Sunday, April 1, 2012

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினமென்று உயர்வாகச் சொல்வோமே
களைப்பிங்கு வந்தாலும் கவனமெலாம் உழைப்பில்தான்
தொழிலெங்கள் இறையென்று தொழில்செய்து வெல்வோம்
உழைப்பெங்கள் மூச்சென்று உழைக்கத்தான் செல்வோம்

அயராது உழைத்திட்டால் அடைந்திடலாம் இலக்கினையே
துயரமிங்கு வந்தாலும் தூள்தூள்தான் நம்முன்னே
உயரத்தில் போனாலும் உணர்வெல்லாம் உழைப்பிலேதான்
முயலாத மனிதர்காள் முன்னேற்றம் உழைப்பில்காண்

எதுவந்த போதினிலும் எடுப்போமே முதலடியை
பொதுவென்று வைப்போமே பொருளைத்தான் இங்கேயே
விதியின்வழி செல்கின்ற வாழ்வுமிங்கு வசப்படுமே
மதியிங்கு கூரானால் மகத்துவம் வாழ்வினிலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) 28-04-2012

No comments: