Sunday, September 18, 2011

வளர்க முத்தாரம்!

2007 ம் ஆண்டு என்னுடைய ஞாயிறு என்ற கவிதை முத்தாரம் வார இதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முன்னரே நான் அந்த இதழைப் பாராட்டி ஒரு கவிதை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய ஞாயிறு என்ற கவிதை வெளிவந்தபிறகு அந்த இதழை பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம் மேலும் அதிகமானது. அந்த காலகட்டத்தில் வாசகர் கவிதைகள், சிறப்புக் கவிதை, ஐன்ஸ்டீன் பதில்கள், நவீன அறிவியல் வரலாறு, புத்தர்பிரான், நம்பிக்கைத்தொடர், சுரங்கம், தூவானம் என பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இப்போது பல தலைப்புக்கள் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது முத்தாரம். அனைவருமே படிக்க வேண்டிய வார இதழ் முத்தாரம்.


பொதுஅறிவுப் பெட்டகம்!
புதுமைதரும் புத்தகம்!
முதியோரும் படிக்கின்ற
முத்தமிழின் பொக்கிஷம்!!

புத்தரருளும் பொன்மொழிகள்!
புத்தியைச் செதுக்கும் நல்உளிகள்!
யுத்தமில்லா உலகுகாண
யூகிக்கிறது என்னிரு விழிகள்!!

மழையில்லாத் தூவானம்!
மணக்கிறது மண்வாசம்!
ஒளியில்லா இரவினுள்ளும்
ஒளிர்கிறது முத்தாரம்!!

நவீன அறிவியல் வரலாறு!
நான்தரும் மதிப்பெண்கள் நூறு!
நவீன மானுடவுலகிற்கு
நம்பிக்கைதரும் பகலவனாய் நீமாறு!!

முயற்சியை முடுக்கிவிடும் வினையூக்கி!
முயலாமையின் வேரையே நீதாக்கிதாக்கி
அயற்சியின் சிறகை ஒடிக்கிறாய்
அறியாமையிருளை நீபோக்கிபோக்கி!!

தங்கம்போல் ஜொலிக்கிறது சுரங்கம்!
தனிமையில் என்மனமுன்னில் கிறங்கும்!
சங்கத்தமிழ் மூன்றோடு சேர்த்து
சாதனையாய் உன்புகழ் முழங்கும்!!

கவிஞனையும் வளர்த்த இதழ்!
கலாமையும் வளர்க்கும் இதழ்!
புவிதனிலே உனைத்தானே
புகழ்கிறது அனைவரின் இதழ்!!

எத்தனைதான் வாரஇதழ்
எங்கள்கையில் ஒரேஇதழ்!
முத்தாரமெனும் வாரஇதழ்!
மதிவளர வேறெங்கே புகல்??

No comments: