Monday, August 12, 2013

அன்னைத் தமிழே

அன்னைத் தமிழினை அன்பு அமிழ்தினை
எண்ணிய பொழுதினில் என்னுள்ளே உற்சாகம்
கண்ணாடி அணிவதுபோல் கதைக்கலாம் பிறமொழியில்
கண்ணுடைக் கருமணியே என்னுடைத் தமிழ்மொழியே

பணம்காசு தேடித்தான் பிறதேசம் போனாலும்
மனமுன்னை நாடுதடி மகளேயென் தமிழ்மொழியே
தினமொரு விலைவாசி திண்டாடும் விசுவாசி
கணமொரு கொலைகொள்ளை காப்பாற்ற வருவாயோ

அன்னையின் மடியிலே அனுதினமும் தவழத்தான்
எண்ணிடும் குழவிபோல் எண்ணமது உருண்டோடும்
கண்ணிலே நீர்சொட்டும் கவிதையிலும் அதுசொட்டும்
என்னுடைத் தமிழரைவிட எவரிங்கு என்சுற்றம்?

அன்னையவள் வேறல்ல அன்னைத்தமிழ் வேறல்ல
என்னைப் பொறுத்தவரை எல்லாமே தாய்த்தமிழே
தண்டமிழே தனித்தமிழே தொன்மொழியே தாய்மொழியே
வண்டமிழே வளர்தமிழே வருவாயே வாய்வழியே

No comments: