Showing posts with label கட்டுரைகள் (பாகம் - 1). Show all posts
Showing posts with label கட்டுரைகள் (பாகம் - 1). Show all posts

Thursday, April 24, 2014

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை

தொகுப்பும் ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

இந்தியத் திரைப்படத் துறையில் அழகிய கலை உணர்வை வெளிப்படுத்துவதாகவும், தொழில்நுட்பம் மிக்கதாகவும், அறிவை போதிக்கக் கூடியதாகவும், இந்தியப் பண்பாட்டின் புகழை உயர்த்தக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருது வழங்கப்படுகிறது.

சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர் என திரைப்படத் துறையின் வெவ்வேறு துறைகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தங்கத் தாமரை, வெள்ளித்தாமரை, வெண்கலத் தாமரை விருதுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாகக் கருதப்படுகிறது.

61-வது தேசிய திரைப்பட விருதுகள்:

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிக தேசிய விருதுகளை அள்ளியவை, தென் இந்திய மொழிப் படங்கள்தான். குறிப்பாக தமிழ். இந்த ஆண்டு மூன்று தமிழ்ப் படங்கள், ஐந்து விருதுகளைக் குவித்துள்ளன. இந்தப் படங்கள் தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டவை என்பது ஒரு கூடுதல் பெருமை.

சிறந்த தமிழ் திரைப்படமாக ராம் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகியுள்ளது. இப்படம் ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு இப்படத்தில் நடித்த சாதனா தேர்வாகியுள்ளார். சிறந்த பாடலாசிரியராக இப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ என்ற பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமார் தேர்வாகியுள்ளார்.

சிறந்த கதையமைப்பிற்காக ‘தலைமுறைகள்’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த எடிட்டிங்கிற்காக வல்லினம் படத்திற்கு வி.ஜே.சபு ஜோசப் தேர்வாகியுள்ளார்.

விருதுப் பட்டியல்:

* சிறந்த திரைப்படம்: ஷிப் ஆஃப் தீசிஸ் (Ship of Theseus) (ஆங்கிலம் - இந்தி)

* சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஃபாண்ட்ரி (Fandry) (மராத்தி)

* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பாக் மில்கா பாக்

* தேசிய ஒறுமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்

* சமூகப் பிரச்சினைகளைக் காட்டிய சிறந்த படம்: தூஹியா தர்மா கோச்சா (Tuhya Dharma Koncha) (மராத்தி)

* சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : பெரறியாதவர் (Perariyathavar) (மலையாளம்)

* சிறந்த குழந்தைகள் படம் - காபல் (Kaphal) (இந்தி)

* சிறந்த இயக்குநர் - ஹன்ஷல் மேத்தா (படம்: ஷாஹித்) (இந்தி)

* சிறந்த நடிகர் - ராஜ்குமார் (ஷாஹித் - இந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் - மலையாளம்)

* சிறந்த நடிகை - கீதாஞ்சலி தாபா (படம்: லயர்ஸ் டைஸ் - Liar's Dice - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து - மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசஸ்- ஆங்கிலம், இந்தி)

* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி - மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் - தமிழ்)

* சிறந்த பின்னணி பாடகர்: ரூபன்கர் (படம் - ஜாதிஸ்வர் - பெங்காலி)

* சிறந்த பின்னணி பாடகி: பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா - மராத்தி)சிறந்த ஒளிப்பதிவு - ராஜீவ் ரவி (Liar's Dice - இந்தி)

* சிறந்த திரைக்கதை (அசல்) - ஷேசாத்திரி (டிசம்பர் 1 - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (தழுவல்) - பஞ்சாக்‌ஷரி (பராக்ருதி - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (வசனம்) - சுமித்ரா பாவே (அஸ்து - மராத்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Location Sound Recordist): நிகர் ரஞ்சன் சமல் (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Sound Design) - பிஸ்வாதீப் சட்டர்ஜி (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Re-recordist of the final mixed track) - யுவராஜ் - ஸ்வப்னம் (மலையாளம்)

* சிறந்த எடிட்டிங் - சாபு ஜோசப் (வல்லினம்)

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆஷிம் அலுவாலியா, தப்ஷீர் ஸுத்சி, பரிசித் பரால்கர் (மிஸ் லவ்லி - இந்தி)

* சிறந்த ஆடை வடிவமைப்பு - சபர்னி தாஸ் (ஜாதிஷ்வர் (Jaatishwar) - பெங்காலி)

* சிறந்த ஒப்பனை கலைஞர் - விக்ரம் கெய்க்வாட் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பாடல்கள்) - கபிர் சுமன் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பின்னணி இசை) - சாந்தனு மோஹித்ரா (நா பங்காரு தாலி - தெலுங்கு)

* சிறந்த பாடலாசியர்: நா.முத்துகுமார் (ஆனந்த யாழை - தங்கமீன்கள்)

* சிறப்பு நடுவர் விருது: எல்லோ (மராத்தி) மற்றும் மிஸ் லவ்லி (இந்தி)

* சிறந்த கிராபிக்ஸ்: இன்டர்மெஸ்ஸோ ஸ்டூடியோ, ஏலியன் சென்ஸ் ஃபிலிம் லிட் (ஜல் - இந்தி)

* சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் - இந்தி)

* சிறந்த அசாமி மொழி படம்: அஜேயோ (Ajeyo)

* சிறந்த வங்கமொழி திரைப்படம் - பாகிதா பியாக்திகடோ (Bakita Byaktigato)

* சிறந்த இந்தி திரைப்படம்: ஜாலி எல்.எல்.பி

* சிறந்த கன்னடத் திரைப்படம்: டிசம்பர் 1

* சிறந்த கொங்கானி திரைப்படம்: பாகா பீச்

* சிறந்த மலையாள திரைப்படம்: நார்த் 24 காதம்

* சிறந்த மராத்தி திரைப்படம் - அஞ்சா திவாஜ் மாஜ்ஹா (Aajcha Diwas Majha)

* சிறந்த தமிழ் திரைப்படம் - தங்க மீன்கள்

* சிறந்த தெலுங்கு திரைப்படம் - நா பங்காரு தாலி (Na Bangaaru Talli)

* சிறந்த ஆங்கில திரைப்படம் - தி காஃபின் மேக்கர் (The coffin Maker)

தங்க மீன்கள் குறித்து:

அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500 என்று மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான். “விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா?” என்று கேலி பேசுகிறாள் சகோதரி .

குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .

தனியார் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைக்கு ஃபீஸ் கட்ட முடியாத ஒரு தந்தைக்கும் மற்ற குழந்தைகள் போலல்லாமல் சற்று கற்றல் குறைபாடுடைய மகளுக்கும் இடையிலான அன்பையும், கூடவே சீர்கெட்டுப்போயிருக்கும் கல்வி சூழலையும் பற்றி பேசுகிறது தங்க மீன்கள்.

சிறந்த மாநில மொழிப் படம் என்ற பரிசுபெற்றுள்ள இந்தப் படத்துக்கு ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். உடன் பதக்கமும் சான்றிதழும் தரப்படும்.

நா. முத்துக்குமார்:

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள். "தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன். மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”

தலைமுறைகள்:

அமரர் பாலு மகேந்திராவின் கடைசிப் படம். தமிழையும் இந்தத் தாத்தாவையும் மறந்துடாதப்பா... என்று தழுதழுத்தபடி பேரனிடம் சொல்லும் பாலு மகேந்திரா குரல் இன்னும் காதுகளை விட்டு நீங்கவில்லை. சின்ன பட்ஜெட்டில், ஆனால் பெரிய விஷயத்தை எளிமையாய்ச் சொன்ன படம்தமிழ் தெரியாத தன் பேரனுக்கு தாத்தா எளிமையாக தமிழ் கற்றுத் தந்ததும், பதிலுக்கு தாத்தாவுக்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருவதுமான காட்சிகள் இந்தத் தலைமுறை அவசியம் பார்க்க வேண்டியவை. அடுத்த தலைமுறையில் எந்த தமிழ்க் குழந்தையும் தமிழ் தெரியாது என்று சொல்லும் அவலமே இருக்கக் கூடாது என்ற பாலு மகேந்திராவின் ஆதங்கத்துக்கு வெள்ளி ரஜத் கமல் வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு!



வல்லினம்:

கூடைப் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் வல்லினம். நகுல் - மிருதுளா நடித்த இந்தப் படத்தில் முதல் பாதியைவிட, பின் பாதியில் எடிட்டருக்கு சவால் இருந்தது. அதற்காகவே சிறந்த எடிட்டருக்கான விருது சாபு ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகளை வாங்கிய நம்முடைய தமிழ் திரைப்படக் கலைஞர்களை நாமும் மனதார வாழ்த்துவோம்.

Tuesday, April 22, 2014

ஆனந்த யாழை மீட்டியவன் கைகளில் தேசியவிருது

தொகுப்பும் ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்




எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. மூன்றரை அல்லது நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்து ஒவ்வொரு நிலையமாக மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு ஈழதேசத்து தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ஒரு பாடலாசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தார். தன்னுடைய பாடல்கள் தொடர்பான விழாவின்போது தன்னுடைய தந்தை ஆனந்தத்தில் கண்ணீர் விட்டதாக நெகிழ்ச்சியோடு அந்த பாடலாசிரியர் பகிர்ந்துகொண்டார். (நிகழ்ச்சியை பாதியிலிருந்தே கவனிக்க முடிந்ததால் இதுகுறித்து இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக கிரீடம் திரைப்படத்தில் இவர் எழுதிய “கனவெல்லாம் பலிக்குதே” என்ற பாடலை தொடர்புபடுத்தியே இருக்கும்.) அதுமட்டுமின்றி “வளர்ந்துவரும் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு படத்தின் எல்லா பாடல்களையும் எழுத வாய்ப்பு தரவேண்டும். அதுவே அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” எனவும் பதிவுசெய்தார்.

அந்த பாடலாசிரியரும் கவிஞருமான திரு. நா. முத்துக்குமார், ஆனந்த யாழை மீட்டி ௨௦௧௪ (2014) ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியருக்கான இந்திய தேசிய விருதை (‘தங்க மீன்கள்’ திரைப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலை இயற்றியதன்மூலம்) வாங்க தேர்வாகியிருக்கிறார். அனைத்து தமிழர்களும் அவரை உச்சிமுகர வேண்டிய தருணமிது.

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள். "தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன். மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”

ஒரு பிரபலமான வாரஇதழுக்கு அவர் தன்னைப்பற்றி கூறியவை

“1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...

உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!

பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.

காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.

இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!”

நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். 1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் திகதி அவரது தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் பிறந்தார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜு.


ஆதவன் நெல்லுபடத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். தன் பெயரையே முதல் வார்த்தையாகக் கொண்ட பாடல்மூலம் தன் வாசல் திறந்து கொண்டவர் நா. முத்துக்குமார்.  திரைப்படப் பாடல்களைக் கொண்டே முனைவர் பட்டமும் பெற்றிருப்பதும் இவருக்குரிய சிறப்பாகும்.

முதலில் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்கிற ஆசையில் இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருந்தபின் பாடல்களின் பக்கம் அவர் திரும்பி இருக்கிறார் என்பதை விட திருப்பப்பட்டார் என்பது பொருந்தும். 

அவரின் எழுத்துக்களை வாசித்த நண்பர்களின் மூலமாகவே அவருடைய திறமை வெளி கொணரப்பட்டிருக்கிறது. அவரது நண்பரான இயக்குனர் சீமானின் "வீர நடை" என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் பாடல் வரிகளை எழுதத்தொடங்கினார். தொடர்ந்து திரையிசையில் தன் முத்திரையைப் பதித்து வருகிற இவர் 2000 க்கு மேல் பாடல் எழுதியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும் வாய்ப்பும் பெருமையும் முத்துக்குமார் பெற்றுள்ளார். 2007 இல் அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனமும் எழுதியுள்ளார்.

இவரது தந்தை ஒரு தமிழாசிரியர் தந்தையின் லட்சக்கணக்கான சேமிப்பான புத்தகங்களுக்கு இடையே பயணமான சிறுவயது, அவரை ஆறுவயதில் இருக்கையிலேயே கவிதை எழுதத் தூண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாவல் மற்றும் பல கவிதை தொகுப்புக்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். தற்போதும் இயக்குனராக கதை தயார்படுத்தலில் தீவிரமாகவே உள்ளார்.

வீரநடையில் "முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவை புடிச்சிருக்கு.." என்ற அந்தத் திரைப்படப் பாடல், இதுவரை வந்த அவரது மற்ற பாடல்களை விட அதிக உவமைகளை கொண்டிருப்பதாக இலக்கியவாதிகள் கூறுகிறார்கள்.  கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல், வரிகளுக்காக தவமிருக்காமல், வேகமாக  வார்த்தைகளை இறக்குமதி செய்து பத்தே நிமிடங்களில் பாடலை எழுதி முடிக்கும் திறமைகொண்டவர் என முத்துக்குமார் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  ஏ.ஆர் ரகுமானிலிருந்து இளைஞர் ஜி.வி ப்ரகாஷ் வரை அனைவர் இசையிலும் எழுதி இருக்கும் இவர் பல இசை அமைப்பாளரின் பாராட்டுக்களை பெற்றவர்.

அவரின் காதல் கவிதைகளும், பாடல்களும் இன்றைய இளைஞர்களின் காதலுக்கு உதவியாக இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. காரணம் அவர் கையாளும், அவரின் எளிய வரிகளில் காதலை எல்லோராலும் உணரக்கூடியதாக இருக்கிறது. பாடல்களில் கவிதை இருக்கும், கவிதைகளில் எளிமையான வார்த்தைகள், வரிகளில் கதை, பளிச்சென முகம் காட்டும் கருத்துகள். இவரின் பாடல் வெற்றிக்கு காரணமாகும்.

Wednesday, January 1, 2014

(எழுத்தேணி அறக்கட்டளை) குழந்தைகளின் கல்விக்கு என்னுடைய நூல்கள் விற்ற தொகை (என்னால் முடிந்தது)

அனைவருக்கும் வணக்கம்,

சிலமாதங்களுக்கு முன்பு நான் எழுதிய 'பேருந்துகளில் பகல்கொள்ளை - பாகம் ௧' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/07/blog-post_5615.html என்ற பதிவை படித்து விட்டு எழுத்தேணி அறக்கட்டளையின் உரிமையாளரான திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் (சிங்கப்பூரில் வேலை, சொந்த ஊர் தஞ்சாவூர்) என்னோடு அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை இந்தக் கட்டுரை பிரதிபலிப்பதாகக் கூறியிருந்தார்.

அப்போது அவருடைய http://ezhutheni.org/ என்ற இணையத்திற்கு சென்று எழுத்தேணி அறக்கட்டளையைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். குழந்தைகளின் கல்வி தொடர்பாக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.

நான் ௨௦௦௫ ல் கவிதை எழுத ஆரம்பித்த போதே பின்னாளில் கவிதைகளின் மூலம் ஏதாவது சம்பாதித்தால் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது. 

காலப்போக்கில் அந்த எண்ணம் ஆழமாக வேரூன்றி ஆதரவில்லாத (அநாதை என்ற வார்த்தையை தவிர்த்து ஆதரவில்லாத என்ற வார்த்தையையே பயன்படுத்தலாம் என்பதே என்னுடைய கருத்து.) குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று என்னுடைய எண்ணம் வளர்ந்தது. 

ஏனெனில், குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத உள்ளங்களில்தான் கடவுள் வாழ்கிறான் என்பது என்னுடைய ஆழமான எண்ணம்.

காலப்போக்கில் தத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து ஆதரவில்லாத குழந்தைகளுக்காக ஒரு இல்லம் போன்று (பொருளாதார நிலையில் நான் பிற்காலத்தில் உயர்ந்தபின்) கட்ட வேண்டும் என்ற எண்ணமாக உருமாறி ஆழமாக வேரூன்றி நின்றது. இதுபோன்று யாரும் ஆதரவில்லாத குழந்தைகளுக்காக இல்லம் போன்று யாரேனும் செயல்படுத்தி வருகிறார்களா? அவர்கள் எவ்விதம் ஆரம்ப கட்டத்திலிருந்து செயல்படுத்துகிறார்கள் என்றெல்லாம் யோசித்து அதற்கேற்றார்போல் ஊடகங்களில், இணையத்தில் தேட ஆரம்பித்ததுண்டு. 

நண்பர் திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் அவர்களின் எழுத்தேணி அறக்கட்டளை பற்றி இணையத்தில் பார்த்தபின் இனி இவரிடமே எனக்கான ஐயங்களை கேட்கலாம் என்ற மகிழ்வான எண்ணம் உதயமானது. 

அப்போதே இந்த அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பணஉதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அந்த எண்ணம் நிறைவேறியிருக்கிறது. 

http://ezhutheni.org/contact.html என்ற இணையப்பக்கத்தில் உள்ள அறக்கட்டளையின் வங்கிக்கணக்கு என்னை என்னுடைய SBI இணைய வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளேன். இரண்டும் வேறு வேறு வங்கிக் கணக்கு எண் என்பதாலும் இன்று விடுமுறை என்பதாலும் நாளைதான் பணம் அனுப்ப முடியும். நாளை அனுப்பினால் நாளை மறுநாள் தான் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குஎண்ணில் பணம் சென்று சேரும். 

கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் தங்கியிருந்தேன். அப்போது என்னுடைய 'அழகு ராட்சசி' மற்றும் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' கவிதை நூல்களுக்கான இருப்பு சரிபார்க்க புத்தகக் கடைகளுக்கு சென்று திரும்பி ஓரளவுக்கு சேர்ந்த கணிசமான தொகையை நாளை இணைய வங்கி வழியே எழுத்தேணி அறக்கட்டளை வழியே அனுப்பப் போகிறேன். 

உதவி செய்யும் நண்பர்கள் எழுத்தேணி அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுங்கள்.

புத்தகக் கடைக்காரர்களுடனான என்னுடைய அனுபவம் 
===================================================

கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் புத்தகக் கடைக்காரர்களிடம் இருப்பு சரிபார்க்க, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடை சென்றிருந்த போது நான் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த அழகு ராட்சசி கவிதைநூலின் பிரதிகள் இருப்பு சரிபார்த்து விட்டு விற்றதற்கான தொகையை பெற்றுக் கொண்டேன். 

அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடையில் முதன்முறையாக என்னுடைய இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலை விற்பனைக்கு வைத்துள்ளேன். 

(நான் சென்னையை விட்டு பெங்களூரு வந்துவிட்டதாலும் இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூல் மிகக்குறைந்த பிரதிகளே வெளியிட்டதாலும் 40 விழுக்காடு வரை, அறிமுக எழுத்தாளரின் நூல் என்பதால் சில இடங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேலும் தங்களுக்கான பங்குத்தொகை அல்லது கழிவாக எதிர்பார்க்கின்றனர் என்பதாலும் பரவலாக எல்லா இடங்களிலும் அழகு ராட்சசி கவிதைநூல் போல் விற்பனைக்கு வைக்க முடியவில்லை.)

ஆவடி இரயில்நிலையம் சென்றிருந்த போது, அங்குள்ள கடைக்காரரிடம் இருப்பு சரிபார்த்தேன். அவரே சொன்னார். 'இந்தமுறை சென்னை புத்தத் திருவிழாவிற்கு நம்முடைய கடை சார்பாக அங்கு கடை வைக்கப் போகின்றோம். உங்கள் நூல்களும் இடம்பெறப் போகின்றன. புத்தகத் திருவிழா அராம்பிக்கும் தருவாயில் அலைபேசி ஊடாக நானே அழைத்து தகவல் தருகிறேன். நான் மறந்துவிட்டாலும் நீங்கள் அழையுங்கள்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பரங்கிமலை இரயில்நிலையம் அருகில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றிருந்தேன். இருப்பு சரிபார்க்கச் சொன்னேன். (ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது பணமில்லை, பிறகு வாருங்கள் என்றே இரண்டுமுறை இழுத்தடித்தார்.) மீண்டும் மூன்றுமுறை இழுத்தடித்தார். மூன்றாம் நாள் சென்றேன். 'நான் தற்போது வேறு ஊரில் தங்கியிருக்கிறேன். இன்று மாலை ஊருக்கு செல்கிறேன். ஏன் என்னை அலைய விடுகிறீர்கள்? நீங்கள் தராவிட்டால் நான் வேறுவிதமாக வாங்க வேண்டியிருக்க வேண்டும்.' என்றே கொஞ்சம் மிரட்டினேன்.

உடனே கோபப்பட்டவராய் விற்ற பிரதிகளுக்கான தொகையை என் கைகளில் திணித்துவிட்டு மீதமுள்ள இரண்டு பிரதிகளை கொண்டுவந்தார். 'இந்த இரண்டு பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தொகையை தரலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்கள் தவறாக நினைத்துவிட்டார்கள்.' என்றார்.

'இதனை முதலிலேயே தெளிவாக சொல்லியிருந்தால் நான் இத்தனைமுறை நடந்து நடந்து அலைந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே. ஆனால், பணமில்லை என்று ஏன் நீங்கள் சொன்னீர்கள்? இந்தத் தொகை உங்களிடமே இருக்கட்டும். இரண்டு பிரதிகளும் உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் சொன்னதுபோலவே எல்லா பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தாருங்கள்' என்றேன்.

இருவரும் மாறிமாறி சமாதானம் ஆனோம்.

'இல்லை. கொடுத்த தொகை உங்களிடமே இருக்கட்டும். இந்தமுறை சென்னை புத்தகத் திருவிழாவில் நம்முடைய கடையும் இடம்பெறும். உங்களுடைய நூல்களும் இடம்பெறும். இன்னும் சில பிரதிகள் தாருங்கள்.' என்றார்.

'இப்போது என்னிடம் பிரதிகள் இல்லை. புத்தகத் திருவிழாவில் கடை எண்ணை அப்போது சொல்லுங்கள். அப்போது பிரதிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.' என்றேன். அவரிடம் நன்றி கூறி விடைபெற்றேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக (பலநூல்கள் எழுதிக்குவித்த) சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் மு. கோபி சரபோஜி என்னோடு அலைபேசி ஊடாக பேசினார். 'உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆயிரம் ஹைக்கூ, சென்ரியு எழுதிக் குவித்த நண்பர் கவியருவி ம. இரமேஷ் சில நாட்களுக்கு முன்பு (நான் கேட்பதற்கு முன்பே) 'தங்களுக்கு என்னுடைய ஹைக்கூ மற்றும் சென்ரியு நூல்களை அனுப்ப வேண்டும். பரமக்குடி முகவரிக்கே அனுப்பி விடவா? உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் உதவும் மனப்பான்மையை நானும் கடைபிடிக்க ஆரம்பிக்கிறேன்.' என்றார்.

'பரமக்குடி முகவரிக்கே அனுப்பி வையுங்கள். வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். இணையம் ஊடாக அனுப்பி வைக்கிறேன்.' என்றேன்.

'வங்கி கணக்கு எண்ணை பிறகு அனுப்புகிறேன். நூல்களை உடனே அஞ்சல் செய்கிறேன்.' என்றார்.

மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

Sunday, December 29, 2013

தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி'





என் அன்புத்தங்கையும் ஈழத்தமிழச்சியுமான கவிக்குயில் எஸ்விஆர் பாமினி சமீபத்தில் ஒரு பாடல் எழுதிய திரைப்படம் 'சித்திரைவீதி'.




வித்யாசாகர் அண்ணாவின் மகள் வித்யா பொற்குழலிக்காக அவளின் youtube பக்கத்தில் இருந்த காணொளி http://www.youtube.com/watch?v=HR9M5oYFF-U

௨௦௧௨ ஆம் ஆண்டு தங்கை எழுதிய ஒரு பாடலொன்று முகநூலில் காணொளியாக பகிர்ந்துகொள்ளப்பட்டது. நான் கேட்க, பார்க்க கிடைத்தது.

அந்த பாடல் இதுதான்.

சூழுகின்ற பகையை வென்றே 
ஈழம் எங்கள் கையில் வந்தது தெரிகின்றதே...




இந்த ஒரு பாடல் அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. முகநூலில் நண்பர்களானோம்.

எமது தாய்நிலமான தமிழீழத்தின் மீதும் என் தாய்த்தமிழின்மீதும் கொண்ட தாளாத காதலால் தான் இந்த இளம்வயதிலேயே அவள் ஈழக்குயில், கவிக்குயில், கவிதாயினி போன்ற பட்டங்களை பெறமுடிந்திருக்கிறது. நம் தாய்த்தமிழை எவ்வளவுதூரம் ஆழமாய் நேசித்து உயர்த்துகிறோமோ அதே அளவுக்கு தமிழ்த்தாயும் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் வைப்பாள் என்பதற்கு தங்கை பாமினியே சாட்சி என்பதை இன்று நான் முன்பைவிட ஆழமாக தெள்ளத்தெளிவாக உணர்கிறேன்.

௨௦௧௨ நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இருக்கலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு ௧௧ மணி இருக்கும். சுவிட்செர்லாந்திலிருந்து தங்கை பேசினாள்.

'நான் பாமினி கதைக்கிறன் அண்ணா. நலமா?' என்றாள்.

'நான் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க?' என்றேன்.

'நலம் அண்ணா. இந்த நேரத்தில் அங்கு என்ன நேரம் என்பதை நான் யோசிக்கவில்லை. இப்போது பேசலாமா என்று நான் யோசிக்கவில்லை. (அவள் அப்போது பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்ததால்) என் குரல் எப்படி அண்ணா இருக்கிறது?' என்றாள்.

'நல்லா இருக்கு. சின்னபிள்ளை குரல் மாதிரி இருக்கிறது.' என்றேன்.

'அப்படியா? மகிழ்ச்சி அண்ணா' என்றாள்.

அப்போதைய என்னுடைய ஒருசில பதிவுகளை குறித்து பாராட்டி பேசினாள். 

'இந்த இளம்வயதிலேயே பாடல்கள் எழுதுகிறீர்கள்.' என்றேன்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. எனக்குத்தெரிந்த தமிழில் எழுதுகிறேன்.' என்றாள். 

சிலநாட்கள் கழித்தபிறகு வித்யாசாகர் அண்ணா என்னிடம் பேசும்போது தங்கை பாமினி என்னிடம் அலைபேசி ஊடாக பேசியதை தெரிவித்தேன்.

'அவள் நல்ல தங்கையாயிற்றே. சிலமுறை அவள் என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள் என்று கேட்டு விளையாடுவாள்.' என்றார்.

சிலநாட்கள் கழித்தபிறகு அண்ணா சொன்னதுபோலவே என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு 'யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள்' என்று கேட்டு விளையாடினாள். என்னவென்று கேட்பதற்குள் இரண்டுமுறையும் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இதன்பிறகு மூன்று மாதங்களாக அலைபேசி ஊடாக அவளின் பணிநிமித்தம் காரணமாக அவள் என்னிடம் பேசமுடியாத சூழல்.

முகநூலில் அவளிடம் 'நீ பேசாததால் எனக்கு மனவருத்தம்.' என்பது போன்ற கருத்தொத்த ஒரு தகவலை அனுப்பியிருந்தேன்.

மொட்டைமாடியில் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருந்தேன். தங்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. 

குரல் தழுதழுக்க 'நான் ஜெர்மனியில நிக்கறன் அண்ணா. இப்போது தான் உங்கள் தகவலை அலைபேசி ஊடாக முகநூலில் பார்த்தேன். உங்கள் தங்கைதானே அண்ணா, மன்னித்துவிடுங்கள் அண்ணா. இனிமேல் நான் உங்களிடம் அடிக்கடி பேசுகிறேன். வருத்தப்படாதீர்கள் அண்ணா.' என்றாள்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லப்பா. நீ வருத்தப்படாதே.' என்றேன்.

அவள் பேசி முடித்ததும் மனம் அதிகமாய் வலித்தது. அவள் பேசும்போது அவள் குரலில் ஒருவித பதற்றம், தழுதழுப்பு இவற்றை என்னால் உணர முடிந்தது. அவள் அழுதிருக்கிறாள் என்பதை என்னால் உணர்ந்தபோது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஒருபுறம் அவளை நான் காயப்படுத்தி விட்டேனே என்று அன்றைய பொழுது நான் அழுதேன். மற்றொருபுறம் எனக்காக இன்னுமொரு அன்பான சொந்தம் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் பெரிதும் நேசிக்கும் என் தாய்மொழி தமிழுக்கு மறுபுறம் மகிழ்ச்சியோடு நன்றி சொன்னேன்.

கண்களை மூடி உறங்கிப் பார்த்தேன். உறக்கம் வரவில்லை. அப்படியே விடிந்துவிட்டது.

இவள் என் தாய்த்தமிழின் மீதும் எமது தாய்நிலமான தமிழீழத்தின்மீதும் கொண்ட காதலை இந்த ஒரு பாடலே சொல்லிவிடும். இந்த அன்பான என் செல்லக்குழந்தையின் மனதில் உள்ள தேடலை, வலியை இந்த ஒரு பாடலே உணர்த்திவிடும். 

என்காதல் நீ 
என் வாழ்வும் தாழ்வும் நீ.
என் தேடல் நீ 
என் உடலும் உயிரும் நீ.


அதன்பிறகு ௨௦௧௩ ஜூன் மாதம் நான் பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்த பதினைந்து அல்லது இருபது நாட்களில் நான் அலுவலகத்திலிருந்தபோது சுவிட்செர்லாந்திலிருந்து அழைத்து ஏறத்தாழ அரைமணி நேரம் பேசினாள்.

பிள்ளைக்கு அப்போதுதான் நேரம் கிடைத்திருக்கும்போல.

'என் வயதை கேட்டாள்.'

'௨௯ (29). ஏன் கேட்கிறாய்?' என்றேன்.

'இல்லை. உங்கள் குரலை கேட்டால் ௭௦ (70) வயது பெரியவர் குரல்போல் இருந்தது அண்ணா. அதனால் தான் கேட்டேன்.' என்றாள்.

எனக்கு ஒரே சிரிப்பு. (௨௦௧௨ நவம்பர் மாதம் இருக்கலாம் நான் சென்னையில் வேலைபார்த்த சமயம் மின்சார இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அன்பர் ஐயப்பன் கிருஷ்ணன் பெங்களூருவிலிருந்து அலைபேசி ஊடாக அழைத்துவிட்டு 'உங்கள் குரல் எப்படி இருக்கிறது என்று கேட்கவேண்டும் போலிருந்தது.' என்று சொன்னது தான் நினைவிற்கு வந்தது.)

'நான் கவிதைநூல்கள் வெளியிட வேண்டும் அண்ணா. தொகுத்து வைத்திருக்கிறேன். பொருத்தமான ஓவியங்கள் கீறி கவிதை நூல்களை வெளியிட வேண்டும்.' என்றாள்.

'இணையத்தில் குறிப்பாக முகநூலில் தேடினால் நிறைய பதிப்பத்தினர் கிடைப்பார்கள் ப்பா. உன் எதிர்பார்ப்பிற்கு சரியாக வரும் பதிப்பகத்தை நீயே தேர்ந்தேடுக்கலாமே. வித்யாசாகர் அண்ணாவிடம் கேட்டுப்பார். அவர் நிறைய நூல்களை வெளியிட்டதால் என்னைவிட அவரிடம் கேள். அதோடு கூடுகள் சிதைந்தபோது அகில் அண்ணாவிடம் கேள். 

பதிப்பகத்தினரை அணுகுவதற்கு முன்பு சிறந்த ஓவியரை அணுகி படங்களை கீறி வாங்கிக்கொள். அல்லது பதிப்பகத்தினரிடம் கேட்டால் அவர்களே சொல்வார்கள். பதிப்பகத்தினரிடம் செல்வதற்கு முன்பு அணிந்துரை, கவிதைகள் என ஓரளவுக்கு இறுதி செய்துகொண்டு அவர்களை அணுகு. அப்போதுதான் நூல் சிறப்பாக, பிழைகள் இல்லாமல் வெளிவரும்.' என்றேன்.

'நன்றி அண்ணா.' என்றாள்.

'நீ சென்னைக்கு எப்போது வருவாய்? வரும்போது முன்கூட்டியே எனக்கு தகவல் தெரியப்படுத்து. நான் தற்போது பெங்களூருவில் இருப்பதால் முன்கூட்டியே நீ வரும்தகவல் தெரிந்தால் எனக்கு அங்கு வரும் ஏற்பாடுகள் செய்வது எளிது.' என்றேன்.

சரி அண்ணா. (இசை வெளியீடு போன்று ஏதோ ஒரு ) நிகழ்விற்கு வருவேன். சென்னையில் என் மாமா வீட்டில்தான் தங்குவேன். சொல்கிறேன் அண்ணா. இன்னொரு நாள் பேசலாம்.' என்றாள்.

சமைக்கும்போது கைகளில் தீக்காயம் பட்டு கடந்த செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் தொடங்கி இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்திருக்கிறாள்.

கடந்த வாரம் என்னிடம் அலைபேசி ஊடாக பேசினாள்.

'அண்ண்ண்ண்ணா, அண்ண்ண்ண்ண்ணா, நலமா?' என்று பள்ளிக்கூட சிறுமிபோல் பேசினாள்.

'நான் நலம். நீ எப்டி டா இருக்க?' என்றேன்.

'நலம் அண்ணா.' என்றாள்.

skype ல் நண்பர்கள் ஆனதால் 'நீ skype க்கு வாடா. அலைபேசியில் பேசினால் காசு நிறைய வருமே' என்றேன்.

'அண்ணாவோடு பேசுவதற்கு நான் காசு பார்க்ககூடாது. பார்க்கமாட்டேன்.' என்றாள்.

இதைத்தாண்டி, இந்த கள்ளம்கபடமில்லாத அன்பைத்தாண்டி எனக்கு வேறு என்ன வேண்டும்?

நான் பிறந்த ஊரான முனைவென்றியிலிருந்து இடம்பெயர்ந்து பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு வந்துவிட்டோம். அதன்பிறகு படிக்க வெளியூரில், விடுதியில் தங்கி படித்தபோதும், வேலைதேடி சென்னை வந்தபோதும் உறவுகளை பிரிந்து வருகிறோம் என்ற ஏக்கம் இருந்ததுண்டு.

௨௦௦௫ ல் எழுத ஆரம்பித்து இணையம் ஊடாக எழுத ஆரம்பித்தபின் இவளைப்போன்ற ஒருசில நல்ல சொந்தங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது என் தமிழ்மொழியின்மேல் நான் கொண்ட பற்றுதல்.

Saturday, December 28, 2013

(கள்ளத்துப்பாக்கி அறிமுகம்) பாடலாசிரியர் வத்திராயிருப்பு தெ.சு. கௌதமன்

கள்ளத்துப்பாக்கி திரைப்படத்தின்மூலம் அறிமுகமாகி இரண்டாவதாக சித்திரைவீதி திரைப்படத்தில் (என் அன்புத்தங்கை, ஈழத்து மங்கை கவிக்குயில் எஸ்விஆர் பாமினியுடன் இணைந்து ) பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் வத்திராயிருப்பு தெ.சு. கௌதமன் 

கடந்தசில நாட்களுக்கு முன்பு வத்திராயிருப்பு தெ.சு. கௌதமனின் வலைத்தளத்திற்கு செல்ல அவருடைய பெயரை இட்டு கூகிளில் தேடிப்பார்த்தேன்.

அப்போது இந்த இணைப்பு கிடைத்தது. http://www.youtube.com/watch?v=ay2_ekoIpf8

௨௦௧௧ (2011)  ல் PHP Developer ஆக வேலைக்குச்சேர்ந்த அலுவலகத்தில் ஏற்கனவே Photoshop Designer ஆக வேலைபார்த்தவர் தெ.சு.கௌதமன்.

கருத்துவேறுபாடுகளைத் தாண்டி தூரநின்று மற்றவர்களிடம் உள்ள தனித்தன்மையை, சிறந்த குணங்களை யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே இரசித்துப் பார்ப்பது என்னுடைய குணம். அவரிடம் எப்போதும் நகைச்சுவை உணர்வு இருக்கும். உதாரணத்திற்கு நானும் அவரும் முகநூலில் நண்பராக இருந்தபோது அவருடைய பரணில் ஒரு சிறு பதிவை இட்டிருந்தார்.

'யாரோ என்னுடைய கொடைய திருடிட்டான். அதனால் நான் கொடை வள்ளலாகி விட்டேன்.' என்ற கருத்தொத்த அந்தப் பதிவு.

அவருக்கும் எனக்கு அப்போதிருந்த கருத்துவேறுபாடுகளைத் தாண்டி கிராமத்து மண்வாசனையோடு மண்ணியம் சார்ந்து எழுதும் படைப்பாளி.

அவருடைய முதல் கவிதைநூலை(அங்கூ அங்கூ) நான் கேட்டதன் பேரில் அவர் தந்தார். அவருடைய இரண்டாவது கவிதைநூல் (நான் பச்சை விளக்குக்காரி) வெளியீட்டு விழாவிற்கு அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அன்று காலை அலுவலகத்தில் இருந்து இணையம் வழியாக குறுஞ்செய்தி ஊடாக அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். 

அவருடைய கவிதைகளில் என்னுள்ளே ஆழமாக பதிந்துவிட்ட ஒரு கவிதை.

லகரங்கள் இடம்மாறியதால் 
விளைநிலம் 
விலைநிலமானது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளுசபா' வில் பணியாற்றியவர் என்பதனை மேலே குறிப்பிட்ட காணொளியைப் பார்த்து தெரிந்துகொண்டேன்.

நான் அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு செல்வதற்கு கொஞ்சகாலம் முன்போ அல்லது நான் சென்றபிறகோ அவருடைய தந்தை தவறியிருக்கக் கூடும். எனக்கு அப்போது தெரியவில்லை. 

நான் அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு சென்றபிறகு மூன்று மாதங்கள் கழித்தபிறகு ஆனந்த விகடனில் அவர் அப்பாவைப் பற்றி அவரின் கவிதையொன்று பிரசுரமாகியிருந்தது. அதனை பலமுறை படித்தபிறகுதான் எனக்கே அவரின் தந்தை தவறி விட்டார் என்ற உண்மையை உணர்ந்து அவருக்கு ம்ன்னஞ்சல் ஊடாக என் வருத்தத்தை தெரிவித்தேன்.

'என்னோடு அலுவலகத்தில் பணியாற்றிய தெ.சு. கௌதமனும் நீ பாடல் எழுதிய சித்திரைவீதி திரைப்படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.' என்று என் தங்கை பாமினியிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

என்னதான் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும் கௌரவத்தை விட்டுவிட்டு முதலில் பேசுபவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் அவர்கள்மேல் கொண்ட அன்பு என்னை தோற்கடித்துவிடும்.

என்னிடம் அதிகம் செல்லமாய் திட்டு வாங்கியவன் மன்னார் அமுதன் அண்ணா தான். அவன் இணையத்திற்காக data card பயன்படுத்துவான் போல. அதனால் இணையத்திற்கு வேகமாக வந்துவிட்டு வேகமாக ஓடி விடுவான். இது தெரியாமல் அவனை கோபத்தில் திட்டிவிட்டேன். 

அவனும் பதிலுக்கு 'தவளைக்கு பற்கள் இருந்தால் கடிக்கும்' என்பது போன்று ஒரு வேற்று நாட்டு பழமொழியொன்றை சொன்னான். அதன்பிறகு அவனோடு சமாதானம் ஆனேன். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒருமுறை skype ல் அவனும் குட்டி மன்னார் அமுதனும் காணொளி ஊடாக பேசினார்கள். நான் அலுவலகத்தில் இருந்ததால் சரியாகவே அவனோடு பேச இயலவில்லை.

என்னிடம் இதுவரை செல்லமாய் திட்டே வாங்காதவன் வித்யாசாகர் அண்ணா தான்.

தவறுதலாக என்னை எதிரியாக அப்போது நினைத்த வேறு ஒரு அன்பர்கூட 'நீ நன்றாக இருப்பாய். நீ மென்மேலும் வளர்வாய்' என்று என் அலுவலகப் பணி தொடர்பாக என்னை வாழ்த்தியதுண்டு.

அன்பைவிட வேறென்ன எனக்கு வேண்டும்? அன்பே கடவுளாக இருக்கும்போது...

Saturday, December 7, 2013

விஷ்ணு பாப்பாவும் சிறப்பு ழகரமும்


சில நாட்களுக்குமுன் என் தங்கச்சி பாப்பாவிடம் அலைபேசியில் பேசும்போது ‘விஷ்ணு என்ன செய்கிறான்?’ என்று கேட்டபோது ‘உன் மருமகன் amenna சாப்பிடுகிறான்.’ என்றாள். ‘அதென்ன amenna?’ என்றேன். ‘ஒண்ணுமில்ல ண்ணே, வாழைப்பழம் வாங்கி வந்தேன். விஷ்ணுவுக்கு கொடுத்தேன். Banana என்று சொல்லிக்கொடுத்தேன். அதைத்தான் amenna என்கின்றான் விஷ்ணு.’ என்றாள்.

நான் பரமக்குடிக்கு சென்றிருந்த போதெல்லாம் அவன் அழுதால், வீட்டிற்குள் பிராண வாயு (oxygen) கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் அவனை, வேப்பமரக் காற்று நல்ல மருந்து என்பதால் பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்து மடியில் வைத்து பேசிக் கொண்டிருப்பேன். சாலையில் போகின்ற நாயை ஆச்சர்யமாக பார்ப்பான். அவனிடம் ‘நாய், dog’ என்று சொல்லிக்கொடுப்பேன். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காகத்தை குறுகுறுவென்று பார்ப்பான். அவனிடம் ‘காகம், காக்கா, crow’என்று சொல்லிக்கொடுப்பதுண்டு.

சிலநாட்களுக்குப் பிறகு அந்த மரத்தடிக்கு மறுபடியும் அழைத்து வரும்போது நாய் அந்த வழியே வந்தால், என்னை கையால் தொட்டு அழைத்து நாயை சுட்டி நாய் என்று சொல்லத்தெரியாமல் ‘நா, நா’ என்று சொல்வான். உச்சியில் காக்கையை தேடுவான். பிறகு காகத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து காக்கா என்று சொல்லத்தெரியாமல் ‘கா, கா’ என்று சொல்வான்.

அவனை ‘எங்க விஷ்ணு பாப்பால்ல, நல்ல பாப்பால்ல’ என்று சொல்லி செல்லங்கொஞ்சுவதுண்டு. அதனால் அவனை அவனே விஷ்ணு பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘விஷ்ஷப்பா’ என்றும் நல்ல பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘ல்லப்பா, ழ்ழப்பா’ என்றும் சொல்வான்.

இன்றைய நடைமுறை உலகில் தமிழர்கள் யாரும் சோம்பேறித்தனம் காரணமாக சிறப்பு ழகரத்தை அதற்குரிய அழுத்தத்தோடு சரியாக உச்சரித்து பேசாமல் சிறப்பு ழகரத்தின் சிறப்பு அழியத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு மலையாளி என்னுடைய உறவினர் மகனுக்கு ‘மலையாளத்தில் மழை என்ற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்’ என்றும் சொல்லித்தந்திருக்கிறான். என்னுடைய உறவினர் மகன் என்னிடம் வந்து தமிழில் சிறப்பு ழகரம் உள்ளதா? என்று கேட்டான். அதிர்ந்து விட்டேன். ‘தமிழை கடன்வாங்கி ஆங்கிலம், ஜப்பானிய மொழி உட்பட பல மொழிகளும் தத்தமது வாழும் தகவமைக்கேற்ப (region) தமிழை திரித்தும் வார்த்தைகளை சேர்த்தும் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம்,......’ என்று பலவாறு பேசிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு மலையாளி தன்னுடைய மொழியில் உள்ளனவற்றை மறவாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் நிலையில் ஒரு தமிழன் இப்படி சிறப்பு ழகரத்தை மறந்து விட்டானே? என்று அதிர்ந்தேன். அவனிடம் ‘நம்முடைய தாய்மொழியை நீ மறக்கலாமா டா?’ என்று கேட்டேன். அவன் சொன்னான். ‘பள்ளியில் என்னுடைய ஆசான்கள் இப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தரவில்லை. அதன்பிறகும் யாரும் சொல்லித்தரவில்லை. அதனாலேயே மழை என்பதை மலை என்றே இத்தனை நாளாய் உச்சரித்து வந்தேன். மலையாளத்தில் மழா என்று மழையை அழைப்பார்களாம்’ என்றும் மனவருத்தத்தோடு சொன்னான்.

உண்மையில் ஆங்கிலேயன் தன்னுடைய மொழியை பல்வேறு பதிப்புகளாக, உட்பிரிவுகளாக அந்தந்த நாட்டிற்கு தகுந்தாற்போல்British English, US English, Indian English என்று தன்னுடைய மொழி திரிவடைவதை அனுமதிக்கிறான். அதன்மூலம் தன்னுடைய தாய்மொழி உலகம் முழுவதும் பரவுகிறது என்பதை அவன் உணர்கிறான். ஏனெனில் அவன் ஒவ்வொரு நாட்டு மொழியின் பின்னும் englsih என்ற தன்னுடைய மொழியின் பெயரைச் சேர்த்து Indian English என்றே அழைக்கிறான். நாளை எவனாவது இந்த மொழி தன்னுடையது என்று சொன்னால் ஆங்கிலேயன் சொல்வான் இது எங்கள் மொழி. உன்னுடைய மொழி என்று நீ சொல்லும் மொழியின் கடைசியில் என்னுடைய தாய்மொழியான English என்ற வார்த்தை உள்ளது. எனவே நீ பேசும் US English, Indian English எல்லாமே என்னுடைய தாய்மொழியான English ன் உட்பிரிவுகள் தான் என்று மிக எளிமையாக தெளிவாக உறுதியாக ஆதாரத்தை முன் வைப்பான். ஆனால் தமிழன் தன்னுடைய மொழியிலிருந்து தோன்றிய மலையாளத்தை மலையாளத் தமிழ் என்றும் கன்னடத்தை கன்னடத் தமிழ் என்றும் தெலுங்கை தெலுங்குத் தமிழ் என்றும் மராட்டியை மராட்டித் தமிழ் என்றும் (பெரும்பாலான மொழிகளை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். இதற்கு ஆதாரமும் இருக்கிறது. கூகிள் குழுமத்தில் ஒருவர் ஒருமுறை ஆதாரத்துடன் தமிழிழிலிருந்து உகரத்தை, இகரத்தை இழந்து எப்படி இன்னொரு மொழியாக மாறியிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்.) தான் நாம் அழைக்க வேண்டும். ஏனெனில் தமிழின் உட்பிரிவுகள் தான் ஏனைய பெரும்பாலான மொழிகள்.

உலகின் பெரும்பாலான மொழிகள் தமிழிலிருந்து தான் தோன்றின, பெரும்பாலான மொழிகளுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஒருசில ஆங்கில வார்த்தைகளின் 
வேர்ச்சொற்கள் தமிழில் இருக்கின்றன என்பதற்கு மொழியியல் ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் சான்றுகளுடன் விளக்குகின்றனர்.

இருந்தபோதும் இன்று நாம் மலையாளத் தமிழ் என்று அழைக்கவேண்டிய மலையாளத்தை, மலையாளத் தமிழ் என்று அழைத்தால் மலையாளி நம்மோடு சண்டைக்கு வருவான். ஏனெனில், தமிழன் தனக்கு போகத்தான் தானதர்மம் என்று வாழாமல் அனைவருக்கும் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் மொழி, நிலப்பரப்பு என அள்ளியள்ளிக் கொடுத்தான். இன்று எல்லா இடங்களிலும் அடிவாங்கி சாவது தமிழன் தான். தமிழன் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் தான் வீழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆங்கிலேயன் தன்னுடைய ஆங்கிலத்தை US English, Indian English, British English என்று உட்பிரிவுகளாக பிரித்து உலகம் முழுவதும் பரப்புவதைப் போல தமிழன் செய்ய இயலாமல் மொழி திரிந்து விடும் என்று பயப்படுகிறான். ஏனெனில் தமிழன் தன்னுடைய மொழியின் மேல் இனத்தின் மேல் அக்கறை இல்லாமல் வாழ்கிறான் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதன்பிறகு சிறப்பு ழகரத்தைப் பற்றி ஒரு அன்பர் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதில் ‘தமிழின் சிறப்புகளில் சிறப்பு ழகரமும் ஒன்று. அதனை உச்சரிக்க சோம்பேறித்தனப்பட்டால் அந்த சிறப்பு ழகரம் எதற்கு?’ என்று மன வேதனையோடு கேள்வி எழுப்பினார்.

இன்னொரு நண்பர் “திரைப்பட நடிகர்கள் வசனம் பேசும்போதும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் திரைமறைவு குரலொலி (dubbing artists) கலைஞர்களும், இப்போது தமிழ் திரைப்படப் பாடல்களை பாடுகிற வேற்றுமொழி பாடகர்களும் சிறப்பு ழகரத்தை லகரமாகவோ ளகரமாகவோ தான் உச்சரிக்கிறார்கள். உதாரணத்திற்கு அழகு என்பதற்கு பதிலாக அலகு என்றோ அளகு என்றோ தான் உச்சரிக்கின்றனர்.” என்று வருத்தப்பட்டார்.

தமிழர்கள் அல்லாத பிற மொழியினத்தினர் தமிழ்மேல் காதல்கொண்டு தமிழ்பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வெகுஜன ஊடகமான திரைப்படங்களையே உதாரணமாக வைத்து தமிழ் கற்கின்றனர். என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கின அன்பர், கன்னட அன்பர் தமிழ் கற்க ஆசைப்பட்டு தமிழ் திரைப்படங்களைப் பார்த்தே, தமிழை கற்றுக்கொண்டதாகவே தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர்கள் தயைகூர்ந்து திரைப்படக் கலைஞர்களின் தமிழ் உச்சரிப்பை ஆழமாக கவனித்து உச்சரிப்பு பிழைகளை நீக்கி வெளியிட வேண்டுமாய் இந்தக் கட்டுரை ஊடாக, கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் குழந்தை என்பதற்கு பதிலாக குயந்தை என்று ழகரத்தை யகரமாக உச்சரிப்பதை கவனிக்கலாம்.

சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் பதிப்பகம் சார்பில் ஒரு விழாவில் கூடுகள் சிதைந்தபோது சிறுகதை நூலிற்காக அகில் அண்ணாவுக்கு விருது வழங்கினார்கள். அந்த விழாவில் நானும் பார்வையாளனாக கலந்துகொண்டேன். ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளை சேர்ந்த கொடுமுடி என்ற ஊரைச் சேர்ந்த புலவர் ஒருவர் பேசும்போது, ‘தற்கால புதிய பொருட்களை அழைக்கும்பொருட்டு, பயன்படுத்தும்பொருட்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை சேர்த்து அதை உடனடியாக பரப்புகின்றனர். ஆனால் தமிழில் அதைப் போன்ற காலத்திற்கேற்ப மாற்றங்கள் (Updates) செய்யவும் ஆளில்லை. செய்தாலும் தமிழர்களிடம் மொழி பற்றிய அக்கறையின்மையாலும், அவர்களின் முழு ஒத்துழைப்பின்மையாலும், வரவேற்பின்மையாலும் புதிய வார்த்தைகள் வழக்கொழிந்து போகின்றன. அதனாலேயே தமிழ் பழையமொழி தற்காலத்திற்கு உதவாத மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது.’ என்று வருத்தப்பட்டார்.

௨௦௦௪ ல் (2004) நான் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது விடுதியின் என்னுடைய அறையின் பக்கத்து அறை நண்பர் (தமிழில் முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருந்தவர்) என்னிடம் ஒருமுறை பேசும்போது ‘அடுத்த தலைமுறையில் தமிழும் சமஸ்கிருதம் போல் பேச்சுவழக்கிலிருந்து அழிந்துவிடும்.’ என்று வருத்தத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

என் மருமகனுக்கு யாருமே சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தராமலேயே அவன் சுயம்புவாக கற்றுக்கொண்டு என்னிடம் ‘ழ்ழப்பா, ழ்ழப்பா’ என்று சொன்ன கணத்தில் சிறப்பு ழகரத்தைப் பற்றி மேலே சொன்ன அனைத்தும் ஒரு கணத்தில் என்னுள்ளே தோன்றி மறைந்தன. என் மருமகன் விஷ்ணு பாப்பாவை ஆரத்தழுவி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிய ஆரம்பித்தேன் நான்.