Saturday, February 1, 2014

சில்லறை சப்தங்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சில்லறை சப்தங்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 




(“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.” என்ற தகவலை உள்ளடக்கிய வரிகளோடு எடுத்த முதல் பக்கத்தில் தாங்கி வந்திருக்கிறது இந்நூல்.)

ஈழ எழுத்தாளர் நிலா (இலண்டன்) அவர்களின் அணிந்துரையைத் தாங்கி வெளிவந்திருக்கிறது இந்நூல்.

படித்து முடித்துவிட்டு குடும்பத்தை விட்டு வெளியே வரும்போது தான், நடைமுறையில் நாம் வேறு ஒரு மனிதனாக வாழ வேண்டியுள்ளது என்ற உண்மையை புரிந்து கொள்கிறோம். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ இழப்புகள், எவ்வளவோ கண்ணீர் என அத்தனையும் கடந்தே வாழ வேண்டியுள்ளது. 

நடைமுறையில் பெரும்பாலும் இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பெரும்பாலும் யாரும் யாரையும் தூரத்திலிருந்து நினைத்துக் கொண்டு உருகிக் கொண்டிருப்பதுமில்லை. அவரவர் அவரவர்க்கு அந்த அந்த இடத்தில் நண்பர்களை, உறவினர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். பலருக்கும் பழைய நினைவுகளை உடனுக்குடனே மறக்கும் வல்லமை அவரவர் பிறப்போடு ஒட்டியே வந்து விடுகிறது. ஆனால், படைப்பாளிகளில் குறிப்பாக கவிஞனின் மனம் கண்ணீரை, பிரிவின் வலியை, தாளமுடியாத் துக்கத்தை, அதன் கனத்தை மரணம் வரை சுமக்கிறது. அவன் உயிர் மரணத்தைத் தாண்டியும் அவைகளை சுமக்கிறது. அந்தக் கண்ணீர், பிரிவின் வலி, தாளமுடியாத் துக்கம், அதன் கனம் என மனக் குமுறல்களை, எதிர்பார்ப்புகளின் சிதைவை, எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி அவைகள் ஏக்கங்களான தவிப்பை, தான் பார்த்த, கேட்ட என அத்தனையையும் வார்த்தைகளாக்கி, கவிதைகளை சமைக்கிறான், சமைக்க முற்படுகிறான் கவிஞன்.

வாழ்வை பற்றிய ஒவ்வொருவருக்கும் உள்ள சரியான புரிதலை வாழ்வில் நிலவும் முரண்பாடுகள் அடிக்கடி சிதைத்துவிட்டு நாம் இன்னும் வாழ்வை மிகச்சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற மிகச் சாதாரண உண்மையை அந்த முரண்பாடுகள் அனுதினமும் நமக்குச் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன. அதனால் தான் மரணத்திற்கு முந்தைய நொடி வரை மனிதர்களின் மனம் அவர்களுக்குத் தெரியாமலேயே உள்ளுக்குள்ளே வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ள தொடர்ந்து தேடிக்கொண்டே, போராடிக் கொண்டே இருக்கிறது.

'வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்' என்ற முதல் கவிதையில் 

'அன்பிற்காய் ஏங்கும் மனதின் 
அழிக்க இயலாத ஒன்றோ இரண்டோ 
இழப்புகள் போதுமே - நம்மை நாம் 
சாகும் வரை இழக்க!'

என்ற வரிகளில் கவிஞனின் மென்மை மனம் புரிகிறது. ஒட்டுமொத்த வலிகளையும் இந்த நான்கு வரிகளில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

'விதியை வெல்லும் நம்பிக்கை', 'முதிர்கன்னி' என்று ஆரம்பிக்கும் கவிதைகளோடு 'யார் யார் யாரோ' என்ற கவிதையின் கடைசி வரிகளில் 

'மனிதத்தை மட்டும் முன்வைத்து 
என்னை மனிதனென்று 
மார்தட்டிக் கொள்ள முயல்கிறேன்!!'

என்று உலகின் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படை குணத்தை எடுத்துக் காட்டுகிறார்.

'ஐயப்ப சாமியும் தீட்டும்' கவிதை முழுமையும் மனம் சார்ந்து, மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற உளவியல் உண்மையை சொல்லி விட்டுப் போகிறது.

 தனக்கான தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய இடங்களில் எல்லாம் தன் குடும்பம் சார்ந்தும், தன் உறவுகள் சார்ந்தும், தத்தமது மண்டலம் அல்லது சமுதாயம் சார்ந்த கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி மனிதன் காலம் முழுக்க சூழ்நிலைக் கைதியாகவே வாழ வேண்டியுள்ளது.

குழந்தைகள் இளைஞர்களாக வளரும்போது, அவர்கள் மனதில் அவர்கள் கற்ற கல்வியறிவின் மூலம் தங்களின் பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றே சங்கல்பம் செய்தாலும் சம்பாதிக்க வெளிநாடு சென்று அங்கிருந்தபடியே இங்கொரு சொந்த வீடு கட்டி அந்த வீட்டில் தங்களின் பெற்றோர்களை தங்கவைப்பதும் காலப்போக்கில் அந்த வீடு அந்தப் பெற்றோர்களுக்கு மட்டுமான ஒரு முதியோர் இல்லமாகவே மாறுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 

முதியோர் இல்லம் தொடர்பாகவே 'புதிரில்லை சில புரிவதுமில்லை' என்ற கவிதையை படைத்திருக்கிறார் கவிஞர்.

'காலம் விழுங்கி விட்ட வரலாறு'  என்ற கவிதையில் ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் அதற்கான ஒரு வரலாறு இருக்கிறது என்ற கருத்தை வலியிறுத்துகிறது. இருந்தபோதும் வாழ்வில் இறுதிவரை போராடி வீரமரணம் அடைந்தவர்களின் அந்த நொடி, ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி விடுகிறது. மறுமலர்ச்சிக்கான விதையை பின்வரும் சந்ததிகளின் மனதில் விதைத்து விட்டுப் போகிறது என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.

'எப்போது கிடைத்துவிடும் அது' என்ற கவிதையில் ஜன்னலோரம் அமரும் நிலை தனக்குக் கனவாகவே உள்ளதாகவே கவிதை வடித்திருக்கிறார்.

'மெல்லக் காதலித்தோம்' என காதல் சார்ந்தும் தன் காதலி சார்ந்தும் எழுதியிருக்கிறார் கவிஞர்.

தான் நேசித்த சொந்தம் பிரிந்ததை 'உன் கல்லறையில் பூத்த புற்கள்' என்ற கவிதையில் 

'வானம் மிக நீண்ட 
தெருக்களாய் - 
அகன்று விரிந்திருக்க'

என்று ஆரம்பித்து 

'தொலைத்த இடத்தில் 
மரணத்திற்குப் பின்னிருந்து 
உன்னைத் தேடுகிறேன்'

என்ற வரிகளில் வாசகர்களின் மனம் அதிர்கிறது.

ஆண்களின் காதலை பெண்கள் புரிந்துகொள்ளாத போது, இந்தப் பெண்களின் உள்ளம் பாலைவானமோ என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக 'நீ நின்று கொன்ற இதயம்' என்ற கவிதையில் 

'இதயம் உடைக்கும் 
பார்வை ஏந்தி 
ஈரம் சுரக்காத உன் காதலுக்கு'

என்ற  வரிகளை எழுதியுள்ளார்.

'நவீன பொங்கல்' என்ற கவிதை இரசிக்கும் படியாக உள்ளது.

'உடைந்த முகங்கள்' என்ற கவிதையில் 

' உடைந்த முகங்களை ஒட்டவைக்க 
வேறொன்றும் வேண்டாம் - 
அன்பு செய்; அன்பு செய்!'

என்ற வரிகள் கவிஞரின் மனதை பிரதிபலிக்கிறது.

'ஜன்னலோரக் கம்பி பிடித்து', 'காதலிக்கலாம் வாருங்கள்', 'மரணத்தைக் கேட்டுப்பார்', 'அன்பிற்குள் அடங்கும்', 'மிச்ச நாட்களின் மீதி வாழ்க்கை', 'நாம் - நானும்', 'சிம்னி விளக்கின் வெளிச்சத்தில்', 'வெகுசிறிய காலமே வாழ்க்கை', 'ஆங்காங்கே சற்று சிந்திப்போம்', 'இப்படியா நகர்வது காலம்', 'கந்து வட்டி கிழிந்த வாழ்க்கை (பாடல்)', 'ஏழைகளின் மழைக்காலம்', 'வேண்டாத கவிதை', 'முரடனின் பாசம்', 'என்கவுண்டர்', 'பெண்களின் இதயம் தைக்கும் இரும்பூசிகள்', 'பார்த்தால் அத்தனையும் கவிதை', 'ஏழையின் கட்டைவிரல்', 'வெறும் பாத்திரம் ஏந்தி நிற்கும் ஏழைகள்', 'காதல் வேதமாகிறது', 'அன்பு', 'நல்ல நட்பு', 'இந்த நாள் இனியநாள்', 'சிலருக்குக் கிடைக்காத அப்பாவின் முத்தம்', 'மனிதம் பிறப்பிப்போம்', 'சில்லறை சப்தங்கள்' என மனிதம் சார்ந்தும், மனம் சார்ந்தும், மனித உறவுகள் சார்ந்தும், காதல் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் பாடுபொருட்களாக  இந்தக் கவிதைநூலில் கவிதைகள் பயணிக்கின்றன.

'கால நிர்வாணத்தின் 
அசிங்களாய் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அத்தனை அதர்மங்களும்'

என்றே 'நெற்றிக்கண் சாட்சியாகினும்' என்ற கவிதையில் கொதித்தெழுகிறது கவிஞனின் மனம்.

'மகனுக்காய் இறந்து பிறந்த இரகசியம்' பாடல் இரசிக்க வைக்கிறது.

'ஒரு மெழுகுவர்த்திக்கு என் காதல் இலவசம்' என்ற கவிதை முழுக்க முழுக்க இரசிக்கும்படியாக உள்ளது. அதிலும், ஆரம்பிக்கும் வரிகள் 

'அரைமணிநேர 
மின்சார அணைப்பில்தான் 
சுடர்விட்டு எரிந்தது
நம் காதல்'

அருமை.

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தால் எல்லாமே கவிதை என்ற பாடுபொருளைத் தாங்கிய 'அத்தனையும் கவிதை' என்ற கவிதை, நூலை எழுதிய கவிஞரின் தனித்தன்மையை உணர்த்துகிறது.

No comments: