Sunday, February 9, 2014

சுதந்திரன் கவிதைகள் (தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்) - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சுதந்திரன் கவிதைகள்

நூலின் வகை: தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்

நூலின் ஆசிரியர்: மரபுப் பாவலர் சுதந்திரன்

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



வரலாறு காணாத எத்தனையோ உயிரிழப்புகளையும் சொல்லொணாத் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் எமது தாய்நிலமான ஈழம் சார்ந்த மரபுப் பாவகைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு இந்த 'சுதந்திரன் கவிதைகள்'.

ஈழத்துக் கவிஞர். முல்லை அமுதன் (இலண்டன்) அவர்களின் வாழ்த்துரையோடு ௨௦௰ ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

வயதில் மூத்தவரான ஈழத்து மரபுப் பாவலர் திரு. சுதந்திரன் தன்னுடைய என்னுரையை, உரைநடையாய் எழுதாமல் அதனையும் ஒரு மரபுப் பாவாகவே யாத்துள்ளார்.

ஒரு காலத்தில் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டம் தொடங்கி, ஈழத்தமிழர் படும் துன்பங்களை, வேதனைகளை, அரசியல் சூழ்ச்சிகளை, தமிழர்களின் அறியாமையை, பிற இனத்தவரால் தமிழினம் சிதைவுற்றுக் கொண்டிருப்பதை, வாழ்வியல் சார்ந்த உண்மைகளை, மனித நேயத்தை என ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் மண் மீதும் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதும் கொண்ட அளவு கடந்த அன்பும் மனக்குமுறல்களும் ஓலக்குரலாக ஒலிக்க, உணர்வுப் பூர்வமாக மரபுப் பாக்களாக யாத்துள்ளார் இந்நூலின் வாயிலாக.

'தேய்வே' என்ற பாவில்

'இமையமுதல் குமரிவரை
இருந்த தமிழ் அரசும்போய்
அமைவேங்கடம் குமரி
ஆண்டதமிழ் அரசும்போய்
எமது தமிழர் மூவர்
எமைவிட்டும் நீங்கிப்போய்
நமது மூவேந்தர்களும்
நடத்திவந்த போரால்போய்

குமரி தனை கொடுங் கடலார்
கொண்ட பேரழிவில் போய்
நமது தமிழர் ஆண்ட
நாவலந் தீவதுவும் போய்
அமைத்தாண்ட அழகுநகர்
அரப்பா அதுவும் போய்
எமைவேள்வி-மந்திரத்தால்
இன்றாள்வ தாரியமே

இலங்கை என-ஈழம் என
இயக்கர் என-நாகர் என
துலங்கி நின்ற பழந்தீவும்
தொடர்ந்த வங்காளியரால்
கலங்கிப் பழந்தமிழர்
கரைந்துமே போர்அழிந்து
நலங்காண வழியின்றி
நசிவதுவும் வரலாறே'

என்று முடிக்கும்போது இதயம் கனக்கிறது.

'காண்போம்' என்ற முதல் பாவில்

'மண்ணாகி இழந்தே யாவும் மனம்உடை அகதியாய்
விண் பார்த்த வண்ணம் ஊரை விட்டெலா இடமும்சுற்றி'

'இருபதாண்டான போரில் எண்பதாயிரம்பேர் செத்தும்
பெரும்பொருள்-வீடு-தோட்டம் பேரழிவானபோதும்
ஒருபயன் இல்லை யென்றால... உலகமே என்னசெல்வாய்?'

என்றே தமிழினம் படும் துயரங்களையும் நம் தாய்நிலம் நமக்குக் கிடைக்க இத்தனை உயிர்களை இழந்தும் வீடு, பொருள், நிம்மதி இழந்தும் பயனில்லாமல் நியாயம், நீதி மறுக்கப் படுவதை பாடியுள்ளார்.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற உண்மையைச் சொல்ல, 'அருகினோம்-எதிர்த்தோம்' என்ற அவரின் பாவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளைப் பாருங்கள்.

'அருகினோம்-எதிர்த்தோம், ஒன்றும் அரங்கினில் ஏறவில்லை'

ஒற்றுமை இல்லாமல் எதனைச் செய்தாலும் தோல்வியில்தான் முடியும் என்ற உண்மையை சொல்லியுள்ளார்.

'அவரவர் உரிமைநாட்டில் அவரவர்க்குண்டு- அஃதை
எவருமே எடுப்பதில்லை எடுத்தவர் கொடுத்ததில்லை'

என்றே தமிழீழ நாட்டில் நடக்கின்ற மனித உரிமை மீறல்களை சாடியுள்ளார்.

'பராசக்தி' மரபுப் பாவில்

'காணிநிலம் போச்சே - பராசக்தி
காணிநிலம் போச்சே'

என்று தொடங்கி...

'சம்பூர் குடும்பிமலை-வாகரை
தமிழர் தாயகங்கள்
வம்பர் செயல் களினால்-பழையநம்
வாழ்வு பறந்ததடி'

என்றே தொடர்ந்து...

'கும்பி கொதிக்குதடி-பராசக்தி
கொஞ்சம் இரங்காயோ
தமிபியர்க் கூட்டமளி-இல்லையேல்
சமதைத் தீர்வினைத்தா

தும்பிலும் உள்ளே நீ- பராசக்தி
தூணிலும் உள்ளாய் நீ
நம்பிக் கிடப்போரை-பராசக்தி
நட்டார்ரிலோ விடுவாய்?'

என்றே பராசக்தியை வேண்டுகிறார்.

'தொடரட்டும்' என்ற பாவின் கீழ்க்கண்ட வரிகளை படித்துமுடிக்கும்போது உடல்முழுதும் ஏதோவொரு உணர்வு உட்புகுந்து முறுக்கேறுகிறது.

'திரையார் தொடரட்டும் தில்லி அசையட்டும்
உரைகள் செயலாகி உலுப்பட்டும் கொடுங்கோலை
இரைதேடும் எட்டப்பர் இலைகளினை நக்கட்டும்
வரையட்டும் கோலாளார் வாழ்தமிழர் ஏடுகளை'

மனித நேயத்தைச் சொல்லும்போது உள்ளத்தை மதிக்காமல் என்புதோல் உடலை வைத்து மதிப்பளிக்கும் உலகத்திற்கு

'என்பை வைத்தே மாந்தர்தம்மை எடைகணிப்பதா?
தம்பி எடை கணிப்பதா?'

என்றே கேள்வி எழுப்பியுள்ளார்.

வால்மீகி போல் கம்பனும் இராவணனை தரக்குறைவாய் பாடியதால் கம்பனின் பாடல்கள் வாயிலாக உண்மையான வரலாற்றை அறிய முடியாமல் இராமகுலத்தை உயர்த்தியே பேசும்படி ஆனதை,

'புலவர் குழந்தை எனும்
புண்ணியவான் காவியத்தை
நல மாகத் தந்தத்தினால்
நாம் வாழ்ந்தோம் இராவணனால்'

என்றே பாடியுள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழமாய் வாசிக்கும்போதும் தமிழனின் ஒற்றுமையின்மையையும் தமது வரலாறு குறித்த தெளிவான புரிதல் இல்லை என்பதையும் ஏக்கத்தோடும் வேதனையோடும் பாடி வைத்திருக்கிறார்.

ஈழ விடுதலையை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் ஆர்வமாய் வாசிக்க வேண்டிய நூல் இது.

No comments: