Saturday, May 31, 2014

அருவி காலாண்டிதழில் (ஜனவரி - மார்ச் ௨௦௧௪) என்னுடைய ஹைக்கூ கவிதைகள்.

அருவி காலாண்டிதழில் (ஜனவரி - மார்ச் ௨௦௧௪) என்னுடைய ஹைக்கூ கவிதைகள் வெளியாகியுள்ளன.


Sunday, May 25, 2014

‘பாசமுள்ள தங்கச்சி’ பாமினி

ஓராண்டிற்கு முன்பு கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் “நீங்கள் என் மனதை காயப்படுத்திவிட்டீர்கள்.” என்று ஒரு செய்தியை முகநூலில் என் தங்கச்சி பாமினிக்கு அனுப்பியிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து என்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்திருந்தது.

“நான் ஜெர்மனியில நிக்குறன் அண்ணா. மன்னிச்சுக்கங்க அண்ணா. அடிக்கடி பேசுறேன் அண்ணா.” என்று குரல் தழுதழுக்க சொன்னாள். அன்று என்னால் உறங்க இயலவில்லை. நான் அவள் மனதை காயப்படுத்தி விட்டேன் என்று நான் நிறைய அழுதேன். இன்னொரு பக்கம் எனக்கு என்மேல் அன்புகொண்ட ஒரு தங்கச்சி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி.

பிள்ளை குரல் தழுதழுக்கச் சொன்ன இந்த நிகழ்வு என்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்வு தான் என் தங்கச்சி பாப்பா சோபனாவைப் போல இவளும் என் தங்கச்சி பாப்பா தான் என்று உணர வைத்திருக்கிறது.

கடந்த ௧௬, மார்ச் ௨௦௧௪ (16, மார்ச் 2014) அன்று அவளுக்கு பிறந்தநாளன்று அவள் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். அன்று நான் நிறைய மனமுருகி வேண்டினேன். வித்யாசாகர் அண்ணாவிடம் மின்னஞ்சல் ஊடாக தகவலை சொன்னேன்.

அண்ணா குவைத்திலிருந்து பேசினார் “அவள் நம் தங்கச்சி. நம் அன்பு மட்டும் போதும் அவள் நல்லபடியாக குணமாக. நீ வருத்தப்படாதே. அவளை அங்கு நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.” என்று ஆறுதல் சொன்னார்.

அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் சொன்னேன் "தங்கச்சிக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று. சில தினங்கள் கழித்தபிறகு அவள் சொல்லியிருக்கிறாள் "அண்ணாவுக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று.

கடந்த ௨௩-௦௫-௨௦௧௪ (23-05-2014) அன்று பெங்களூரிலிருந்து திருச்சி வரவேண்டி இரயிலில் ஓசூர் தாண்டி வந்துகொண்டிருந்தபோது உள்ளுக்குள்ளே நிறைய அழுகை வந்தது. வெளியே கண்ணீர் வரவில்லை. இந்தக் கவிதை வந்தது.
ஆசையோடு தங்கையுந்தன் அன்பைமட்டும் எதிர்பார்த்து
பாசமுள்ள அண்ணனிவன் பேசவந்தேன் கவிதைவழி
தேசங்கள் கடந்துநின்றும் தங்கையுந்தன் பாசந்தான்
வீசுகின்ற தென்றலைப்போல் வீசுதம்மா எப்போதும்

நீசனாகப் பிறந்ததாலே நீங்கவில்லை அன்புமட்டும்
பாசாங்கு இல்லாத பாசந்தான் என்னுள்ளே
காசொன்றே எதிர்பார்க்கும் கயமைமிகு உலகினிலே
நேசமொன்றே போதுமடி நெஞ்சமெல்லாம் நிறையுமடி

சிக்கலிலே சிலமுறைகள் சிக்கித்தான் தவித்தேனே
அக்கறையாய் சிலவார்த்தை ஆதரவாய் சிலவார்த்தை
பக்குவமாய் புரிந்துகொண்ட பாசமுள்ள தங்கச்சி
இக்கரையில் நானிருந்தே இமைமூடி அழுகின்றேன் 

கோபத்தில் சிலவார்த்தை கொட்டித்தான் தீர்த்தேனே
சாபத்தை கொடுத்துவிட்டு சினந்திடும் சிவன்போலே
கோபத்தை பதிலுக்கு கொட்டிவிட்டுப் போனாயோ
கோபத்தில் பேசாமல் கொள்ளாமல் இருக்காதே

ஒன்றையே நினைத்து என்னையே மறந்தால்
அந்நிகழ்வை நாமிங்கு அழைப்போமே தவமென்று
என்னுடைய பாசமிங்கு இப்படித்தான் புரிந்துகொள்
நானுனக்கு அண்ணன்தான் நினைவில்கொள் எப்போதும்

Monday, May 19, 2014

குதித்தாடு எம்மிறையே...

அப்பு, விஷ்ணு, அய்யாவு, அப்புக்குட்டி,

எப்டி டா இருக்க? மாமா உன்ன பார்த்து ஒன்றரை மாதங்களாகப் போகின்றன. உன்னை வீட்டில் வந்து பார்க்கும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு இப்போது நீ மட்டுந்தான் நிரந்தரமான சொத்து.

யார் யாரோ திடீர் திடீரென என்மேல் அக்கறைப்படுகிறார்கள். அதன்பிறகு என்னை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், என் நம்பிக்கைக்குரியவர்களாக மாறி அவர்களுக்கு காரியம் முடிந்தவுடன் என்னை கழற்றிவிட்டுவிடுகின்றனர்.

மனிதர்களின் சூழ்ச்சிகளை முன்கூட்டியே புரிந்துகொள்ள, என்னால் முடியாமலேயே போய்விடுகிறது.

மனிதர்களின் சூழ்ச்சிகளை, துரோகங்களை தாங்கும் மனவலிமையை எனக்கு கொடுடீ தாயீ...

அன்போடு பழகுவதில் உன்னைப்போலவே நானும் இங்கொரு குழவிதான்.

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_7751.html

Wednesday, May 14, 2014

பிரிவுஎழுதிய கவிதைகளை
படிக்கச்சொல்லி
உன் கண்முன்னே வைத்துவிட்டுப்
போகிறேன்
கண்கள் மூடிக் கடந்துபோகிறாய்

என் மனதின் வலிகளை
வார்த்தைகளாய் கோர்த்து
உதிர்க்கிறேன்
கேட்டும் கேட்காமலேயே
விலகி நடக்கிறாய்

கடும்வெயிலில் நிற்கிறாய்
நிழலாய் வந்துன்முன் நிற்கிறேன்
நிராகரித்தே நிற்கிறாய்

மழையில் நனைகிறாய்
குடையோடு வந்துனை
அழைக்கிறேன்
கண்கள் உருட்டி
கைகள் உயர்த்தி மிரட்டி
நடைபோடுகிறாய் நதிபோல...

உன் கண்ணீர் கண்டு
கைக்குட்டையோடு வருகிறேன்
கரம் தடுத்து முறைக்கிறாய்

வீட்டு நினைவு வந்ததாய்
வருந்தி நிற்கிறாய்
நீ சாய தோள்கொண்டு வருகிறேன்
உன் வேல்விழியால்
என்மனதை குத்திக் கிழிக்கிறாய்

நான் இறந்தேதான் கிடக்கிறேன்
உன் கண்களில்
கண்ணீர் வந்தும்கூட
கல்நெஞ்சத்தோடு பிரிகிறாய்

Tuesday, May 13, 2014

தவிப்பு


உன் காலடிசப்தம் கேட்டு
கதவிடுக்கில் ஒளிந்துகொண்டு
புன்னகைக்கிறேன்
ஒளிந்து விளையாடும்
குழந்தையைப் போல..

வேகமாய் உள்ளே நுழைந்தாய்
ஒவ்வொரு அறையாய்
தவிப்புடன் தேடுகிறாய்

பரண்மேல் ஏறிப் பார்க்கிறாய்
ஒவ்வொரு தளமாய் தேடுகிறாய்

களைத்துப்போய் ஓய்வெடுக்கிறாய்

விரக்தியுடன் கடந்துபோகிறாய்
என்னை பார்க்காமலேயே...

உன்னை அழைத்தபடி
பின்தொடர்ந்து ஓடிவருகிறேன்

தொடர்ந்து நடக்கிறாய்
என்னை திரும்பிப் பார்க்காமலேயே...

Thursday, May 8, 2014

கேட்காத என் ஓலக்குரல்இங்கு நானிருந்தேன்

என்னுடைய வளங்கள்
அனைத்தையும்
என்னகத்தே வைத்துக்கொண்டு
இங்குதான் நானிருந்தேன்

செழிப்போடுதான் நானிருந்தேன்

சலசலப்பாய் ஓயாமல்
அசைந்தாடிக் கொண்டிருந்தேன்

துள்ளிக் குதித்திடவும்
அள்ளியணைத்திடவும்
எல்லாமுமாய்
நானே நானாயிருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
நான் என்னை இழக்கத் தொடங்கினேன்

வந்தவர்கள்
என்னை மண்ணிட்டு மூடினார்கள்

கண்ணீர்வழி எனக்குள்ளேயே
உருகிஉருகிக் கண்ணீராகவே
உயிரறுந்து கிடந்தேன்

எனக்குள்ளேயே
சிதைந்துசிதைந்து முடங்கிப்போய்
மூச்சிருந்தும் பேச்சிச்சின்றிக்
கிடந்தேன்

நான் கதறி
கூக்குரலிட்ட போதெல்லாம்
கேட்காமலேயே போனது
என் ஓலக்குரல்

நான்
பொங்கி எழாமலேயே
போய்விட்டேன்

இன்று நான்
நிரந்தரமாகவே இல்லையெனினும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான தடயங்கள்
அழிக்கபட்டுவிட்ட போதினிலும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான
அடையாளங்களை அழித்துவிட்டு
எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஏனோ தெரியவில்லை
இங்குதான் நானிருந்தேனென்று...

Monday, May 5, 2014

'பேசுந்தமிழ் குழவி' பாமினி

இப்படியொரு பதிவை கடந்த சில நாட்களாகவே வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து நினைவிலிருந்தது. இன்று பதினொன்றரை மணிக்கெல்லாம் உறங்கப் போனேன். எழுதவேண்டுமென்று என்னை தூங்கவிடவில்லை.


என் தங்கச்சிப்பிள்ள பாமினியின் கள்ளங்கபடமில்லாத புன்னைகை கொள்ளையழகு.


ஹிந்து ஆங்கில நாளிதழில் என் தங்கச்சிப்பிள்ள பாமினியை பற்றியும் "தேன் சிந்தும் பூக்கள்" பாடலை பற்றியும் வெளிவந்திருக்கிறது.

http://www.thehindu.com/features/cinema/winning-tunes/article5973177.ece
----

சில வாரங்களுக்கு முன்பு என்னுடைய ஸ்கைப் கணக்கில் ஆங்கிலத்தில் உள்ள என்னுடைய பெயரை தமிழில் மாற்ற வேண்டி முயற்சித்தேன். பெயரை தமிழில் மாற்றிவிட்டு நாடு என்ற இடத்தில் தமிழ்நாடு என்று இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். இல்லை. சரி நாடு என்ற இடத்தில் எதுவும் கொடுக்காமல் இருந்துவிடலாம் என்று நினைத்து 'save' என்ற பொத்தானை அழுத்தினேன். நாடு என்ற இடத்தில் ஏதாவது உள்ளீடு கொடுத்தே ஆக வேண்டும் என்று வந்தது. "பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?" என்று எனக்குள் ஸ்கைப் பை செல்லமாகத் திட்டிக்கொண்டு இந்தியா என்று கொடுக்க விருப்பமில்லாமல் செர்பியா என்றொரு நாட்டை கொடுத்து விட்டேன். ஏனெனில் தமிழர் தேசியத்திற்கு எதிரானது இந்திய தேசியம். இந்தியா என்பதற்கு பதிலாக வேறொரு நாட்டை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நானிருந்தேன். குறையாண்மையாகிப்போன இறையாண்மை கொண்ட இந்தியாவை என்னுடைய தாய்நாடாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு. என்னுடைய தேசிய இனம் தமிழன்.


இதனை எழுதுவதற்கு ஐந்து மணிநேரத்திற்கு முன்பு என் தங்கச்சிப்பிள்ள பாமினி என்னிடம் ஸ்கைப் ல் பேசினாள். எடுத்த எடுப்பிலேயே "நீங்கள் இந்தியாவில் இருந்துதானே பேசுறீங்க?" என்றாள். காலங்காலமாய் இந்தியா என்றாலே தமிழர் தேசியத்திற்கு (தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எதிரானது. விளையாட்டுக்காகவா பேரறிஞர் அண்ணா தனித்தமிழ்நாடு கேட்டு போராடத் துவங்கினார் என்பதை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.) எதிரானது. "தமிழ்நாட்டிலிருந்தா பேசுகிறீர்கள்? அல்லது பெங்களூருவிலிருந்தா பேசுகிறீர்கள்?" என்று கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை, என்னுடைய இருப்பிடத்தை அடையாளப்படுத்த இந்தியாவை ஏன் இங்கு நுழைக்கிறாள்? என்று சட்டென்று என்னுள்ளே கடுமையான கோபம் எழுந்தது. கேட்பவள் என் தங்கச்சி என்பதால் அவளை எதுவும் திட்ட, அவள்மீது எனக்கு கோபப்பட மனம் வரவில்லை. நான் கோபப்பட்டு அவள் என்னால் வருத்தப்பட்டால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லியாக வேண்டும். என்னுடைய அலுவலகத்தில் என்னைத்தவிர எனக்கு மேலே உள்ள மேலதிகாரிகள் அனைவருமே தமிழர் அல்லாத வேற்று மொழியினத்தவர். விடுப்பு எடுக்க மின்னஞ்சல் அனுப்பும்போது "I have to go to my hometown which is in my tamizhnadu." என்று தொடங்கி எழுதுவதுண்டு. அவர்கள் ஒவ்வொருமுறை நான் அனுப்புவதை படிக்கும்போதும் அவர்கள் தாய்மொழியான மராத்தியில் "இவன் என்ன my tamizhnadu என்று சொல்கிறான்?" என்றும் "tamilnadu என்பதுதானே சரி. tamizhnadu என்று ஏன் எழுதுகிறான்?" என்றும் பேசிக்கொண்டு இருப்பதை அடிக்கடி கேட்க நேர்ந்தது. என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் நான் அவர்களிடம் தெளிவாக விளக்கியிருந்திருப்பேன்.

நம்மிடம் அந்த பற்றுதல், my என்ற possessiveness இல்லாததால் பெருமைமிக்க நம் தமிழினம் வீழ்ந்துபோனது. தரணிதனில் தாழ்ந்துபோனது.

என் தங்கச்சிப்பிள்ள பாமினி சில நாட்களுக்கு முன்பு என்னை "my anna" என்று அழைத்தபோதுகூட நான் அதிகமாக மகிழ்ந்ததற்கு காரணம் நானும் இப்படித்தான் "என்னுடைய தங்கச்சி, என்னுடைய அண்ணா, என்னுடைய தமிழ்நாடு" என்று உரிமை கொண்டாடுபவன் (possessiveness).

இந்த என்னுடைய, நம்முடைய என்ற இந்த possessiveness ம் ஒற்றுமையும் தான் நம்முடைய தமிழனத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப் போகின்றன.

"ஆத்தா, இந்த இடத்தில் உன்னிடம் ஒரு முக்கியமான தகவல் சொல்லணும். நீ என்னை my anna என்று உரிமை கொண்டாடுவதெல்லாம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான் டா. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களையெல்லாம் தங்கள் உறவுகளாக நினைக்கிறார்கள். தங்களால் இயன்ற அளவு உங்களின் ஆபத்துக் காலங்களில் உதவ முயற்சித்தார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் சூழ்ச்சிகளால் அந்த முயற்சி எப்போதுமே ஆக்கப்பூர்வமாக மாறாமல் வெறும் அனுதாபம் என்ற நிலையிலேயே நின்றுவிட்டது டா. அதனால், உங்களுக்காக நாங்கள் வெறும் கண்ணீர் மட்டுந்தான் டா வடிக்க முடிந்தது.

நீ என்னை my anna என்று அழைக்கிறாய். நாங்கள் உங்களை எங்கள் சகோதரர்களாக கள்ளங்கபடமில்லாமல் நினைப்பதுபோலவே எத்தனை ஈழத்தமிழர்கள் எங்களை தமிழர்களாக மதிக்கிறீர்கள்? நேசிக்கிறீர்கள்? உங்களின் உறவுகளாக உங்களில் ஒருவராக எங்களை நினைக்கிறீர்கள்? என்று எனக்குத் தெரியல டா.

உண்மையில் நாமெல்லாம் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டத்தின் பிள்ளைகள். நாம் செய்த தீவினைகள் எல்லாம் சேர்ந்து கடற்கோளால் அரிக்கப்பட்டு நீ வேறாய் நான் வேறாய், நீங்கள் ஈழத்தமிழர்களாய் நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களாய் மாறிப்போனோம்."

உண்மையில் சொல்லப்போனால் என்னை சிலபேர் அலைபேசி ஊடாக "நீங்கள் ஈழத்தமிழரா?" என்று கேட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய முகநூல் கணக்கில் திரு. இராஜமனோகரன் ஐயா கீழ்க்கண்டவாறு பாராட்டி எழுதியிருந்தார். அதாவது என்னை தென்னிலங்கை தீந்தமிழ்க்கவி என்று சொல்லியிருந்தார். எப்படியிருந்தாலென்ன என்னை தமிழன் என்று சொன்னவரை சரி.


பிறகு என் தங்கச்சிப்பிள்ள சொன்னாள் "எனக்கு வாய் மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் அறுவைசிகிச்சை நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே அண்ணா. அதனால் வடிவாக பேச முடியாது அண்ணா." என்றாள்.

"அட லூசு, நீ சுவிட்செர்லாந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது நான் ஸ்கைப்பில் உன்னை நலம் விசாரிக்க உன்னிடம் பேச முயற்சித்து நீ தூங்குவதை பார்த்தபிறகு உன்னை எழுப்ப முயற்சித்தவர்களிடம் பிள்ளையை எழுப்பாதீங்க, அவ நல்லா ஓய்வெடுக்கட்டும். யாரும் அவளை கேட்டாலும் அவ இப்ப இல்லை ன்னு சொல்லிடுங்க ன்னு சொன்னேன். இதெல்லாம் உறக்கத்திலிருந்த உனக்கெப்படி தெரியும்?" என்று நினைத்துக்கொண்டே "நீ சொல்லித்தான் எனக்கு தெரியுமா? எனக்கு தெரியும் ப்பா" என்றேன்.

பொதுவாக வடிவு அல்லது வடிவாக என்பதற்கு அழகு, அழகாக என்பது பொருள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அதிகமாக வடிவு அல்லது வடிவாக என்பதனை பயன்படுத்த மாட்டார்கள். அதற்குப்பதிலாக அழகு என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், யாழ்ப்பாணத் தமிழில் வடிவாக என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப் படுகிறது. அதாவது என் தங்கச்சிப்பிள்ள சொன்ன "வடிவாக பேச முடியாது" என்ற வாக்கியத்தில் வடிவாக என்பதற்கு பொறுமையாக, நிதானமாக அல்லது மிகத்தெளிவாக என்ற பொருள் வரும் என்பதனை புரிந்துகொண்டேன்.

என் தங்கச்சிப்பிள்ள பாமினியிடம் கேட்க வேண்டிய ஒரு சந்தேகம், நாட்டைப்பற்றி அவள் எழுதிய "என் காதல் நீ" என்று தொடங்கும் பாடலில். இசையமைப்பாளர் திரு. இரவிப்பிரியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இந்தப்பாடலை என்னுடைய அலைபேசியில் வைத்துக்கொண்டு எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பவன் நான். தங்கச்சி பாமினி எழுதியிருக்கிறாள் என்று என் அம்மாவை கேட்கச்சொன்னேன். இதில் "குளிருக்கும் வெயிலுக்கும் இடைப்பட்ட காலம் நீ" என்றால் இப்படிப்பட்ட தட்பவெட்ப நிலை கொண்ட நிலப்பரப்பு நிச்சயமாய் அது என் தாய்நாடான தமிழ்நாடு தான். இன்னொரு வரியில் "அடைக்கலம் தந்து அன்பான தாயும் நீ" என்ற இடத்தில் இந்தியாவாக இருக்குமோ என்பதே என் சந்தேகம்.

ஒரு பக்கம் அடைக்கலம் என்ற பெயரில் தொட்டிலை ஆட்டிவிட்டு இன்னொரு பக்கம் பிள்ளையை கிள்ளிவிட்ட ஈனத்தனமான இந்தியா வெளியிலிருந்து, வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு அமைதியாகத் தெரியும். ஆனால், உள்ளே என்னைப்போன்று தங்களின் பழம்பெருமை வாய்ந்த தேசிய இனத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கக்கூடியவர்களுக்குத்தான் தெரியும் எங்களுக்குள்ளே தமிழ்த்தேசிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. வெடித்துக் கொண்டிருக்கிறது என்று.

சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு குழுமத்திலிருந்து என்னிடம் கேட்டார் "இந்தியா தங்களுக்கு எதிரி நாடு என்றால் இந்தியா நடத்தும் இரயிலில் ஏன் பயணிக்கிறீர்கள்?" என்று.

உண்மையில் இந்தியா எனக்கு இலவசமாக இரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கவில்லை. நான் கட்டும் எல்லா வரிப்பணத்தையும் கப்பமாக வாங்கி ஏப்பம் விடுகிறது. இங்கேயே வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்போது தெரியும்.

என்னுடைய சிறுவயதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னிடம் என்னைச்சுற்றியுள்ளவர்கள் வெளிநாட்டுப் பயணம் பற்றி கேட்டபோது "என்னுடைய தாய்நாடான இந்தியாவை விட்டு போக மாட்டேன்" என்று சொன்னதுண்டு. உண்மைகளை உணர ஆரம்பித்தபின்பு எப்படி என்னால் என் தாய்நிலமான தமிழ்நாட்டை விட்டுப் போகமுடியும்?

இனிவரும் காலங்களில் வெளிநாடு போனால்தான் நல்லது என்ற நிலை வரும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு செல்வதற்கு முன்னால் என் தங்கச்சிப்பிள்ள பாமினியிடம் எனக்கிருந்த இக்கட்டான சூழலில் அவளிடம் கோபப்பட்டு விட்டேன். அதிகாலை அவள் வருத்தப்பட்டாள். அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை.

என் அம்மாவுக்கு தெரியும் நான் பசி பொறுக்கமாட்டேன் என்று. என்னுடைய வாழ்நாளில் யாருக்காகவும் நான் இப்படி இருந்ததில்லை.

"உங்களுக்கு இங்கே பெண் பார்க்கவா அண்ணா? இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் நாற்பது வயதிலா அண்ணா திருமணம் செய்யப் போகிறீர்கள்?" என்று என் தங்கச்சிப்பிள்ள பாமினி கேட்டதை நினைவில் வைத்து "என் தங்கச்சி உனக்கு திருமணம் நடைபெறாமல் எனக்கு எப்படிப்பா திருமணம் நடைபெறும்? இதை யோசித்தாயா?" என்று கேட்டிருந்தேன்.

என்னுடைய முகநூல் கணக்கில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டு சிரித்துக் கொண்டிருக்கிறேன். இதனைப் பார்த்து "பாமினியின் தங்கச்சி பேரென்ன?" என்று யாராவது கேட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.சில வாரங்களுக்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் என்று தங்கச்சி இட்டிருந்த பதிவை பார்த்த அன்று மகிழ்ச்சியில் எனக்கு உறக்கமில்லை. அடுத்தநாள் அலுவலகம் சென்று கணினித் திரையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தேன் மகிழ்ச்சியில். அந்த அளவுக்கு என்னுள்ளே எங்கும் நீக்கமற நிறைந்து கிடந்தாள் என் தங்கச்சி.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு அன்பர் என்னிடம் "இப்படி சிறுபிள்ளைத்தனமாக, குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறீர்களே?" என்று கேட்டார். நான் சொன்னேன் "சிறுபிள்ளைத்தனமும் குழந்தைத்தனமும் கடவுளின் குணங்கள். அவற்றை ஏன் நான் மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்?" என்று கேட்டேன்.

என் தங்கச்சிப்பிள்ள பாமினியைப் பற்றி வித்யாசாகர் அண்ணாவிடம் பேசும்போதெல்லாம் "அது நம்முடைய தங்கச்சி. நம்மை மறக்காது." என்று அன்பு பொங்க சொல்லுவார்.

நான் எதிர்பார்த்ததுபோலவே என் தங்கச்சி எதிர்காலத்தில் ஒரு குடும்பமாய், கணவர் குழந்தைகள் என தனது கலைப்பயணத்தை தொடரப்போகிறாள் என்ற மனமகிழ்வோடு உறங்கப் போகிறேன்.

ஆத்தா, அண்ணா உனக்கு எழுதிய வாழ்த்துக்கவிதையின் கையெழுத்துப் பிரதியை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்.

தொடர்ந்து நம்முடைய கள்ளங்கபடமில்லாத அன்பாலும் நம்முடைய தமிழாலும் இணைந்திருப்போம்......
.....
.....
.....
.....
.....
அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_4447.html

Thursday, May 1, 2014

ஜனவரி - மார்ச் ௨௦௧௪ (2014) அருவி காலாண்டிதழ் (ஹைக்கூ சிறப்பிதழ்) - ல் என்னுடைய ஹைக்கூ கவிதைகள்


ஜனவரி - மார்ச் ௨௦௧௪ (2014) அருவி காலாண்டிதழ் (ஹைக்கூ சிறப்பிதழ்) - ல் என்னுடைய ஹைக்கூ கவிதைகள் வெளிவந்துள்ளன. கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக தவறாமல் என்னுடைய ஹைக்கூ கவிதைகளை அனுப்பச்சொல்லி வெளியிடும் சீனிவாசன் ஐயாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.