Saturday, June 28, 2014

ஊர் நூலகம்

வழக்கம்போல் சோம்பல் முறித்து தூக்கத்திலிருந்து எழுந்தான் சுப்பையா. அவனுடைய அப்பா கருப்பன், அம்மா இராக்கு. இவர்கள் இருவருக்கும் ஒரே மகன் சுப்பையா. வீடென்று எதுவுமே இல்லை. குடிசையில் தான் வாழ்க்கை. விவசாயம் தான் இவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போடுகிறது. மணியை பார்த்தான். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

கருப்பன் வெளியிலிருந்து கத்திக்கொண்டிருப்பது அப்போது தான் இவனுக்குக் கேட்டது. ‘பெரிய்ய்ய பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. இவ்ளோ நேரமா காட்டுக்கத்தாக் கத்திக்கிட்டு இருக்கேன். துரை இப்பதான் எழுந்திருக்கிகளோ” என்றபடி...
“இதோ கெளம்பிட்டேன் ப்பா” என்றபடி பல்லைத் துலக்கியும் துலக்காமலும் தலை வாரியும் வாராமலும் சட்டையையும் கால்சட்டையையும் மாட்டியும் மாட்டாமலும் விழுந்தடித்துக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்து மிதிவண்டியை மிதிக்க எத்தனித்தான்.

“சாப்டாமப் போனா வயித்துக்கு என்னத்துக்கு ஆகுறது ராசா” என்றபடி பழைய சாதத்தைக் கட்டியெடுத்து கையிலேந்தியபடி வெளியே வந்தாள் இராக்கு. மகனின் தலையைக் கோதியபடி நெற்றியில் வாஞ்சையோடு முத்தமிட்டாள். சாதத்தைத் தந்துவிட்டு “பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா நேரத்துக்கு கெளம்பணும் ராசா. ஒழுங்காப் படிக்கணும் ராசா” என்றாள்.

“சரிம்மா” என்றபடி தன்தாய்க்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு மிதிவண்டியை அழுத்தியபடி சிட்டாய்ப் பறந்தான்.

மனைவியைப் பார்த்து “இப்டியே உன் மவனைக் கொஞ்சிக்கிட்டே இருந்தன்னா பிள்ளை சோம்பேறியா மாறிருவாண்டி புள்ள” என்றான் கருப்பன்.

“கண்ணுக்கு இலட்சணமா ஒரே ஒரு புள்ளைய பெத்து வளர்க்குறோம். புள்ள அம்பூட்டுத் தூரத்துல உள்ள பள்ளிக்கூடத்துல போய் படிக்கப் போவுது. சாயுங்காலம் வரும்வரை புள்ளையப் பிரிஞ்சு நான் எப்டி இருக்கப் போறேனோ?” என்றபடி குடிசைக்குள் போனாள் இராக்கு.

“நல்ல ஆத்தா, நல்ல புள்ள” என்று மனதிற்குள் மகிழ்ந்தவாறு முனகியபடி வயக்காட்டுக்குச் சென்றான்.

சுப்பையா சற்று காலதாமதமாகவே கல்லூரிக்குள் நுழைந்தான். மிதிவண்டியை நிறுத்திவிட்டு வேகமாக வகுப்பறையை நோக்கி ஓடினான். நல்லவேளை வகுப்பிற்கு ஆசிரியர் இன்னும் வரவில்லை. அவன் இருக்கையில் அமர்ந்தான்.

சுப்பையா பொதுவாகவே அமைதியான குணம் கொண்டவன். தன் குடும்பச் சூழலையும் தன் தாய்தந்தையர் படும் இன்னல்களையும் அவர்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தையும் நன்கு உணர்ந்தவன். படிப்பில் நல்ல மாணவனாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவனாகவும் விளங்கினான்.

பேராசிரியர் உள்ளே நுழைந்தார். அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பாடம் நடத்தத் துவங்கினார்.

அவனும் பாடத்தைக் கவனிக்கத் துவங்கினான்.

இவனுடைய அமைதியான சுவாபமும் படிப்பில் காட்டும் அக்கறையும் அந்த வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கு இவனோடு நட்போடு பழக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

தனக்கு வேண்டிய சந்தேகங்களையெல்லாம் சுப்பையாவிடமே கேட்டுத் தெளிந்தாள் வசந்தி.

அவனுடைய மென்மையான குணம் அவளுக்கு காதல் உணர்வைத் தூண்டியது. தன்னுடைய காதலைக் காலங்கடத்தாமல் உடனே அவனிடம் தெரியப்படுத்தினாள்.

சுப்பையா அவளின் காதலைப் புரிந்துகொண்டாலும் தன் குடும்பச்சூழல் கருதி அவளிடம் எதுவும் சொல்லாமல் நகர்ந்தான்.

கல்லூரி ஓய்வுநேரம் முழுவதையும் அவன் நூலகத்திலேயே செலவழித்தான். பல நல்ல நூல்களையும் எடுத்துப் படித்தான். நூல்கள் படிக்கும் ஆர்வம இவனைத் தொற்றிக் கொண்டது.

அவன் வசிப்பது ஒரு சிற்றூரில். நூலகம், மருத்துவம் தொடங்கி அனைத்திற்குமே பல மைல் கடந்து நடந்தே வரவேண்டிய சூழல். பேருந்தும் எப்போதாவதுதான்.

வசந்தி இவனைச் சுற்றிச் சுற்றி வருவதையும் இவன் கவனித்து மிகுந்த வேதனையடைந்தான். அவளை அழைத்துத் தன்னுடைய நிலையை உணர்த்தினான். “உன் காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் காதலிக்கும் சூழலில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு அவள் முகம்பார்த்தான். அவளின் முகம் மெல்ல மலரத் துவங்கியது.

மேலும் அவனே தொடர்ந்தான் “இங்க பாரு வசந்தி. எனக்குன்னு சில முக்கியமான கடமைகள் இருக்கு. நம்ம கல்லூரி நூலகத்துல இருக்கும் பல நூல்கள படிச்சபிறகு தான் என்னுடைய ஊரைப் பத்தியும் ஊர் மக்களைப் பத்தியும் கவனம் செலுத்தத் துவங்கியுருக்கேன். எங்க ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரணும். அதுக்கு முன்னாடி அறிவை வளர்க்கும் ஒரு நூலகத்தை என் ஊரில் நான் கட்டவேண்டும்.” என்று தன் பேச்சை நிறுத்தியபடி அவள் முகம் பார்த்தான். “உன்னைப் போன்றவனைக் காதலித்தது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா” என்றபடி அவன் தோள்மீது சாய்ந்தாள். “எங்கே வசந்தி தன்னைப் புரிந்துகொள்ளாமல்ப் போய்விடுவாளோ” என்று மனதிற்குள் பதறியபடி இருந்தவனை அவளின் வார்த்தைகள் அவனுக்குள் குதூகலிப்பை ஏற்படுத்தியது. அவனும் அவளை தன்மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர் சுப்பையாவும் வசந்தியும். இருந்தாலும் தன்னுடைய ஊரில் ஒரு நூலகம் கட்டவேண்டும் இன்னும் மருத்துவமனை, பேருந்துகள் என ஊரின், மக்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைப் பற்றிய சிந்தனை அவனை ஆட்டிப்படைத்தது.

தன்னுடைய மனநிலையை உடனே மனைவி வசந்தியிடம் பக்குவமாய் எடுத்துச் சொன்னான். அவளும் “உடனே ஊருக்குக் கிளம்புவோம்” என்றபடி இருவரும் அவனின் சிற்றூருக்குப் பயணமானர்.

நூலகம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மூலமாகவும் தன்னுடைய சொந்தச் செலவின்மூலமாகவும் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது.

அன்று திறப்பு விழா...

மாவட்ட ஆட்சியர் உட்பட மற்ற ஊர்ப்பெரியவர்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று சுப்பையாவும் வசந்தியும் நூலகத்தைத் திறந்து வைத்தனர்.

நூலகம் கம்பீரமாய் அவர்கள் அனைவரையும் வரவேற்றது.

அந்தக் கூட்டத்தினர் முன்னிலையில் பேச ஆரம்பித்தான் சுப்பையா “நம்முடைய ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசாங்க உதவியோடு முழுவீச்சோடும் செய்யவேண்டும். அதற்காக நான் என் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விவசாயம் பார்த்துக் கொண்டு நம்மூர் மக்களுக்கான உதவிகளைச் செய்யப் போகிறேன்” என்றபோது கருப்பனும் இராக்கும் ஊர் மக்களும் ஊரின் மேல் இவ்வளவு மரியாதையையும் பற்றியும் வைத்திருக்கும் அவனை ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் பார்த்தது.

அவனும் அவனுடைய மனைவி வசந்தியும் வேலையை இராஜினாமா செய்யக் கிளம்பினர்.

இவர்கள் நால்வரையும் எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது அவனின் குடிசை.

No comments: