Tuesday, April 18, 2017

என் செல்லம்

ஆறு மாதங்களுக்கு என் மனைவிக்காக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய கவிதை. நேற்று எதார்த்தமாக எதையோ தேடும்போது இந்த கவிதை கிடைத்தது. தற்போது தட்டச்சு செய்தாகி விட்டது.

நீ எங்கள் வீட்டுத்தாரகை
என் நெஞ்சம் நிறைந்த தேவதை
பொங்கும் எங்கும் சந்தோசம்
புது உயிரால் கருவில் சங்கீதம்
என் உயிரில் கலந்த காதலிது
இது உனக்கும் உனக்கும் புரிகிறது
செல்லம் சொல்லிக் கொஞ்சுகிறேன்
என் உள்ளமெங்கும் உன்நினைவே
நீ இத்தனை நாளாய் காணவில்லை
என் திருமணம் தந்தது வானவில்லை
நிலவின் முதுகு இரகசியந்தான்
உன் அழகிய திருமுகம் அதிசயந்தான்
அழுதே கிடந்தேன் அன்றுவரை
இன்று ஆனந்தத்தில் அழுகிறேன்
குயிலின் குரலும் இனிமைதான்
உன் குரலும் தந்தது குயிலைத்தான்
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஆயுள் நீண்டது பொன்மயிலே
நம் முன்னோர் செய்த புண்ணியமே
நம் பிள்ளை வயிற்றில் வளர்கிறது
நம் பெற்றோர் செய்த வேண்டுதலால்
நாம் இணைந்தே வாழ்கிறோம் நிம்மதியாய்
இன்றுமுதல் எனக்கு இரு பிள்ளை
என்றுமே எனக்கு நீ முதற்பிள்ளை
நினைப்பது எல்லாம் நடக்கிறது
என் நெஞ்சம் மகிழ்ச்சியில் திளைக்கிறது

Sunday, April 2, 2017

அறிமுக எழுத்தாளர்கள் கவனத்திற்கு...

2014ல் கடைசியாக கவிதை எழுதியது. அதன்பிறகு தானாக நின்று போனது. ஏனெனில், நான் வெளியிடட இரு நூல்களுக்கும் உரிமை ஆசிரியருக்கு என்று இரு நூல்களின் இரண்டாம் பக்கத்தில் அச்சிட்டு அதற்குரிய பணத்தையும் வாங்கிக் கொண்டு நூல்கள் வெளியிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து முறைகேடான முறையில் அரசு அதிகாரிகளை கையூட்டு பெறவைத்து நூலாணையை பெற்று என் பெயருக்கு களங்கம் விளைவித்து என்னுடைய அந்த இரு நூல்களையும் புதிதாக "முதல் பதிப்பு" என அச்சிட்டு அவற்றை விற்று காசு பார்ப்பவை தான் பெரும்பாலான பதிப்பகங்கள்.

கடந்த 2014 தொடங்கி மூன்றாண்டுகளில் நிறைய அலைபேசி அழைப்புகள். அவற்றில் "நான் புதிதாக கவிதைநூல் வெளியிடவிருக்கிறேன். தங்கள் இருநூல்கள் வெளியிட்ட அந்த பதிப்பகம் மூலம் வெளியிடலாமா? அவர்கள் தான் நூலணையின் மூலம் நமது நூல்களை அரசு நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்கிறார்களாமே" என்று கேட்டனர். "ஏமார்ந்து விடாதீர்கள். உங்கள் நூல்களை யார் சந்தைப் படுத்துவதற்கு உதவுகின்றனரோ, யார் உங்களை ஏமாற்றாமல் செய்து தருகின்றனரோ, யார் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாடடார்களோ அவர்களிடம் போய் அச்சிட்டுக் கொள்ளுங்கள். இதற்கு பேசாமல் நீங்களே ஒரு பதிப்பகம் தொடங்கி அச்சிட்டுக் கொள்ளலாம்." என்றே கேட்பவர்களிடமெல்லாம் சொன்னேன்.
2014ல் எனக்கு துரோகம் செய்த அந்த பதிப்பக உரிமையாளனை மின்னஞ்சல் ஊடாக பத்து பேர் முன்னிலையில் தொடர்புகொண்டு நியாயம் கேட்டேன். "நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது." என்று என்னை மட்டந்தட்டி தன்னை பெருமை அடித்துக் கொண்டான் அந்த பதிப்பக உரிமையாளன். அந்த பத்துப் பேரில் ஒருவன் "எல்லா பதிப்பகங்களும் இப்படித்தான். எல்லோருமே இப்படித்தான்." என்று சொன்ன, சாமி வணக்கமுங்க, அரைகுடத்தின் நீரலைகள் என்றெல்லாம் எழுதிய ஒருவனும் கூட அப்படித்தான் என்று அதன்பிறகு தான் புரிந்துகொண்டேன். இந்த துரோகத்தையும் துரோகிகளையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் என் மனதிற்கு மூன்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது போல.

2014ல் அருவி காலாண்டிதழின் ஆசிரியர் ஐயா சீனிவாசன் அவர்கள் ஒருமுறை அலைபேசி ஊடாக "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் பாடத்திட்டத்தில் வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஹைக்கூ கவிஞர்களில் நீங்களும் ஒருவர்." என்று சொன்னார். 2014ல் "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" என்ற என்னுடைய நூலிற்கு ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களால் விருது கிடைத்ததற்கு பிறகு சில தினங்கள் கழித்து பெங்களூருவில் இருந்த எனக்கு அலைபேசி ஊடாக மறைந்த ஐயா எம். எஸ். தியாகராஜன் "தங்கள் கவிதையை நான் தான் தேர்வு செயதேன். உங்களை நான் நேரில் நான் சந்தித்ததில்லை. தங்களின் கவிதைகளை நான் உங்கள் நூலில்தான் படித்தேன். வடிவமைப்பிற்கான விருது அல்ல. உங்கள் கவிதைகளுக்கான விருது. தொடர்ந்து எழுதுங்கள். நான் சென்னையில் ஆலந்தூர் அருகில் தான் வசிக்கிறேன். வாய்ப்பிருந்தால் வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள்." என்று சொன்னார். "வடிவமைப்பை விட கவிதைகளுக்கான விருது" என்ற வார்த்தைகளை கேட்டபோதுதான் அந்த பதிப்பக உரிமையாளனின் "நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது." என்ற பிதற்றல் அடிக்கடி என் நினைவிற்கு வந்தது.
நானும் ஒரு பதிப்பகம் துவங்கப் போகிறேன். அதன் பெயர் "விஷ்ணு பதிப்பகம்". நிறைய குடும்ப பொறுப்புகளை தாங்கி மூன்றாண்டுகள் கடந்துபோனது.