Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.2). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.2). Show all posts

Wednesday, September 22, 2010

பார்த்தேன்!

உன்னை நேசித்தேன்! - தமிழ்
மண்ணை நேசித்தேன்!!
உன்னைப் பார்த்தேன்! - உன்னால்
என்னைப் பார்த்தேன்!! - என்
உயிரைப் பார்த்தேன்! - அதில்
கடவுளைப் பார்த்தேன்!!

Sunday, September 19, 2010

ஒரு பொய்சொல்!

அன்பே...
உன் கண்கள் என்ன
கண்ணிவெடியா?
பார்த்தவுடன்
சிதறிவிட்டது என்னிதயம்!

உன் இதழ்கள் என்ன
ரோஜா இதழ்களா?
பறிக்கத் தூண்டுகிறது என்னுள்ளம்!

உன் கால்தடம் என்ன
வானவில்லா?
நின்று இரசிக்கத் தோன்றுகிறது உன்னை!

உன் உள்ளம் என்ன
குழந்தையா?
கள்ளம்கபடமில்லாமல் சிரிக்கிறாய்!

உன் சிரிப்பொலி என்ன
சிம்பொனியா?
உன் சிரிப்பொலி கேட்டு
நான் தலையாட்டி இரசிக்கிறேன்!

உன் இத(ழ)யம் திறந்து
ஒரு பொய்சொல் கண்மணி!
'நான் உன்னை
நேசிக்கிறேன்' என்று!!

அன்பே தெய்வம்!

அன்புகொண்ட உள்ளங்களுக்கு
ஆலயம் தேவையில்லை!

உண்மை பேசும்
உதடுகளின்
உன்னத வார்த்தை
மறைவதில்லை!

விழிகள் வழி - கருணை
ஒளி கொடுப்பவர்களுக்கு - சுய
விளக்கம் தேவையில்லை!

என்மேல் உரிமை எடுத்து
பழகுபவர்கள் மேல்
நான் வைக்கும் அன்பிற்கு
எல்லைக்கோடுகள் எதுவுமில்லை!

நான் கண்ணீரில்
கவிதைகள் எழுதினாலும்
கவலைகள் என்றும் மறைவதில்லை!!

எப்போது?

உன்னை
காதலித்த பிறகுதான்
கவிதைகள் எழுத
ஆரம்பித்தேன்!

செய்தித்தாள், பத்திரிக்கை,
வானொலி, தொலைக்காட்சி
என அனைத்தாலும்
நான் கவிஞனென்று
ஏற்றுக்கொள்ளப் பட்டேன்!

அன்பே...
எப்போது ஏற்றுக்கொள்வாய்
என்னையுன் கணவனென்று?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 15-07-2006


திருநாள்!

இருவேறு துருவங்களில்
வசிக்கும் நாம்
நாம் உருவங்கள் பார்த்து
புருவங்கள் உயர்த்தும்
நாள்தான்
எனக்கு திருநாள்!!

காதல் தோல்வி!

கணப்பொழுதில்
தோன்றிய காதலால்
காலம்முழுக்க
இரணப்படவேண்டிய
கட்டாயம்!

காதல்
தோல்வியில் முடியுமானால்...

நானாகவே...

எடிசன்
உனை காதலித்திருந்தால்
உன் இடையிலிருந்து
மின்சாரம் எடுத்திருப்பான்!

இளையராஜா
உனை காதலித்திருந்தால்
உன் சிரிப்பொலி கேட்டு
பல சிம்போனிகளை
உருவாக்கியிருப்பான்!

நான்
உன்னை காதலித்தேன்!
நான் நானாகவே இருப்பதால்
கவிஞனாகி விட்டேன்!!

வெட்கம் விலக்கு!

பேசும்போது சிரிக்கிறாய்!
சிரித்துத் தானடி பேசுகிறாய்!
ஏனடி என்னை
காதலிக்க மட்டும் மறுக்கிறாய்?

நீ என் பக்கம் நின்றால்
உன்னுள் வெட்கம்!
நீ என்னை விட்டு
விலகிச் சென்றால்
என்னுள் துக்கம்!
என்னைக் காதலிக்க
இன்னும் என் அச்சம்?

உன்னால் என்னால்
காதல் மயக்கம்!
பிறகென்ன தயக்கம்?

உன்னை நினைத்தே
என்னுள் இல்லை உறக்கம்!
என்னைப் பார்த்தும்
உன்னுள் இல்லை இரக்கம்!!

இனி வேறொருத்தியை
என்னிதயம் ஏற்க மறுக்கும்!
நாம் வாழ்ந்தால்தான்
என்வாழ்க்கை சிறக்கும்!!

என் எதிர்காலம்!

2006 ம் ஆண்டு தேர்வு விடுமுறையின் போது அவளையும் அவள் அம்மாவையும் அவளின் ஊருக்கு வழியனுப்ப நான் புகைவண்டி நிலையத்திற்கு போயிருந்தேன். என் தேவதையை முன்னால் நடக்க விட்டு அவள் துணிகளை சுமந்துகொண்டு அவள் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நடந்து போனேன். அப்போது என் குட்டிப்பாப்பாவின் கால்களையும் காலணிகளையும் பார்த்தேன். அவளின் செருப்புகள் எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா? அப்படியே அவளின் செருப்புகளை என் மடியில் தூக்கிவைத்து கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. அப்போது தோன்றிய வரிகள் தான் இவை.

'உன் பிஞ்சுபாதத்தின்
செருப்புகளைப் பார்த்ததிலிருந்து
நெருப்பும்கூட குளிர்கிறதடி
எனக்கு!!'

எங்குபோனாலும்
துரத்தித் துரத்தி
வருகிறது உன்நினைவு!

கைகள் அசைகின்றன!
கால்கள் நடக்கின்றன!
வாய் உன்னுடன்தான் பேசுகிறது!!

உன் பிஞ்சுபாதத்தின்
செருப்புகளைப் பார்த்ததிலிருந்து
நெருப்பும்கூட குளிர்கிறதடி
எனக்கு!!

என் மெய்சிலிர்க்க
'நானுனை நேசிக்கிறேன்' என்று
ஒரு பொய்சொல் கண்மணி!

உன் துப்பட்டாவே
எனக்கு தேசியக்கொடி!
உன் முந்தானையே
எனக்கு மூவர்ணக்கொடி!
உன் பெயரே
என்நாட்டின் தேசியகீதம்!!

உன் மௌனம்தான்
எனக்கு சித்ரவதை!
இனிஎன் எதிர்காலம் கேள்விக்குறிதானோ?

அன்பே...
என் கழுத்தை நெரித்து
என்னைக் கொன்றுவிடு!

இனிநான்
உயிர்வாழ்ந்து பயனில்லை!

தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும்
கலைகளை கற்றுக் கொடுத்தவள்
நீதான்!

அதற்காக என் காதலிலும்
தோல்வியைத் தந்துவிடாதே...

காதல் தோல்வியை
தாங்குவதற்கென்றே
ஒரு சில ஜீவன்கள் உண்டு
இம்மண்ணில்!

காதல் தோல்வியை
தாங்கும் திறன்
இல்லை என்னில்!

இப்படித்தான்
நான் பைத்தியமாகிவிட்டேன்!
வைத்தியம் பார்க்க
வழியுண்டோ காதலி?

பதில் சொல்லிவிட்டுப் போ...!

Saturday, September 4, 2010

அன்பே...

கூடிய மேகங்கள்
காற்றடித்து கலைவதுபோல்
உன்னைத் தேடியபோது
என்னருகே வந்து
மௌனமாய் கலைகிறாய்!

அன்பே...
எப்போது பொழிவாய்
காதல் மழையை?!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 31-05-2009

காதலும் நட்பும்!

உள்ளத்தின் பாடலால்
வருவது காதல்!
உயிரின் தேடலால்
வருவது நட்பு!!

உன்னை உறையவைத்து
இதயத்தை சிறையிலடைப்பது
காதல்!
உன்னை உருகவைத்து
உயிரை பருகவைப்பது
நட்பு!!

பேசுவாயா என்னிடம்?!

தனிமையிலே நடைபழகி
தனித்தீவிலே கடைவைத்து
கனிவிழந்த சோலையிலே
கண்டறிந்தேன் உன்னை!!

நிம்மதியின்றித் தவித்தேனே! - என்
கண்மணியுனைக் கண்டேனே!!
பெண்மனியுன் காதலாலே
வெண்மதியை நானும் இரசித்தேனே!!

என்னுடன் ஒரு வார்த்தை பேசுவாயா?
வாளெடுத்து நெஞ்சில் வீசுவாயா??

காதல் அழிவதில்லை!

காதலர்கள் அழியலாம்! - உண்மைக்
காதல் அழிவதில்லை!!
மோதல்கள் தொடரலாம்!
காதல் அழிவதில்லை!!

பழங்காவியம் அழியலாம்!
காதல் அழிவதில்லை!!
உயிரோவியம் அழியலாம்!
காதல் மட்டும் அழிவதேயில்லை!!

சொல்ல மறந்தகதை!

சொல்ல மறந்தகதை! - என் மனதை
மெல்லத் திறந்தகதை! - என்னுயிரைக்
கொல்லப் பிறந்தகதை!!

புகைவண்டியில் பயணம்! - உன்
சிகையில் சிக்கியது என்மனம்!!

புகைவண்டி சென்றது மெல்லமெல்ல...
என்மனம் உனைக்கண்டு துள்ளத்துள்ள...

புகைவண்டி பறந்தது சென்னைநோக்கி!
என்மனம் விரைந்தது உன்னைநோக்கி!!

என்னெதிரே அமர்ந்தாய்!
என்குறும்பை இரசித்தாய்! - இன்று
என்னுதிரம் பருகிவிட்டாய்!
என்னுயிரைத் திருகிவிட்டாய்!!

உன்வீட்டில் உணவு உண்டேன்!
அங்கேயே கனவு கண்டேன்! - மேலும்
உன்மேல் காதல் கொண்டேன்!!

என்னை உன்நாய்
சிறைவைத்தது உன்வீட்டில்!
உன்னை என்சேய் என
எழுதிவைத்தேன் என்னிதய ஏட்டில்!!

'நன்றாக சாப்பிடு
இன்று சாப்பிடுவது
ஏழு நாட்களுக்கு பசிக்கக்கூடாது' என்றாய்!
உன் பரிவால் எனைநீ வென்றாய்!!

'நான் என்ன ஒட்டகமா?' என்றேன்! - அன்றே
நீதான் என் காதல் பெட்டகமெனக் கண்டேன்!!

உன் பள்ளிப்பருவத்து
புகைப்படத்தைப் பார்த்தேன்!
நெருப்பில்லாமல் புகைந்தது
என் நெஞ்சம்!

புகைப்படத்துடன்
புறப்படலாம் என்றிருந்தேன்!

உன் புன்னகையை
என் விழிகளால்
புகைப்படமெடுத்து
என்னிதய ஏட்டில் பதிவுசெய்தேன்!

உன் வதனத்தில் தவழ்வது
புன்னகையா?
பொன்நகையா?
தெரியவில்லை!

அன்றெனக்கு
எல்லையில்லா மகிழ்ச்சி!
தொல்லையில்லா நிகழ்ச்சி!
இவையெல்லாமே
யார் செய்த சூழ்ச்சி?

உன்னிடம்
'பார்க்கலாம்' என்று
விடைபெற்றேன்!
இன்றும்
பார்த்துத்தான் கொண்டிருக்கிறேன்
உன்னை என் மனத்திரையில்...!!

Tuesday, August 31, 2010

அரசிளங்குமரி!

உன்னை பேருந்தில் பார்த்ததும்
என்னுள் நேர்ந்தது பூகம்பமா? - இல்லை
என்னுள் பூவே உன் பிம்பமா?

உன்னைப் பார்த்தது என்விழி!
கவிதைவழி என்னுள் ஏற்றமடி!!

அறிவை வளர்த்தது பள்ளிதான்! - என்னுள்
பரிவை வளர்த்தவள் கள்ளி நீதான்!!

உன் பெயருக்கேற்றபடி
எனைநீ ஆளுகிறாய்!

நீதானடி என்னிதயநாட்டின்
அரசிளங்குமரி!!

Friday, August 27, 2010

பாரதி!

ஜாதியை மறந்தவன்!
சாதிக்கப் பிறந்தவன்!!
கண்ணில் தீப்பொறி பறக்க - தமிழ்
மண்ணில் புதுநெறி பிறக்க
கவிதைகள் பல எழுதி
புவிதனை ஆளப்பிறந்தவன்!
பெண்ணுரிமை காக்க
விண்ணுயர குரல் எழுப்பியவன்!
மதங்கொள்ளாமல்- ஜாதி
மதங்களை கொல்லத்துடித்தவன்!
அன்று இயற்கையை இரசித்தவன்
இன்று இயற்கைஎய்தி விட்டான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-10-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 12-03-2007

உயிர் செல்லும் பாதை!

என் உயிர் செல்லும் பாதை எங்கே?
என் உறவைக் கொல்லும் பாதை காதல்!
இந்த மானுடத்தைக் கொல்லும் பாதை காதல்!!

உன்னை நினைத்து நினைத்து
கண்களில் வழிந்தோடுகிறது இரத்தம்!
மரத்துப் போனது என்னிதயம்! - உன்னை
மறக்க மறுக்கிறது என்னிதயம்!!

மனம் வெதும்பி நின்றேன்!
கண்ணீர் ததும்ப சென்றேன்!!

சொல்லிலே இன்பந்தான்! - உன்னால்
உள்ளத்திலே துன்பந்தான்!!

காதலை உணர்ந்தேன்! - என்னுள்
கவிதை பிறந்தது!! - நீ
என்னை உணர்ந்தால்
உன்னுள் காதல் பிறக்கும்!!

இளமையில் வேகம்!
முதுமையில் சோகம்!
உன்மேல் கொண்ட காதலெலாம்
வாழ்விலொரு பாகம்!!

என் உயிர் செல்லும் பாதை எங்கே?

Wednesday, August 11, 2010

ஆசை!

அன்பே...
நான்
அமைச்சராகலாமென்று
ஆசைப்பட்டேன்!

இடைத்தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
இடைபார்த்துத் தோற்றேன்!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
ஜடைபார்த்துத் தோற்றேன்!!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
நடைபார்த்துத் தோற்றேன்!!

உன் கணவனாகலாமென்று
ஆசைப்பட்டேன்!
உன்னை
காதலித்துக் கொண்டிருக்கிறேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இராணி – 27-08-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

3. தமிழ்ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 23-10-2011

4. தமிழ்நலக்கழகம் - 01-01-2012

எழுந்து வா நண்பா!

எழுந்து வா நண்பா!
அழுத கதை போதும்!
பிறர் கால்தொட்டு
தொழுத கதை போதும்!
எழுந்து வா நண்பா!!

ஒரு பெண்ணை
காதலிக்கத் தெரிந்த உனக்கு
இம்மண்ணில்
சாதிக்கத் தெரியாதா என்ன?
எழுந்து வா நண்பா!!

தமிழனக்கு
அச்சத்தை துச்சமென
மதிப்பது வழக்கம்!
விடிந்தபின்னும்
ஏன் இன்னும் உறக்கம்?
எழுந்து வா நண்பா!!

முயற்சி முயற்சி முயற்சி!
இதுதானே வெற்றியின் பயிற்சி!
இறுதிவரை போராடினால்
உறுதியாய் உனக்கு வெற்றி!
எழுந்து வா நண்பா!!

உன்னில்
ஒன்றும் இல்லை
எனும் சொல்லை
இனி நீநினைத்தால்
உனக்கது தொல்லை!
எழுந்து வா நண்பா!!

தொடங்கியதை முடிக்க
தொடர்ந்து போராடு! - வீட்டில்
முடங்கிக் கிடந்தால்
முன்னேற முடியாது!
எழுந்து வா நண்பா!!

மண்ணைக் கொஞ்சம் தட்டி
விண்ணைக் கொஞ்சம் முட்டி
மனவுறுதியைப் பற்றி
ஏங்கும் போராடு சுற்றி!
உனக்கிறுதியாய் வெற்றி!
எழுந்து வா நண்பா!!

எழுந்து வா நண்பா!
அழுத கதை போதும்!
பிறர் கால்தொட்டு
தொழுத கதை போதும்!
எழுந்து வா நண்பா!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 20-05-2006

2. இலங்கை வானொலி – 25-06-2006

மௌன யுத்தம்!

பீரங்கிக் குண்டுகளின்
சத்தத்தை விட
உன் மௌனம்
என்னுள்
சத்தமில்லா யுத்தத்தை
நித்தம் நித்தம்
உண்டாக்குவதை
நீ அறிய வாய்ப்பில்லை
கண்மணி!