Showing posts with label கவிதைகள் (பாகம் - 5). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 5). Show all posts

Wednesday, August 31, 2011

மழை!

மழையை தலைவியாகவும் காதலியாகவும் பூமியை மழைக்காதலியின் தலைவனாகவும் காதலனாகவும் உருவகப்படுத்தி எழுதிய கவிதை இது.


சிங்கத்தமிழனின்
அங்கமெலாம் நனைக்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

இடியிசை முழங்க
மின்னலெனும் ஒளிவாங்கி
வேகவேகமாய்
தாகம் தீர்க்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

அஞ்சியஞ்சி வந்து
கொஞ்சிக்கொஞ்சி விளையாடும்
பிஞ்சு முல்லைகளின்
நெஞ்சம் நனைக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கெஞ்சும் மழையே!!

மண்ணாய்க் கிடந்த மண்ணை
பொன்னாய் மாற்றவந்த
சின்ன மழையே! – எங்கள்
வண்ண மழையே!!

பயிர்களின் உயிர்காத்து – உலக
உயிர்களின் உயிர்காக்க வந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

பஞ்சம் பஞ்சம் என
தஞ்சம் கேட்டவர்கள்
எம் தமிழ்மக்கள்! – அம்
மக்களின் வாழ்க்கையை
வஞ்சம் தீர்க்கும் மாக்களை
கொஞ்சம் கொஞ்சமாய் தாக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கொஞ்சும் மழையே!!

பறவையை பறக்கவைப்பது
இறக்கை!
உன்னை பிறக்கவைப்பது
இயற்கை!!

மாதம் மும்மாரியாய் பொழிந்தவள் நீ
இன்று கருமாரியை வணங்கியும்
பூமியில் ஒருமாரியைக்கூட கொடுக்கவில்லையே...!!
பூமி உன் காதலனோ...
கார்காலத்தில் கூடலோ...
ஏர்காலத்தில் பாடலோ...
தவழ்கிறாயே அவன் மடியில்!!

கோடையில் ஊடலோ...
கோபமோ அவனுடன்...
சேர மறுக்கிறாயே...!!

உன் ஊடலில்
கோபம் கொள்வது
உன்னவன் மட்டுமல்ல...
உலக மக்களுந்தான்!!

மௌனம்!

என்னைச்சுற்றி
அனைவரும்
என்னைப்பற்றி
தவறான புரிதலுணர்வோடு
பழகும்போது – என்
உள்ளம் அழும்!
உதடுகள் சிரிக்கும்!
கண்ணீர் முட்டிக்கொண்டு
வரும்!!

அந்தத் தருணங்களில்
எல்லாம்
மௌனமே
மிகச்சிறந்த மொழியெனப்படுகிறது
எனக்கு!!

காதல்!

உலக மக்களால்
அதிகம் பேசப்படும்
உலகப் பொதுமொழி!

தனிமை!

காலம் எனக்கு
மரணஅடி கொடுக்கும்போதேல்லாம்
தன்மடியில் உறங்கவைத்து
தாலாட்டு பாடும்
என் இன்னொரு அம்மா!
என் தனிமை!!

காரணமே இல்லாமல்
நான் அவமானப்படும்போதெல்லாம்
என் அவமானங்களை
வெகுமானங்களாய்
மாற்றித்தந்த மந்திரவாதி!
என் தனிமை!!

தோல்விமேல்
தோல்வி வரும்போதெல்லாம்
எனக்கு தற்கொலைக்கு பதிலாய்
தன்னம்பிக்கையைக்
கற்றுக்கொடுத்த ஆசான்!
என் தனிமை!!

ஆறுதலுக்காய்
தாய்மடி தேடும்போதெல்லாம்
மன மாறுதலுக்காய் – என்
தாய்மொழி பேசும்
என்னுயிர்த்தோழன்!
என் தனிமை!!

சாப்பிடக்கூட...
தூங்கக்கூட நேரமில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும் என்னை
இந்த நொடிகளில்
உங்களோடு கவிதைவடிவில்
பேசச்சொல்லி – எனக்கு
நேரத்தை ஒதுக்கித்தரும்
கடிகாரம்!
என் தனிமை!!

ஒரு வழிசொல்!

என் சிறுவயதில்
என் குலதெய்வத்திற்கு
முடியிறக்க வேண்டுமென்று
முடிவெடுத்து – என் தலையில்
முடிவளர்த்து வந்தாள்
என் அம்மா!!

என் தலைமுடிக்கு
பொட்டுவைத்து
திருஷ்டி பொட்டெல்லாம் வைத்து
என் கறுப்பான முகத்தைக்கூட
கலையாக இரசித்தாள்!

நம் கவிதைக்குழந்தைகளுக்கும்
முடியிறக்கலாமென்று
முடிவெடுத்தேன்!
என் மனைவியான நீ
என்னோடு சேரவேண்டுமென்று
வேண்டிக்கொண்டு...

அவர்களை என்னோடு
கோயிலுக்கு அழைத்தேன்!

அவர்களின் அம்மாவான
நீ இல்லாமல்
எங்கும் வரமறுக்கிறார்கள்!

ஏதேனும்
ஒரு வழிசொல்!

மனமெனும் குரங்கு!

கொட்டும் மழையில்
குடைகள் இன்றி
உனக்கும் எனக்கும்
நனைந்திடப் பிடிக்கும்! – கைக்

கெட்டும் தொலைவில்
வானம் வந்தால்
வளைத்துப் பிடித்து
வானவில் செய்வோம்! – மனக்

கட்டுப் பாட்டை
நாமும் வளர்த்தால் – நம்
கட்டளைப் படியே
மனமும் கேட்கும்! – கொஞ்சம்

விட்டுப் பிடிப்போம்
என்றே நினைத்தால்
கொட்டிக் கவிழ்க்கும்
மனமெனும் குரங்கு!!