Wednesday, July 18, 2012

காதலனே என் கணவன்

ஒரு பெண்ணின் மனநிலையோடு கடந்த ௨௦௧௧ ல் நான் எழுதிய கவிதையிது.

காற்றினைப் போலவே காதலும் வந்தது
காதினில் வந்தது கவிதையும் சொன்னது
ஆற்றினில் இறங்கியே அமைதியாய்க் குளித்தேன்
அருகினில் அவன்தான் நெருங்கினேன் மறைந்தான்

இருவிழி வழியினில் இருதயம் நுழைந்தவன்
கருவிழி இரண்டினில் கவிதையாய்க் கலந்தவன்
அருகினில் அமர்ந்துதான் அன்பினைத் தந்தவன்
கருவினில் பிறக்கவே கணவனாய் வந்தவன்

ஒருமுறை பார்த்தேன் உயிர்வலி தந்தது
மறுமுறை பார்த்தேன் காதல்தான் என்றது
திருமுகம் பார்த்துதான் திருமணம் நடந்தது
இருமனம் இணைந்துதான் ஒருமனம் ஆனது.

பெண்களை கண்களாய் போற்றும் சின்னவன்
தன்னிலை மாறாத தமிழ்நாட்டுத் தென்னவன்
அன்னையாய் தந்தையாய் அழகிய மன்னவன்
மனையாளே என்றென்னை மனதாரச் சொன்னவன்

அன்பிலே உறைந்த ஆருயிர்க் கணவன்
கண்முன்னே தெரியும் கலியுகக் கடவுள்
பெண்மையை மென்மையாய் புரிந்த என்னவன்
என்றைக்கும் அவன்தான் என்னுயிர் கணவன்

No comments: