Saturday, April 12, 2014

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் ஈழப்போராட்டத்தில் விடுதலை புலிகளும்

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்

என்னுடைய சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று இன்னும் ஆழமாக என் நினைவினில் நிற்கிறது. நான் பிறந்த ஊரான முனைவென்றியில் ஒரு அண்ணன் ஒருமுறை ஏதோ ஒரு சூழலில் என்னிடம் சொன்னார் 'மாநிலங்களுக்கான எல்லைகள் பிரிக்கப்படும்போது ஆந்திராவுக்காக சென்னையை கேட்டார்கள். ஆனால் நாம் திருப்பதியை கேட்டோம். அதனால் சென்னையை நமக்கு கொடுத்து விட்டார்கள்.' என்று திருப்பதியும் நமக்குத்தான் (தமிழர்களுக்குத்தான்) கிடைத்திருக்க வேண்டியது என்ற உண்மை அந்த அண்ணனுக்கு புரியவில்லை. வரலாற்றை தவறாக எனக்கு சொல்லிவிட்டார் என்ற உண்மை சமீப காலங்களில் என்னால் உணரப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நான் பெங்களூரு வந்தபோது ஒரு அண்ணன் என்னிடம் அலைபேசி ஊடாக பேசியபோது சொன்னார் 'பெங்களூரு தமிழ்நாட்டிற்கு வரவேண்டியது. ஓசூர் அவர்களுக்கு போகவேண்டியது. ஆனால், பெங்களூருவை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.' என்று.

தமிழர்களின் வரலாற்றைப் பற்றி சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் அதாவது திருப்பதியும் சரி, பெங்களூருவும் சரி நமக்கு வரவேண்டிய நிலப்பரப்புகள் என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'அவர்களுக்கு (தெலுங்கர்களுக்கு) உண்மையிலேயே திருப்பதி சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால்தான் அவர்கள் சென்னையை கேட்டார்கள்' என தவறாக என்னுடைய சிறுவயதில் ஒரு அண்ணன் சொன்னார். கடந்த ஓராண்டிற்கு முன்பு பெங்களூருவும் சரி அவர் சொன்ன ஓசூரூம் சரி தமிழ்நாட்டிற்கே வரவேண்டியவை என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'கன்னடர்களுக்கு உண்மையிலேயே பெங்களூரு சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால் அவர்கள் ஓசூரை கேட்டார்கள்' என தவறாக இன்னொரு அண்ணன் சொன்னார். அவர்களுக்கு எப்படி உண்மை புரியும்? ஏனெனில் இந்த உண்மைகளெல்லாம் ஏற்கனவே மூடி மறைக்கப்பட்டு தவறான செய்திகளை பரப்பி விட்டவர்கள் பலர். அதனையும் உண்மையென நம்பி நாம் உண்மையிலேயே பல நிலப்பரப்புகளை இந்தியாவின் துரோகத்தினால் அண்டை மாநிலங்களிடம் இழந்திருக்கிறோம். அப்படி கோலார், முல்லைப்பெரியாறு, குடகு மலை என நமக்கு கிடைக்கவேண்டிய அனைத்து வளங்களும் இந்தியாவின் உதவியோடு மற்றபிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு 'வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா' என்று நம் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மிகக்கச்சிதமாக பாடப்புத்தகம் தொடங்கி தமிழர்கள் மூளை மழுங்கியவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்ற உண்மைக்கு பல சான்றுகள் உள்ளன.

அன்றே விழித்துக்கொண்ட மலையாளிகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழர்களின் முட்டாள்தனத்தை மிகச்சரியாகவும் சாதூர்யமாகவும் பயன்படுத்தி நம்முடைய வளங்களையெல்லாம் அபகரித்துக்கொண்டனர். அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று நீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன. இதனாலேயே தென்தமிழ்நாட்டைச்சேர்ந்த பலரும் வேலைவாய்ப்பின்றி தாய்நிலமான தமிழ்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அந்த இரு அண்ணன்களின் மேல் எந்தவொரு தவறும் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு உண்மையென்ன என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை யாரும் தரவில்லை. தமிழர்கள் தொடர்பான பெரும்பாலான உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் உண்மைகளை அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கெப்படி கிடைக்கும்? தமிழர்களின் வரலாறு தொடர்பாக தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும், இந்தியாவிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு வேண்டும் என்று ஆத்மார்த்தமாய் விரும்புகிற என்னைப்போன்ற தமிழர்களுக்கு புரியும் இந்த உண்மைகள்.

உண்மையில் தமிழ்நாடு அண்மையில் அண்டைமாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா விடம் இழந்த நிலப்பரப்புகள் கீழ்க்கண்டவாறு,

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2013/11/70000.html


தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

பத்தோடு பதினொன்றாக 'நாம் தமிழர்' கட்சி:

தமக்கான மேற்சொன்ன இவ்வளவு நிலப்பரப்புகளையும் இழந்துவிட்டு எதுவுமே இழக்காததுபோலவே ஈழத்தமிழர்களுக்காக உச்சுக்கொட்டும் தமிழ்நாட்டில் வாழும் பலர் ஈழத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் உச்சுக்கொட்டியதால் எந்தவொரு மாற்றமும் அங்கு நிகழவில்லை. 

தம்மினத்தின்மீது உண்மையான அக்கறைகொண்ட தமிழன் எப்போதும் ஈழத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க மாட்டான். தனித்தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருந்திருப்பான். ஏனெனில் தனித்தமிழ்நாட்டிற்கான தேவை இங்கு பலகாலமாய் இருக்கிறது. அதனை உணர யாரும் முன்வரவில்லை. 

நினைவு முற்றத்தை இடித்து அராஜகம் செய்த ஜெயலலிதாவை, மூவர் தூக்குதண்டனையை நீக்கக்கோரி தீக்குளித்த தோழர் செங்கொடிக்கு கிடைக்கவேண்டிய மதிப்பை அரசியல் காய்நகர்த்தி தனக்கு கிடைக்கச் செய்த ஜெயலலிதாவை, தி.மு.க விற்கு எந்தவகையிலும் குறையாமல் கொள்ளையடித்த ஜெயலலிதாவை,  ஈழத்தமிழர்களின் நலனுக்காக இலயோலா கல்லூரி மாணவர்கள் போராடியபோது அவற்றை திசைதிருப்பி விட்ட இன்ன பிற கட்சிகள் உட்பட ஜெயலலிதாவை மறந்துவிட்டு ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று சொல்லும் 'நாம் தமிழர்' கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.

உண்மையை சொல்லப்போனால், காங்கிரஸ் கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிசமமாக பா.ஜ.க இங்கும் தி.மு.க கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிக்கு சமமாக அ.தி.மு.க. 

தமிழர்களின் மீதும் தமிழ்நாட்டின்மீதும் 'நாம் தமிழர்' கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் யாரையும் ஆதரிக்காமலும் யாரையும் எதிர்க்காமலும் இருந்திருக்க வேண்டும். அல்லது, தனித்தமிழ்நாடு கேட்டு போராடியிருந்திருக்க வேண்டும். ஆனால், 'நாம் நமிழர்' கட்சியும் பத்தோடு பதினொன்றாக தனக்கான சுயநலத்தை காட்டத் துவங்கிவிட்டது. 'நாம் தமிழர்' கட்சியின் மீது வைத்த நம்பிக்கை தவிடுபொடியானது.

உண்மையில் தமிழர்கள் அனைவரும் 'வாக்களிக்க விருப்பமில்லை' என்ற சின்னத்திலேயே வாக்களிக்கலாம். அதுதான் சாலச்சிறந்தது. மனசாட்சிப்படி மிகச்சரியானதும் கூட.

'பண்ணு', 'பண்ணி' தமிழர்களும் 'மாடி' கன்னடர்களும் 'செய்' தெலுங்கர்களும்:

நான் தற்போது பெங்களூருவில் வசித்துவரும் விடுதியில் நான் மட்டுந்தான் தமிழன். என்னைத்தவிர அனைவரும் தெலுங்கர்கள், மராட்டியர்கள் மற்றும் தமிழர் அல்லாத சிலர். சில தினங்களுக்குமுன்பு என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒரு அன்பரோடு அவருடைய தாய்மொழியான தெலுங்கில் பேசினேன்.

அவர் ஆச்சர்யப்பட்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (ஆங்கிலத்தில் உரையாடத்துவங்கினோம்.) 'உன்னுடைய தாய்மொழி தமிழ் தானே? நீ எப்படி தெலுங்கில் பேசுகிறாய்?' என்றார். நான் சொன்னேன் 'இங்கு பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள் தான் இருக்கிறீர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பலமொழிகளில் அவர்களின் வட்டார வழக்கு மற்றும் தங்களுக்கான மண்டலம் சார்ந்தவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ்தான் மிஞ்சும் என்ற உண்மை எனக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் உங்களுக்குள் பேசும் தெலுங்கிலிருக்கும் தமிழ் அல்லாத சொற்கள் மிகக்குறைவாகத்தானிருக்கும். அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சியிலும் அவர்கள் பேசும் தெலுங்கை கவனித்தேன். அவற்றிலும் அதிகபட்சமான வார்த்தைகள் இலக்கியத் தமிழ் வார்த்தைகளிலோ அல்லது தமிழர்களின் பேச்சுவழக்கு வார்த்தைகளிலோ தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். உதாரணத்திற்கு அவசரம், அற்புதம், அன்னம், பாம்பு, புலி (இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.)' என்றேன்.

அதன்பிறகு அவரிடம் தமிழில் உள்ள வார்த்தைகளுக்கு தெலுங்கில் எப்படி சொல்வீர்கள் என்றும் எவையெல்லாம் தமிழிலிருந்து வேறுபடுகின்றன என்பனவற்றை தெரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

அவற்றில், 'ஆங்கிலத்தில் bus என்பதற்கு தமிழில் பேருந்து என்று சொல்வோம், தெலுங்கில் எப்படி சொல்வீர்கள்?' என்று கேட்டேன்.

அவர் சொன்னார் 'தெலுங்கிலும் bus என்றுதான் சொல்வோம்'. (அதாவது தமிழர்கள் அனைவரும் தற்போது  மிதிவண்டி என்று சொல்லவேண்டிய cycle ஐ சைக்கிள் என்றும், சாலை என்று சொல்லவேண்டிய road ஐ ரோடு என்றும் சொல்கிறோமே. இதனைப்போலத்தான்.)

நான் சொன்னேன் 'ஆங்கிலம் பேசும்போது மட்டும் ஒரு வார்த்தைகூட பிறமொழி கலக்காமல் பேசும் தமிழர்கள், தன்னுடைய தாய்மொழியான தமிழில் பேசும்போது மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் (இதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கல்ல, நானும் விதிவிலக்கல்ல. ஏனெனில் நாம் அனைவருமே அப்படித்தான் தமிழ் பேசவேண்டும் என வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டோம்.) என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலும் இந்த அக்கப்போர் உள்ளதுபோலவே. கன்னடத்திலும் உண்டு என்பது எனக்கு தெரியும்.' என்றேன்.

நானே தொடர்ந்தேன் 'தமிழில் திற, மூடு, அழை, என்பன போன்றவற்றிற்கு பதிலாக open பண்ணு, close பண்ணு, call பண்ணு அல்லது open பண்ணி, close பண்ணி, call பண்ணி' என்று சொல்கிறார்கள். இதனையே கன்னடத்தில் open மாடி, close மாடி, call மாடி என்றும் தெலுங்கில் open செய், close செய், call செய் என்றும் சொல்கிறார்கள். (தெலுங்கில் செய் என்ற வார்த்தை தூய தமிழ் வார்த்தை. ஆனால், நாம் பண்ணு, பண்ணி என்று பேசுகிறோம்.)

மொழி குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டு வரும் இந்த இடத்தில் சமீபத்தில் எழுதிய ஒரு காதற்கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் எழுகிறது.

எத்தனையோ பேர்
மொழியியல் நிறைஞரென
பட்டம்பெறும் போது

விழியியல் நிறைஞனென
பட்டம்பெற வைத்தாய்.

உன்னை காதலித்த
என்னை...
-------------------------

ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் குறித்து ஈழத்தமிழரோடு உரையாடல்:

கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை சென்னையில் தங்கியிருந்தபோது அங்கு ஒரு ஈழத்தமிழரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து நட்பு பாராட்டிக் கொண்டோம். சமீபத்தில் அவரை அங்கு சந்தித்தேன். அப்போது தமிழின விடுதலை குறித்து உரையாடத்துவங்கினோம். நான் மேலே சொன்ன தமிழர்கள் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பரப்புகள், தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள், இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பன குறித்து பேசத்துவங்கினேன்.

'அப்படிப் பார்த்தால் முழு இலங்கையையும் நாங்கள் தமிழீழமாகக் கேட்க வேண்டும். தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. வடஇந்தியாவில் பாதிக்கப்படும் இன மக்களை விடவா தமிழின மக்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிறார்கள்?' என்றார்.

'நான் இங்கு முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். தாங்கள் இங்கு கடந்த ஒரு வருடமாகத்தான் வாழ்கிறீர்கள். இங்கு நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் இங்கேயே தொடர்ந்து வாழ்ந்து பார்க்கவேண்டும். அதனால் தங்களுக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. இவையெல்லாம் என்னைப்போன்ற தமிழின விடுதலையை உள்ளன்போடு எதிர்பார்த்து உள்ளே நேசித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் இனத்தைப் பற்றி நீங்கள் முதலில் யோசியுங்கள். மற்றவர் உதவியை எதிர்பார்க்கும் ஒருவர் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியும்? முதலில் நாம் பத்துப்பேருக்காவது உதவி செய்யும் நிலைக்கு உயரவேண்டும். நமக்கான, நம் இனத்திற்கான விடுதலையை நாம் முதலில் பெற்றாக வேண்டும். அதன்பிறகு மற்ற இனத்தை, இனத்தின் விடுதலையை பற்றி யோசிக்கலாம். முடிந்தால் உதவலாம். ' என்றேன்.

அப்படியே தமிழீழம் குறித்தும் விடுதலை புலிகள் குறித்தும் பேசத்துவங்கினார்.

'நான் மாணவர் பேரவைத் தலைவராக ஈழத்தில் இருந்தவன். அங்கு பலதரப்பட்ட பகுதிகளுக்கு பயணப்படுபவன். போர்க்காலங்களிளெல்லாம் நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒருங்கிணைப்பது என்று செய்து கொண்டிருந்தேன். ௨௦௦௪ (2004) ல் சுனாமி இயற்கை சீற்றத்தின்போது ஈழத்தில் சிங்களர்களும் தமிழர்களும் இனவேற்றுமையை மறந்து சுனாமியிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலையில் அங்கு அந்தக் காலகட்டத்தில் இன நல்லிணக்கம் ஏற்படும் சூழல் நிலவியது. அந்த வாய்ப்பை விடுதலை புலிகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் அரசாங்கத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்திருக்கலாம். அப்போது தனித்தமிழீழம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.' என்றார். (இவ்வளவிற்கும் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் விடுதலை புலிகளோடும் இயக்கத்தின் மேல்மட்டக் குழுக்களோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றும் சொன்னார்.)

விடுதலை புலிகளின் தீர்க்கதரிசனமான முடிவுகளை, போராட்டங்களை குறைசொல்லும் அளவிற்கு அல்லது விமர்சிக்கும் அளவிற்கு நாம் இன்னும் சிந்திக்கவில்லை என்பதே உண்மை.

No comments: