க, வேகம் பிறக்க, பாடுங்கள் இப்பாடலை என்னோடு சேர்ந்து.


தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம் – இனி
தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும் – இங்கு
தீக்குளித்த வீரர்க்கெல்லாம் எனதுவணக்கம் - நானும்
தீபமேற்றி வழிமொழிந்தேன் நெஞ்சிலெனக்கும்

மூவரையும் தூக்கிலிடத் துடித்தகணத்தில் – நீ
முடிவெடுத்தாய் போராட்டம் என்றேசினத்தில் – இங்கு
பாவையரும் பட்டினியாய் கிடந்தகணத்தில் – நீ
பரிதவிப்பை ஒளித்தாயே உந்தன்மனத்தில்

சீமானும் நெடுமாவும் வருத்தஞ்சொல்லவே – உன்
சிலைமுன்னே நின்றபடி வருந்திச்செல்லவே – இங்கு
ஏமாளி ஆகிவிட்டான் தமிழன்மெல்லவே – இனி
எழுந்திடடா கொடுமைகளைத் துரத்திக்கொல்லவே

தரணிதனில் தென்னாட்டின் வீரமங்கையே – நீ
தமிழர்க்குப் புகழ்சேர்த்த அன்புத்தங்கையே – உன்
கருணையாலே எழுச்சிபெறும் எம்மிலங்கையே – இக்
கவிதையிலே பாடிவிட்டேன் எனதுபங்கையே

தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம் – இனி
தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும் – இங்கு
தீக்குளித்த வீரர்க்கெல்லாம் எனதுவணக்கம் - நானும்
தீபமேற்றி வழிமொழிந்தேன் நெஞ்சிலெனக்கும்


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

No comments: