Saturday, May 25, 2013

பிப்ரவரி 27 2013 அன்று வந்தவாசியில் நடந்த 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' நூல் அறிமுக விழா

முதலில் நான் கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்களைப் பற்றி சொல்லவேண்டும்.
“குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்” என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்குஅணிந்துரை வேண்டி மு. முருகேஷ் ஐயாவின் முகவரிக்கு (சென்னை அஞ்சலக ஊழியரின் எடை சரிபார்ப்பிற்குப் பிறகு) ஐந்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டி அனுப்பி வைத்தேன். வந்தவாசிக்கு என்னுடைய அஞ்சல் சென்று சேர்ந்தபோது அங்கிருந்த அஞ்சலக ஊழியர் பத்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டவேண்டும். ஐந்து ரூபாய் அஞ்சல்தலை தான் ஒட்டப்பட்டுள்ளது என்று ஐயாவிடம் அபராதக் கட்டணம் வசூலித்து விட்டு என்னுடைய அஞ்சலை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு தான் தெரிந்தது சென்னை அஞ்சலக ஊழியரின் கவனக்குறைவினால் தான் இந்த குளறுபடி நடந்திருக்கிறது என்று. ஐயாவும் பெருந்தன்மையோடு என்னுடைய அஞ்சலை ஏற்றுக் கொண்டார். அணிந்துரையை விரைவில் அனுப்பி வைத்தார்.

கடந்த பிப்ரவரி 27, 2013 அன்று சென்னையிலிருந்து கிளம்பி வந்தவாசிக்கு காலை 8.30 க்கு முன்னதாகவே சென்றடைந்தேன். மு. முருகேஷ் ஐயா அவர்கள் என்னை தன்னுடைய அகநி (அவருடைய மூன்று பெண் பிள்ளைகளின் முதல் எழுத்துகளின் சேர்க்கை.) இல்லம் அழைத்துச் சென்றார். அவருடைய இலக்கிய இணை (மனைவி = மனை+வி, மனையை ஆளக்கூடியவள் மனைவி அல்லது மனையாள். ஆனால், ஐயா எப்போதுமே தன்னுடைய காதல் மனைவியை இலக்கிய இணை என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.) கவிஞர் அ. வெண்ணிலா அவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்ற ஆர்வம் இருந்தது. (கடந்த 20  ஜனவரி அன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது மு. முருகேஷ் – அ. வெண்ணிலா மற்றும் அவருடைய மூன்று பெண் பிள்ளைகளைச் சந்தித்தேன்.) அ. வெண்ணிலா அவர்கள் திரைப்படத்துறையில் வசனம் எழுதுவது தொடர்பாக சென்னைக்குச் சென்றிருப்பதாக முருகேஷ் ஐயா சொன்னார்.
அவருடைய அறையையும் அ. வெண்ணிலா அவர்களுடைய அறையையும் பார்த்தேன். அலமாரியில் ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான விருதுகள், பரிசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
அ. வெண்ணிலா அவர்களுடைய தாயாரையும் சந்தித்தேன். அவருடைய வீட்டில் காலை உணவு உண்டேன்.
காலை 10.30 க்குத் துவங்க வேண்டிய வெளியீடு அரை மணிநேரம் காலதாமதமாகத் துவங்கியது.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். கவிதை நூலிற்கு அணிந்துரை எழுதிய மூவரில் ஒருவரான கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்கள் நூலைப் பற்றி விவரித்தார். பெண்ணியம், தலித்தியம், ஈழவிடுதலை தொடர்பாகவும் பேசினார்.
என்னுடைய கவிதைநூலின் தலைப்பு குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற தலைப்பில் குழந்தைகள் என்ற வார்த்தை பன்மையிலும் பொம்மைகள் என்ற வார்த்தை பன்மையிலும் கடவுளும் என்று ஒருமையிலும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இன்னொரு சிறப்பு விருந்தினர் குழந்தைகளைப் பற்றி பேசினார். “குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற கருத்தை முன்வைத்து பேசினார்.
வந்தவாசி நூலகர் எனக்கு கதராடை அணிவித்து தமிழின் மீதும் என் தமிழ்த்தாயை கவிதைகளாக எழுதும் என்மீதும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் பலரும் தங்களுடைய சிற்றுரைகளை ஆற்றினர்.
ஏற்புரையில் நான் பேசும்போது (வெளியீடு காலதாமதமாக ஆரம்பித்தபடியால் நிறைய பேச இயலாத சூழல்) முருகேஷ் ஐயா கேட்ட கேள்விக்கு பதிலளித்தேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாக்கிற்கேற்ப கடவுள் ஒருவன் தான். எனவே பன்மை தேவையில்லை. எனவே இங்கு கடவுள் கடவுள்கள் ஒருமையா பன்மையா என்ற குளறுபடிக்கோ குழப்பத்திற்கோ வேலையில்லை என்ற கருத்தை சொன்னேன்.
எங்க வீட்டு விஷ்ணுப் பாப்பா பிறந்தபோது அவனுக்காக ஒரு சில ஹைக்கூ கவிதைகளை எழுதினேன். அதன்பிறகே இந்த கவிதைகளை குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் என்று ஒரு நூலாக்கினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
குழந்தைகளின் உள்ளங்களில் கடவுள் வாழ்கிறான்.
“குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற பேசிய சிறப்பு விருந்தினரின் கருத்தை உளவியல் ரீதியாக விளக்கினேன். பொதுவாக குழந்தைகள் ஒரு எழுத்தை ஆரம்பத்தில் எழுத முயற்சிப்பதில்லை வரைய முயற்சிக்கின்றன. ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் நம் மூளைக்குள் உதயமானவுடன் அந்தப் பொருள் படமாக மனதில் விரிகின்றது. உதாரணத்திற்கு மரம் பற்றி எண்ணுகிறோம் என்றால் முதலில் மரம் படமாக மனதில் விரிகின்றன. அதன் பிறகே வார்த்தைகள் வெளிவருகின்றன. எனவே குழந்தைகளுக்கு படங்கள் மூலமாக கதைகளை, கருத்துகளைச் சொல்லுங்கள் என்றேன். அதோடு என்னுடைய “உள்ளம் உருக்கிப் போனாயடா” (முழுக்க முழுக்க காதல்) என்ற நான்காவது கவிதைநூலின் முதல் கவிதையின் முதல் சில வரிகளை அங்கு பகிர்ந்து கொண்டேன்.
படங்களைப்
பார்த்துப் பார்த்தே
வார்த்தைகளை
வரையக் கற்றுக்கொள்ளும்
குழந்தைகளைப் போலவே
...................
...................
..........................
வெளியீடு முடிந்தவுடன் அவருடைய இரண்டு நூல்களை (ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை – ஹைக்கூ குறித்தான கட்டுரை நூல், வரும்போலிருக்கிறது மழை – ஹைக்கூ நூல்) எனக்குப் பரிசளித்தார்.
விற்பனையான கவிதைநூல்களுக்கான பணத்தை என்னிடம் தந்தார். “குழந்தைகளுக்கான மாலைநேரப் பள்ளி தானே நடத்துகிறீர்கள். இந்தப் பணத்தை நான் ஏதாவதொரு ஆதரவில்லாத குழந்தைகள் இல்லம் தேடிச்சென்று குழந்தைகளுக்கு செய்வேன். அதற்கு நீங்களே உங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த தொகையை செலவிடுங்கள்” என்று சொல்லி அவரிடமே கொடுத்தேன்.
அனைவரும் மதிய உணவு உண்டோம். நான் அவரிடமிருந்து அன்போடு விடைபெற்றேன்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி தினமணியிலும் (தமிழ்நாடு முழுவதும் வெளிவரும் தினமணி பதிப்பகங்கள்) கடந்த பிப்ரவரி 27ம் தேதி தினமணியிலும் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெறப் போகும் கவிதை நூல் வெளியீடு தொடர்பான செய்திகள் வெளியாயின.  கடந்த மார்ச் 01 தினமணியில் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெற்ற கவிதைநூல் வெளியீடு தொடர்பான செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தார்கள்.







No comments: