Sunday, April 1, 2012

நடைபாதை வீடு

நாளுன்னும் பாக்காம
பொழுதுன்னும் பாக்காம
நாங்கஇங்க உழைச்சாலும்
ஓடாத்தான் இளைச்சாலும்
நாணயத்துக்கு மதிப்பில்லே
நாஸ்டா துண்ண வழியில்லே
நடைபாதை வீடாச்சு
நாங்கவிடும் பெருமூச்ச்சு
நாட்டின் பெயரு இந்தியாவாம்

விலைவாசி உயர்ந்திடுச்சு
விளைநிலமும் விலையாச்சு
விவசாயம் நலிஞ்சுடுச்சு
கிராமந்தான் வெறிச்சாச்சு

பால்விலையும் உயர்ந்தாச்சு
பஸ்டிக்கெட் உயர்ந்தாச்சு
டாஸ்மாக் கடைகளிலே
கோடிகளில் வசூலாச்சு

இலவங்கள் தந்தாச்சு
மூளைச்சலவை செஞ்சாச்சு
எங்களுடைய வரிப்பணத்தை
ஏப்பமிங்கு விட்டாச்சு

கோடிகோடி ஊழலாச்சு
பணமுதலை பெருகிடுச்சு
அரசியலும் இங்கேதான்
பணம்சுருட்டும் தொழிலாச்சு

கவுன்சிலர்கள் எல்லோரும்
கல்லாவை நிரப்பியாச்சு
 
எல்லாமே இங்கேதான்
உயர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
எங்களுடைய வாழ்க்கைமட்டும்
இப்படியே இருக்குதய்யா...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்
கோணம் (இணைய இதழ்) - 02-04-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

 

Wednesday, March 14, 2012

ஊற்றாகும் மின்சாரம்

விலைவாசி உயர்வாலே
விழிபிதுங்கி நிற்குதய்யா
ஏழைபாழை – இங்கு
தொல்லையான மின்தடையால்
தூங்கித்தான் போனதய்யா
தொழிற்சாலை

நாள்முழுதும் மின்தடையால்
நகரங்கள் கூடஇப்போ
நரகமடா! – இங்கு
நாளெல்லாம் யுகமாக
நிமிடமிங்கு வருசமாக
நகருதடா!!

தொழிலெல்லாம் முடங்கிடவே
தொழிலாளி வருந்திடவே
மின்தடை – இங்கு
ஏழைகளின் உதடுகளில்
இல்லாமல் போனதய்யா
புன்னகை

சந்தையிலே கிடைக்கின்ற
சரக்காகிப் போனதய்யா
மின்சாரம்! – ஆட்டு
மந்தையைப்போல் நாமெல்லாம்
மாக்களாகிப் போனதென்ன
சமாச்சாரம்!!

மரங்களையே வெட்டுகின்றோம்
மழைபெய்ய வேண்டுமய்யா
மரநேயம்! – இனி
மரம்வெட்ட வேண்டாமே
மதம்வெட்ட வளர்ந்திடுமே
மனிதநேயம்!!

மரங்களையே வளர்த்திட்டால்
மழையிங்கு வீசுமய்யா
காற்றாக! – இனி
மரம்சிரிக்கும் மழைகுதிக்கும்
மழைநீரில் மின்சாரம்
ஊற்றாக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

காதலடி!

மாநிலம் புகழுதடி – உன்
மாநிற மேனிகண்டு
கர்வந்தான் கூடுதடி – உன்
கார்மேகக் கூந்தல்கண்டு
காதலும் வழியுதடி – உன்
கருவண்டு விழிகள்கண்டு
மேனி சிலிர்த்ததடி – உன்
மீன்விழிப் பார்வைகண்டு
சொக்கித்தான் விழுந்தேன்டி – உன்
செந்நிற இதழ்கள்கண்டு
ஆசையுந்தான் கூடுதடி – உன்
ஆன்மீக நெற்றிகண்டு
மோகந்தான் கூடுதடி – உன்
மூங்கில் தோள்கள்கண்டு
கவிபாடத் தோணுதடி – உன்
கழுத்தழகை நானுங்கண்டு
நெஞ்சந்தான் விரும்புதடி – உன்
நூலவிழும் இடையைக்கண்டு
பாட்டெழுதத் தோணுதடி – உன்
பாதமிரண்டின் அழகுகண்டு
முத்தமிடத் தோணுதடி – உன்
முன்னழகை நானுங்கண்டு
செத்துவிடத் தோணுதடி – உன்
செங்காந்தள் விரல்கள்கண்டு
பாசமும் கூடுதடி – உன்
பார்போற்றும் குணத்தைக்கண்டு



இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

வெற்றிமாலை சூடவா!

தலைமுடியைக் குறைப்பதுபோல்
தலைக்கனத்தையும் குறை! – உன்
தன்னம்பிக்கை துளிர்விடட்டும்

விடாமுயற்சியை
உன் மூச்சென சுவாசி
மூச்சு நின்றால் – உன்
உயிர் போய்விடும்
முயற்சியைக் கைவிட்டால்
உன் வாழ்க்கையே போய்விடும்

கவலைகளை நீகொஞ்சம் ஒதுக்கு
பல திறமைகளை உன்னுள் பதுக்கு
உன்னையே நீகொஞ்சம் செதுக்கு

சமுதாயத்தின் பழிச்சொற்களை
உரமென ஏற்று
மரமென வளர்ந்து
விருச்சமாய் நிழல்கொடு

விறகுபோலே வெந்தழலாகி
வேதனையில் மூழ்கி
வீழ்ந்தது போதும்

துன்பமெலாம் போதும் – பட்ட
துன்பமெலாம் போதும்
தொடர்ந்துவரும் தோல்விகள் – உன்
திறமையாலே வெற்றியாகும்

அந்த இமயத்தில்
வெற்றிக்கொடியை நட்டு
உன் இதயத்தில்
வெற்றிப்பறையைக் கொட்டு

வீழ்வதற்கல்ல மனிதவாழ்க்கை
வாழ்வதற்கே மனிதவாழ்க்கை – உன்னில்
வளரட்டும் தன்னம்பிக்கை வேட்கை – உன்
முயற்சியால் சூடவா வெற்றிமாலை

Wednesday, February 15, 2012

விளையாட்டு!

புகைவண்டியில்
பயணம்...!

தொட்டிலில் அழுத
சுட்டிக் குழந்தையிடம்
கைகளால் கண்களை மூடி
பே சொல்லி
விளையாடினேன்!

விளையாட்டு தொடர்ந்த
பத்து நிமிடங்கள் வரை
சிரித்து மகிழ்ந்தது
குழந்தை!

ஓய் ஓய் என
என்னை அழைத்தபடி
கண்களை கைகளால் மூடி
என்னோடு விளையாடத்
தொடங்கியது
பால்மனம் மாறாத
பச்சிளங்குழந்தை!!

Wednesday, December 21, 2011

பாட்டாளியின் பாடல்

தங்கமே தில்லாலே ஏலே
தங்கமே தில்லாலே

நாடுபோற நிலயப் பாரு
தங்கமே தில்லாலே
நாமெல்லாம் எப்டி வாழ?
தங்கமே தில்லாலே

விலைவாசி ஏத்தத்தால்
தங்கமே தில்லாலே
வெறும்வயிறு பட்டினிதான்
தங்கமே தில்லாலே

விவசாயம் நாங்க செய்றோம்
தங்கமே தில்லாலே
விலைய எவனோ நிர்ணயிப்பான்
தங்கமே தில்லாலே

நாளெல்லாம் நாம் உழைக்க
தங்கமே தில்லாலே
நாணயஸ்தன் போல்நடிப்பான்
தங்கமே தில்லாலே

உண்டுறங்க இடமில்லை
தங்கமே தில்லாலே
ஊழலிலே திளைக்கின்றான்
தங்கமே தில்லாலே

இலவங்கள் தருவதெல்லாம்
தங்கமே தில்லாலே
இளிச்சவாயன் ஆக்கத்தான்
தங்கமே தில்லாலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

2. இராணி - 22-01-2012

3. பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

புத்தாண்டு கொண்டாட்டம்(?????)

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!

உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்

கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-12-2011

2. நம் உரத்தசிந்தனை - 01-01-2013

3. வெற்றிநடை - 01-01-2013

4. தமிழ்முரசு - 27-12-2012

5. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012

Tuesday, December 6, 2011

காதல் வரம்!

கடவுளை நோக்கித்
தவமிருந்து
கடவுளிடமே
வரம் பெற்றார்களாம்
முனிவர்கள்!

காதலை நோக்கித்
தவமிருந்து
காதலிடமே
வரம் பெற்றவன்
நான்!

Friday, November 25, 2011

புடவைமாடல்அழகி!

என் குடும்பத்தைக்
காக்கும்
காவல்தெய்வம்
சுடலைமாடசாமி!
என்னைக்
காக்கும்
காதல்தெய்வம்
புடவைமாடல்அழகி நீ!!

Tuesday, November 22, 2011

ஆப்பைத் தேடிப்போய் அமர்ந்த தமிழக மக்கள்...

வடிவேலுவின் கீழ்க்கண்ட சில நகைச்சுவை வசனங்கள் தான் கடந்த சில வாரங்களாக தமிழக மக்களிடம் அதிருப்தியாக, வயிற்றெரிச்சலாக வெளிவருகின்றது.
மாப்பு... வச்சுட்டாய்யா ஆப்பு...
நல்லா கெளப்புறய்யா பீதிய...
அதிமுக விற்கு வாக்களித்து ஆப்பைத் தேடிப்போய் அமர்ந்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு வாக்கு என்ற பலம் வாய்ந்த பிரம்மாஸ்திரத்தை கைகளில் வைத்திருந்த தமிழக மக்கள் டாஷ்மாக்குக்காகவும் இலவசங்களுக்காகவும் ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விட்டோம். அதோடு தன்மானத்தையும் சேர்த்துத்தான். இனி நான்கரை ஆண்டுகள் வரை தமிழக செம்மறி ஆடுகளாகிய நாம் இவளுக்கு கொத்தடிமைகள் தான்.
பாரதி பாடினான்
ரௌத்திரம் பழகு
என்று புதிய ஆத்திசூடியில்.
மத்திய அரசு தமிழக அரசை வஞ்சித்து விட்டதாக ஜெயலலிதா சொல்கிறாள். இதனால் தமிழக நிதித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது. அதற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே விலையுர்வு அவசியம் என்றாள். ஜெயலலிதா சொல்வது நம்பும்படியாக இல்லை. அருமையான திரைக்கதை. கடந்த ஜூன் அல்லது ஜூலை மாதம் மத்திய அரசிடம் சென்று கேட்டாளாம். மத்திய அரசு நிதி இல்லை என்றதாம். ஏன் அப்போதே நிதி நிலையைப் பற்றி யோசிக்க நேரமில்லையா என்ன? உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்று பயந்து உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே நாடகமாடியிருக்கிறாள் கொள்ளைக்கார ஜெயலலிதா. இப்போது சிப்பாய்கள் முதல் மாநகர மேயர்கள் வரை இவள் காலடியில். பேருந்து பயணச்சீட்டு விலை, பால் விலை, மின்சார விலை ஆகியவற்றை தாறுமாறாக உயர்த்தியிருக்கிறாள் இந்த அறுபது வயதைத் தாண்டிய பாட்டி.
1. நியாயப்படி பார்த்தால் ‘எனக்கு தமிழகத்தை நிர்வாகம் செய்ய போதுமான திறமையில்லை’ என தமிழக மக்களின் முன்னிலையில் கூறி ஜெயலலிதா முதலில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதலில் யோக்கியமா? இவளே ஒரு ஊழல் குற்றவாளி. இவளிடம் உள்ள கோடிக்கணக்கான சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை தமிழக கஜானாவில் கொண்டுவந்து கொட்டினால் தமிழக அரசின் கஜானா நிரம்பி வழியுமே. மத்திய அரசிடம் நிதி வேண்டும் என கையேந்த வேண்டிய நிலை இருக்காதே. இவள், கருணாதி குடும்பம், இராசா ஆகியோர் கொள்ளையடித்த பணமெல்லாம் இவர்கள் அப்பன் வீட்டு பணமா? இல்லை. என் அப்பன் வீட்டு சொத்து. உன் அப்பன் வீட்டு சொத்து. நம்முடைய வரிப்பணம். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அம்மையார் அடித்த கொள்ளையை அனைவரும் மறந்திருப்பீர்கள். செருப்பில் ஊழல், சுடுகாட்டில் ஊழல், இன்னும் பலபல (நினைவுபடுத்திப் பாருங்கள். அப்படியே இவளின் வளர்ப்பு மகன் சுதாகரன் அடித்த கொள்ளையை, இவள் தோழி சசிகலா அடித்த கொள்ளையை கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.). எங்கே நினைவுபடுத்திப் பார்ப்பது? ‘யாருக்கோ கஷ்டம். நமக்கில்லை நஷ்டம்.’ என்பது தான் தமிழக மக்களின் இறையாண்மை. குழந்தை பெற்றுக்கொள்வதற்கான விந்தணுக்களின் வீரியத்திற்கு பெயர் மட்டுந்தான் ஆண்மை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெண்டாட்டியை கர்ப்பமாக்குவதற்குப் பெயர்தான் ஆண்மை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆண்மை என்பதற்கு வீரம் என்றொரு பொருளும் தமிழில் உண்டு.
2. 2G அலைக்கற்றை ஊழல் வழக்கில் பல ஆயிரம் கோடிகள் எங்கே? அது சரி. தெருக்கோடியை மட்டுமே சுற்றி வந்த பாமரனக்கு, அன்றாடங்காய்ச்சிக்கு கோடி என்பதன் பொருள் தெரியாததில் வியப்பேதும் இல்லை. சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என்று செய்தி வெளியானதே. என்ன ஆனது? சமயம் பார்த்து கொள்ளையடிப்பது தான் இந்திய அரசியல் நாகரீகமா?
3. டாஸ்மாக்கில் வரும் கோடிக்கணக்கான பணம் எங்கே? இவள் நியாமாக சம்பாதித்து தின்று கொழுத்திருந்தால் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. நம்முடைய வரிப்பணத்தையே சுரண்டி தின்று கொழுத்த இவளுக்குப் பெயர் ‘அம்மா’. அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் தமிழகத்தில் நாம் வாழ்கிறோம்.
4. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் குளிர்சாதனப் பேருந்துகளையும், சொகுசுப் பேருந்துகளையும், டாஸ்மாக்கையும் நாம் அனுமதித்தது தவறு. இப்போது இது பூதகரமாக வளர்ந்து நிற்கிறது. திமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாற்றும் இவள் திமுக அறிமுகப்படுத்திய குளிர்சாதனப் பேருந்துகளையும், சொகுசுப் பேருந்துகளையும், டாஸ்மாக்கையும் மாற்றி நியாய விலையில் பேருந்து பயணக்கட்டனத்தை நிர்ணயிக்கலாமே. எல்லாமே கொள்ளையடிக்கும் ஆசைதான். சுயநலம் தான். அரசியல் காழ்ப்புணர்ச்சி தான். நாம் அனைவரும் ஜெயலலிதா என்ற பூதத்தின் காலில் கிடக்கும் கால்பந்துகள். இனி இவள் எப்படி வேண்டுமானாலும் நம்மை உதைப்பாள். வலிக்கத்தான் செய்யும். அழக்கூடாது. சிரிக்கவேண்டும். சிரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் அனைவருமே பொட்டைகளாக, பேடிகளாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
5. அம்மன் கோயில்களுக்கு நேர்ந்து விட்ட ஆடுகளைப் போல சிங்களர்களின் இரத்த வெறிக்கு பலியாகும் தமிழக மீனவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின், மன்மோகன் சிங்கின் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
6. தமிழக மக்களாகிய நாம் அனைவரும் ஜெயலலிதா என்ற பூதத்தின் காலில் கிடக்கும் கால்பந்து என்றால் இந்திய மக்களாகிய நாம் அனைவரும் மன்மோகன் சிங்கின் காலில் கிடக்கும் செருப்புகள். அவன் சொகுசாக வாழ நம்மை கல்லிலும் முள்ளிலும் நடக்க வைப்பான். இரத்தம் வரும். துடைத்துக் கொள்ள வேண்டும். அழக்கூடாது. அழுவது ஆண்மகனுக்கு வீரமல்லவே. வெண்கலக் குத்துவிளக்கு சோனியாகாந்தியின் கருத்துக்களுக்கு தலையாட்டி பொம்மையாய் கின்னஸ் சாதனை படைக்கிறான் இவன். இந்தியாவை உலக வங்கியிடமும் உலக நாடுகளிடமும் பிச்சையெடுக்க வைத்ததற்கு மன்மோகன் சிங்கிற்கும் இத்தாலி இறக்குமதி சோனியாவுக்கும், ஏனைய காங்கிரஸ் ஊழல்வாதிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள் பலபல. அடுத்தடுத்து நீங்களே ஆட்சிக்கு வந்து இன்னும் பல கொள்ளைகள் அடிப்பீர்கள் என நம்புகிறேன்.
7. இந்திய, தமிழக அரசியல் கொள்ளையர்களுக்கு ஒரு நற்செய்தி. எங்கள் அனைவருக்குமே short term memory loss. எனவே, நீங்களே இந்தியாவையும் தமிழகத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். கருணாநிதி போல் குடும்பத்துடனோ அல்லது ஜெயலலிதா போல் தனியாகவோ, தோழியுடனோ, வளர்ப்பு மகனுடோ சேர்ந்து கொண்டு கும்மியடிக்கலாம், மஞ்சக்குளிக்கலாம்.
8. நேயர்களே, பால், பெட்ரோல், மின்சாரம், பேருந்து கட்டண விலையுயர்வு வாரத்தை முன்னிட்டு நம் பிச்சைக்காரன் தொலைக்காட்சியில்...
அ. இலவசங்களை வாரி வாரி வழங்கி உழைத்து உண்ண நினைக்கும் தமிழக மக்களை சோம்பேறிகளாய் மாற்றியதில் யாருக்கு அதிக பங்கு? ஜெயலலிதாவுக்கா? கருணாநிதிக்கா? சாலமன் பாப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். வரும் ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்கு.
ஆ. ஊழலில் விஞ்சி நிற்பது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் குழுவா? கருணாநிதி, கனிமொழி, இராசா, சிதம்பரம் குழுவா? திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் சிரிக்க வைக்கும் பட்டிமன்றம். ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு.
இந்நிகழ்ச்சிகளை உங்களுக்காக இணைந்து வழங்குபவர்கள்.
a. அபேஸ் இன்சூரன்ஸ் (சாகும் போதும் செத்த பிறகும்)
b. அய்த்தலக்கா பேங்க்
c. டாஸ்மாக் நற்பணி மன்றம்
d. பாய்சன் ரெஸ்டாரன்ட் a/c
e. மன்மோகன் சிங், சோனியா காந்தியின் பெட்ரோல் விலையேற்றம் Pvt Ltd., (ஸ்வீட் எடு, கொண்டாடு)
f. கொள்ளையன் பொறியியல் கல்லூரி.
நேயர்களே நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள். தெருத்தெருவாய் பிச்சையெடுங்கள்.

ஆப்பைத் தேடிப்போய் அமர்ந்திருக்கிறோம். அவ்வளவு எளிதில் நம்மை நாமே விடுவித்துக் கொள்ள முடியாது.

வாழும் வகையை இன்றைய நடைமுறை உலகில் பொருளாதார அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
1. வாழ்தல் (living) – ‘How are you? நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘I am fine. நான் நன்றாக வாழ்கிறேன்’ என்று சொல்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.
2. இருத்தல் (existing) - ‘How are you? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘I am fine. நான் நன்றாக இருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.
3. பிழைத்தல் (surviving) - ‘How are you? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘வயிற்றெரிச்ச்சலை கிளப்பாத ய்யா’ என சொல்ல முயற்சித்து முறைத்துப் பார்த்துக் கொண்டு செல்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.

தமிழர்களே, தமிழச்சிகளே, மேற்சொன்ன மூன்று வகைகளில் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என நாம் தான் சிந்திக்க வேண்டும்.


இக்கட்டுரை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) - 24-11-2011