Monday, December 17, 2012

பாரதியே மீண்டும் வா!

ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய வீட்டு முகவரிக்கு இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து அஞ்சலட்டையில் அழைப்பு வந்திருந்ததாக என் தந்தை தெரியப்படுத்தினார். அந்த அழைப்புக் கடிதத்தில் இலக்கியச்சோலை ஹைக்கூ இதழில் என்னுடைய ஹைக்கூ பிரசுரமாகியிருப்பதாகவும் 16-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் கலைநிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படுவதாகவும் தெரியப்படுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில் 16-12-2012 ஞாயிறு அன்று மாலை 4.15 மணிக்கு சென்றேன். கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் அவருடைய கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்தவுடன்தான் நிகழ்ச்சிநிரல் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

நானும் கவிதை எழுதி வாசிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. வெள்ளைத்தாள் இல்லை. அப்போது ஒரு அன்பர் துண்டுப்பிரசுரம் செய்தபடி ஒரு தாளைக் கொடுத்தபடி சென்றார். அந்தத் தாளின் பின்புறம் முழுவதும் இடமிருந்தது. இரண்டாக மடித்துக் கொண்டு அவர்கள் கவிபாடச் சொல்லியிருந்த 'பாரதியே மீண்டும் வா' என்ற தலைப்பில் இரண்டு முறை எழுதினேன். கவியரங்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, நூல்கள் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் நான் எழுதிய கவிதையின் ஒரு பிரதியைக் கொடுத்தேன். கவிபாட அழைப்பதாக உறுதியளித்தனர். கடைசிக் கவிஞனாக  நான் அந்த மேடையில் வாசித்தக் கவிதை இதுதான்.


பாரதியே வா பாரினிலிங்கு – உன்
பாட்டினிலுண்டு அக்னிக்கங்கு – இந்தப்
பாரதம் மூழ்குது மதுவினிலிங்கு – இந்தப்
பூமியை மாற்றிடப் பாட்டெழுதிங்கு

ஆசையினாலே அழியுது பூமி – நீ
ஆயுதமேந்தாக் கவிதைச்சாமி – இந்தக்
காசையே உள்ளம் விரும்புது பூமி – நீ
காசுக்கு எழுதலக் கலியுகச்சாமி

கவிதையினாலே வளருது மொழியே – உன்
கவிதைகள் முழுதும் வாழ்விற்கொளியே – இந்தப்
புவிதனில் பாரதம் ஊழலின் ஊற்று – உன்
புலமையினாலே அறிவினை ஊட்டு

மாண்டா போனாய் பாரதிநீயே – தமிழ்
ஆண்ட புலவன் பாரதிநீயே – என்
வேண்டுதல் கேட்டே வருவாய் நீயே – நீ
வெடிப்பாய்ப் பிறப்பாய்க் கவிதைகளூடே

2 comments:

VIDHYASAGAR said...

சமூகத்தின் மீதான கோபம் நமை எரிக்கும் நெருப்பல்ல; நமக்கான வெளிச்சத்தை நாமே ஏற்படுத்தக் கிடைக்கும் ஒற்றைநல் ஆயுதம்!!

என்றுணர்த்த முற்படும் கவிதையிது.

//நீ
ஆயுதமேந்தாக் கவிதைச்சாமி// இந்த வரி எனக்கு பாரதியைப் பாடும் முழு அர்த்தத்தோடிருப்பதகப் பட்டது.

வாழ்த்துக்களும் அன்பும் சுரேஷ்...

வித்யாசாகர்

Anonymous said...

வணக்கம்
//புவிதனில் பாரதம் ஊழலின் ஊற்று – உன்
புலமையினாலே அறிவினை ஊட்டு//
உண்மையான வரிகள், படிக்கையில் நெஞ்சில் வலியேற்படுகிறது.பாரதத்தின் கவிழ்ந்த தலையை நிமிர்த்த பாரதியை அழைப்பது சாலப் பொருத்தமே
அன்புடன்
நந்திதா