Wednesday, November 7, 2012

இன்னுமா இருக்கிறது காதல்?

பழங்காலந்தொட்டே நம் தமிழ்ச் சமூக இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் மற்ற மொழி இலக்கியங்களிலும் காதலின் பூரணத்துவத்தை பார்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கவிதைகளில் காதலைப் பாடாத கவிஞர்கள் இருந்ததில்லை. தன்னுடைய காதலியைப் பற்றி கவிதைகள் எழுதத் துவங்கி மாபெரும் கவிஞர்கள் ஆனவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.



இல்லற வாழ்க்கையை இனிமையாக்குவதே காதல் தான். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள்  காதலை தனியே செய்ய வேண்டும் என்று இல்லாமல் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கின்றனர். இல்லற வாழ்க்கையோடு காதலை இணைத்துக்கொண்டு போகின்றனர்.



இன்றைய சூழலில் காதல் எந்த விதமான நிலையில் உள்ளது என்று தேடிப்பார்த்தோமானால் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.



காதலின் மேன்மையைப் போற்ற, காதலின் பூரணத்துவத்தை அடைய அதன் மேன்மையைப் பற்றிய இன்றைய இளைய சமுதாயத்தினரின் புரிந்துணர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.



உண்மையான அன்பிற்கு இந்தப் பிரபஞ்சத்தையே கட்டிப்போடும் ஆற்றல் இருக்கிறது. மனித உணர்வுகள் அனைத்துமே அன்பின் வெவ்வேறு பரிமாணங்கள் தான். காதலும் அன்பின் ஒருவகைப் பரிணாமமே.



நட்புடன் பழகும் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே கூட காதல் வரலாம். காதல் தன்னிடம் உள்ள மென்மையான மனதினை தானே உண்மையாக உணர வைக்கிறது. காதல் செய்பவர்களைப் பொறுத்து காதலின் மேன்மை, உன்னதம் வேறுபடுகிறது.



வயதான தாத்தா பாட்டி கூட உண்மையாக காதலிப்பதைப் பார்க்கலாம்.



“கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”



என்றான் பாரதிதாசன்.



“காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்.

கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்”



என்றான் பாரதி.



நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.



காதல் சாதிமதம் பார்க்காது. இன்றைய நடைமுறை உலகில் காதலர்கள் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் நம்முடைய வருங்காலச் சந்ததிகள் சாதி, மத பேதமின்றி மனிதநேயம் போற்றும் மனிதர்களாக வாழ்வார்கள்.



கடற்கரை, திரையரங்குகள் போன்றவற்றிற்கு சென்றால்தான் காதலை வாழ வைக்க முடியும் என்றில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் தன்னுடைய துணையையே நினைத்துக் கொண்டு வாழும் உன்னத உயிர்கள் இம்மண்ணில் வாழும்வரை காதலின் மகோன்னதம் குறையாது.



மனிதர்கள் மட்டுந்தான் என்றில்லாமல் விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களும் காதலிக்கின்றன. காதலின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.



உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் அடையாளமாக இன்றளவும் விளங்குகிறது. தேவதாஸ் – பார்வதி, அம்பிகாவதி – அமராவதி, ரோமியோ – ஜூலியட் என வரற்றுப் புகழ்பெற்ற காதலர்கள் எண்ணிலடங்காதவர்கள்.



இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அன்பு நிறைந்து வழிய வேண்டுமெனில் காதல் செய்யுங்கள். காதலர்களைப் போற்றுங்கள்.



இன்றைய நடைமுறை உலகில் எத்தனையோ கொடுமைகள் காதலின்பெயரில் நடந்தாலும், இன்னும் உண்மையாய் வாழத்தான் செய்கிறது காதல்.


இக்கட்டுரை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பண்புடன் (இணைய இதழ்) - 01-10-2012
    (இரண்டாம் பரிசு)

No comments: