Wednesday, February 6, 2013

"குவைத் தமிழோசை மாமன்றம் சார்பில் வித்யாசாகர் அண்ணாவுக்கு பன்னூல் பாவலர் விருது"

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த வெள்ளிக்கிழமையன்று (01-02-2013) குவைத் நாட்டில் கெய்த்தான் எனுமிடத்தில் "மூவேந்தர் அரங்கம் அமைத்து "குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்" மிகவும் பிரம்மாண்டமாக நடத்திய இன்பத் தமிழ் இசைவிழாவில் வித்யாசாகர் அண்ணாவுக்கு அவருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி  அவரை கௌரவிக்கும் வகையில் "பன்னூல் பாவலர்" விருது வழங்கி சிறப்பித்தது.  இம் மகிழ்வான செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்நதுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

வீட்டிலேயே அடைந்து கணவனே கதி என்றிருக்கும் மனைவிகளுக்கு அரணாக இருக்கும் கணவன்கள் நலம் பயக்கும் பூரிப்பை மகிழ்ச்சியை தரும் நலன்களாக விளங்க உதவும் நோக்கத்தோடு, முன்பே மன்றத்தில் சொல்லி அவருக்குக் கிடைக்கயிருந்த விருதினை அண்ணியின் கைகளால் வாங்கச்சொல்லி தன்னுடைய குடும்பத்தினரையும் குடும்ப உறுப்பினர்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

மேலும் ஏற்புரை ஏற்கையில் அவர் பேசியதை அறிந்து அண்ணாவிடம் தொடர்புகொண்டு என்ன பேசினீர்கள் என்றேன், அதற்கவர் மின்னஞ்சலில் என்னிடம் பகிர்ந்துக் கொண்டதை அப்படியே இங்கு உங்களின் பார்வைக்குத் தருகிறேன்:

"என்னம்மா  அன்று எனக்காக வாங்கிய விருதுகளை
 இன்று என் செல்லம்மா வாங்கினாள்
 நாளை இந்த சின்னம்மாளும் வாங்குவாள்...” என்று நம்பிக்கொள்கிறேன்..

இனமது தாழாது
உயிரதன் மதிப்பிலும் கூடி
உயர்ந்தவர் பலர்பேசும் மொழியதுவாகி
மழலைகள் கொஞ்சும் ரசமென்றோங்கி
கால வனப்பெய்தி வளமது சேர
வையகந்தன்னில் வெல்லும் தமிழ்; அங்கே நிற்கட்டுமிந்த தமிழோசையின் புகழுமென்று வேண்டி; எல்லோருக்குமெனது சிறந்தாழ்ந்த வணக்கத்தை முன்வைக்கிறேன்..

பொதுவாக ஒரு விருது என்பது அப்படைப்பாளியின் படைப்பினை மேலும் பலருக்கு அடையாளம் காட்டி, அதுவரை உழைத்த உழைப்பை அங்கீகரித்து' மேலும் வரும் பல வெற்றிக்கு வழிநல்கி' வென்று' வளர்ந்து' இச்சமூகத்திற்கு மேன்மைச் சேர்க்கவல்லது என்பதை இதற்குமுன் பெற்றுள்ள வேறுசில விருதுகளினால் அறிந்திருக்கிறேன்.

இருப்பினும் வெறும் விருதிற்கான நோக்கமல்ல எனது எழுத்தின் நோக்கம்; அது எனக்குக் கீழுள்ளோரை என்னளவிற்கேனும் உயர்த்துமொரு உயரிய பொறுப்புள்ள முயற்சியென்பதைச் சொல்வதில் நன்றிக்கடன் படுகிறேன்.

அதோடு, எனைவிடவும் சிறப்பாக எழுதும் எண்ணற்ற படைப்பாளிகள் பலர் இங்கிருக்க; அவர்கள் அனைவரின் சார்பாகவும் இவ்விருதை நான் பெறுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

மாதந்தோறும் தவறாது கூட்டம் நடத்தி எமது தாய்மொழி தமிழது நிலைக்க தனது பங்கினையும் பெரும்பான்மையாக சிறப்பாக ஆற்றிவரும் இத்தமிழோசை மாமன்றத்தின்மூலம் இவ்விருதைப் பெறுவதில், அதிலும்; உங்கள் முன் பெறுவதில் பெருமையும் நிறைவுமடைந்து, நன்றியோடு விடைகொள்கிறேன்.

பெருமக்கள் இந்த விருதிற்கானக் காரணத்தை எனது எழுத்திற்குள் தேடுங்கள், நியாயமெனில் நற்கருத்துக்களைப் பிறரிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மனிதம் நிலைக்க; மொழியால் உணர்வால் நட்பால் இணைந்திருங்கள். எழுத்தினாலும் ஒரு நல்ல சமுதாயம் படைப்போம்.. " என்று பேசி விழாவை சிறப்பித்திருக்கிறார்.

கடந்த தீபாவளிக்கு முன் ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்கு உடனடியாக அணிந்துரை தந்ததோடு குவைத்திலிருந்த படியே அலைபேசி ஊடாக கவிதைகளைப் பற்றி பேசி விமர்சித்து மகிழ்ச்சியுடன் பாராட்டவும் செய்தார்.

அவர் தீபாவளியின் போது சென்னை வந்திருகையில் அவரைச் சந்திக்க அவரின் இல்லத்திற்குச் சென்றிந்தேன். திருவள்ளூர் அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு அவரின் குடும்பத்தோடு சேர்ந்து செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. நிறைய பேசினோம், அவர் பேசியதிலிருந்து மனித உணர்வுகளை, மனித நேயத்தை மதிக்கும் நல்ல மனிதர் தென்பட்டார் என்றே எண்ணினேன். (அவர் அருகில் வந்து அவரோடு பழகிப் பார்த்தவர்களுக்கும், அவரின் படைப்புகளையும் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நான் சொல்வது மிகையில்லை என்ற உண்மைப் புரியும்.)

தன்னுடைய சில நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்ததோடு ‘அழகு ராட்சசி’ என்ற என்னுடைய முதல் நூலின் பத்துப் பிரதிகளையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி என்னை உற்சாகப்படுத்தவும் செய்தார்.

அவருடைய நூல்களின் முன்னுரைகளில் அவரின் வார்த்தைகளோடு ஒரு சில செய்திகளை நான் இங்கே சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

“ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.”

“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.”

இப்படி அவர் தனது புத்தகங்களில் சில பொதுச் சேவைப் பற்றிய தனது நன்றியுணர்வுகளைப் பகிர்ந்து, என்ன காரணம் அண்ணா என்று கேட்டதற்கு, இதைப் பார்க்கையில் இன்னும் பலருக்கு நாமும் இப்படி உதவவேண்டும் எனும் எண்ணம் வரலாமில்லையா அதனால் தான் அதையெல்லாம் புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன் என்றார்.

அதோடு, அவருடைய இல்லத்தில் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தேன். கீழ்க்கண்டவாறு தன்னுடைய மனவுணர்வுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். (அவற்றில் எனக்கு நினைவில் நின்ற சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்)

“இரவு முழுவதும் எழுதிக் கொண்டிருப்பார். எழுதியபடியே தூங்கிப் போவார்.” என்றும்

“திருச்சியில் ஒரே மேடையில் ஐந்து விருதுகளை வாங்க அவருக்குபதிலாக  நான்  சென்றபோது மிகச்சிறப்பாக என்னை வித்யாசாகரின் அம்மா என்றில்லாது தனது தாயைப்போல அவர்கள் வரவேற்று அன்பாகப் பார்த்துக்கொண்டனர் ” என்றும் என்னோடு அந்தம்மையார் தனது மகன் பற்றிய மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டார்.

அண்ணா நமக்குத் தெரிந்து பிறந்தநாள் பாடல், காதல் பாடல் மற்றும் சமூகச் சிந்தனைப் பாடல்களை எழுதியிருந்தாலும் விரைவில் திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகவிருக்கிறார் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன். அவருடைய மனம்போலவே எல்லாம் அவருக்கு நல்லபடியாகவே நடக்கிறது.

இந்த இளம்வயதில் கவிதை, கட்டுரை, புதினம், நாவல், சிறுகதை என முப்பதுக்கும் மேல் நூல்களை இன்னும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அண்ணாவுக்கு சகோதர அன்பிலும் சக படைப்பாளியாகவும் மனமகிழ்ச்சியோடு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

(எப்படியோ சோம்பேறித்தனம் காரணமாகவும் மற்ற சில வேலைகளினாலும் அண்ணாவைப் பற்றி ஒரு பதிவை அப்போதே இடவேண்டும் என்ற எண்ணம் இன்று இந்த இழையோடு சேர்த்து இப்போது தான் நிறைவேறியிருக்கிறது. தமிழோசை கவிஞர் சங்கத்திற்கு எனது நன்றி)