Sunday, August 19, 2012

மல்லிகைப்பூ

காலையில் சூடிய
மல்லிகைப்பூ வாடியதென்று
மாலைப்பொழுதில்
குப்பைத்தொட்டியில் எறிகிறாய்

உன் கூந்தலைவிட்டு
பிரியமனமின்றி
வாடிவதங்கிப்போனது
வாடாத மல்லிகைப்பூ!!

Sunday, August 12, 2012

காமராசர்

ஏட்டுக்கறி சுவைக்காத
நாடுபோற்றும் நல்லவர்
காமராசர்
-------------------------------------------------------

சுதந்திர தினம்

அகிம்சையெனும் ஆயுதமேந்த
அடிபணிந்தனர் ஆங்கிலேயர்
கிடைத்தது சுதந்திரம்
-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
ஜாதி
-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்
விழலுக் கிறைத்த நீரானது
ஊழல் அரசியலால்
-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை
ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது
சுதந்திரதினம்
-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது
குழந்தைகள் நன்றி சொன்னனர்
சுதந்திர தினத்திற்கு
-------------------------------------------------------

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 15-08-2012

2. தமிழ்முரசு - 02-09-2012

3. இராணி - 09-09-2012

4. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

5. அருவி - 10-11-2012 

தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண்

தமிழனுக் கென்று தாய்நா டிரண்டு
தரணியில் வேண்டும் தோழா வாடா
செம்மொழித் தமிழன் செருப்பாய் இழிவாய்
இருப்பதும் முறையோ? பொறுப்பதும் சரியோ?
எம்மொழி தமிழ்மொழி என்றொரு பற்றுதல்
இங்ஙனம் வேண்டும் எழுந்திரு தோழா
பொம்மையைப் போலவே பழந்தமிழ்க் கூட்டம்
பகுத்தறி வெங்கே போனது தோழா?

இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை
செந்தமிழ் மொழியெங்கள் சிறப்பின் எல்லை
சேற்றினில் வாழ்தல் சிறப்பிங் கில்லை
சிந்திய செந்நீர் சோகத்தின் எல்லை
சிங்களன் வெற்றி நிரந்தர மில்லை
முந்தைய தமிழர் மோகத்தின் பிள்ளை
முத்தமிழ் எத்திசை முழங்கவு மில்லை

வேதனை யுடனே வாழ்ந்தது போதும்
வேள்விகள் செய்தொரு வாளெடு தீரும்
தீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும்
தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்
ஜாதியைச் சொல்லி சேர்ந்தது போதும்
செம்மொழித் தமிழால் சேர்ந்திடல் பாரும்
நீதியும் விழித்தே நேர்மையைக் கூறும்
நேசிக்கும் தமிழகம் தனிநா டாகும்

இன்னொரு சுதந்திரம் வேண்டுமே நமக்கு
இமைபோல் காத்தது என்தமிழ் மொழியே
பொன்னென மின்னும் புகழுடைத் தமிழா
புழுதியில் சகதியில் பிழைப்பதும் தகுமா?
இன்னல்கள் தந்திடும் இந்தியா எப்படி
என்னுடைத் தமிழனின் இடுக்கண் களையும்?
அன்னைத் தமிழினை அடியேன் மறவேன்
அன்பால் அவளெனை அனுதினம் காப்பாள்

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-08-2012

2. தமிழர் எழுச்சி - 01-09-2012

ஏழை

கரைந்தது காகம்
விருந்தாளிகள் வரவில்லை
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

மின்சாரம் தேவையில்லை
நிலவொளி போதும்
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

வயிற்றுவலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை
-------------------------------------------------------

ஏழை சிரித்தான்
இறைவனைக் காணவில்லை
முதுமொழி பொய்யானது
-------------------------------------------------------

பணமழை பெய்தது
ஏழை சிரித்தான்
தேர்தல் வரவால்...
-------------------------------------------------------

கோடிகளில் ஊழல்
கோடிகளில் வாழ்க்கை
நாதியில்லாத் தமிழன்
-------------------------------------------------------

செல்போன் இலவசம்
பிச்சைக்காரன் மகிழ்ந்தான்
சா(வே)தனை இந்தியா
-------------------------------------------------------

அம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்
வயிறு நிறைந்தது
ஏழைகளுக்கு
-------------------------------------------------------

வறுமையில் வாடாத
உழவனையும் புலவனையும்
பார்ப்பதரிது
-------------------------------------------------------

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 28-08-2012

2. வெற்றிநடை - 01-09-2012

3. அருவி - 10-11-2012

Monday, August 6, 2012

தங்கக்குதிரை

 29-07-2012 அன்று கல்கி வாரஇதழில் ஒரு தங்கக்குதிரை படத்தைக் கொடுத்து கவிதை எழுதி அனுப்பச் சொன்னதன் பேரில் நான் எழுதி அனுப்பியிருந்த கவிதைகள்.

தன் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்தோடும்
பீனிக்ஸ் குதிரை
-------------------------------------------------------

நெருப்பில் வெந்து
நீரில் குளித்த
தங்கக்குதிரை
-------------------------------------------------------

தணலில் குளித்து
தெறித்தோடும் தங்கக்குதிரை
தன்னம்பிக்கையால்தான்
-------------------------------------------------------

உன்னை வென்றிட
உலகிலில்லை யாரும்
ஓடு குதிரையே
-------------------------------------------------------

ஏழை இந்தியாவின்
கனவுக்குதிரையே
வருக வருக
-------------------------------------------------------

இயக்குனர்கள் உனைப்பார்த்தால்
கிடைத்துவிடும்
வெள்ளித்திரை வாய்ப்பு
-------------------------------------------------------

மஞ்சள்நிறக் குதிரையொன்று
மான்போல் ஓடுகிறது
மகிழ்ச்சியில் திளைத்த மனமாய்...
-------------------------------------------------------

எந்த ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொண்டாய்?
இவ்வளவு வேகமாய் ஓடுகிறாய்?
-------------------------------------------------------

அந்திமாலைப் பொழுதின்
வெளிச்சத்தில்
தங்கக்குதிரை
-------------------------------------------------------