Wednesday, September 29, 2010

எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி!

விளக்கொளியை தேடிமடியும்
விட்டில்பூச்சிகளைப் போல்
மாலைப்பொழுதின் மயக்கத்தில் - விலை
மாதரைத் தேடி அலைவதும் ஏனோ?

அறிவியலைச் சொல்லி
புரிய வைத்தாலும்
எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி
என்பது புரிவதில்லை உனக்கு!

தூசிபடிந்த ஊசி!
கட்டிலுக்கு வரும் வேசி!
இப்படி நீ பேசி
பொழுதைக் கழிக்காமல் யோசி!!

வருமுன் காப்போம்
என்பதே நம்கடமை!
வந்தபின் பார்ப்போம்
என்பதெல்லாம் மடமை!

ஒருவனுக்கு என்றுமே ஒருத்தி
என்பதை மனதில் நிறுத்தி
நீ வாழ்நதுவந்தால்
எய்ட்ஸ் வருமா உனைத்துரத்தி?!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-09-2007

மண்வாசம்!

மேகங்கள் சிந்திய
வியர்வைத்துளிகள்
மண்ணை முத்தமிட்டதால்
உண்டான வேதியியல் மாற்றம்!!

கண்ணீர்!

விழிகள் சிந்தும்
வியர்வைத்துளி!!

பாசம்?

குளம்குட்டைகளில்
தேங்கியிருக்கிறது!
மனிதமனங்களிருந்து
நீங்கிக் கொண்டிருப்பது!!

என் மனைவி!

நான்
வயதுமுதிர்ந்தவனானாலும்
எப்போதும் என்னை
சிறுகுழந்தையாகவே அரவணைக்கும்
என் இன்னொரு தாய்!!

நீ!

என்னை
கவிதை எழுத வைத்த
என் முதல்கவிதை!!

பெற்றோர்!

கடவுளின்
நேரடித் தூதுவர்கள்
இவர்கள்!!

உன்னால்தான்!

பெண்ணே...
நான் வாழ்ந்துகொண்டே
சாவதும் உன்னால்தான்!

நான் சிரித்துக்கொண்டே
அழுவதும் உன்னால்தான்!!

புதுமொழி!

அவனின்றி
ஓரணுவும் அசையாது!
இது இறைமொழி!! - என்
அவளின்றி என்னுள்
உயிரணுக்கள் அசையாது!
இது காதல்மொழி!!

சாதனைகள் தூரமில்லை!

சத்தியத்தின் பாதைவழி
சரிசமமாய் நாம்நடந்தால்
நித்திரையில் கண்டகனா
நிஜமாகும் பாரீர்!

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்றுசொல்லி
உச்சத்தைத் தொடத்துணிந்த
உயர்வு நம்முளத்தில்!

தத்துவத்தை படைத்த - பழந்
தமிழர்கள் நாம்தானே!
சாதனைகள் தூரமில்லை
சாதிப்போம் வாரீர்!!