Tuesday, September 27, 2011

தாய்மை!

நீண்டதொரு சாலையில்
மிதிவண்டியை இழுத்தபடியே
என்னோடு
பேசிக்கொண்டே நடந்தாய்
நீ!

நாமிருவரும்
தற்காலிகமாய் பிரியவேண்டும்
என்பதை
குறிப்பால் உணர்த்தியது
சாலையின் பிரிவு!

என்னிடம் விடைபெற்றபடியே
சாலையின் வலதுபுறமாய்
அழுத்தினாய் நீ
உன் மிதிவண்டியை!

என் கண்ணைவிட்டு
நீ மறையும்வரை
உன்னை
பதைபதைக்கும் உள்ளத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்!!
நடைவண்டியை தள்ளிக்கொண்டு
உற்சாகமாய்க் கிளம்பும்
தன் குழந்தை
கீழே விழுந்துவிடக்கூடாது
எனத் தவிக்கும்
தாய் போலவே...

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. திண்ணை (இணைய இதழ்) – 02-10-2011

2. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 13-11-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

நம்காதல்!

மறுதேர்வெழுத
வந்திருந்தாய் நீ!

தேர்வறைக்கு வெளியே
தேவதை உனைக்காண
தேர்வு முடியும்வரை
காத்திருந்தேன் நான்!

தேர்வெழுதி முடித்தபின்
தேர்வெழுதியதைப் பற்றி
என்னிடம் பேசியபடி
நடந்தாய் நீ!
தேவதையுன் அழகைப்பற்றி
என்னிடம் பேசியபடி
நம்மோடு சேர்ந்து
நடந்தது நம்காதல்!

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 02-10-2011

இறவாக் காதல்!

எனக்கு
நினைவு தெரிந்த
நாட்களுக்கு முன்பிருந்தே
என்தாயை எனக்கு
நன்றாகவே தெரியும்!
கருவறையில் என்னை
பத்துமாதம்
சுமந்து பெற்றவள்
என்பதால்...

என் கண்களுக்கு
நிலவு தெரிந்த
நாட்களுக்கு முன்பிருந்தே
என்தோழி உனை
எனக்கு
நன்றாகவே தெரியும்!
என்மேல்
பலகாலமாய்
காதலுற்றவள்
என்பதால்...

கருவுற்றால் பிறப்பது
குழந்தை!
காதலுற்றால் பிறப்பது
கவிதை!!

கருவில் பிறக்கும்
எல்லோருமே ஓர்நாள்
நிச்சயமாய் இறப்போம்!
நம் காதலில் பிறக்கும்
எந்தக் கவிதையுமே
இறக்கப் போவதில்லை!!
நம் காதலைப் போல...

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 02-10-2011

Monday, September 26, 2011

நிலவழகி!

எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக்கொண்டிருக்கும்
உன் அழகைப்
பார்த்து இரசிக்க
மேகக் கூட்டங்களை
விலக்கியபடியே
முண்டியடித்துக் கொண்டு
வந்து நிற்கிறது
அந்த நிலா!!

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 02-10-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

3. பூவரசி (இணைய இதழ்) – 18-10-2011

மஞ்சள் நிலவு!

மஞ்சள்நிறச் சூரியனை
நீள்வட்டப் பாதையில்
சுற்றிவருகின்றன
கோள்கள்!

மஞ்சள்நிற நிலவான
உன்னை
அழகுவட்டப் பாதையில்
சுற்றிச்சுற்றி வருகிறேன்
நான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

நிலாவும் நீயும்!

இரவில்
மொட்டைமாடியில்
வானத்து நிலாவைக் காட்டி
எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக் கொண்டிருக்கிறாய்
நீ!

வானில்
தன் குழந்தைகளான
விண்மீன்களுக்கு
உன்னைக் காட்டி
ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது
அந்த நிலா!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

Sunday, September 25, 2011

உலக அதிசயம்!

ஒரு பெண்
இன்னொரு பெண்ணைப்
பார்த்து வெட்கப்படுவது
உலக அதிசயந்தான்!

தேவதையே...
உன்னைப் பார்த்த
அந்த நிலா
வெட்கத்தில்
மேகங்களுக்குள்
ஒளிந்து கொள்கிறதே...

இது
உலக அதிசயந்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

இது கலவிநேரம்!

விழிகளில் காதல் வழியும் நேரம்!
விரக தாபமோ விரலி னோரம்!
மொழியாய் மௌனம் முனகல் பாரம்!
முத்தங்க ளிடவே நூலிழை தூரம்!!

உடைகள் எல்லாம் உதறிச் செல்லும்!
உதடும் உதடும் கவ்விக் கொள்ளும்!
படைகள் வந்தும் பதறா உள்ளம்!
படுக்கை மீதே அழைத்துச் செல்லும்!!

கால்க ளிரண்டும் பின்னிக் கொள்ள
காலம் நேரம் மறந்து செல்ல
தோள்க ளிரண்டும் தொட்டுக் கொள்ள
தொடர்ந்து நானோ என்ன சொல்ல?


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

2. இராணிமுத்து - 01-01-2013

எதிர்காலம் நம்கைகளில்...

மண்குதிரையை நம்பி
ஆற்றில் இறந்குவதுபோல் – ஒரு
பெண்ணை நம்பி
பொன்னான நேரத்தை
வீணாக்காதே!

இலட்சியங்கள் எல்லாம்
நம் கைக்கெட்டும் தூரந்தான்!
அலட்சியம் செய்தால்
நம் வாழ்க்கையே பாரந்தான்!!

தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டு
சுறுசுறுப்புடன் வாழ்வது கண்டு – நாம்
முயற்சியோடு போராடுவது நன்று!!

நம் இலட்சியப் பாதையில் – நாம்
சந்திக்கும் தடைகள் ஓராயிரம்! – என்றும்
நம் வாழ்வில் சாதிக்க
தன்னம்பிக்கைதானே ஒரே ஆயுதம்!!

தோல்விகள் தந்த பாடங்கள் எல்லாம்
எதிர்கால இலட்சியத்தின்
ஏணிப்படிகள் தானே நண்பா!

சூரியனை நோக்கிப் பறக்கும்
பீனிக்ஸ் பறவை போல்...
கண்ணில் தீப்பொறி பறக்க – இம்
மண்ணில் புதுநெறி பிறக்க...
தன்னம்பிக்கை சிறகோடு
இலட்சிய வானில்
இலக்கு நோக்கிப் பற!!

மதில்மேல் பூனையல்ல
நம் எதிர்காலம்!
எம்மிளைஞனின் கைகளில் தான்
என்தேசத்தின் எதிர்காலம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

Wednesday, September 21, 2011

முயற்சி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் தலையில் குட்டுமடா...
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா...!!

ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும்
இருவிழி திறந்தால் வெளிச்சம் பிறக்கும்!
பலநாள் தோல்வி சிலநாள் வெற்றி
முயன்றே பார்த்தால் நிரந்தர வெற்றி!!
இரும்பாய் மனதை இறுகப் பற்றி
விரும்பி உழைத்தால் வந்திடும் வெற்றி!
கருவறைக் குழந்தையும் காலால் உதைக்கும்!
கருவறை தாண்டக் கற்றிடும் முயற்சி!!
பச்சிளங் குழந்தையும் பசியால் அழுமே
பாலுண்ண வேண்டி பயிலும் முயற்சி!
தளர்ந்த வயது தாத்தா கூட
தடியும் பிடித்து நடப்பதும் முயற்சி!
கருவறை தொடங்கி கல்லறை வரையில்
அழுகை தேடல் எல்லாம் முயற்சி!
வெற்றிகள் கிடைத்தால் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தோல்விகள் வந்தால் வேண்டாம் அயற்சி!
தூங்கும் பாறையும் தகுந்த உளியால்
தட்டத் தட்டத் திறக்குது சிற்பம்!
தோல்விகள் தாங்கும் வன்மை மனமே
தொடர்ந்த வெற்றிகள் தாங்கிடத் தகுதி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் தலையில் குட்டுமடா...
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011