Showing posts with label கவிதைகள் (பாகம் - 20). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 20). Show all posts

Sunday, June 1, 2014

அலைக்கழிப்பு



எப்படியேனும்
உள்ளே நுழைந்துவிடத் துடிக்கிறது
மனம்

உள்ளே வரச்சொல்வதுமாய்
வெளியே போகச்சொல்வதுமாய்
போராட்டத்திலேயே கழிகிறது
வாழ்க்கை

நெருங்கி வரச்சொல்வதும்
தூரவிலகிப் போகச்சொல்வதுமாய்
அலைக்கழிக்கப்படுகிறேன்
நான்

நெருங்கிவந்து சிரிப்பதும்
தூரநின்று அழுவதுமாய்
இரணப்படுகிறது மனம்

நினைவுகள் அலைமோதுவதும்
மறக்க முயற்சிப்பதும்
முயற்சித்து தோற்பதுமாய்
தொடர்ந்து காயப்பட்டுக் கிடக்கிறது
மனம்

வலிநிறைந்த வாழ்க்கையும்
வாழ்க்கைமுழுக்க வலியுமாய்
கிடந்து தவிக்கும்போதும்
இன்னமும்
வாழவே விரும்புகிறது
மனம்

Sunday, May 25, 2014

‘பாசமுள்ள தங்கச்சி’ பாமினி

ஓராண்டிற்கு முன்பு கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் “நீங்கள் என் மனதை காயப்படுத்திவிட்டீர்கள்.” என்று ஒரு செய்தியை முகநூலில் என் தங்கச்சி பாமினிக்கு அனுப்பியிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து என்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்திருந்தது.

“நான் ஜெர்மனியில நிக்குறன் அண்ணா. மன்னிச்சுக்கங்க அண்ணா. அடிக்கடி பேசுறேன் அண்ணா.” என்று குரல் தழுதழுக்க சொன்னாள். அன்று என்னால் உறங்க இயலவில்லை. நான் அவள் மனதை காயப்படுத்தி விட்டேன் என்று நான் நிறைய அழுதேன். இன்னொரு பக்கம் எனக்கு என்மேல் அன்புகொண்ட ஒரு தங்கச்சி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி.

பிள்ளை குரல் தழுதழுக்கச் சொன்ன இந்த நிகழ்வு என்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்வு தான் என் தங்கச்சி பாப்பா சோபனாவைப் போல இவளும் என் தங்கச்சி பாப்பா தான் என்று உணர வைத்திருக்கிறது.

கடந்த ௧௬, மார்ச் ௨௦௧௪ (16, மார்ச் 2014) அன்று அவளுக்கு பிறந்தநாளன்று அவள் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். அன்று நான் நிறைய மனமுருகி வேண்டினேன். வித்யாசாகர் அண்ணாவிடம் மின்னஞ்சல் ஊடாக தகவலை சொன்னேன்.

அண்ணா குவைத்திலிருந்து பேசினார் “அவள் நம் தங்கச்சி. நம் அன்பு மட்டும் போதும் அவள் நல்லபடியாக குணமாக. நீ வருத்தப்படாதே. அவளை அங்கு நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.” என்று ஆறுதல் சொன்னார்.

அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் சொன்னேன் "தங்கச்சிக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று. சில தினங்கள் கழித்தபிறகு அவள் சொல்லியிருக்கிறாள் "அண்ணாவுக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று.

கடந்த ௨௩-௦௫-௨௦௧௪ (23-05-2014) அன்று பெங்களூரிலிருந்து திருச்சி வரவேண்டி இரயிலில் ஓசூர் தாண்டி வந்துகொண்டிருந்தபோது உள்ளுக்குள்ளே நிறைய அழுகை வந்தது. வெளியே கண்ணீர் வரவில்லை. இந்தக் கவிதை வந்தது.




ஆசையோடு தங்கையுந்தன் அன்பைமட்டும் எதிர்பார்த்து
பாசமுள்ள அண்ணனிவன் பேசவந்தேன் கவிதைவழி
தேசங்கள் கடந்துநின்றும் தங்கையுந்தன் பாசந்தான்
வீசுகின்ற தென்றலைப்போல் வீசுதம்மா எப்போதும்

நீசனாகப் பிறந்ததாலே நீங்கவில்லை அன்புமட்டும்
பாசாங்கு இல்லாத பாசந்தான் என்னுள்ளே
காசொன்றே எதிர்பார்க்கும் கயமைமிகு உலகினிலே
நேசமொன்றே போதுமடி நெஞ்சமெல்லாம் நிறையுமடி

சிக்கலிலே சிலமுறைகள் சிக்கித்தான் தவித்தேனே
அக்கறையாய் சிலவார்த்தை ஆதரவாய் சிலவார்த்தை
பக்குவமாய் புரிந்துகொண்ட பாசமுள்ள தங்கச்சி
இக்கரையில் நானிருந்தே இமைமூடி அழுகின்றேன் 

கோபத்தில் சிலவார்த்தை கொட்டித்தான் தீர்த்தேனே
சாபத்தை கொடுத்துவிட்டு சினந்திடும் சிவன்போலே
கோபத்தை பதிலுக்கு கொட்டிவிட்டுப் போனாயோ
கோபத்தில் பேசாமல் கொள்ளாமல் இருக்காதே

ஒன்றையே நினைத்து என்னையே மறந்தால்
அந்நிகழ்வை நாமிங்கு அழைப்போமே தவமென்று
என்னுடைய பாசமிங்கு இப்படித்தான் புரிந்துகொள்
நானுனக்கு அண்ணன்தான் நினைவில்கொள் எப்போதும்

Wednesday, May 14, 2014

பிரிவு



எழுதிய கவிதைகளை
படிக்கச்சொல்லி
உன் கண்முன்னே வைத்துவிட்டுப்
போகிறேன்
கண்கள் மூடிக் கடந்துபோகிறாய்

என் மனதின் வலிகளை
வார்த்தைகளாய் கோர்த்து
உதிர்க்கிறேன்
கேட்டும் கேட்காமலேயே
விலகி நடக்கிறாய்

கடும்வெயிலில் நிற்கிறாய்
நிழலாய் வந்துன்முன் நிற்கிறேன்
நிராகரித்தே நிற்கிறாய்

மழையில் நனைகிறாய்
குடையோடு வந்துனை
அழைக்கிறேன்
கண்கள் உருட்டி
கைகள் உயர்த்தி மிரட்டி
நடைபோடுகிறாய் நதிபோல...

உன் கண்ணீர் கண்டு
கைக்குட்டையோடு வருகிறேன்
கரம் தடுத்து முறைக்கிறாய்

வீட்டு நினைவு வந்ததாய்
வருந்தி நிற்கிறாய்
நீ சாய தோள்கொண்டு வருகிறேன்
உன் வேல்விழியால்
என்மனதை குத்திக் கிழிக்கிறாய்

நான் இறந்தேதான் கிடக்கிறேன்
உன் கண்களில்
கண்ணீர் வந்தும்கூட
கல்நெஞ்சத்தோடு பிரிகிறாய்

Tuesday, May 13, 2014

தவிப்பு


உன் காலடிசப்தம் கேட்டு
கதவிடுக்கில் ஒளிந்துகொண்டு
புன்னகைக்கிறேன்
ஒளிந்து விளையாடும்
குழந்தையைப் போல..

வேகமாய் உள்ளே நுழைந்தாய்
ஒவ்வொரு அறையாய்
தவிப்புடன் தேடுகிறாய்

பரண்மேல் ஏறிப் பார்க்கிறாய்
ஒவ்வொரு தளமாய் தேடுகிறாய்

களைத்துப்போய் ஓய்வெடுக்கிறாய்

விரக்தியுடன் கடந்துபோகிறாய்
என்னை பார்க்காமலேயே...

உன்னை அழைத்தபடி
பின்தொடர்ந்து ஓடிவருகிறேன்

தொடர்ந்து நடக்கிறாய்
என்னை திரும்பிப் பார்க்காமலேயே...

Thursday, May 8, 2014

கேட்காத என் ஓலக்குரல்



இங்கு நானிருந்தேன்

என்னுடைய வளங்கள்
அனைத்தையும்
என்னகத்தே வைத்துக்கொண்டு
இங்குதான் நானிருந்தேன்

செழிப்போடுதான் நானிருந்தேன்

சலசலப்பாய் ஓயாமல்
அசைந்தாடிக் கொண்டிருந்தேன்

துள்ளிக் குதித்திடவும்
அள்ளியணைத்திடவும்
எல்லாமுமாய்
நானே நானாயிருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
நான் என்னை இழக்கத் தொடங்கினேன்

வந்தவர்கள்
என்னை மண்ணிட்டு மூடினார்கள்

கண்ணீர்வழி எனக்குள்ளேயே
உருகிஉருகிக் கண்ணீராகவே
உயிரறுந்து கிடந்தேன்

எனக்குள்ளேயே
சிதைந்துசிதைந்து முடங்கிப்போய்
மூச்சிருந்தும் பேச்சிச்சின்றிக்
கிடந்தேன்

நான் கதறி
கூக்குரலிட்ட போதெல்லாம்
கேட்காமலேயே போனது
என் ஓலக்குரல்

நான்
பொங்கி எழாமலேயே
போய்விட்டேன்

இன்று நான்
நிரந்தரமாகவே இல்லையெனினும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான தடயங்கள்
அழிக்கபட்டுவிட்ட போதினிலும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான
அடையாளங்களை அழித்துவிட்டு
எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஏனோ தெரியவில்லை
இங்குதான் நானிருந்தேனென்று...

Thursday, April 24, 2014

பிறந்தநாள் வாழ்த்து



௨௬-௦௪-௨௦௧௪ அன்று என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் மூன்றாவது பிறந்தநாள். அவனின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய வாழ்த்துக்கவிதை.

வாழ்த்துகிறேன் பிறந்தநாளில் வந்துதித்த எங்களய்யா
தாழ்த்திதலை வணங்குகிறேன் தங்கச்சி மகனாரே
ஆழ்ந்துரைக்க முடியுமெனில் அழகான குழவியடா
வாழ்க்கையிங்கு உன்னோடு வரம்நூறு தாயேன்டா

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே
விளையாடும் அழகைத்தான் விழியசந்து பார்ப்போமே
பழம்பெருமைத் தமிழ்பேசி பண்புடனே வளர்வாயே

அம்பாரி யானையாகி உனையாட்டிடவே நானுண்டு
கொம்புடைய மான்போலே குதித்தோடும் பொன்வண்டு
நம்முடைய தமிழ்போலே நானிலத்தில் நீநின்று
தெம்புடனே நடைபோடு தமிழெங்கள் மூச்சென்று

அம்மையென அப்பனென அழகாக வகுத்தளித்த
செம்மையான சிறப்புடனே சீர்மிகுந்த தமிழைத்தான்
பொம்மையுடன் விளையாடும் புதுமையான பொம்மையே
இம்மைக்கும் மறுமைக்கும் எப்போதும் கற்பாயே

மாமனென்று அழைத்திட்ட மருமகனே மலைத்தேனே
உம்மைவிட அன்பான உறவில்லை இங்கெனக்கு
ஆமென்றும் இல்லையென்றும் ஆராயும் மனிதர்காள்
நமக்குள்ளே இறையுண்டு நீங்காத அன்பினிலே

மழலையிலே தமிழ்பேச மலைத்தேனும் செவிமுட்டும்
அலைகடலும் ஆர்ப்பரிக்கும் அழகேயுன் நடைபார்த்து
சிலைகெஞ்சும் சிரிப்பழகே சொத்தான நல்முத்தே
மலைமுட்டும் வான்போலே மனங்கொண்டே வாழ்வாயே 

Tuesday, April 22, 2014

‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி








என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய கவிதையிது.


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
வண்ணவண்ணக் கவியிசைக்க வார்த்தைவழி கங்கை
அன்னையிங்கு தூரநிற்க அரவணைக்கும் செங்கை

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
சொல்லச்சொல்லக் கரைந்துவிழும் கள்ளமிலா உள்ளம்
அள்ளஅள்ளக் குறையாமல் ஆற்றுங்கவிச் செல்லம்

கங்கைநதி வைகைநதி காவிரியும் காயும்
தங்கையிவள் தமிழ்கேட்க திரையுலகே சாயும்
மங்கையிவள் மொழிகேட்டே மாண்டபுலி பாயும்
சிங்களவன் சிங்கத்தின் செருக்கெல்லாம் மாயும்

கற்பனையின் உச்சம்நின்று கவிக்குயிலும் பாடும்
சொற்குவியல் வற்றாமல் சிந்தைவழிந் தோடும்
கற்றதமிழ் பாடல்களில் களிநடன மாடும்
உற்றதுணைச் சுற்றமெலாம் இவளெங்கே தேடும்

கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
தெவிட்டாத வார்த்தைகளில் துள்ளுமிசை நாணும்
புவியிலிங்கு கூவுகின்ற புதுக்குயிலின் கானம்

அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று

Sunday, April 20, 2014

காங்கிரசை கருவறுப்போம்



தமிழக வாக்காளர்களே, வாக்களிக்கும் நாள் நெருங்கும் வேளையில் சிந்தித்து செயல்படுவது நம் கடமையாகும்.

பரமக்குடியில் நேற்றுமாலை நானொரு வாசகம் கண்டேன் ‘வாக்களிக்க பணம் வாங்கினால் சட்டப்படி குற்றம்’ என்று.

உண்மையில் சொல்லப்போனால் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். கொடுப்பது, ழல் செய்வது குற்றமில்லை. வாங்குவது குற்றமா என்ற கேள்வி என்னுள்ளே எழுகிறது. அவையெல்லாம் நம்மிடமிருந்து வரிகள் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டு பதுக்கிவைக்கப்பட்ட பணந்தான். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். ‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.

வாக்களிக்கும்போது நாம் சிந்திப்பதில்லை. நம்முடைய இந்த முட்டாள்தனத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘அடி கொள்ளை’ என ஊழல் நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில் சோனியாகாந்தி பேசியிருக்கிறாள் ‘காங்கிரசு ஈழத்தமிழர்களை ஆதரித்த கட்சியென்று’. இந்தியாவின் போதைக்கு தமிழர்கள்தான் ஊறுகாய்.

காங்கிரசை கருவறுத்து விடுங்கள்.

‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.


காங்கிரசை கருவறுக்க களமாற்றும் வீரர்காள்
கவனமுடன் செய்வீரே கணக்கைத்தான் முடிப்பீரே
ஆங்காங்கே கூடிநின்ற ஆதித்தமிழ் தோழர்காள்
அறுத்திடுவோம் அவள்நாக்கை அனுமதியோம் அவள்வரவை

ஈழத்தில் தமிழர்களை ஆதரித்த கட்சியென்று
இனிப்பாக பேசிநின்ற இத்தாலி சிறுக்கிதனை
கால்வேறு கைவேறாய் கொடுவாளால் அறுத்திடுவோம்
கொலைமுடிந்த பின்னாலே காங்கிரசு இல்லையிங்கு

ஈழத்தில் அவர்வாழ்வு ஏற்றமிங்கு பெற்றிடவே
இருவிழிகள் எதிர்பார்த்து இதயமுந்தான் கனக்குதடா
இழந்தநிலம் அதிகந்தான் இந்தியாவின் துரோகத்தை
எப்போதும் மறவாமல் இருப்போமே தமிழர்களாய்

புலிகளுடன் போரிட்டு புறமுதுகைக் காட்டித்தான்
புண்ணான புண்ணாக்கு பழம்பெருமை(??) பாரதமே
அலிகளையே ஆசனத்தில் அமர்த்திவிட்டுப் புகழ்பாடும்
அசிங்கத்தைப் பாடிடவே எழுதுகிறேன் இக்கவிதை

நெருநெருப்பாய் எழுதோழா நெஞ்சமெலாம் கொதிக்குதடா
நினைவினிலே தமிழீழம் நிச்சயமாய் நீதிவெல்லும்
செருசெருப்பாய் இந்தியாவில் செந்தமிழும் மெதுமெதுவாய்
சாவதற்கு முன்னாலே சிந்திப்போம் செயல்படுவோம்

Tuesday, January 21, 2014

பறவையின் சிறகசைப்பில்...

இளைப்பாற இடம்தேடி
ஓர் மரக்கிளையில்
வந்தமர்கிறது
அந்தப் பறவை.

கூரிய அலகால்
கோதிவிடுகிறது
தன் சிறகை...

அப்பறவை அமர்ந்திருந்த
அந்த மரக்கிளை
எப்போது வேண்டுமானாலும்
முறிந்து விழலாம்.

அப்பறவையை பிடிக்க
வேடனுங்கூட
குறிவைத்து வலை வீசலாம்
விஷம் தடவிய அம்பை
எய்யத் தயாராயிருக்கலாம்
அம்மரத்தில்
ஏற்கனவே குடியிருக்கும்
இன்னபிற பறவைகளால்
துரத்தியடிக்கவும் படலாம்
அந்தப்பறவை...

நச்சுப் பாம்புகளால்
ஆபத்தும் நேரலாம்
அப்பறவைக்கு...

எவ்விதச் சலனமுமின்றி
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு
சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறே
சிறகசைக்கத் துவங்குகிறது
அந்தப் பறவை.

Tuesday, December 17, 2013

சாய்வு நாற்காலி

காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
அந்த சாய்வு நாற்காலி.

பால்ய வயதில்
அதில் நான் அமர்ந்த போதெல்லாம்
அடிக்க வருவதாய் பயமுறுத்தி
அன்பாய் அணைக்கும்
இரு கைகள்

தேநீர் குவளையை
அவள் வைக்கும்போதெல்லாம்
மரணிக்கும் நிசப்தம்

அவள் திட்டும்போதெல்லாம்
‘இவளுக்கு வேறு வேலையில்லை’
என்றே நமட்டுச்சிரிப்போடு
செய்தித்தாளின் பக்கங்களோடு
ஒன்றிப்போகும் அவரின் கண்கள்

சிறுநீர் கழிக்கப்போவதாய்
பொய் சொல்லிவிட்டு
பஞ்சு எடுப்பதிலிருந்து
கொல்லைவழியே தப்பித்தோடி
மாடிவீட்டு ஜன்னலின்வழியே
நான் கால்கடுக்க நின்று
ஒளியும் ஒலியும்
பார்த்த பரவசம்

பேருந்து ஓட்டுவதாய்
நினைத்தபடி பயம்போக்க
சத்தமிட்டுக்கொண்டே
ஓடிவந்த என்னுடைய கால்கள்

பூனைபோல் கொல்லைவழி
நான் உள்ளே நுழைந்தாலும்
எங்கிருந்தோ வரும்
காற்றை கிழித்துக்கொண்டு...
அவளின் குரல்.

‘எங்கடா போன கழுத?’
என்று தன் மனைவியான அவளுக்கு கேட்கவே
உரக்க என்னை அதட்டிவிட்டு
என் பக்கம் வந்தபின்
உச்சிமுகர வருவதாய் 
மெல்ல வருடும்
அந்த வேல்கத்திமீசை

அதிகாலை
பனிப்போர்வையை விலக்கிக்கொண்டு
காளைகளை  கூட்டிக்கொண்டு
கலப்பையை தோளில் சுமந்துகொண்டு
ஏரோட்ட போய்...
பள்ளிக்கு நான் புறப்படும்போது
நீராத்தண்ணி குடிக்க
வயிற்றுப்பசியோடு
உழைத்துக் களைத்து
ஓடிவந்த அவரின்  கால்கள்...

வானம்பார்த்து
குடையை எடுக்கும் அவரது கணிப்பு
எப்போதும் தவறானதே இல்லை

அதிர்ந்து பேசாத அவர் உதடுகள்
அவளை சமாதானப்படுத்தும்
நேரம்போக...

காளைகளையும் பசுக்களையும்
தன் பேச்சால் தலையாட்ட வைக்கும்
மெ(மே)ன்மை..

காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
தாத்தாவின் அந்த சாய்வுநாற்காலி.

Tuesday, December 10, 2013

மழையெச்ச நாளொன்றில்...

வெயிலில் 
தலையுலர்த்திக் கொண்டிருந்தது 
நேற்றுபெய்த மழையில் 
தொப்பலாய் நனைந்த 
அந்தக் குடிசை.
பெய்த மழையாய் 
கூரைவழி எட்டிப்பார்த்தது 
மேகத்தின் கண்ணீர் 
ஏழைகளின் வாழ்க்கையை...

மெதுமெதுவாய் 
மேகப்போர்வையை விலக்கி 
சோம்பல் முறித்தெழுந்தான் 
தன் சுட்டெரிக்கும் 
ஒளிக்கதிர் பற்கள் காட்டி...

குடிசைக்குள் 
மழைநீர் குளமாய்...
மிதக்கும் பாத்திரங்கள்...

கைகால்கள் நடுநடுங்க
சோர்வாய் திண்ணையில் 
குழந்தைகள்.

கடலோடு வலைவீசி 
கயல்தேடிக் கரைதிரும்பாக் 
கணவன்.

கால்கடுக்க
வாசலில் நின்றவாறு 
தெருமுனையை வெறிக்கப்பார்க்கும்
அவள் 

புயலின் கூரிய நகங்கள் 
பிய்த்து எறிந்திருந்தன
குடிசைகளின் கூரைகளை...

ஆறுதல் சொல்வதற்காய்
பறக்கும் ஹெலிகாப்டரும்...
பார்வையிடும் கண்களும்...
அடுத்தநாள் தலைப்பு செய்திக்காக... 

அண்ணார்ந்து பார்த்து 
வேதனை மறந்து
கைதட்டும் சிறுவர்சிறுமியர்

கரையொதுங்கியே கிடக்கிறது  
மீனவன் வாழ்க்கை.

மழைநின்றதாய் 
பெருமூச்சு விடும்போது 
கூரைவழி கொட்டத்துவங்குகிறது 
புயலோடு பெருமழை...

Sunday, November 17, 2013

குளம்படி சப்தங்கள்

ஆளரவம் எதுவுமில்லை
நள்ளிரவு நிசப்தம்

கேட்டுக்கொண்டே இருக்கின்றன
குளம்படி சப்தங்கள்
காதுகளில்...

எந்தத் திசைநோக்கியும்
செல்லலாம்
அந்தக் குதிரை

கடிவாளமும் அணிந்திருக்கலாம்
காற்றாய் பறக்கும்
அந்தக் குதிரை

கனமழை பொழிவதற்காய்
கூடிய மேகங்களை
கலைத்துவிட்டும் போகலாம்
அந்தக் குதிரை

தூக்கத்திலிருந்து பலரை
தட்டியெழுப்பியிருக்கலாம்
அதன் கணைப்பொலி

நிச்சயமாய் ஒருவன்
அமர்ந்திருப்பான்
அதன்மேல்...

என்ன அவரசம்
அந்தக் குதிரைக்கு?

கேட்டுக்கொண்டே இருக்கின்றன
குளம்படி சப்தங்கள்
காதுகளில்...

Sunday, September 15, 2013

வீதிவழியே ஒரு பயணம்

வந்து போனதற்கான
தடயங்கள் ஏதுமின்றி
அமைதியாய்க் கிடக்கின்றது
அந்த வீதி

மணம்வீசி
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன
அந்த மலர்கள்

துள்ளித் திரிந்த
மழலைகளும்
நின்று கவனிக்கின்றன
விபரமேதும் அறியாமல்...

கண்கள் கலங்கும்
வானம்

வீதிவழி மௌனமாய்
ஒரு பயணம்

நெஞ்சமெங்கும்
பிரிவின் வலி

நெருப்பை அணைக்க முயன்று
தோற்றுத்தான் போகின்றன
அந்தக் கண்ணீர்த் துளிகள்

Wednesday, August 14, 2013

அந்தக் காகத்தின் மரணம்

துருப்பிடித்த
இரயில் தண்டவாளமது

அதன்மீது இரயில் சென்றே
பலமாதங்கள் ஆகியிருக்கலாம்

அதன் மிகஅருகில்
காகமொன்று இறந்துகிடக்கிறது

மரணம் நிகழ்ந்து
சிலநாட்கள் ஆகியிருக்கலாம்

இரத்தமில்லை
உடலில் காயங்கள் இல்லை

மின்சாரக் கம்பிகள் உரசியதால்
மின்சாரம் பாய்ந்து
இறந்து கீழே விழுந்திருக்கலாம்

இன்னபிற காகங்கள்
இன்னமும் அதே இடத்தைச் சுற்றிச்சுற்றி
கரைந்து கொண்டிருக்கின்றன
வருத்தத்தைப் பதிவு செய்யவும்...
மரணத்தைத் தெரிவிக்கவும்...

தம் முன்னோர்கள்
காகங்கள் என்பதால்
கைகள் கூப்பி வணங்குகிறான்
அந்த வழிப்போக்கன்
மரணித்த அந்தக் காகத்தை...