Wednesday, March 14, 2012

ஊற்றாகும் மின்சாரம்

விலைவாசி உயர்வாலே
விழிபிதுங்கி நிற்குதய்யா
ஏழைபாழை – இங்கு
தொல்லையான மின்தடையால்
தூங்கித்தான் போனதய்யா
தொழிற்சாலை

நாள்முழுதும் மின்தடையால்
நகரங்கள் கூடஇப்போ
நரகமடா! – இங்கு
நாளெல்லாம் யுகமாக
நிமிடமிங்கு வருசமாக
நகருதடா!!

தொழிலெல்லாம் முடங்கிடவே
தொழிலாளி வருந்திடவே
மின்தடை – இங்கு
ஏழைகளின் உதடுகளில்
இல்லாமல் போனதய்யா
புன்னகை

சந்தையிலே கிடைக்கின்ற
சரக்காகிப் போனதய்யா
மின்சாரம்! – ஆட்டு
மந்தையைப்போல் நாமெல்லாம்
மாக்களாகிப் போனதென்ன
சமாச்சாரம்!!

மரங்களையே வெட்டுகின்றோம்
மழைபெய்ய வேண்டுமய்யா
மரநேயம்! – இனி
மரம்வெட்ட வேண்டாமே
மதம்வெட்ட வளர்ந்திடுமே
மனிதநேயம்!!

மரங்களையே வளர்த்திட்டால்
மழையிங்கு வீசுமய்யா
காற்றாக! – இனி
மரம்சிரிக்கும் மழைகுதிக்கும்
மழைநீரில் மின்சாரம்
ஊற்றாக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

காதலடி!

மாநிலம் புகழுதடி – உன்
மாநிற மேனிகண்டு
கர்வந்தான் கூடுதடி – உன்
கார்மேகக் கூந்தல்கண்டு
காதலும் வழியுதடி – உன்
கருவண்டு விழிகள்கண்டு
மேனி சிலிர்த்ததடி – உன்
மீன்விழிப் பார்வைகண்டு
சொக்கித்தான் விழுந்தேன்டி – உன்
செந்நிற இதழ்கள்கண்டு
ஆசையுந்தான் கூடுதடி – உன்
ஆன்மீக நெற்றிகண்டு
மோகந்தான் கூடுதடி – உன்
மூங்கில் தோள்கள்கண்டு
கவிபாடத் தோணுதடி – உன்
கழுத்தழகை நானுங்கண்டு
நெஞ்சந்தான் விரும்புதடி – உன்
நூலவிழும் இடையைக்கண்டு
பாட்டெழுதத் தோணுதடி – உன்
பாதமிரண்டின் அழகுகண்டு
முத்தமிடத் தோணுதடி – உன்
முன்னழகை நானுங்கண்டு
செத்துவிடத் தோணுதடி – உன்
செங்காந்தள் விரல்கள்கண்டு
பாசமும் கூடுதடி – உன்
பார்போற்றும் குணத்தைக்கண்டு



இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

வெற்றிமாலை சூடவா!

தலைமுடியைக் குறைப்பதுபோல்
தலைக்கனத்தையும் குறை! – உன்
தன்னம்பிக்கை துளிர்விடட்டும்

விடாமுயற்சியை
உன் மூச்சென சுவாசி
மூச்சு நின்றால் – உன்
உயிர் போய்விடும்
முயற்சியைக் கைவிட்டால்
உன் வாழ்க்கையே போய்விடும்

கவலைகளை நீகொஞ்சம் ஒதுக்கு
பல திறமைகளை உன்னுள் பதுக்கு
உன்னையே நீகொஞ்சம் செதுக்கு

சமுதாயத்தின் பழிச்சொற்களை
உரமென ஏற்று
மரமென வளர்ந்து
விருச்சமாய் நிழல்கொடு

விறகுபோலே வெந்தழலாகி
வேதனையில் மூழ்கி
வீழ்ந்தது போதும்

துன்பமெலாம் போதும் – பட்ட
துன்பமெலாம் போதும்
தொடர்ந்துவரும் தோல்விகள் – உன்
திறமையாலே வெற்றியாகும்

அந்த இமயத்தில்
வெற்றிக்கொடியை நட்டு
உன் இதயத்தில்
வெற்றிப்பறையைக் கொட்டு

வீழ்வதற்கல்ல மனிதவாழ்க்கை
வாழ்வதற்கே மனிதவாழ்க்கை – உன்னில்
வளரட்டும் தன்னம்பிக்கை வேட்கை – உன்
முயற்சியால் சூடவா வெற்றிமாலை