Friday, July 27, 2012

வாழைமரம்

தன்னையே அர்ப்பணிக்கிறது
தண்ணீர் ஊற்றி வளர்த்தவனுக்காக
வாழைமரம்

தமிழா...

மாணவனுக்கிருக்கும் மதிப்பு
மீனவனுக்கில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்
தமிழக மீனவன்
-------------------------------------------------------

பாஸ்மார்க் பெறவில்லை
டாஸ்மாக் நடத்தும்
தமிழக அரசு
-------------------------------------------------------

கள்ளச்சாரயத்துக்குத் தடை
டாஸ்மாக்கிற்கு கடை
வாழ்க தமிழ்நாடு(?????)!!!!
-------------------------------------------------------

ஆறறிவிருந்தும்
பயனில்லாமல்ப் போனது
தமிழனுக்கு மட்டும்
-------------------------------------------------------

நாதியில்லாத் தமிழனுக்கு
ஆதரவளிக்கின்றன
டாஸ்மாக் கடைகள்
-------------------------------------------------------

தமிழ்நாட்டின் சாதனை
கோடிகோடியாய் வசூல்
டாஸ்மாக் கடைகளால்
-------------------------------------------------------

தலைகுனிந்த ‘குடி’மக்களால்
தலைநிமிர்ந்து நிற்கிறது
தமிழக அரசு
-------------------------------------------------------

கொள்ளையடித்தவன்
குடியரசுத் தலைவன்
இந்தியாவில்...
-------------------------------------------------------

ஊழல் குற்றவாளி
முதலமைச்சராய்...
என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!!
-------------------------------------------------------

கடலில் அழும் மீன்போல்
கரையில் அழுகிறாள்
மீனவனின் மனைவி
-------------------------------------------------------

ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில்...
-------------------------------------------------------

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இந்தியாவில் மட்டுந்தான்...
-------------------------------------------------------

டாப்டென் பணக்கார்கள்
வசிக்கும் ஏழைநாடு(??????????)
இந்தியா
-------------------------------------------------------

உப்பில்லா உணவுபோலவே
துப்பில்லா அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டில்....
-------------------------------------------------------

தமிழன் எப்போதுமே
பலியாடுதான்
உலகநாடுகளின் பார்வையில்...
-------------------------------------------------------

பச்சோந்தியைத்
தோற்கடித்து விட்டனர்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
-------------------------------------------------------

நம்பித்தான் ஆகவேண்டும்
நாணயத்துக்கு மதிப்பில்லை
இந்திய நாட்டில்
-------------------------------------------------------

அரசியல்வாதிகளைவிட
விலைமாதர்கள் பரவாயில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

களவுபோன உடமைகளைப்பற்றி
கவலைப்படாத உள்ளம்
தமிழனுக்கு மட்டுந்தான்
-------------------------------------------------------

இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-09-2012

2. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

Monday, July 23, 2012

வாழிய சமுதாய நலச்சங்கம்

 கடந்த ஜூலை 19, 2012 வியாழன் அன்று இரவு 8 மணியளவில் சென்னை குரோம்பெட்டியில் இருந்து ஒரு அன்பர் என்னோடு அலைபேசியில் பேசினார். தானும் தான் சார்ந்த ஒரு சிலரும் சேர்ந்து அங்கு சமுதாய நலச்சங்கம் ஒன்றை நடத்துவதாகவும் அதனுடைய முதலாமாண்டு நிறைவு விழாவையொட்டி தனக்கு ஒரு சிறு வாழ்த்து கவிதை வேண்டும். எழுதி அனுப்புங்கள் என என்னிடம் கேட்டார். அன்றிரவு நான் எழுதிய கவிதை.

பெற்றோரே கற்றோரே உற்றோரே மற்றோரே
பெருமையுள்ள பெரியோரே வணக்கமுங்க வணக்கம்
சுற்றியுள்ள மக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும்
சமுதாய நலச்சங்கம் சிறப்புடனே வாழியவே
மற்றவரின் துயர்துடைக்கும் மனமிங்கு வாழியவே

Wednesday, July 18, 2012

ஜெய்ஹிந்த்

உடலும் சிலிர்க்க
உரக்கச் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

கடலும் தாண்டி
கத்திச் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

நேதாஜிபோலே
நிமிர்ந்தே சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

தமிழர்கள் நம்மைத்தான்
அழித்திட்ட போதும்
தமிழரின் பண்போடு
தொடர்ந்தேதான் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

காதலனே என் கணவன்

ஒரு பெண்ணின் மனநிலையோடு கடந்த ௨௦௧௧ ல் நான் எழுதிய கவிதையிது.

காற்றினைப் போலவே காதலும் வந்தது
காதினில் வந்தது கவிதையும் சொன்னது
ஆற்றினில் இறங்கியே அமைதியாய்க் குளித்தேன்
அருகினில் அவன்தான் நெருங்கினேன் மறைந்தான்

இருவிழி வழியினில் இருதயம் நுழைந்தவன்
கருவிழி இரண்டினில் கவிதையாய்க் கலந்தவன்
அருகினில் அமர்ந்துதான் அன்பினைத் தந்தவன்
கருவினில் பிறக்கவே கணவனாய் வந்தவன்

ஒருமுறை பார்த்தேன் உயிர்வலி தந்தது
மறுமுறை பார்த்தேன் காதல்தான் என்றது
திருமுகம் பார்த்துதான் திருமணம் நடந்தது
இருமனம் இணைந்துதான் ஒருமனம் ஆனது.

பெண்களை கண்களாய் போற்றும் சின்னவன்
தன்னிலை மாறாத தமிழ்நாட்டுத் தென்னவன்
அன்னையாய் தந்தையாய் அழகிய மன்னவன்
மனையாளே என்றென்னை மனதாரச் சொன்னவன்

அன்பிலே உறைந்த ஆருயிர்க் கணவன்
கண்முன்னே தெரியும் கலியுகக் கடவுள்
பெண்மையை மென்மையாய் புரிந்த என்னவன்
என்றைக்கும் அவன்தான் என்னுயிர் கணவன்

Sunday, July 15, 2012

செருப்புத் தைக்கும் தொழிலாளி

ஒரு ஜோடி செருப்பினிலே
ஒரு செருப்பு அறுந்தாலே
உடனேதான் தேடுவீரே
என்னைத்தான் நாடுவீரே

காலடியில் கிடக்கின்றேன்
காலணிகள் தைக்கின்றேன்
ஏளனமாய் யாருமெனை
ஏறஇறங்கப் பார்க்காதீர்

உழைப்பையே மூச்சாக்கி
உழைக்கின்றேன் தெருவோரம்
உருப்படியாய் கிடைப்பதுவே
ஒருரூபாய் இரண்டுரூபாய்

வெயில்தாங்கி மழைதாங்கி
புயல்தாங்கி இடிதாங்கி
புணரமைப்பேன் செருப்பைத்தான்
எனக்கென்று கடையில்லை
நடைபாதை கடையாச்சு

கேட்டபணம் தாருங்கள்
கேட்டதற்கு மேல்வேண்டாம்
முகம்சுளித்துத் தரவேண்டாம்
அகமகிழ்ந்து தாருங்கள்

இலவசங்கள் தந்தென்னை
இழிபிறவி ஆக்காதீர்
இலவசத்தை விரும்பாத
உழைப்பாளி நான்தானே!!

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. நந்தலாலா (இணைய இதழ்) - 11-08-2012

2. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012