Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.1). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.1). Show all posts

Thursday, June 17, 2010

வாழ்கிறேன்!

நீ நடந்தால்
உன் நிழலாய்
நானிருக்கிறேன்!

நீ சுவாசித்தால்
உன் மூச்சுக்காற்றில்
நான் கலந்திருக்கிறேன்!

நீ புன்னகைத்தால்தான்
என் ஆயுட்காலம் நீள்வதாய்
நான் உணர்கிறேன்!

நீ என்னுடன் பேசினாலோ
காற்றில் மிதப்பதாக
கனவுகள் பலகாண்கிறேன்!

நீ கேட்ட கேள்விகளுக்கு
பதில்கள் சொல்ல வாய்திறந்தால்
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்க...
திக்கித் தடுமாறுகிறேன்!

நீ
என் உயிராகவே இருப்பதால்
நான் இன்னும்
இம்மண்ணில் உயிர்வாழ்கிறேன்!!

காதல் ஓவியம்!

என் காதலை
சொல்லித்தான் பார்த்தேன்! - உன்னை
பார்த்தேதான் சொன்னேன்!!

நகைத்துவிட்டாய்! - முகம்
புதைத்துக்கொண்டாய்!!

பள்ளிக்குழந்தைபோல்
எள்ளி நகையாடினாய்!

மெல்லச்சிரித்த கள்ளியாய்
தள்ளித்தான் போனாய்!

எதையெதையோ நினைத்தாய்! - எனை
அள்ளிவந்து அணைத்தாய்!!

இதுதான் என் காதல் ஓவியம்!
நிஜமாகுமா என் காதல் காவியம்?

நீ பேசினாய்!

நீ என்னிடம்
'பள்ளத்தில் விழுந்துவிட்டாயா?
இல்லை என்
உள்ளத்தில் விழுந்துவிட்டாயா?'
என்றாய்!

'இரண்டில்
எதில் விழுந்திருந்தாலும்
எழுந்திருப்பது கடினம்'
என்றேன்!!

Wednesday, June 16, 2010

சுனாமியின் நினைவால்...

ஆழிநீர் பொங்கியதால்
விழிநீர் தேங்கியதோ...!
வழிகாட்ட வருகிறான்! - புது
ஒளியேற்ற வருகிறான்
எம்மிளைஞன்!
சீற்றம் ஓய்ந்தாலும் - சுனாமியின்
தாக்கம் ஓயவில்லை!
துன்பம் வேண்டாம்
தமிழ்ச்சிங்கங்களே!
கவலை வேண்டாம்
கடலோரக் கவிதைகளே!!
நம்பிக்கைப்படகிலே
வியர்வைத்துடுப்பெடுத்து
முயற்சிவலை வீசி - சுனாமியின்
நினைவலைகள் தாங்கி - மன
மகிழ்ச்சிமீன்களை பிடித்து
தைமகளை வரவேற்போம்! - வருந்
தைமகளை வரவேற்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011

நம்நினைவில் சுனாமி!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கரைமீறும் கண்ணீர்தான் ஏழையின் பாடு!
ஆழிக்குள் பூகம்பத்தின் நினைவோடு
நம்நினைவில் நம்பிக்கைகீதம்பாடு!
நினைத்துப் பார்த்தால் சோகம்! - சுனாமியை
நினைக்கமறந்தால் பாவம்!!
கண்ணீர்வழி உருகியது தேகம்!
சுனாமியால் பழியான உயிர்கள் போதும்!
கடலையால் இயற்கையின் சீற்றம்!
காலம் கொடுக்குமே புதுப்புது மாற்றம்!!
போதும்கண்ணே நம்மனதில் ஏக்கம்!
விடியும்வரை தாய்மடியில் தூக்கம்!!
இனிமாறிவிடும் தமிழனின் துக்கம்!
துணிந்தால் வெற்றியெல்லாம் நம்பக்கம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011

காதலே சொர்க்கம்!

கண்ணை காப்பது இமை!
உன்னைக் காப்பதென்ன சுமை?
கண்ணில் இல்லை புவிகாந்தம்!
உன்னில் கண்டேன் புதுசொந்தம்!!
உன்னைக்கண்டால் என்வாழ்வே சொர்க்கம்!
உன்னைக் காணாவிடில் அகிலமே அற்பம்!!

உனக்கொரு கடிதம்!

சுவரின்றி இல்லை சித்திரம்! - எனக்கு
நீயின்றி உலகிலில்லை விசித்திரம்!!
விண்ணில் கண்டேன் பலநட்சத்திரம்! - என்
கண்ணில் கண்டேன் ஒரு பெண்சித்திரம்!!
உன்னை பேருந்தில் கண்ட அத்தினம்
உன்நினைவே என்மனதில் நித்தம்நித்தம்!!

காதல்வெடி!

என் இதயமென்ற வெடியை
உன் கண்களென்ற திரியால்
பற்ற வைத்துவிட்டாய்!

அதனால்தானோ
துண்டுதுண்டாய் சிதறுகிறது
என்னிதயம்!!


இக்கவிதைகள்  வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

என் உயிர்!

உன்னை
மனித உயிர்களில்
ஜாதிமங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என்னுள்ளத்தில்
ஜாதிமல்லியாய் மணம்வீசுகிறாய்!

உன்னை
என்தங்கைக்கு
அண்ணியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் குடும்பத்திற்கே அன்னையாய்
மலர்ந்துவிட்டாய்!!

உன்னை
என்னிடம் அன்புகாட்டும்
மனைவியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரணுக்களில்
காதலியாகவே வாழப்பார்க்கிறாய்!!

உன்னை
என்னை கண்முன் நலமுடன் வாழும்
நங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரெனவே வாழ்கிறாய்!!

தீபாவளி!

சொந்தங்கள் நிலைக்க...
பந்தங்கள் சிறக்க...
இன்பத்தை நினைக்க...
துன்பத்தை மறக்க...
புத்தாடை மிளிர...
புன்னகை தவழ...
பொன்னகை ஒளிர...
வந்ததே தீபாவளி! - வாழ்வில்
தந்ததே தீப ஒளி!!

ஒளிந்திருக்கும் மானுடத்திற்கு
ஒளி கொடுக்கவந்தது
தீபாவளி!

மறைந்திருக்கும் மக்களுக்கு
புதுமறையாய் வந்தது
தீபாவளி!

காலையில் முகம்மலர...
மாலையில் அகம்குளிர...
வந்ததே தீபாவளி!
இதுகாட்டுமே நல்லவழி!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. வெற்றிநடை - 01-11-2012

2. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

அன்பான அறிவுரை!

மழைபோலே நீரூற்று! - கடல்
அலைமேலே ஈரக்காற்று!
சிறிதளவு விளையாட்டு! - நம்
சுவாசத்தில் பாசக்காற்று!
இவையெல்லாம் நீ கேட்டு
உன் எதிர்கால படகோட்டு!!

நீதான்!

அன்புக்கு என் அன்னை!
பண்புக்கு என் தந்தை!
அறிவுக்கு என் ஆசான்!
பரிவுகாட்ட என் தோழன்!
கனிவுக்கு என் தங்கை!
தனிமைக்கு என் கவிதை!
பொறுமைக்கு என் அக்கா!
அமைதிக்கு என் அண்ணன்!
இத்தனை உருவங்களும்
மொத்தமாய் நீதான்!
என்னவளே...
நீதான்!!

தமிழ்நாடு!

அள்ளிக்கொடுத்தால் சிவக்குமே
உள்ளங்கை!
அகிலத்தில் சிறந்த ஊர்
சிவகங்கை!!

பட்டுக்கோட்டை, தேவகோட்டை
புதுக்கோட்டை, நாட்டரசன்கோட்டை
இப்படி இருக்கலாம் பலகோட்டை! - நம்
தேசக்கொடியை பறக்கவிடுவது செங்கோட்டை!
தமிழன் என்றும் கட்டமாட்டான் மனக்கோட்டை!
இப்படித்தான் சொல்வேன் என் உள்ளப்பாட்டை!!

கைவைத்தவுடன் வந்ததே வைகை! -இன்றுநாம்
சைகை காட்டியும் வரவில்லையே வைகை! - இனிநாம்
செய்கையினால் வருமே வைகை!!

அங்குலம் அங்குலமாய்
பிரிகிறதே மனிதகுலம்! - நம்குலம்
தமிழ்க்குலமென்று சொல்லவேண்டுமே
மனிதகுலம்!

ஜாதி ஜாதியென்று
கூவவேண்டாமே! - புனித
ஜோதியில் உலகை ஆள்வோமே!!

ஜாதிமதந்தானே தமிழனக்கு முட்டுக்கட்டை!
இனியாவது வளர்ப்போமே நாட்டுப்பற்றை!!

நம் உயிர்புரட்டும் அமுத ஏடு! - அது
நம் உயிரில் கலந்த நம் தமிழ்நாடு!!

நட்பு!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரிசமமாய் கற்பு! - அந்த
கற்பின் உன்னதங்காப்பது
நட்பு!!

உள்ளத்தை உரசுவது
காதல்!
உயிரை உருக்குவது
நட்பு!!

அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்?! - புனித
நட்பிற்கும் உண்டோ
ஆண்பால் பெண்பால்?!!

தோல்வியில்
தோள்கொடுப்பான்!
நான் கண்ணீர் சிந்தினால்
அவன் செந்நீர் சிந்துவான்!!

சிரம் தாழும்போது
கரம் கொடுத்து - மனதில்
உரமேற்றுவான்!

கடலில் பூக்கும் பூ
உப்பு! - நம்
புன்னகையில் பூக்கும் பூ
நட்பு!!

வெளிச்சம் கொடுப்பவன் பகலவன்!
வீரத்தில் விளைந்தவன் நண்பன்!
நம் கண்முன் நிற்கும் நண்பன்
இவன் தான் உண்மையான இறைவன்!!

கற்சிலையை வணங்குவதை
நிறுத்திவிட்டு
கண்கண்ட கடவுளை
வணங்கேன் மானிடா!!

ஆடிக்காதல்!

ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்குமாம்! - உன்
மூச்சுக்காற்றில்
என்னிதயமே பறக்கிறதடி!!

Tuesday, June 15, 2010

வாருங்கள்!

இந்தியாவில்
சதிகளை சாய்க்க...
மதங்களை மாய்க்க...
தீவிரவாதத்தை தீர்க்க...
பெண்ணடிமை போக்க...
வரதட்சிணையை வேரறுக்க...
ஊழலை ஊதித்தள்ள...
கையூடலை கைகழுவ...
மனிதர்களே வாருங்கள்!
மனிதர்களாய் வாருங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 13-03-2006

2. முத்தாரம் – 16-07-2006

3. முத்தாரம் – 17-09-2006

4. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

Monday, June 14, 2010

என் காதலி!

தை பிறந்தால்
புதிய வழி பிறந்ததாம்! - என்
(அத்)தைமகள் நீபிறந்ததால்
இதயவளிதான் பிறந்தது
எனக்கு!!

அவள் வந்தாள்!

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னோடு படித்த பெண்ணுக்கு நடந்த திருமணத்தில் என் காதல் தேவதை சேலை கட்டி வந்திருந்தாள். அவள் வருவதை எதிர்பார்த்து காத்திருந்த நான் என் குட்டிப்பாப்பாவை பார்த்தவுடன் இந்த கவிதை தோன்றியது.

கலையாய் வந்தாள்! - கற்
சிலையாய் வந்தாள்! - கடல்
அலையாய் வந்தாள்!!

கவிதையைத் தந்தாள்! - புதுக்
கவிதையைத் தந்தாள்! - தமிழ்க்
கவிதையைத் தந்தாள்!!

தரணிதனில் வந்தாள்! - எனக்கு
பரணியைத் தந்தாள்!!

பாவையாய் வந்தாள்! - தமிழ்ப்
பாவையாய் வந்தாள்! - எனை
பார்வையால் கொன்றாள்!!

வேகமாய் வந்தாள்! - குளிர்
மேகமாய் வந்தாள்!!

கொடியாய் வந்தாள்! - பூங்
கொடியாய் வந்தாள்!
செடியை வளர்த்தாள்! - காதல்
செடியை வளர்த்தாள்!!

வெள்ளமாய் வந்தாள்! - அன்பு
வெள்ளமாய் வந்தாள்! - என்
உள்ளத்தை வென்றாள்! -என்
உயிரினில் கலந்தாள்!!

சொன்னார்கள் செய்கிறோம்!

அன்று சொன்னார்கள்!
இன்றும் செய்கிறோம் நாம்!!

நாணயத்தோடு வாழச்சொன்னார்கள்!
நாணயத்தை விற்று
நாணயமல்லவா வாங்குகிறோம் நாம்!!

சாதிக்கச் சொன்னார்கள்!
சாதிப்பதை பாதியில் நிறுத்தி
ஜாதியோடு அல்லவா வாழ்கிறோம் நாம்!!

மெய்சொல்லச் சொன்னார்கள்!
மெய்யை பொய்யாக்கி
மெய்யை அல்லவா காக்கிறோம் நாம்!!

விலங்கை காக்கச் சொன்னார்கள்!
விலங்குகளை துன்புறுத்தி
விலங்குடன் அல்லவா சிறைசெல்கிறோம் நாம்!!

மதத்தை மறக்கச் சொன்னார்கள்!
மதங்கொண்ட யானைபோல்
மதத்தோடு அல்லவா வாழ்கிறோம் நாம்!!

மனிதனாய் வாழ்ச்சொன்னார்கள்!
இனியாவது
மனிதனாய் வாழ்வோம்! - மனிதத்தின்
புனிதம் காப்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 06-03-2006

என் இளைஞனே!

தண்ணீரில் மணம்வீசுவது அகில்! - மழையாய்
கண்ணீரைச் சிந்துவது முகில்!!
இரவின் மரணம் பகல்! - நமக்கு
இரவின் ஒளியாய் அகல்!!
மன்னர்களுக்கு என்றுமே அரியாசனம்! - மனித
மதங்களுக்கு இனிமேல் சரியாசனம்!!
பாசத்திற்கு பிரிவு ஒருபாலம்! - நம்
தேசத்திற்கு இனிஇல்லை மரணஓலம்!
பயிர்களைக் காப்பவன் உழவனே! - உலக
உயிர்களை காக்கவாடா எம்மிளைஞனே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 03-12-2005