Sunday, September 18, 2011

அணில் பாப்பா!

அன்பான அணில்பாப்பா ஆசையுள்ள அணில்பாப்பா
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!

காக்கைக்கு சோறுவைக்க கூரையின் மீதேறி
கைப்பிடி சாதத்தை கவனமாக வைப்பேனே
காக்கையை விரட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில்
கைப்பிடி சாதத்தை கொறித்தேதான் தின்பாயே
பாக்கையே மெல்லுகிற பல்லில்லா பாட்டிபோல
பசியாறும் உனைத்தானே பார்ப்பேனே சிரித்தபடி
மூக்கின்மேல் விரல்வைத்தே மூழ்கித்தான் போவேனே
மூன்றாண்டு குழந்தைபோலே மூன்றாண்டு குழந்தைபோலே
(அன்பான...)

உன்னுருவை காணத்தான் என்னுடனே தங்கையுந்தான்
ஓடிவந்து பார்ப்போமே தேடிவந்து பார்ப்போமே
கண்களிலே பட்டுவிட்டால் காலையென்ன மாலையென்ன
கவலையில்லை எங்களுக்கு களிப்பிற்கு அளவில்லை
அன்னையுடன் தந்தையுந்தான் ஆடியோடி வருவாரே
ஆனந்தப் படுவாரே ஆசையுடன் இரசிப்பாரே
உனைப்போல நானுந்தான் ஓடியாட ஆசையடா
ஆனாலும் நானொன்றும் உனைப்போல குழந்தையில்லை
(அன்பான...)

கள்ளமில்லா உன்னுருவை காணுகிற பொழுதெல்லாம்
கடவுளையே பார்க்கிறேனே கைதட்டி இரசிக்கிறேனே
தொல்லையில்லா வாழ்வுனக்கு துயரமில்லா வாழ்வுனக்கு
தொடுவானம் போலேநீ தொட்டுவிடத் துடித்தேனே
எல்லையில்லா அழகுடனே எழிலாகப் பிறந்துவிட்டாய்
எதற்கிந்த பிறவியென்று ஏங்கத்தான் வைத்துவிட்டாய்
உள்ளத்தை பொருத்தமட்டில் உனைப்போல மாறிடவே
ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டால் இடர்கள்தான் இல்லையடா
(அன்பான...)

அன்பான அணில்பாப்பா ஆசையுள்ள அணில்பாப்பா
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!

No comments: