Sunday, December 29, 2013

தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி'





என் அன்புத்தங்கையும் ஈழத்தமிழச்சியுமான கவிக்குயில் எஸ்விஆர் பாமினி சமீபத்தில் ஒரு பாடல் எழுதிய திரைப்படம் 'சித்திரைவீதி'.




வித்யாசாகர் அண்ணாவின் மகள் வித்யா பொற்குழலிக்காக அவளின் youtube பக்கத்தில் இருந்த காணொளி http://www.youtube.com/watch?v=HR9M5oYFF-U

௨௦௧௨ ஆம் ஆண்டு தங்கை எழுதிய ஒரு பாடலொன்று முகநூலில் காணொளியாக பகிர்ந்துகொள்ளப்பட்டது. நான் கேட்க, பார்க்க கிடைத்தது.

அந்த பாடல் இதுதான்.

சூழுகின்ற பகையை வென்றே 
ஈழம் எங்கள் கையில் வந்தது தெரிகின்றதே...




இந்த ஒரு பாடல் அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. முகநூலில் நண்பர்களானோம்.

எமது தாய்நிலமான தமிழீழத்தின் மீதும் என் தாய்த்தமிழின்மீதும் கொண்ட தாளாத காதலால் தான் இந்த இளம்வயதிலேயே அவள் ஈழக்குயில், கவிக்குயில், கவிதாயினி போன்ற பட்டங்களை பெறமுடிந்திருக்கிறது. நம் தாய்த்தமிழை எவ்வளவுதூரம் ஆழமாய் நேசித்து உயர்த்துகிறோமோ அதே அளவுக்கு தமிழ்த்தாயும் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் வைப்பாள் என்பதற்கு தங்கை பாமினியே சாட்சி என்பதை இன்று நான் முன்பைவிட ஆழமாக தெள்ளத்தெளிவாக உணர்கிறேன்.

௨௦௧௨ நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இருக்கலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு ௧௧ மணி இருக்கும். சுவிட்செர்லாந்திலிருந்து தங்கை பேசினாள்.

'நான் பாமினி கதைக்கிறன் அண்ணா. நலமா?' என்றாள்.

'நான் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க?' என்றேன்.

'நலம் அண்ணா. இந்த நேரத்தில் அங்கு என்ன நேரம் என்பதை நான் யோசிக்கவில்லை. இப்போது பேசலாமா என்று நான் யோசிக்கவில்லை. (அவள் அப்போது பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்ததால்) என் குரல் எப்படி அண்ணா இருக்கிறது?' என்றாள்.

'நல்லா இருக்கு. சின்னபிள்ளை குரல் மாதிரி இருக்கிறது.' என்றேன்.

'அப்படியா? மகிழ்ச்சி அண்ணா' என்றாள்.

அப்போதைய என்னுடைய ஒருசில பதிவுகளை குறித்து பாராட்டி பேசினாள். 

'இந்த இளம்வயதிலேயே பாடல்கள் எழுதுகிறீர்கள்.' என்றேன்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. எனக்குத்தெரிந்த தமிழில் எழுதுகிறேன்.' என்றாள். 

சிலநாட்கள் கழித்தபிறகு வித்யாசாகர் அண்ணா என்னிடம் பேசும்போது தங்கை பாமினி என்னிடம் அலைபேசி ஊடாக பேசியதை தெரிவித்தேன்.

'அவள் நல்ல தங்கையாயிற்றே. சிலமுறை அவள் என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள் என்று கேட்டு விளையாடுவாள்.' என்றார்.

சிலநாட்கள் கழித்தபிறகு அண்ணா சொன்னதுபோலவே என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு 'யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள்' என்று கேட்டு விளையாடினாள். என்னவென்று கேட்பதற்குள் இரண்டுமுறையும் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இதன்பிறகு மூன்று மாதங்களாக அலைபேசி ஊடாக அவளின் பணிநிமித்தம் காரணமாக அவள் என்னிடம் பேசமுடியாத சூழல்.

முகநூலில் அவளிடம் 'நீ பேசாததால் எனக்கு மனவருத்தம்.' என்பது போன்ற கருத்தொத்த ஒரு தகவலை அனுப்பியிருந்தேன்.

மொட்டைமாடியில் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருந்தேன். தங்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. 

குரல் தழுதழுக்க 'நான் ஜெர்மனியில நிக்கறன் அண்ணா. இப்போது தான் உங்கள் தகவலை அலைபேசி ஊடாக முகநூலில் பார்த்தேன். உங்கள் தங்கைதானே அண்ணா, மன்னித்துவிடுங்கள் அண்ணா. இனிமேல் நான் உங்களிடம் அடிக்கடி பேசுகிறேன். வருத்தப்படாதீர்கள் அண்ணா.' என்றாள்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லப்பா. நீ வருத்தப்படாதே.' என்றேன்.

அவள் பேசி முடித்ததும் மனம் அதிகமாய் வலித்தது. அவள் பேசும்போது அவள் குரலில் ஒருவித பதற்றம், தழுதழுப்பு இவற்றை என்னால் உணர முடிந்தது. அவள் அழுதிருக்கிறாள் என்பதை என்னால் உணர்ந்தபோது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஒருபுறம் அவளை நான் காயப்படுத்தி விட்டேனே என்று அன்றைய பொழுது நான் அழுதேன். மற்றொருபுறம் எனக்காக இன்னுமொரு அன்பான சொந்தம் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் பெரிதும் நேசிக்கும் என் தாய்மொழி தமிழுக்கு மறுபுறம் மகிழ்ச்சியோடு நன்றி சொன்னேன்.

கண்களை மூடி உறங்கிப் பார்த்தேன். உறக்கம் வரவில்லை. அப்படியே விடிந்துவிட்டது.

இவள் என் தாய்த்தமிழின் மீதும் எமது தாய்நிலமான தமிழீழத்தின்மீதும் கொண்ட காதலை இந்த ஒரு பாடலே சொல்லிவிடும். இந்த அன்பான என் செல்லக்குழந்தையின் மனதில் உள்ள தேடலை, வலியை இந்த ஒரு பாடலே உணர்த்திவிடும். 

என்காதல் நீ 
என் வாழ்வும் தாழ்வும் நீ.
என் தேடல் நீ 
என் உடலும் உயிரும் நீ.


அதன்பிறகு ௨௦௧௩ ஜூன் மாதம் நான் பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்த பதினைந்து அல்லது இருபது நாட்களில் நான் அலுவலகத்திலிருந்தபோது சுவிட்செர்லாந்திலிருந்து அழைத்து ஏறத்தாழ அரைமணி நேரம் பேசினாள்.

பிள்ளைக்கு அப்போதுதான் நேரம் கிடைத்திருக்கும்போல.

'என் வயதை கேட்டாள்.'

'௨௯ (29). ஏன் கேட்கிறாய்?' என்றேன்.

'இல்லை. உங்கள் குரலை கேட்டால் ௭௦ (70) வயது பெரியவர் குரல்போல் இருந்தது அண்ணா. அதனால் தான் கேட்டேன்.' என்றாள்.

எனக்கு ஒரே சிரிப்பு. (௨௦௧௨ நவம்பர் மாதம் இருக்கலாம் நான் சென்னையில் வேலைபார்த்த சமயம் மின்சார இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அன்பர் ஐயப்பன் கிருஷ்ணன் பெங்களூருவிலிருந்து அலைபேசி ஊடாக அழைத்துவிட்டு 'உங்கள் குரல் எப்படி இருக்கிறது என்று கேட்கவேண்டும் போலிருந்தது.' என்று சொன்னது தான் நினைவிற்கு வந்தது.)

'நான் கவிதைநூல்கள் வெளியிட வேண்டும் அண்ணா. தொகுத்து வைத்திருக்கிறேன். பொருத்தமான ஓவியங்கள் கீறி கவிதை நூல்களை வெளியிட வேண்டும்.' என்றாள்.

'இணையத்தில் குறிப்பாக முகநூலில் தேடினால் நிறைய பதிப்பத்தினர் கிடைப்பார்கள் ப்பா. உன் எதிர்பார்ப்பிற்கு சரியாக வரும் பதிப்பகத்தை நீயே தேர்ந்தேடுக்கலாமே. வித்யாசாகர் அண்ணாவிடம் கேட்டுப்பார். அவர் நிறைய நூல்களை வெளியிட்டதால் என்னைவிட அவரிடம் கேள். அதோடு கூடுகள் சிதைந்தபோது அகில் அண்ணாவிடம் கேள். 

பதிப்பகத்தினரை அணுகுவதற்கு முன்பு சிறந்த ஓவியரை அணுகி படங்களை கீறி வாங்கிக்கொள். அல்லது பதிப்பகத்தினரிடம் கேட்டால் அவர்களே சொல்வார்கள். பதிப்பகத்தினரிடம் செல்வதற்கு முன்பு அணிந்துரை, கவிதைகள் என ஓரளவுக்கு இறுதி செய்துகொண்டு அவர்களை அணுகு. அப்போதுதான் நூல் சிறப்பாக, பிழைகள் இல்லாமல் வெளிவரும்.' என்றேன்.

'நன்றி அண்ணா.' என்றாள்.

'நீ சென்னைக்கு எப்போது வருவாய்? வரும்போது முன்கூட்டியே எனக்கு தகவல் தெரியப்படுத்து. நான் தற்போது பெங்களூருவில் இருப்பதால் முன்கூட்டியே நீ வரும்தகவல் தெரிந்தால் எனக்கு அங்கு வரும் ஏற்பாடுகள் செய்வது எளிது.' என்றேன்.

சரி அண்ணா. (இசை வெளியீடு போன்று ஏதோ ஒரு ) நிகழ்விற்கு வருவேன். சென்னையில் என் மாமா வீட்டில்தான் தங்குவேன். சொல்கிறேன் அண்ணா. இன்னொரு நாள் பேசலாம்.' என்றாள்.

சமைக்கும்போது கைகளில் தீக்காயம் பட்டு கடந்த செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் தொடங்கி இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்திருக்கிறாள்.

கடந்த வாரம் என்னிடம் அலைபேசி ஊடாக பேசினாள்.

'அண்ண்ண்ண்ணா, அண்ண்ண்ண்ண்ணா, நலமா?' என்று பள்ளிக்கூட சிறுமிபோல் பேசினாள்.

'நான் நலம். நீ எப்டி டா இருக்க?' என்றேன்.

'நலம் அண்ணா.' என்றாள்.

skype ல் நண்பர்கள் ஆனதால் 'நீ skype க்கு வாடா. அலைபேசியில் பேசினால் காசு நிறைய வருமே' என்றேன்.

'அண்ணாவோடு பேசுவதற்கு நான் காசு பார்க்ககூடாது. பார்க்கமாட்டேன்.' என்றாள்.

இதைத்தாண்டி, இந்த கள்ளம்கபடமில்லாத அன்பைத்தாண்டி எனக்கு வேறு என்ன வேண்டும்?

நான் பிறந்த ஊரான முனைவென்றியிலிருந்து இடம்பெயர்ந்து பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு வந்துவிட்டோம். அதன்பிறகு படிக்க வெளியூரில், விடுதியில் தங்கி படித்தபோதும், வேலைதேடி சென்னை வந்தபோதும் உறவுகளை பிரிந்து வருகிறோம் என்ற ஏக்கம் இருந்ததுண்டு.

௨௦௦௫ ல் எழுத ஆரம்பித்து இணையம் ஊடாக எழுத ஆரம்பித்தபின் இவளைப்போன்ற ஒருசில நல்ல சொந்தங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது என் தமிழ்மொழியின்மேல் நான் கொண்ட பற்றுதல்.

Saturday, December 28, 2013

(கள்ளத்துப்பாக்கி அறிமுகம்) பாடலாசிரியர் வத்திராயிருப்பு தெ.சு. கௌதமன்

கள்ளத்துப்பாக்கி திரைப்படத்தின்மூலம் அறிமுகமாகி இரண்டாவதாக சித்திரைவீதி திரைப்படத்தில் (என் அன்புத்தங்கை, ஈழத்து மங்கை கவிக்குயில் எஸ்விஆர் பாமினியுடன் இணைந்து ) பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் வத்திராயிருப்பு தெ.சு. கௌதமன் 

கடந்தசில நாட்களுக்கு முன்பு வத்திராயிருப்பு தெ.சு. கௌதமனின் வலைத்தளத்திற்கு செல்ல அவருடைய பெயரை இட்டு கூகிளில் தேடிப்பார்த்தேன்.

அப்போது இந்த இணைப்பு கிடைத்தது. http://www.youtube.com/watch?v=ay2_ekoIpf8

௨௦௧௧ (2011)  ல் PHP Developer ஆக வேலைக்குச்சேர்ந்த அலுவலகத்தில் ஏற்கனவே Photoshop Designer ஆக வேலைபார்த்தவர் தெ.சு.கௌதமன்.

கருத்துவேறுபாடுகளைத் தாண்டி தூரநின்று மற்றவர்களிடம் உள்ள தனித்தன்மையை, சிறந்த குணங்களை யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே இரசித்துப் பார்ப்பது என்னுடைய குணம். அவரிடம் எப்போதும் நகைச்சுவை உணர்வு இருக்கும். உதாரணத்திற்கு நானும் அவரும் முகநூலில் நண்பராக இருந்தபோது அவருடைய பரணில் ஒரு சிறு பதிவை இட்டிருந்தார்.

'யாரோ என்னுடைய கொடைய திருடிட்டான். அதனால் நான் கொடை வள்ளலாகி விட்டேன்.' என்ற கருத்தொத்த அந்தப் பதிவு.

அவருக்கும் எனக்கு அப்போதிருந்த கருத்துவேறுபாடுகளைத் தாண்டி கிராமத்து மண்வாசனையோடு மண்ணியம் சார்ந்து எழுதும் படைப்பாளி.

அவருடைய முதல் கவிதைநூலை(அங்கூ அங்கூ) நான் கேட்டதன் பேரில் அவர் தந்தார். அவருடைய இரண்டாவது கவிதைநூல் (நான் பச்சை விளக்குக்காரி) வெளியீட்டு விழாவிற்கு அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அன்று காலை அலுவலகத்தில் இருந்து இணையம் வழியாக குறுஞ்செய்தி ஊடாக அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். 

அவருடைய கவிதைகளில் என்னுள்ளே ஆழமாக பதிந்துவிட்ட ஒரு கவிதை.

லகரங்கள் இடம்மாறியதால் 
விளைநிலம் 
விலைநிலமானது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளுசபா' வில் பணியாற்றியவர் என்பதனை மேலே குறிப்பிட்ட காணொளியைப் பார்த்து தெரிந்துகொண்டேன்.

நான் அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு செல்வதற்கு கொஞ்சகாலம் முன்போ அல்லது நான் சென்றபிறகோ அவருடைய தந்தை தவறியிருக்கக் கூடும். எனக்கு அப்போது தெரியவில்லை. 

நான் அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு சென்றபிறகு மூன்று மாதங்கள் கழித்தபிறகு ஆனந்த விகடனில் அவர் அப்பாவைப் பற்றி அவரின் கவிதையொன்று பிரசுரமாகியிருந்தது. அதனை பலமுறை படித்தபிறகுதான் எனக்கே அவரின் தந்தை தவறி விட்டார் என்ற உண்மையை உணர்ந்து அவருக்கு ம்ன்னஞ்சல் ஊடாக என் வருத்தத்தை தெரிவித்தேன்.

'என்னோடு அலுவலகத்தில் பணியாற்றிய தெ.சு. கௌதமனும் நீ பாடல் எழுதிய சித்திரைவீதி திரைப்படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.' என்று என் தங்கை பாமினியிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

என்னதான் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும் கௌரவத்தை விட்டுவிட்டு முதலில் பேசுபவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் அவர்கள்மேல் கொண்ட அன்பு என்னை தோற்கடித்துவிடும்.

என்னிடம் அதிகம் செல்லமாய் திட்டு வாங்கியவன் மன்னார் அமுதன் அண்ணா தான். அவன் இணையத்திற்காக data card பயன்படுத்துவான் போல. அதனால் இணையத்திற்கு வேகமாக வந்துவிட்டு வேகமாக ஓடி விடுவான். இது தெரியாமல் அவனை கோபத்தில் திட்டிவிட்டேன். 

அவனும் பதிலுக்கு 'தவளைக்கு பற்கள் இருந்தால் கடிக்கும்' என்பது போன்று ஒரு வேற்று நாட்டு பழமொழியொன்றை சொன்னான். அதன்பிறகு அவனோடு சமாதானம் ஆனேன். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒருமுறை skype ல் அவனும் குட்டி மன்னார் அமுதனும் காணொளி ஊடாக பேசினார்கள். நான் அலுவலகத்தில் இருந்ததால் சரியாகவே அவனோடு பேச இயலவில்லை.

என்னிடம் இதுவரை செல்லமாய் திட்டே வாங்காதவன் வித்யாசாகர் அண்ணா தான்.

தவறுதலாக என்னை எதிரியாக அப்போது நினைத்த வேறு ஒரு அன்பர்கூட 'நீ நன்றாக இருப்பாய். நீ மென்மேலும் வளர்வாய்' என்று என் அலுவலகப் பணி தொடர்பாக என்னை வாழ்த்தியதுண்டு.

அன்பைவிட வேறென்ன எனக்கு வேண்டும்? அன்பே கடவுளாக இருக்கும்போது...

Friday, December 27, 2013

என் தமிழ்நாட்டில் தேவை ஒரு அரசியல் புரட்சி (My tamizhnadu needs a political revolution) - நன்றி கூகிள் (படங்களுக்காக மட்டும்)

ஏற்கனவே பலதரப்பட்ட விளம்பரங்களால் கோடி கோடியாய் பணத்தை அள்ளுவது போதாதென்றுதமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்கள்  அரசியல் விபச்சாரிகளான ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை பற்றி பொய்யான புகழ் பாடும் விளம்பரங்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் பணத்தில் மிதக்கின்றனர். அந்த அளவிற்கு மனம் தறிகெட்டுப் போய், பணம் சம்பாதிக்க பேராசைப்பட்டு இவர்கள் வெளியிடும் விளம்பரங்களை நம்பி, வெளி மாநில தமிழர் அல்லாத வேற்று மொழி பேசும் வேற்று இனத்தவர்கள் உட்பட தமிழ்நாட்டில் வாழும் பாமர மக்கள் இவர்கள் தங்களுக்கு நன்மைகள் செய்வதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் என்னை 'கருணாநிதியை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?' என்று கேட்டார். நான் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் விபச்சாரிகளின் ஊழலைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நினைத்து பேசுகிறார்.

நான் கட்டும் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற அரசியல் விபச்சாரிகள் செய்யும் ஊழலைப் பற்றி பேசுகிறேன். 

Inline image 3

Inline image 4


ஆனால், பலபேர் நியாயமாக பேசவேண்டிய இவற்றைப்பற்றி பேச பயப்படுகின்றனர். கௌரவக் குறைச்சல் என்று கருதுகின்றனர்.ஏனெனில், அவர்களிடம் பூர்வீகமாய் சொத்து, கோடி கோடியாய் பணம் இருக்கிறது. 

'money doesnt matter' என்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும் ஏராளமான நாகரிக அடிமைகளையும் நாகரிகக் கோமாளிகளையும் நான் கடந்து போயிருக்கிறேன்.




கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
           கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
           நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் 




கடந்த ஜனவரி, ௨௦௧௩ (2013) ல் வெளிவந்த நம் உரத்த சிந்தனை மாத இதழில் என்னுடைய 'புத்தாண்டு கொண்டாட்டம்' என்ற மேலே உள்ள வரிகளை உள்ளடக்கிய கவிதையொன்று 'முனைவர் நா. சு. சுரேஷ்குமார்' என்று என் பெயர் பிழையாக பிரசுரமாகியிருந்தது.

அந்த இதழில் என்னுடைய புகைப்படத்துடன் என்னுடைய பெயரான முனைவென்றி நா. சுரேஷ்குமார் என்பதற்குப் பதிலாக முனைவர் நா. சு. சுரேஷ்குமார் என்று வெளிவந்திருந்தது. சில நாட்கள் கழித்த பிறகு சென்னையிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "முனைவர் சுரேஷ்குமார் இருக்கிறாரா?" என்றார். எனக்குப் புரிந்து விட்டது. அதன்பிறகு நான் "ஐயா, நான் முனைவர் இல்லை. நான் எதிலும் முனைவர் பட்டம் பெற்றதில்லை. என்னுடைய பெயர் முனைவென்றி நா. சுரேஷ்குமார். என்னுடைய பெயரை இந்த மாத இதழில் பிழையாக வெளியிட்டு இருக்கின்றனர்." என்றேன். அவர் அந்த கவிதை குறித்து பேசினார் "கவிதை நன்று." என்றும் அந்த கவிதையில் ஒரு சில வரிகளின் வார்த்தையைக் குறிப்பிட்டு தான் நினைத்த வார்த்தையைச் சொல்லி அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பொருள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் என்று சொன்னார். அவருடைய விமர்சனத்திற்கும் பரிந்துரைக்கும் நான் நன்றி சொன்னேன். 




தி.மு.க வும் அ.தி.மு.க வும் ஒன்னு - இதை 
அறியாதவன் வாயில மண்ணு 

Inline image 1


Inline image 5

Tuesday, December 17, 2013

சாய்வு நாற்காலி

காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
அந்த சாய்வு நாற்காலி.

பால்ய வயதில்
அதில் நான் அமர்ந்த போதெல்லாம்
அடிக்க வருவதாய் பயமுறுத்தி
அன்பாய் அணைக்கும்
இரு கைகள்

தேநீர் குவளையை
அவள் வைக்கும்போதெல்லாம்
மரணிக்கும் நிசப்தம்

அவள் திட்டும்போதெல்லாம்
‘இவளுக்கு வேறு வேலையில்லை’
என்றே நமட்டுச்சிரிப்போடு
செய்தித்தாளின் பக்கங்களோடு
ஒன்றிப்போகும் அவரின் கண்கள்

சிறுநீர் கழிக்கப்போவதாய்
பொய் சொல்லிவிட்டு
பஞ்சு எடுப்பதிலிருந்து
கொல்லைவழியே தப்பித்தோடி
மாடிவீட்டு ஜன்னலின்வழியே
நான் கால்கடுக்க நின்று
ஒளியும் ஒலியும்
பார்த்த பரவசம்

பேருந்து ஓட்டுவதாய்
நினைத்தபடி பயம்போக்க
சத்தமிட்டுக்கொண்டே
ஓடிவந்த என்னுடைய கால்கள்

பூனைபோல் கொல்லைவழி
நான் உள்ளே நுழைந்தாலும்
எங்கிருந்தோ வரும்
காற்றை கிழித்துக்கொண்டு...
அவளின் குரல்.

‘எங்கடா போன கழுத?’
என்று தன் மனைவியான அவளுக்கு கேட்கவே
உரக்க என்னை அதட்டிவிட்டு
என் பக்கம் வந்தபின்
உச்சிமுகர வருவதாய் 
மெல்ல வருடும்
அந்த வேல்கத்திமீசை

அதிகாலை
பனிப்போர்வையை விலக்கிக்கொண்டு
காளைகளை  கூட்டிக்கொண்டு
கலப்பையை தோளில் சுமந்துகொண்டு
ஏரோட்ட போய்...
பள்ளிக்கு நான் புறப்படும்போது
நீராத்தண்ணி குடிக்க
வயிற்றுப்பசியோடு
உழைத்துக் களைத்து
ஓடிவந்த அவரின்  கால்கள்...

வானம்பார்த்து
குடையை எடுக்கும் அவரது கணிப்பு
எப்போதும் தவறானதே இல்லை

அதிர்ந்து பேசாத அவர் உதடுகள்
அவளை சமாதானப்படுத்தும்
நேரம்போக...

காளைகளையும் பசுக்களையும்
தன் பேச்சால் தலையாட்ட வைக்கும்
மெ(மே)ன்மை..

காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
தாத்தாவின் அந்த சாய்வுநாற்காலி.

Tuesday, December 10, 2013

மழையெச்ச நாளொன்றில்...

வெயிலில் 
தலையுலர்த்திக் கொண்டிருந்தது 
நேற்றுபெய்த மழையில் 
தொப்பலாய் நனைந்த 
அந்தக் குடிசை.
பெய்த மழையாய் 
கூரைவழி எட்டிப்பார்த்தது 
மேகத்தின் கண்ணீர் 
ஏழைகளின் வாழ்க்கையை...

மெதுமெதுவாய் 
மேகப்போர்வையை விலக்கி 
சோம்பல் முறித்தெழுந்தான் 
தன் சுட்டெரிக்கும் 
ஒளிக்கதிர் பற்கள் காட்டி...

குடிசைக்குள் 
மழைநீர் குளமாய்...
மிதக்கும் பாத்திரங்கள்...

கைகால்கள் நடுநடுங்க
சோர்வாய் திண்ணையில் 
குழந்தைகள்.

கடலோடு வலைவீசி 
கயல்தேடிக் கரைதிரும்பாக் 
கணவன்.

கால்கடுக்க
வாசலில் நின்றவாறு 
தெருமுனையை வெறிக்கப்பார்க்கும்
அவள் 

புயலின் கூரிய நகங்கள் 
பிய்த்து எறிந்திருந்தன
குடிசைகளின் கூரைகளை...

ஆறுதல் சொல்வதற்காய்
பறக்கும் ஹெலிகாப்டரும்...
பார்வையிடும் கண்களும்...
அடுத்தநாள் தலைப்பு செய்திக்காக... 

அண்ணார்ந்து பார்த்து 
வேதனை மறந்து
கைதட்டும் சிறுவர்சிறுமியர்

கரையொதுங்கியே கிடக்கிறது  
மீனவன் வாழ்க்கை.

மழைநின்றதாய் 
பெருமூச்சு விடும்போது 
கூரைவழி கொட்டத்துவங்குகிறது 
புயலோடு பெருமழை...

Saturday, December 7, 2013

விஷ்ணு பாப்பாவும் சிறப்பு ழகரமும்


சில நாட்களுக்குமுன் என் தங்கச்சி பாப்பாவிடம் அலைபேசியில் பேசும்போது ‘விஷ்ணு என்ன செய்கிறான்?’ என்று கேட்டபோது ‘உன் மருமகன் amenna சாப்பிடுகிறான்.’ என்றாள். ‘அதென்ன amenna?’ என்றேன். ‘ஒண்ணுமில்ல ண்ணே, வாழைப்பழம் வாங்கி வந்தேன். விஷ்ணுவுக்கு கொடுத்தேன். Banana என்று சொல்லிக்கொடுத்தேன். அதைத்தான் amenna என்கின்றான் விஷ்ணு.’ என்றாள்.

நான் பரமக்குடிக்கு சென்றிருந்த போதெல்லாம் அவன் அழுதால், வீட்டிற்குள் பிராண வாயு (oxygen) கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் அவனை, வேப்பமரக் காற்று நல்ல மருந்து என்பதால் பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்து மடியில் வைத்து பேசிக் கொண்டிருப்பேன். சாலையில் போகின்ற நாயை ஆச்சர்யமாக பார்ப்பான். அவனிடம் ‘நாய், dog’ என்று சொல்லிக்கொடுப்பேன். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காகத்தை குறுகுறுவென்று பார்ப்பான். அவனிடம் ‘காகம், காக்கா, crow’என்று சொல்லிக்கொடுப்பதுண்டு.

சிலநாட்களுக்குப் பிறகு அந்த மரத்தடிக்கு மறுபடியும் அழைத்து வரும்போது நாய் அந்த வழியே வந்தால், என்னை கையால் தொட்டு அழைத்து நாயை சுட்டி நாய் என்று சொல்லத்தெரியாமல் ‘நா, நா’ என்று சொல்வான். உச்சியில் காக்கையை தேடுவான். பிறகு காகத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து காக்கா என்று சொல்லத்தெரியாமல் ‘கா, கா’ என்று சொல்வான்.

அவனை ‘எங்க விஷ்ணு பாப்பால்ல, நல்ல பாப்பால்ல’ என்று சொல்லி செல்லங்கொஞ்சுவதுண்டு. அதனால் அவனை அவனே விஷ்ணு பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘விஷ்ஷப்பா’ என்றும் நல்ல பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘ல்லப்பா, ழ்ழப்பா’ என்றும் சொல்வான்.

இன்றைய நடைமுறை உலகில் தமிழர்கள் யாரும் சோம்பேறித்தனம் காரணமாக சிறப்பு ழகரத்தை அதற்குரிய அழுத்தத்தோடு சரியாக உச்சரித்து பேசாமல் சிறப்பு ழகரத்தின் சிறப்பு அழியத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு மலையாளி என்னுடைய உறவினர் மகனுக்கு ‘மலையாளத்தில் மழை என்ற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்’ என்றும் சொல்லித்தந்திருக்கிறான். என்னுடைய உறவினர் மகன் என்னிடம் வந்து தமிழில் சிறப்பு ழகரம் உள்ளதா? என்று கேட்டான். அதிர்ந்து விட்டேன். ‘தமிழை கடன்வாங்கி ஆங்கிலம், ஜப்பானிய மொழி உட்பட பல மொழிகளும் தத்தமது வாழும் தகவமைக்கேற்ப (region) தமிழை திரித்தும் வார்த்தைகளை சேர்த்தும் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம்,......’ என்று பலவாறு பேசிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு மலையாளி தன்னுடைய மொழியில் உள்ளனவற்றை மறவாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் நிலையில் ஒரு தமிழன் இப்படி சிறப்பு ழகரத்தை மறந்து விட்டானே? என்று அதிர்ந்தேன். அவனிடம் ‘நம்முடைய தாய்மொழியை நீ மறக்கலாமா டா?’ என்று கேட்டேன். அவன் சொன்னான். ‘பள்ளியில் என்னுடைய ஆசான்கள் இப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தரவில்லை. அதன்பிறகும் யாரும் சொல்லித்தரவில்லை. அதனாலேயே மழை என்பதை மலை என்றே இத்தனை நாளாய் உச்சரித்து வந்தேன். மலையாளத்தில் மழா என்று மழையை அழைப்பார்களாம்’ என்றும் மனவருத்தத்தோடு சொன்னான்.

உண்மையில் ஆங்கிலேயன் தன்னுடைய மொழியை பல்வேறு பதிப்புகளாக, உட்பிரிவுகளாக அந்தந்த நாட்டிற்கு தகுந்தாற்போல்British English, US English, Indian English என்று தன்னுடைய மொழி திரிவடைவதை அனுமதிக்கிறான். அதன்மூலம் தன்னுடைய தாய்மொழி உலகம் முழுவதும் பரவுகிறது என்பதை அவன் உணர்கிறான். ஏனெனில் அவன் ஒவ்வொரு நாட்டு மொழியின் பின்னும் englsih என்ற தன்னுடைய மொழியின் பெயரைச் சேர்த்து Indian English என்றே அழைக்கிறான். நாளை எவனாவது இந்த மொழி தன்னுடையது என்று சொன்னால் ஆங்கிலேயன் சொல்வான் இது எங்கள் மொழி. உன்னுடைய மொழி என்று நீ சொல்லும் மொழியின் கடைசியில் என்னுடைய தாய்மொழியான English என்ற வார்த்தை உள்ளது. எனவே நீ பேசும் US English, Indian English எல்லாமே என்னுடைய தாய்மொழியான English ன் உட்பிரிவுகள் தான் என்று மிக எளிமையாக தெளிவாக உறுதியாக ஆதாரத்தை முன் வைப்பான். ஆனால் தமிழன் தன்னுடைய மொழியிலிருந்து தோன்றிய மலையாளத்தை மலையாளத் தமிழ் என்றும் கன்னடத்தை கன்னடத் தமிழ் என்றும் தெலுங்கை தெலுங்குத் தமிழ் என்றும் மராட்டியை மராட்டித் தமிழ் என்றும் (பெரும்பாலான மொழிகளை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். இதற்கு ஆதாரமும் இருக்கிறது. கூகிள் குழுமத்தில் ஒருவர் ஒருமுறை ஆதாரத்துடன் தமிழிழிலிருந்து உகரத்தை, இகரத்தை இழந்து எப்படி இன்னொரு மொழியாக மாறியிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்.) தான் நாம் அழைக்க வேண்டும். ஏனெனில் தமிழின் உட்பிரிவுகள் தான் ஏனைய பெரும்பாலான மொழிகள்.

உலகின் பெரும்பாலான மொழிகள் தமிழிலிருந்து தான் தோன்றின, பெரும்பாலான மொழிகளுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஒருசில ஆங்கில வார்த்தைகளின் 
வேர்ச்சொற்கள் தமிழில் இருக்கின்றன என்பதற்கு மொழியியல் ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் சான்றுகளுடன் விளக்குகின்றனர்.

இருந்தபோதும் இன்று நாம் மலையாளத் தமிழ் என்று அழைக்கவேண்டிய மலையாளத்தை, மலையாளத் தமிழ் என்று அழைத்தால் மலையாளி நம்மோடு சண்டைக்கு வருவான். ஏனெனில், தமிழன் தனக்கு போகத்தான் தானதர்மம் என்று வாழாமல் அனைவருக்கும் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் மொழி, நிலப்பரப்பு என அள்ளியள்ளிக் கொடுத்தான். இன்று எல்லா இடங்களிலும் அடிவாங்கி சாவது தமிழன் தான். தமிழன் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் தான் வீழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆங்கிலேயன் தன்னுடைய ஆங்கிலத்தை US English, Indian English, British English என்று உட்பிரிவுகளாக பிரித்து உலகம் முழுவதும் பரப்புவதைப் போல தமிழன் செய்ய இயலாமல் மொழி திரிந்து விடும் என்று பயப்படுகிறான். ஏனெனில் தமிழன் தன்னுடைய மொழியின் மேல் இனத்தின் மேல் அக்கறை இல்லாமல் வாழ்கிறான் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதன்பிறகு சிறப்பு ழகரத்தைப் பற்றி ஒரு அன்பர் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதில் ‘தமிழின் சிறப்புகளில் சிறப்பு ழகரமும் ஒன்று. அதனை உச்சரிக்க சோம்பேறித்தனப்பட்டால் அந்த சிறப்பு ழகரம் எதற்கு?’ என்று மன வேதனையோடு கேள்வி எழுப்பினார்.

இன்னொரு நண்பர் “திரைப்பட நடிகர்கள் வசனம் பேசும்போதும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் திரைமறைவு குரலொலி (dubbing artists) கலைஞர்களும், இப்போது தமிழ் திரைப்படப் பாடல்களை பாடுகிற வேற்றுமொழி பாடகர்களும் சிறப்பு ழகரத்தை லகரமாகவோ ளகரமாகவோ தான் உச்சரிக்கிறார்கள். உதாரணத்திற்கு அழகு என்பதற்கு பதிலாக அலகு என்றோ அளகு என்றோ தான் உச்சரிக்கின்றனர்.” என்று வருத்தப்பட்டார்.

தமிழர்கள் அல்லாத பிற மொழியினத்தினர் தமிழ்மேல் காதல்கொண்டு தமிழ்பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வெகுஜன ஊடகமான திரைப்படங்களையே உதாரணமாக வைத்து தமிழ் கற்கின்றனர். என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கின அன்பர், கன்னட அன்பர் தமிழ் கற்க ஆசைப்பட்டு தமிழ் திரைப்படங்களைப் பார்த்தே, தமிழை கற்றுக்கொண்டதாகவே தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர்கள் தயைகூர்ந்து திரைப்படக் கலைஞர்களின் தமிழ் உச்சரிப்பை ஆழமாக கவனித்து உச்சரிப்பு பிழைகளை நீக்கி வெளியிட வேண்டுமாய் இந்தக் கட்டுரை ஊடாக, கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் குழந்தை என்பதற்கு பதிலாக குயந்தை என்று ழகரத்தை யகரமாக உச்சரிப்பதை கவனிக்கலாம்.

சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் பதிப்பகம் சார்பில் ஒரு விழாவில் கூடுகள் சிதைந்தபோது சிறுகதை நூலிற்காக அகில் அண்ணாவுக்கு விருது வழங்கினார்கள். அந்த விழாவில் நானும் பார்வையாளனாக கலந்துகொண்டேன். ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளை சேர்ந்த கொடுமுடி என்ற ஊரைச் சேர்ந்த புலவர் ஒருவர் பேசும்போது, ‘தற்கால புதிய பொருட்களை அழைக்கும்பொருட்டு, பயன்படுத்தும்பொருட்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை சேர்த்து அதை உடனடியாக பரப்புகின்றனர். ஆனால் தமிழில் அதைப் போன்ற காலத்திற்கேற்ப மாற்றங்கள் (Updates) செய்யவும் ஆளில்லை. செய்தாலும் தமிழர்களிடம் மொழி பற்றிய அக்கறையின்மையாலும், அவர்களின் முழு ஒத்துழைப்பின்மையாலும், வரவேற்பின்மையாலும் புதிய வார்த்தைகள் வழக்கொழிந்து போகின்றன. அதனாலேயே தமிழ் பழையமொழி தற்காலத்திற்கு உதவாத மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது.’ என்று வருத்தப்பட்டார்.

௨௦௦௪ ல் (2004) நான் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது விடுதியின் என்னுடைய அறையின் பக்கத்து அறை நண்பர் (தமிழில் முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருந்தவர்) என்னிடம் ஒருமுறை பேசும்போது ‘அடுத்த தலைமுறையில் தமிழும் சமஸ்கிருதம் போல் பேச்சுவழக்கிலிருந்து அழிந்துவிடும்.’ என்று வருத்தத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

என் மருமகனுக்கு யாருமே சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தராமலேயே அவன் சுயம்புவாக கற்றுக்கொண்டு என்னிடம் ‘ழ்ழப்பா, ழ்ழப்பா’ என்று சொன்ன கணத்தில் சிறப்பு ழகரத்தைப் பற்றி மேலே சொன்ன அனைத்தும் ஒரு கணத்தில் என்னுள்ளே தோன்றி மறைந்தன. என் மருமகன் விஷ்ணு பாப்பாவை ஆரத்தழுவி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிய ஆரம்பித்தேன் நான்.