Friday, June 27, 2014

மழையுதிர்காலம்

தலைமுடி உதிர்வதுபோல்
இலைகளை உதிர்த்துவிட்டு
மொட்டையாய் நின்ற மரம்
துளிர்த்துச் சிரிக்கிறது
மழைவரவால்...

குடையில்லா மனிதர்கள்
தொப்பலாய் நனைந்தபடி
ஓடுகின்றனர்
நிற்க இடந்தேடி...

வெயிலிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மழையிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மரங்கள்

பிரிவுத்துயர் தாங்காமல்
கண்களில் மழைவரும்போது
குளிர்காற்றால் கன்னம்வருடி
கைகுலுக்கிவிட்டுப் போகிறது
குளிர்தென்றல்

ஊரில் பலவருடங்களாய்
நின்ற பஞ்சாயத்து ஆலமரம்
ஏதோவொரு காரணத்தால்
தலையில்லா முண்டமாக்கப்பட
அதன் நம்பிக்கைக்குப் பரிசாய்
பெய்த மழையில்
பட்டமரம்
துளிர்த்துச்சிரிக்கிறது

ஒட்டிய வயிறுடன்
வானம்பார்த்து விதைத்த
விவசாயியின்
வயிற்றில் பால்வார்த்து
தலைகவிழ்த்துப்
பூமியைப் பார்த்து
ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறது
அந்த வானம்!!

இதழ்களில் தேன்வைத்து
வண்டுகளின் வரவுக்காக
காத்திருக்கின்றன
பூக்கள்

உடலெங்கும்
மழைத்துளி முத்துகளை
அணிந்தபடி
மணக்கோலம் பூண்டு நிற்கின்றன
மரங்கள்

சோகத்தின்சின்னமான
இலையுதிர்காலத்தை மாற்றி
துவங்கிவிட்டது
மழையுதிர்காலம்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1.  மகாகவி - 01-10-2012

No comments: