Saturday, July 27, 2013

படைப்புகள் குறித்த வரவேற்புகளில் சிலவற்றைப் பற்றி...

BCC மூலமாக மின்னஞ்சல்கள் அனுப்புவது பற்றியும் அதற்கான முக்கியத்துவத்துவத்தை பற்றியும் படித்தும் இருக்கிறேன். நண்பர்கள் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். பொதுவாகவே நான் எப்போதும் மின்னஞ்சல்கள் அனுப்பும்போது BCC (Blind Carbon Copy) மூலமாகவே அனுப்புவதை வாடிக்கையாக்கியிருந்து வந்திருக்கிறேன். சில வாரங்களுக்கு முன் உடல் சோர்வினாலும் களைப்பினாலும் to வைத்து நான் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் தேவையில்லாத மனவருத்தத்தை உண்டாக்கி விட்டது. ஒரு குழுமத்தில் உள்ள ஒரு சில நல்ல நண்பர்களை, அன்பர்களை இழக்க வேண்டியதாயிற்று. நான் என்ன செய்வது? அது போன்றதொரு சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். 

இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சில கட்டுரைகளைப் பற்றி இருவரின் விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்தன. 

முதலாவது, கவிஞர். வதிலைபிரபா அவர்களின் என் எழுத்தின் மீதான அக்கறையான விமர்சனம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் வத்தலக்குண்டு ஊரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்த போது சில மணிநேரங்கள் பேசியபோது இடையே என்னுடைய (அரசியல், சமுதாய அக்கறை குறித்தான) மின்னஞ்சல்களில் கடினமான வார்த்தைப்பயன்பாடுகள் குறித்து "தங்களின் பெரும்பாலான மின்னஞ்சல்களில் வன்மையான, கடினமான harshஆன வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்" என்பது போன்ற ஒரு கருத்தையும் சொன்னார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன் அழகு இராட்சசி நூல் வெளியீட்டு நிகழ்விற்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்னுடைய அறைக்கு ஐயா வந்தபோதும் கூட என்னிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் "சமூக அநீதிகளுக்கு எதிராக நம்முடைய மாற்றுக்கருத்தை, எதிர்ப்பை கட்டாயம் எழுத்தின்மூலம் பதிவு செய்யத் தான் வேண்டும். ஆனால், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவருடைய உருவத்தை வைத்து அவரை விமர்சனம் செய்வது எழுத்தாளர்களுக்கு நல்லதல்ல. அதற்காக சமூக அக்கறையை, சமூக அவலங்களுக்கு எதிராக தம்முடைய மாற்றுக்கருத்தை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை" என்ற பொருள்பட அவர் சொன்ன கருத்து என்னைச் சிந்திக்க வைத்தது. 

இரண்டாவது, நண்பர். தினைக்குளம் இரமேஷ் அவர்களின் விமர்சனம். பரமக்குடிக்கு அருகில் உள்ள ஊர் தினைக்குளம். அதனாலேயே அவருக்கு என்மீது தனிப்பட்ட அன்பு. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம், பால், பேருந்து பயணச்சீட்டு கட்டண உயர்வு குறித்தான என்னுடைய ஒரு கட்டுரைக்காக "அனைவரையும் சிந்திக்க வைக்கும் கட்டுரை. ஆனால், தரக்குறைவான வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்." என்ற பொருள்பட அவருடைய விமர்சனம் என்னைச் சிந்திக்க வைத்தது. 

இந்த இரண்டு விமர்சனங்களாலும் "தாங்கொணா துன்பங்களை இந்திய ஊழல் ஆட்சியாளர்களாலும், தமிழ்நாட்டு ஊழல்வாதிகளாலும் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் அனுபவித்து வருகிறோம். இருந்தாலும் கூட நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமே ஒழிய எந்தவிதத்திலும் தரக்குறைவான வார்த்தைகள் என்னுடைய படைப்புகளில் வந்துவிடக்கூடாது" என்ற எண்ணத்தை மனதில் வைத்து கடந்த ஒன்றரை வருடங்களாக எழுதி வருகிறேன். கவனம் செலுத்தி வருகிறேன். 


கடந்த மூன்றாண்டுகளில் முதல் இரண்டாண்டுகளில் ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சல் ஊடங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு என்னிடமிருந்து போய்விடும். கடந்த ஓராண்டாக குடும்பப் பொறுப்புகள், வேறு சில கடமைகள் காரணமாக படைப்புகள் தொடர்பாக மின்னஞ்சல்கள் அனுப்புவதற்கான நேரம் ஒதுக்குவது குறைந்து விட்டது. 

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னை spencer plaza வில் 'கூடுகள் சிதைந்தபோது' புகழ் அகில் அண்ணா (தமிழ் ஆத்தர்ஸ் இணைய இதழின் ஆசிரியர்) உடனான சந்திப்பில் என்னிடமிருந்து தனக்கு அடிக்கடி கவிதைகள் தொடர்பாக மின்னஞ்சல்கள் வருவதைப் பற்றியும் பேசினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து வெளிவரும் புதுவசந்தம் மாதமிருமுறை இதழின் ஆசரியர் ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து என்னுடைய மின்னஞ்சல்கள் குறித்தும் படைப்புகள் குறித்தும் பேசினார். 

சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் 'நம் உரத்த சிந்தனை' இதழின் ஆசிரியர் திரு. உதயம் இராம் அவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அலைபேசி எண்ணுக்கு முதல்முறை பேசும்போது "தங்களுடைய படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு எங்களுடைய கணினியில் தமிழ் எழுத்துரு தொடர்பாக பிரச்சனைகள் உள்ளன. எனவே, அஞ்சலில் அனுப்புங்கள்."  என்றார். மீண்டும், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி எண்களுக்கு அழைத்து "தங்களுடைய கவிதை ஒன்றை அனுப்புங்கள். வெளியிட வேண்டும்." என்றார். அனுப்பி வைத்தேன். 'நம் உரத்த சிந்தனை' இதழில் முதல்முறை வெளிவந்திருந்தது. அந்த இதழில் என்னுடைய புகைப்படத்துடன் என்னுடைய பெயரான முனைவென்றி நா. சுரேஷ்குமார் என்பதற்குப் பதிலாக முனைவர் நா. சு. சுரேஷ்குமார் என்று வெளிவந்திருந்தது. சில நாட்கள் கழித்த பிறகு சென்னையிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "முனைவர் சுரேஷ்குமார் இருக்கிறாரா?" என்றார். எனக்குப் புரிந்து விட்டது. அதன்பிறகு நான் "ஐயா, நான் முனைவர் இல்லை. நான் எதிலும் முனைவர் பட்டம் பெற்றதில்லை. என்னுடைய பெயர் முனைவென்றி நா. சுரேஷ்குமார். என்னுடைய பெயரை இந்த மாத இதழில் பிழையாக வெளியிட்டு இருக்கின்றனர்." என்றேன். அவர் அந்த கவிதை குறித்து பேசினார் "கவிதை நன்று." என்றும் அந்த கவிதையில் ஒரு சில வரிகளின் வார்த்தையைக் குறிப்பிட்டு தான் நினைத்த வார்த்தையைச் சொல்லி அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பொருள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் என்று சொன்னார். அவருடைய விமர்சனத்திற்கும் பரிந்துரைக்கும் நான் நன்றி சொன்னேன். 

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியர் (அவர் பெயர் சட்டென்று நினைவில் வரவில்லை.) என்னுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினார். நான் அலுவலகத்தில் இருந்தேன். இரவு ஏழு மணி இருந்திருக்கும் "வணக்கம் ஐயா, நான் தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியர் (தன்னுடைய பெயரைச் சொன்னார்) பேசுகிறேன் ஐயா. தாங்கள் பெயரென்ன ஐயா. தாங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? எங்கு தங்கியிருக்கிறீர்கள்?" என்று என்னைப் பற்றி கேட்டார். நான் சொன்னேன். "தாங்களின் கவிதையைப் படித்தேன். அந்தக் கவிதையை என்னுடைய இதழில் வெளியிடலாமா ஐயா?" என்றார். "தாரளாமாக வெளியிடலாம் ஐயா? தாங்கள் படித்து விட்டு தங்களுக்கு தங்களுடைய இதழில் வெளியிட விருப்பம் இருந்தால் வெளியிடுவதற்காகத் தான் நான் அனுப்பியிருக்கிறேன். என்னுடைய எந்தக் கவிதை ஐயா?" என்றேன். 

தமிழனக் கென்று தாய்நா டிரண்டு 
தரணியில் வேண்டும் தோழா வாடா 

என்று தொடங்கும் கவிதை என என்னுடைய "தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_2673.html)" என்ற கவிதையின் முதல் இரண்டு வரிகளை பாடிக் காட்டினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். "இதுபோன்ற கவிதைகளை எந்த ஒரு ஊடகமும் வெளியிட மறுக்கும். அப்படியே வெளியிட்டால், இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும். எந்த ஒரு ஊடகமும், ஊடக ஆசிரியரும் அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்." என்று மனதில் நினைத்துக் கொண்டு ஆச்சர்யத்தோடும் மகிழ்ச்சியோடும் "தாராளமாக வெளியிடுங்கள் ஐயா. உங்கள் இதழின் மூலம் பலரும் இந்தக் கவிதையைப் படிப்பார்கள். அவர்களுக்குள்ளும் ஒரு மன அதிர்வு, மன எழுச்சி ஏற்படும்" என்றேன். "தங்களின் இதழின் பெயர் தமிழர் நாடு தானே" என்றேன். "தமிழர் நாடு என்று தான் பதிவு செய்யப் போனோம். இதழின் பெயரை தமிழர் நாடு என்று பெயர் வைப்பதற்கு இந்திய அரசாங்கம் மறுத்து விட்டது. அதனால் தமிழர் எழுச்சி என்று வைத்து விட்டோம். நான் வயது முதிர்ந்தவன் ஐயா." என்றார். அதன்படி இந்தக் கவிதை அவருடைய இதழில் வெளிவந்தது. அவருக்குள் என்னுடைய இந்தக் கவிதை ஒரு மன அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 

என்னை நினைவில் வைத்து மீண்டும் அவரே சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு பேசினார். "தங்களுடைய படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்கள் தற்போது சில மாதங்களாக எனக்கு வருவதில்லையே. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. அனுப்புங்கள் ஐயா. தங்களின் நண்பர்களையும் என்னுடைய thamizharnadu@yahoo.com, என்ற மின்னஞ்சலுக்கு தமிழர் எழுச்சி தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், படைப்புகளை அனுப்பச் சொல்லுங்கள் ஐயா. இலண்டனில் சொற்பொழிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்கள். செல்கிறேன். வரும் ஜூன் அல்லது ஜூலை இறுதியில் தான் சென்னை வருவேன்." என்றார். 

அழிவின் விளிம்பில் தமிழின மில்லை
மொழியின வெறியால் மூண்டது தொல்லை
வழிவழித் தமிழன் வலியின் பிள்ளை

ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுதிய "நாம் தமிழர் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/05/blog-post_02.html)" என்ற கவிதையை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த காலகட்டம். இரவு எட்டரை மணி இருக்கும், தாம்பரம் சனட்டோரியம் மின்சார ரயிலில் ஏறுவதற்காக வேகமாக நடந்து கொண்டிருக்கிறேன். இரயில் கிளம்பப் போகிறது. அழைப்பு வருகிறது. "நாங்கள் வெல்லும் தூயதமிழ் மாத இதழில் இருந்து பேசுகிறோம். தாங்களின் பெயர் என்ன? தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? தாங்களின் அம்மா அப்பா எங்கு உள்ளனர்?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்டார். இந்தக் கவிதையின் தாக்கத்தில், மன அதிர்வில் தான் நான் ஈழத்தைச் சேர்ந்தவனோ என்ற சந்தேகத்தை மனதில் வைத்தபடி கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு "நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் தான் ஐயா." என்றேன். "எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்றார். பிறகு சொன்னேன். இந்தக் கவிதை இவருடைய மனதை அதிர வைத்திருக்கிறது. 

நான்கு மாதங்களுக்குமுன்பு  ஒருநாள் ஞாயிறு இரவு பதினொரு மணி சுவிட்சர்லாந்தில் இருந்து அங்கு உள்ள பண்பலையின் அறிவிப்பாளராகவும் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் உள்ள ஈழத் தமிழச்சி தங்கை. பாமினி முதல் முறையாக என்னுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள். (புதிதாக வெளிவரப் போகும் சித்திரை வீதி திரைப்படத்தில் ஒரு பாடல் உட்பட பல திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறாள்.) "அண்ணா, நான் பாமினி கதைக்கிறன்." என்றாள். ஏற்கனவே முகநூலில் நட்பு வட்டத்தில் இருப்பதால் உடனே "சொல்லுங்கள்." என்றேன். "இந்த நேரத்தில் அழைக்கலாமா என்று தெரியவில்லை. இப்போது அங்கு என்ன நேரமிருக்கும் என்பதை கவனிக்க வில்லை. தங்களின் படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்களை நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது படிப்பேன். சமீபத்தில் படித்த ஒரு மின்னஞ்சலில் கட்டுரை அருமையாக இருந்தது  அண்ணா. நான் பேசுவது தங்களுக்குப் புரிகிறதா அண்ணா?" என்றாள். "நான் வேறு மொழியிலும் நீங்கள் வேறு மொழியிலுமா பேசுகிறோம். இருவரும் நம்முடைய தாய்மொழியான தமிழில் தானே பேசுகிறோம். நன்றாகப் புரிகிறது. என்ன ஒரு குறை நான் பேசும் தமிழ் உங்களுக்கு கொஞ்சம் இழுத்துப் பேசுவது போல் வித்தியாசமாகவும் நீங்கள் பேசும் தமிழ் எனக்கு கொஞ்சம் இழுத்துப் பேசுவது போலவும் இருக்கும். மற்றபடி நன்றாகப் புரிகிறது. இந்த இளம் வயதிலேயே திரைப்படங்களில் பாடல்கள் எழுதுகிறீர்கள்." என்றேன். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. எனக்குத் தெரிந்த தமிழை வைத்துக் கொண்டு எழுதுகிறேன். அவ்வளவு தான்." என்றாள். 

சில நாட்கள் கழித்த பிறகு குவைத்திலிருந்து வித்யாசாகர் அண்ணா பேசும்போது "தங்கை பாமினி என்னிடம் பேசினாள் அண்ணா" என்றேன். உடனே "அவள் நல்ல தங்கையாயிற்றே. சிலமுறை, அவள் அழைத்துவிட்டு யார் கதைக்கிறீங்கள் என்று விளையாடுவாள்." என்றார்.

சில நாட்கள் கழித்து, அண்ணா சொன்னது போல், என்னுடைய அலைபேசி எண்ணுக்கு பாமினி அழைத்தாள். "யார் கதைக்கிறீங்கள், யார் கதைக்கிறீங்கள்" என்று இரண்டு முறை கேட்டு விளையாடி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். அதன்பிறகு இரண்டுமுறை பேசியிருக்கிறாள். நல்ல அன்பான தங்கை அவள். 

கடைசியாக அகில் அண்ணா, கனடாவிலிருந்து பேசும்போதும் இதே போல் "யார் பேசுகிறேன் என்று கண்டுபிடியுங்கள்?" என்று விளையாடினார். 

நம்மிடம் அன்பு, பொறுமை என்ற இரண்டு குணங்களும் இருக்கும்வரை நாம் தாழ்ந்துவிடப் போவதில்லை.

Saturday, July 20, 2013

நமக்கு நாமே மருத்துவர் – செவிவழி தொடு சிகிச்சை மருத்துவ நிபுணர் திரு. கோவை பாஸ்கர்

அனைவருக்கும் வணக்கம்.

ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு நான் வேலைபார்த்த பழைய அலுவலகத்தில் என்னோடு வேலைபார்த்த அன்பர் திரு. கமாலுதீன் என்பவர் திரு. கோவை பாஸ்கர் அவர்களின் ‘செவிவழி தொடு சிகிச்சை’ குறித்த காணொளிகளை (video) எனக்குக் கொடுத்து பார்க்கச் சொன்னார். ‘பாருங்கள். தங்களுக்கு உதவியாக இருக்கும் அண்ணா.’ என்றார்.

என்னுடைய மெத்தனத்தினாலும் வேறுசில காரணங்களாலும் அவர் எனக்குக் கொடுத்த காணொளிகளை பார்க்கவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்து அந்த காணொளிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பார்த்து முடித்து விட்டேன். மீண்டும் பலமுறை பார்க்க வேண்டும். அப்போதுதான் மருத்துவ அறிஞர் திரு. கோவை பாஸ்கர் சொன்ன பல கருத்துகள் மனதில் ஆழமாக பதியும். புரியும்.
எட்டு மாதங்களுக்கு முன்பே அந்த அன்பர் கொடுத்த காணொளிகளை பார்க்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம் இருந்தது. அதன் முக்கியத்துவம் இப்போது தான் புரிகிறது.

‘அரசாங்கமும் பணமுதலைகளும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்? எப்படியெல்லாம் மருத்துவம், அறுவை சிகிச்சை என்ற பெயரில் வழிப்பறி செய்து நம்முடைய பணப்பையை பதம் பார்க்கின்றனர்’ என்பது இவர் குறித்த அனைத்து காணொளி கோப்புகளையும் கேட்பர்களுக்கு, பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் அக்காமாலா, கப்சி யை வெள்ளையர்களிடம் பேரம் பேசும்போது புலிகேசியாக வரும் வடிவேலு நகைச்சுவைக்காக ‘மக்கள் எப்படி நாசமாய் போனால் நமக்கென்ன? நமக்குக் கிடைக்கக் கூடிய பங்குத்தொகை (commission) கிடைத்தால் போதும்’ என்பார். அந்த வசனங்கள் நகைச்சுவைக்காக மட்டுமல்ல, நிஜத்திலும் அது உண்மை. அரசாங்கம் பணமுதலைகளுக்கு ஜால்ரா தட்டுகின்றன. அரசாங்கத்தை தன் கைகளுக்குள் போட்டுக் கொண்டு மக்களிடம் மருத்துவம், அறுவைசிகிச்சை என்ற பெயரில் வழிப்பறி செய்கின்றன.

உலக மருத்துவமே தவறு என்கிறார் இவர்.

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்றார்கள் நம் முன்னோர்கள். இவர் உணவை எப்படி உண்ண வேண்டுமோ அப்படி உண்டால்தான் அது மருந்து’ என்கிறார்.

ஜெயா தொலைக்காட்சி, இலங்கையின் சக்தி தொலைக்காட்சி உட்பட பல நிலையங்கள் இவரை நேர்காணல் செய்திருக்கின்றன.
‘நாம் குடிக்கும் குடிநீரை கொதிக்க வைக்க வேண்டும் என்பது தவறு. சாதரன் தண்ணீரில் பல சத்துப் பொருட்களும் சில கிருமிகளும் உள்ளன. குடிநீரை கொதிக்க வைப்பதால் கிருமிகளோடு சத்துப் பொருட்களும் இல்லாமல் போகின்றன. ஒரு நாளைக்கு நாம் சுவாசிக்கும் சாதாரண காற்றில் பல இலட்சம் கிருமிகள் உள்ளே செல்கின்றன. ஆனால் அவை நம் உடலை பாதிப்பதில்லை. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமிகள் நம் உடலை பாதிக்காத வகையில் நம் உடலே மருத்துவராக செயல்படுகையில் தண்ணீரை ஏன் கொதிக்க வைக்க வேண்டும்? தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும் என்றால் காற்றையும் கொதிக்க வைத்துத் தானே சுவாசிக்க வேண்டும்.’ என்ற தர்க்க ரீதியான வாதத்தை நம் முன்னே வைக்கிறார்.
பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பில் விலங்கியல் (zoology) பாடத்தில் மதிப்பெண்களுக்காக படித்தோம். ஆனால் அது மதிப்பெண்கள் வாங்க மட்டுமே பயன்பட்டதே தவிர நம் உடலைப் பற்றிய அறிவை, நம் உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவர் என்ற அறிவை நமக்கு தரவே இல்லை. ஏனெனில் இத்தனையும் தெரிந்தால், மாத்திரை மருந்துகள் விற்பனையாகாமல் போய்விடும் என்று பயந்து போய் அரசாங்கத்தை கைக்குள் போட்டுக் கொண்ட பணமுதலைகள் அதற்கு மேல் மருத்துவம் (M.B.B.S.,) சார்ந்து படிப்பவர்களுக்கே சொல்லித் தரவில்லை என்பதே உண்மை.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன.

‘பள்ளியில் கற்ற கல்வி
சொல்லிக் கொடுக்கவில்லை
வாழ்க்கையை எப்படி
வாழ்வது என்று...’

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே என்றார் திருமந்திரத்தை எழுதிய திருமூலர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் உயிர் என்ற பறவை இந்த உடம்பெனும் கூட்டினுள் குடிகொள்ளும். இந்தக் கருத்தை வைத்தே நான் எழுதிய பிணம் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/09/blog-post_6352.html) என்ற கவிதையில் எழுதிய இரண்டு வரிகள்.

'உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!'

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது தமிழர்களின் பொன்மொழி. இது உடல்நலத்திற்காக சொல்லப்பட்டது. சுவர் என்பது இங்கு உடல்நலத்தைக் குறிக்கிறது.

திரு. பாஸ்கர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டு போகையில் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப தான் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக சொல்கிறார். அதற்கேற்ப தற்போது பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணமாகி மேடைகளில் பேசுகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

என்னைப் போலவே இந்த இழையைப் படிப்பவர்கள் மெத்தனமாக இருந்து விட வேண்டாம். உடனடியாக பார்க்கவும்.

இந்த இழையை என்னால் முடிந்த வரை பலருக்கும் அனுப்பியிருக்கிறேன். மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். காணொளிகளை பார்த்துக் கேட்டு விட்டு உங்கள் பதில்களைச் சொல்லுங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள், தாய்மார்கள், மூத்த குடிமக்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வரிசைக்கிரமமாக பார்த்தால் தான் பார்ப்பவர்களுக்கு கேட்பவர்களுக்கு புரியும் என்பதால் வரிசைக்கிரமமாக செவிவழி தொடு சிகிச்சை (Anatomic Theraphy) குறித்தான காணொளிகளுக்கான இணைய இணைப்புகளை இங்கு தொகுத்துத் தந்திருக்கிறேன்.

இணையத்தின் மூலம் வெகுநேரம் செலவு செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் Mozilla Firefox உலவியில் (Browser) Easy Youtube Video downloader என்ற கூடுதல் செயல்பாட்டு நிறுவியை (Additional Add on) நிறுவுவதன் (install) மூலம் இந்த காணொளிகளை தரவிறக்கம் (download) செய்து இணைய இணைப்பு இல்லாமல் பார்க்கலாம், கேட்கலாம். என்னால் காணொளிகளை பல மணிநேரம் அமர்ந்து பார்ப்பது கடினம். நான் அடிக்கடி பயணம் செய்பவன் என்று நினைப்பவர்கள் கேட்பொலி கோப்புகளாக (Audio files) தரவிறக்கம் செய்து கொண்டு உங்கள் அலைபேசியில் பாடல்கள் கேட்பது போலவே இதனையும் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

இவர் தன்னுடைய மருத்துவத்தின்மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல் புற்றுநோய், சிறுநீரகக் கல் போன்றவற்றைக் குணப்படுத்தலாம் என்கிறார். காணொளிகளை பல முறை கேளுங்கள்.

உடலில் உள்ள உறுப்புகளில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் இறந்து புதிய செல்கள் உருவாகும்போது ஐந்தாண்டுகளாக கண்ணில் குறைபாடு என்று சொல்வது தவறானது என்கிறார்.

தொண்ணூறு விழுக்காடு சிறுநீரகம் பழுதடைந்த ஒருவர் இவர் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு ரூபாய் செலவில்லாமல் அடுத்த நாற்பத்தெட்டு மணிநேரத்தில் மாற்றங்கள் தெரியும் என்கிறார்.

 இவர் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு ரூபாய் செலவில்லாமல் புற்றுநோய், கேன்சர், எய்ட்ஸ் முதலான பலவற்றை எளிதில் குணப்படுத்த முடியும் என்கிறார்.

வெளியிலிருந்து வராமல் (தீக்காயம், விபத்து, குண்டு பாய்தல், கத்தி பாய்தல் தவிர) உடலுக்குள்ளேயே வந்த நோய்களை இந்த வழிமுறைகளால் குணப்படுத்த முடியும் என்கிறார்.

இலாப நோக்கமில்லாமல், வியாபார நோக்கமில்லாமல் சமூக அக்கறையோடு ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.

http://anatomictherapy.org/tamilbookdownload.html

-----------------------------------------------

http://www.anatomictherapy.org/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று இவரைப் பற்றிய தகவல்களை அறியலாம்.

இவருக்கான முகநூல் பக்கம் - https://www.facebook.com/pages/Healer-Baskar/184740001572861

Saturday, July 6, 2013

தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பகல் கொள்ளையடிக்கும் நடத்துநர்களும் அரசாங்கமும்

பிரபஞ்ச வாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அடியேனின் வணக்கம்.

பணம் சம்பாதிக்கவும் நிம்மதியாக வாழவும் இந்த பிரபஞ்சம் முழுக்க பரவி வாழும் ஈழத் தமிழர்களே, தமிழ்நாட்டுத் தமிழர்களே தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை அரசாங்கம் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று கேளுங்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் எப்படியெல்லாம் வாழ்வதற்கு அனுதினமும் அல்லல் படுகிறார்கள் என்று கேளுங்கள்.

கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் மதுரை இரயில் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பரமக்குடி செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டியிருந்தது.

மதுரை இரயில் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்வதற்கு காத்திருந்தால் அனைத்துப் பேருந்துகளும் சொகுசுப் பெருந்துகளாக இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐம்பது நியாய விலைப் பேருந்துகளுக்கு ஒரு சொகுசுப் பேருந்து என்ற நிலை தலைகீழாக மாறி தற்போது ஐம்பது சொகுசுப் பேருந்துகளுக்கு ஒரு நியாய விலைப் பேருந்து என்ற நிலை தான் தற்போது நிலவுகிறது. இந்த நிலை மதுரையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்களிலும் இதே நிலை தான்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடி செல்வதற்கு தனியார் பேருந்துகள் அனைத்தும் அரசு நிர்ணயித்த ரூ. 34 வாங்கும்போது அரசுப் பேருந்துகளை இயக்கும் நடத்துநர் ஓட்டுனர்கள்  அனைவரும் பேருந்தின் முன்னாலும் பின்னாலும் 1 to 1, point to point, Nonstop, Express என்று எழுதப்பட்ட பதாகைகளை ஒட்டி அரசு நிர்ணயித்த ரூ. 34 வாங்காமல் அவர்கள் இஷ்டப்படி ரூ. 45 முதல் ரூ. 50 வரை வாங்குகின்றனர். இவர்களாகவே நிர்ணயித்து கொள்ளையடிக்கிரார்களா அல்லது அரசாங்கம் முடிவு செய்து கீழ் நடுத்தர (lower middle class) மற்றும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பை மறைமுகமாக உறிஞ்சுகின்றனரா என்று தெரியவில்லை.

ஒரு காலத்தில் இராமேஸ்வரத்திலிருந்து பரமக்குடி வழியே தாம்பரம் வரை செல்லும் பயணிகள் இரயிலில் கட்டணமாக ரூ. 50 வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. பயணிகள் இரயில் எல்லா நிலையங்களிலும் நின்று செல்வதால் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகமாக பயண நேரமாகலாம் என்ற ஒரே ஒரு சங்கடம் தான். ஆனால், ஒரு சிலர் தங்களின் சுய லாபத்திற்காகவும் ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளையடிக்கவும் முடிவு செய்து பயணிகள் இரயில் அனைத்தையும் விரைவு இரயில் என்ற பெயரில் மறைமுகமாக கட்டணத்தை இரண்டு மடங்காக்கி தற்போது ரூ. 150 என நிர்ணயித்துள்ளனர்.

இதே யுக்தியைப் பயன்படுத்தி சொகுசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பேருந்துகளிலும் இரண்டு மடங்காக கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

எத்தனையோ கூலித் தொழிலாளிகள் தினம் கூலி வேலை செய்து வாங்கி செலவு சேமிப்பு என செய்ய முடியாமல் அநியாய கட்டணத்தை முனகியபடியே இப்படி ஏமாறுகின்றனர் என்பது தெரியவில்லை.

நான் சென்னையில் கடந்த ஏழு வருடங்களாக தங்கியிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக சென்னைக்குள்ளும் சரி பரமக்குடிக்கு செல்வதற்கும் சரி வேறு வழியே இல்லாத சூழலைத் தவிர மற்ற சூழல்களில் பேருந்துகளைப் பயன்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறேன். முடிந்தவரை மின்சார இரயிலோ அல்லது இரயிலோ தான் பயன்படுத்தியிருக்கிறேன்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பேருந்து கட்டணம் உயர்த்தப் பட்ட போது சென்னை மாநகரத் தந்தையாக திரு. சைதை துரைசாமி பதவியேற்ற கால கட்டம். முகநூல் வாயிலாக "ஏற்கனவே திமுக ஆட்சியில் பேருந்துகளை எல்லாம் சொகுசு என்று மாற்றி கொள்ளையடிக்கின்றனர். தற்போது அதிமுக ஆட்சியில் விலையுயர்வு என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றனர். சொகுசு என்ற பெயரில் சென்னை மாநகரத் தந்தையாக பொறுப்பேற்றிருக்கும் நீங்களும் கொள்ளையடிக்கப் போகிறீர்களா? இந்த நிலையை மாற்றி சாதாரணக் கட்டணப் பேருந்துகளை இயக்கப் போகிறீர்களா?" என்று கேட்டு விட்டு அப்போது நான் எழுதிய இரண்டு கவிதைகளின் இணைய இணைப்புகளை அனுப்பி வைத்திருந்தேன்.

பகல் கொள்ளை - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/10/blog-post_1166.html

பே(தா)ய்நாடு - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/10/blog-post_8183.html

அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் பல மாவட்ட ஆட்சியாளர் பணியிடங்களுக்காக ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி என சமுதாய தொண்டாற்றுகிறார் என்ற சூழலில் தேர்தலில் அவரை மாநகரத் தந்தையாக வெற்றி பெற வைத்தார்கள் மக்கள். வெற்றி பெற்ற பிறகு கொள்ளையடித்து மக்களின் பணப் பையை வெள்ளையடிக்கும் வேலையை அதிமுக வோடு இவரும் விதிவிலக்கில்லாமல் செவ்வனே செய்கிறார் போலும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை இருந்த மனித நேயமும் நேர்மை குணமும் அரசியலுக்கு வந்த பிறகு எப்படி தலைகீழாக மாறுகிறது என்பது தான் புரியவில்லை. இந்த இலக்கணத்திற்கு திரு சைதை துரைசாமியும் விதிவிலக்கல்ல போலும்.

அதிமுக வை விட்டால் திமுக, திமுக வை விட்டால் அதிமுக என்ற நிலையில் வாக்களித்து இரண்டில் எது வந்தாலும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த உழைப்பாளிகளின் பணப்பையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் கொள்ளையடிக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன.

விலைவாசியை கட்டுப்படுத்த ஜெயலலிதாவுக்கு திறமையில்லை. அண்டை மாநிலங்களிலிருந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய திராணி இல்லை ஜெயலலிதாவுக்கு. ஆனால் இவையெல்லாம் வைத்து எதையாவது செய்து விட்டு ஒவ்வொரு ஆண்டும் முடிந்த பிறகும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் நாளிதழ்களுக்கும் பத்திரிகைகளுக்கும் பணத்தை கொடுத்து 'ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனை' என்று மக்கள் படும் வேதனையைப் புரிந்து கொள்ளாமல் ஒரு ரூபாய்க்கு இட்லி, பத்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் என்று மறைமுகமாக மக்கள் அனைவரையும் கையேந்த வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் செய்கிறார்.

இவர் ஆட்சியை விட்டு கீழிறங்கிய பிறகு வேறு ஒருவர் வந்தபிறகு 'அம்மா இட்லி, அம்மா தண்ணீர்' எல்லாவற்றையும் நிறுத்தி விடுவார். ஒரு ரூபாய்க்கு இட்லி, பத்து ரூபாய்க்கு தண்ணீர் என பழக்கப் பட்டவர்கள், அடிமையானவர்கள் அதன்பிறகு இன்னும் அதிகமாக அல்லல் படுவார்கள்.

இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் தமிழகம் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாக வாய்ப்பு உள்ளது. பிழைக்க வழி தேடியும் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி தேடியும் வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் ஈழத் தமிழர்களே, தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்களைப் போலத்தான். இந்திய இனத் துவேசம் நிறைந்த ஆட்சியாளர்களாலும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகளாலும் அல்லல் படுகின்றனர். வேறு வழியில்லாமல் வெளிநாடுகளுக்குப் பிழைப்புத் தேடி வருகின்றனர்.

பணக்காரர்கள் வாழ்க்கையை பொழுது போக்காக வாழ்கின்றனர்.

ஏழைகள் வாழ்வதற்கு போராடுகிறார்கள். நடைபாதைகளில் வாழ்கிறார்கள்.

சென்னையில் இப்போதும் நடைபாதையிலும் பூட்டிய கடைகளின் வாசல்களில் வசிக்கும் நடைபாதைவாசிகளைப் பார்க்கலாம்.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் அரசியல் வியாபாரிகளும் சட்ட திட்டங்களும் மக்களுக்கு எதிராக இருக்கும் சூழலில் நமக்கென்ன, நமக்கென்ன என்று அனைவருமே ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய எண்ணம் செயல் வடிவம் பெறுவதற்கு தூண்டுகோலாக இருப்பவை பேச்சும் எழுத்தும் தான்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பதவியேற்ற போது தினமலர் நாளிதழில் 'இலவசம் என்ற பெயரை விலையில்லா என்று மாற்றியதே ஜெயலலிதா ஆட்சியின் மிகப்பெரிய சாதனை' என்று மக்களை மூளைச் சலவை செய்யும் அளவிற்கு அப்பட்டமான பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜெயலலிதாவால் இழைக்கப்படும் அநீதிகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய ஊடகங்கள் கத்தை கத்தையாக பணத்தை வாங்கிக் கொண்டு ஜால்ரா தட்டி நக்கிப் பிழைக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன. செய்து கொண்டிருக்கின்றன.

இந்தத் தாக்கத்தில் வேதனையோடு நான் எழுதிய ஒரு ஹைக்கூ

விலையில்லா இலவசங்கள்
கோடிகளில் கல்வி
அரசியல் வியாபாரிகள்

என்னுடைய சிறுவயதில் முனைவென்றி பள்ளிக்கூடத்தில் மனதார

'இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறவா சகோதரர்கள்.....'

என்று சொன்ன அதே கள்ளம் கபடமில்லா உள்ளம் தான் ஓராண்டிற்கு முன்

'இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை'

என்று சிந்திக்க வைத்து எழுத வைத்தது.

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல தமிழ்ந்நாட்டு மக்களாகிய நாம் வாக்கு என்ற மிகப் பெரிய ஆயுதத்தை பயன்படுத்த தெரியாமல் வாக்களித்து யார் வந்தாலும் 'என்னுடைய பணத்தைக் கொள்ளையடி, என்னை பிச்சையெடுக்க வை, விலையில்லா இலவசங்களைக் கொடு' என்று மறைமுகமாக கேட்டு ஆப்பைத் தேடிப் போய் அமர்ந்து கொள்கிறோம்.

அதே கள்ளம் கபடமில்லா உள்ளம் தான் தற்போது ஒரு புதிய உறுதிமொழியை பின்பற்ற வைத்திருக்கிறது. அந்த உறுதிமொழி இதுதான்.

'இனிமேல் என் தாய்நாடான தமிழ்நாட்டில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க செல்வதில்லை அல்லது வாக்களிக்கச் சென்று என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கும் சின்னத்தில் வாக்களித்து விட்டு வருவேன் என உறுதியளிக்கிறேன்.'

ஏற்கனவே பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையில் பேருந்துகளில் சொகுசு என்ற பெயரில் மறைமுகமாக இன்னும் விலையை உயர்த்தி கொள்ளையடிப்பதற்காக எல்லாப் பேருந்துகளையும் சொகுசு என்று பெயர் மாற்றி (ஏற்கனவே பயணிகள் இரயிலை எல்லாம் விரைவு இரயிலாக மாற்றி பயணிகள் இரயிலே இல்லாத நிலையை உருவாக்கி கட்டணத்தை உயர்த்தியதைப் போலவே) நியாய விலைப் பெருந்துகளையே ஒழிக்கும் நடவடிக்கையில் அதிமுக அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பேருந்துக் கட்டணக் கொள்ளை குறித்து யாரும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை.

தவறாமல் இந்த பதிவை அனைவரும் படிக்கவும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. 

இவர் இல்லாத் தமிழ்நாடு

தன்னலம் கருதாமல், அரசியலில் பதவிக்கு ஆசைப்படாமல் வாழ்ந்த தலைவரையே 'ஜாதி வளர்த்த தலைவர்' என்று தூற்றும் இந்தத் தமிழ்ச் சமூகம் நன்றி மறந்த தமிழ்ச் சமூகம் தான்.

இவரைப் போன்ற நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் என்னைப் போன்றவர்களுக்கு மத்தியில் இவரைத் தேர்தலில் தோற்கடித்த இந்த தமிழ்நாட்டுத் தமிழினம் நன்றி மறந்த இனம் தான்.

அவ்வப்போது நான் சந்திக்கும் நண்பர்களில் ஒரு சிலர் இவரைப் பற்றி 'சாதி வளர்த்த தலைவர், சாதி வளர்த்த முதல்வர்' என்று சொல்லுவார்கள். எனக்கு மனதிற்கு வருத்தமாகவே இருந்தது. அவ்வப்போது அந்த வார்த்தை என் மனதை வலிக்கச் செய்தது. அந்த வலி இன்று இந்தக் கவிதையைத் தந்திருக்கிறது.


யாரு இவரு – எந்த
ஊரு இவரு
விருதுநகரு – இந்த
ஊரு இவரு

விடுதலையும் பெற்றிடவே
பாடு பட்டாரு – அவரு
படிப்பைவிட்டு குடும்பம்விட்டு
சிறையைத் தொட்டாரு
(யாரு இவரு)

மதியஉணவு திட்டத்தினை
கொண்டு வந்தாரு – அவரு
மனிதமதை மதிப்பதற்குக்
கற்றுத் தந்தாரு
(யாரு இவரு)

குழந்தைகளின் கல்விக்காக
உதவி செஞ்சாரு – அவரு
வாழ்வினிலே அனுபவத்தை
மனதில் நெஞ்சாரு
(யாரு இவரு)

குழந்தைகளின் சிந்தனையை
செதுக்கி வச்சாரு – அவரு
அரசியலில் நேர்மைதனை
தினமும் தச்சாரு
(யாரு இவரு)

எந்தப் பள்ளிக்கூடத்தில
அவரும் கற்றாரு – அவரு
படிக்காத மேதையின்னு
பேரும் பெற்றாரு
(யாரு இவரு)

தாய்மொழியில் மேடைதனில்
பேசி வந்தாரு – அவரு
நாடுபல நம்உடையில்
சுற்றி வந்தாரு
(யாரு இவரு)

நாடு,மக்கள் நலம்பெறவே
வாழ்ந்து வந்தாரு – அவரு
தொண்டுசெய்ய வரந்தனையே
வாங்கி வந்தாரு
(யாரு இவரு)

தனக்கென்று திருமணமும்
செய்யாதவரே – தன்
கட்சிவளர்க்க மற்றவரை
வையாதவரே
(யாரு இவரு)

ஏறத்தாழ பத்தாண்டு
முதல்வர் ஆகினார் – இவரு
அரசரையே உருவாக்கும்
திறமை ஏகினார்
(யாரு இவரு)

மொழி வளரப் பாடுபட்ட
தலைவர் இவருதான் – புதுப்
பிரதமரையே பரிந்துரைத்த
இவரு பவருதான்
(யாரு இவரு)

தான்நினைத்த நேருமகளை
தலைவர் ஆக்கினார் – அவள்
யாரென்று இவரையேதான்
திருப்பித் தாக்கினாள்
(யாரு இவரு)

கருப்புநிறக் காந்தியென்று
போற்றி வந்தாங்க – அவங்க
தேர்தலிலே இவருக்குத்தான்
தோல்வி தந்தாங்க
(யாரு இவரு)

விளக்கையணை சொல்லிவிட்டு
படுத்து விட்டாரு – பிறகு
படுத்தவுடன் நிம்மதியாய்
உயிரை விட்டாரு
(யாரு இவரு)

தன்னலமே கருதாத
தங்கத் தேருதான் – அவரைக்
கேட்டாலே பாமரனும்
புகழும் பேருதான்
(யாரு இவரு)

முடிவுகளை எடுப்பதிலே
மன்னன் தானுங்க – அவரு
போலவொரு மனுசனுந்தான்
இன்று வேணுங்க
(யாரு இவரு)

இவர்போல மனுசங்களைப்
பெற்ற நாடுதான் – இன்று
இவரில்லாத் தமிழ்நாடு
ஊழல் காடுதான்
(யாரு இவரு)

Tuesday, July 2, 2013

அழகு இராட்சசி கவிதை நூலினைப் பற்றி பிரசுரித்த ஊடகங்கள்

என்னுடைய 'அழகு இராட்சசி' என்ற முதல் கவிதை நூலினைப் பற்றி விமர்சனங்கள், நூல் அறிமுகம் ஆகியவற்றை பிரசுரித்த வெற்றிநடை, தமிழ்நலக்கழகம், அருவி போன்ற ஊடகங்கங்களுக்கு என் நன்றி.




Thursday, June 6, 2013

குமுதம் (12-06-2013) இதழில் என்னுடைய 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலின் நூல் அறிமுகம்

குமுதம் (12-06-2013) இதழில் என்னுடைய 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலின் நூல் அறிமுகம் வெளியாகியுள்ளது.

குமுதம் இதழின் ஆசிரியர் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


Saturday, May 25, 2013

பிப்ரவரி 27 2013 அன்று வந்தவாசியில் நடந்த 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' நூல் அறிமுக விழா

முதலில் நான் கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்களைப் பற்றி சொல்லவேண்டும்.
“குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்” என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்குஅணிந்துரை வேண்டி மு. முருகேஷ் ஐயாவின் முகவரிக்கு (சென்னை அஞ்சலக ஊழியரின் எடை சரிபார்ப்பிற்குப் பிறகு) ஐந்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டி அனுப்பி வைத்தேன். வந்தவாசிக்கு என்னுடைய அஞ்சல் சென்று சேர்ந்தபோது அங்கிருந்த அஞ்சலக ஊழியர் பத்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டவேண்டும். ஐந்து ரூபாய் அஞ்சல்தலை தான் ஒட்டப்பட்டுள்ளது என்று ஐயாவிடம் அபராதக் கட்டணம் வசூலித்து விட்டு என்னுடைய அஞ்சலை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு தான் தெரிந்தது சென்னை அஞ்சலக ஊழியரின் கவனக்குறைவினால் தான் இந்த குளறுபடி நடந்திருக்கிறது என்று. ஐயாவும் பெருந்தன்மையோடு என்னுடைய அஞ்சலை ஏற்றுக் கொண்டார். அணிந்துரையை விரைவில் அனுப்பி வைத்தார்.

கடந்த பிப்ரவரி 27, 2013 அன்று சென்னையிலிருந்து கிளம்பி வந்தவாசிக்கு காலை 8.30 க்கு முன்னதாகவே சென்றடைந்தேன். மு. முருகேஷ் ஐயா அவர்கள் என்னை தன்னுடைய அகநி (அவருடைய மூன்று பெண் பிள்ளைகளின் முதல் எழுத்துகளின் சேர்க்கை.) இல்லம் அழைத்துச் சென்றார். அவருடைய இலக்கிய இணை (மனைவி = மனை+வி, மனையை ஆளக்கூடியவள் மனைவி அல்லது மனையாள். ஆனால், ஐயா எப்போதுமே தன்னுடைய காதல் மனைவியை இலக்கிய இணை என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.) கவிஞர் அ. வெண்ணிலா அவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்ற ஆர்வம் இருந்தது. (கடந்த 20  ஜனவரி அன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது மு. முருகேஷ் – அ. வெண்ணிலா மற்றும் அவருடைய மூன்று பெண் பிள்ளைகளைச் சந்தித்தேன்.) அ. வெண்ணிலா அவர்கள் திரைப்படத்துறையில் வசனம் எழுதுவது தொடர்பாக சென்னைக்குச் சென்றிருப்பதாக முருகேஷ் ஐயா சொன்னார்.
அவருடைய அறையையும் அ. வெண்ணிலா அவர்களுடைய அறையையும் பார்த்தேன். அலமாரியில் ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான விருதுகள், பரிசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
அ. வெண்ணிலா அவர்களுடைய தாயாரையும் சந்தித்தேன். அவருடைய வீட்டில் காலை உணவு உண்டேன்.
காலை 10.30 க்குத் துவங்க வேண்டிய வெளியீடு அரை மணிநேரம் காலதாமதமாகத் துவங்கியது.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். கவிதை நூலிற்கு அணிந்துரை எழுதிய மூவரில் ஒருவரான கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்கள் நூலைப் பற்றி விவரித்தார். பெண்ணியம், தலித்தியம், ஈழவிடுதலை தொடர்பாகவும் பேசினார்.
என்னுடைய கவிதைநூலின் தலைப்பு குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற தலைப்பில் குழந்தைகள் என்ற வார்த்தை பன்மையிலும் பொம்மைகள் என்ற வார்த்தை பன்மையிலும் கடவுளும் என்று ஒருமையிலும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இன்னொரு சிறப்பு விருந்தினர் குழந்தைகளைப் பற்றி பேசினார். “குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற கருத்தை முன்வைத்து பேசினார்.
வந்தவாசி நூலகர் எனக்கு கதராடை அணிவித்து தமிழின் மீதும் என் தமிழ்த்தாயை கவிதைகளாக எழுதும் என்மீதும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் பலரும் தங்களுடைய சிற்றுரைகளை ஆற்றினர்.
ஏற்புரையில் நான் பேசும்போது (வெளியீடு காலதாமதமாக ஆரம்பித்தபடியால் நிறைய பேச இயலாத சூழல்) முருகேஷ் ஐயா கேட்ட கேள்விக்கு பதிலளித்தேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாக்கிற்கேற்ப கடவுள் ஒருவன் தான். எனவே பன்மை தேவையில்லை. எனவே இங்கு கடவுள் கடவுள்கள் ஒருமையா பன்மையா என்ற குளறுபடிக்கோ குழப்பத்திற்கோ வேலையில்லை என்ற கருத்தை சொன்னேன்.
எங்க வீட்டு விஷ்ணுப் பாப்பா பிறந்தபோது அவனுக்காக ஒரு சில ஹைக்கூ கவிதைகளை எழுதினேன். அதன்பிறகே இந்த கவிதைகளை குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் என்று ஒரு நூலாக்கினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
குழந்தைகளின் உள்ளங்களில் கடவுள் வாழ்கிறான்.
“குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற பேசிய சிறப்பு விருந்தினரின் கருத்தை உளவியல் ரீதியாக விளக்கினேன். பொதுவாக குழந்தைகள் ஒரு எழுத்தை ஆரம்பத்தில் எழுத முயற்சிப்பதில்லை வரைய முயற்சிக்கின்றன. ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் நம் மூளைக்குள் உதயமானவுடன் அந்தப் பொருள் படமாக மனதில் விரிகின்றது. உதாரணத்திற்கு மரம் பற்றி எண்ணுகிறோம் என்றால் முதலில் மரம் படமாக மனதில் விரிகின்றன. அதன் பிறகே வார்த்தைகள் வெளிவருகின்றன. எனவே குழந்தைகளுக்கு படங்கள் மூலமாக கதைகளை, கருத்துகளைச் சொல்லுங்கள் என்றேன். அதோடு என்னுடைய “உள்ளம் உருக்கிப் போனாயடா” (முழுக்க முழுக்க காதல்) என்ற நான்காவது கவிதைநூலின் முதல் கவிதையின் முதல் சில வரிகளை அங்கு பகிர்ந்து கொண்டேன்.
படங்களைப்
பார்த்துப் பார்த்தே
வார்த்தைகளை
வரையக் கற்றுக்கொள்ளும்
குழந்தைகளைப் போலவே
...................
...................
..........................
வெளியீடு முடிந்தவுடன் அவருடைய இரண்டு நூல்களை (ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை – ஹைக்கூ குறித்தான கட்டுரை நூல், வரும்போலிருக்கிறது மழை – ஹைக்கூ நூல்) எனக்குப் பரிசளித்தார்.
விற்பனையான கவிதைநூல்களுக்கான பணத்தை என்னிடம் தந்தார். “குழந்தைகளுக்கான மாலைநேரப் பள்ளி தானே நடத்துகிறீர்கள். இந்தப் பணத்தை நான் ஏதாவதொரு ஆதரவில்லாத குழந்தைகள் இல்லம் தேடிச்சென்று குழந்தைகளுக்கு செய்வேன். அதற்கு நீங்களே உங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த தொகையை செலவிடுங்கள்” என்று சொல்லி அவரிடமே கொடுத்தேன்.
அனைவரும் மதிய உணவு உண்டோம். நான் அவரிடமிருந்து அன்போடு விடைபெற்றேன்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி தினமணியிலும் (தமிழ்நாடு முழுவதும் வெளிவரும் தினமணி பதிப்பகங்கள்) கடந்த பிப்ரவரி 27ம் தேதி தினமணியிலும் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெறப் போகும் கவிதை நூல் வெளியீடு தொடர்பான செய்திகள் வெளியாயின.  கடந்த மார்ச் 01 தினமணியில் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெற்ற கவிதைநூல் வெளியீடு தொடர்பான செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தார்கள்.







Thursday, May 9, 2013

பா.ம.க. ராமதாசுக்கு பிடிக்காத புத்தகம்... - அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: தமிழ்ச்செல்வன், மதுரை.

2016ல் தமிழகத்தின் முதல்வர் ராமதாஸ்தான். இந்த கனவு ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கு இருக்கிறது. அதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சாதி . தருமபுரி,மரக்காணம் பகுதிகளில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது,( தன்சாதியை விட உயர்சாதிகளின் மீது தாக்குதல் நடத்துவதில்லையே ஏன்? இவர் மட்டுமல்ல எல்லா சாதிபயல்களும் அப்படிதான்).தமிழக முழுவதுமான சாதிய தலைவர்களை அழைத்து கூட்டம் போடுவது, காதலுக்கு எதிராக பேசுவது, 500 பேருந்துகள் எரிப்பு, வட மாவட்டங்களில் பதட்டம். என தற்போது ஊடகங்களுக்கு பரபரபான செய்தி களம் அவர்தான்.

அப்படிபட்டவருக்கு பிடிக்காத புத்தகம் ..... ''அழகு ராட்சசி'' - காதல் கவிதைகளின் தொகுப்பு. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காதல் குறித்து ஒவ்வொரு பக்கதிலும் தனது கவிதையை ரசனையோடு பதிவு செய்திருக்கிறார்.
படித்து முடித்ததும் இரண்டு விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.ஒன்று இந்த புத்தகத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் படிக்கவேண்டும். இரண்டு காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், இனி காதலிப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.கவிதைகளில் சில...

நீ என்னை செல்லமாய் 
திட்ட வேண்டும்
என்பதற்காகவே
குறும்புகள் செய்யத் தோன்றுகிறது
உன்னிடம்...

நீ கண்ணாடி பார்த்து
உன்னழகை
சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும்
உன்னை பார்த்து
தங்களின் அழகை
சரி செய்து கொள்கிறார்கள்...

அழகு என்ற தலைப்பில்
கவிதை எழுதச்சொன்னார்கள்
உன்பெயரை மட்டும்
எழுதிக் கொடுத்துவிட்டு
வந்தேன்
முதல் பரிசு
கிடைத்தது எனக்கு...


நான்
காதல் முன்னேற்றக் கழகம்
என்று ஒரு
கட்சி ஆரம்பிக்கலாமென்று
இருக்கிறேன்
பொதுச்செயலாளர்
நீ தான்...
ஆனால்
ஒரு நிபந்தனை

கட்சியின்
காதல் பரப்பு செயலாளராக
நான் மட்டும் தான்
இருப்பேன்...

தொகுப்பு   முழுவதும் காதலை நிறுத்தி, நிதானமாக அனுபவித்து எழுதியிருக்கிறார் கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார். தினதந்தி,தினமலர்,மாகாகவி போன்ற தினசரிகள், சிற்றிதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. பதிப்பகத்தின் அழகான வடிவமைப்பு கவிதைகளுக்கு அழுகுக்கு அழகு சேர்த்திருக்கிறது. அட்டைபடமே அழகு ராட்சசி தான். என்ன நண்பர்களே ராமதாஸ்க்கு நிச்சயம் இந்த புத்தகம்  பிடிக்காது இல்லையா?. கவிதை தொகுப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் முடிந்தால் ஒரு பிரதியை ராமதாசுக்கு அனுப்பவும்.

Wednesday, February 6, 2013

"குவைத் தமிழோசை மாமன்றம் சார்பில் வித்யாசாகர் அண்ணாவுக்கு பன்னூல் பாவலர் விருது"

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த வெள்ளிக்கிழமையன்று (01-02-2013) குவைத் நாட்டில் கெய்த்தான் எனுமிடத்தில் "மூவேந்தர் அரங்கம் அமைத்து "குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்" மிகவும் பிரம்மாண்டமாக நடத்திய இன்பத் தமிழ் இசைவிழாவில் வித்யாசாகர் அண்ணாவுக்கு அவருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி  அவரை கௌரவிக்கும் வகையில் "பன்னூல் பாவலர்" விருது வழங்கி சிறப்பித்தது.  இம் மகிழ்வான செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்நதுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

வீட்டிலேயே அடைந்து கணவனே கதி என்றிருக்கும் மனைவிகளுக்கு அரணாக இருக்கும் கணவன்கள் நலம் பயக்கும் பூரிப்பை மகிழ்ச்சியை தரும் நலன்களாக விளங்க உதவும் நோக்கத்தோடு, முன்பே மன்றத்தில் சொல்லி அவருக்குக் கிடைக்கயிருந்த விருதினை அண்ணியின் கைகளால் வாங்கச்சொல்லி தன்னுடைய குடும்பத்தினரையும் குடும்ப உறுப்பினர்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

மேலும் ஏற்புரை ஏற்கையில் அவர் பேசியதை அறிந்து அண்ணாவிடம் தொடர்புகொண்டு என்ன பேசினீர்கள் என்றேன், அதற்கவர் மின்னஞ்சலில் என்னிடம் பகிர்ந்துக் கொண்டதை அப்படியே இங்கு உங்களின் பார்வைக்குத் தருகிறேன்:

"என்னம்மா  அன்று எனக்காக வாங்கிய விருதுகளை
 இன்று என் செல்லம்மா வாங்கினாள்
 நாளை இந்த சின்னம்மாளும் வாங்குவாள்...” என்று நம்பிக்கொள்கிறேன்..

இனமது தாழாது
உயிரதன் மதிப்பிலும் கூடி
உயர்ந்தவர் பலர்பேசும் மொழியதுவாகி
மழலைகள் கொஞ்சும் ரசமென்றோங்கி
கால வனப்பெய்தி வளமது சேர
வையகந்தன்னில் வெல்லும் தமிழ்; அங்கே நிற்கட்டுமிந்த தமிழோசையின் புகழுமென்று வேண்டி; எல்லோருக்குமெனது சிறந்தாழ்ந்த வணக்கத்தை முன்வைக்கிறேன்..

பொதுவாக ஒரு விருது என்பது அப்படைப்பாளியின் படைப்பினை மேலும் பலருக்கு அடையாளம் காட்டி, அதுவரை உழைத்த உழைப்பை அங்கீகரித்து' மேலும் வரும் பல வெற்றிக்கு வழிநல்கி' வென்று' வளர்ந்து' இச்சமூகத்திற்கு மேன்மைச் சேர்க்கவல்லது என்பதை இதற்குமுன் பெற்றுள்ள வேறுசில விருதுகளினால் அறிந்திருக்கிறேன்.

இருப்பினும் வெறும் விருதிற்கான நோக்கமல்ல எனது எழுத்தின் நோக்கம்; அது எனக்குக் கீழுள்ளோரை என்னளவிற்கேனும் உயர்த்துமொரு உயரிய பொறுப்புள்ள முயற்சியென்பதைச் சொல்வதில் நன்றிக்கடன் படுகிறேன்.

அதோடு, எனைவிடவும் சிறப்பாக எழுதும் எண்ணற்ற படைப்பாளிகள் பலர் இங்கிருக்க; அவர்கள் அனைவரின் சார்பாகவும் இவ்விருதை நான் பெறுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

மாதந்தோறும் தவறாது கூட்டம் நடத்தி எமது தாய்மொழி தமிழது நிலைக்க தனது பங்கினையும் பெரும்பான்மையாக சிறப்பாக ஆற்றிவரும் இத்தமிழோசை மாமன்றத்தின்மூலம் இவ்விருதைப் பெறுவதில், அதிலும்; உங்கள் முன் பெறுவதில் பெருமையும் நிறைவுமடைந்து, நன்றியோடு விடைகொள்கிறேன்.

பெருமக்கள் இந்த விருதிற்கானக் காரணத்தை எனது எழுத்திற்குள் தேடுங்கள், நியாயமெனில் நற்கருத்துக்களைப் பிறரிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மனிதம் நிலைக்க; மொழியால் உணர்வால் நட்பால் இணைந்திருங்கள். எழுத்தினாலும் ஒரு நல்ல சமுதாயம் படைப்போம்.. " என்று பேசி விழாவை சிறப்பித்திருக்கிறார்.

கடந்த தீபாவளிக்கு முன் ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்கு உடனடியாக அணிந்துரை தந்ததோடு குவைத்திலிருந்த படியே அலைபேசி ஊடாக கவிதைகளைப் பற்றி பேசி விமர்சித்து மகிழ்ச்சியுடன் பாராட்டவும் செய்தார்.

அவர் தீபாவளியின் போது சென்னை வந்திருகையில் அவரைச் சந்திக்க அவரின் இல்லத்திற்குச் சென்றிந்தேன். திருவள்ளூர் அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு அவரின் குடும்பத்தோடு சேர்ந்து செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. நிறைய பேசினோம், அவர் பேசியதிலிருந்து மனித உணர்வுகளை, மனித நேயத்தை மதிக்கும் நல்ல மனிதர் தென்பட்டார் என்றே எண்ணினேன். (அவர் அருகில் வந்து அவரோடு பழகிப் பார்த்தவர்களுக்கும், அவரின் படைப்புகளையும் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நான் சொல்வது மிகையில்லை என்ற உண்மைப் புரியும்.)

தன்னுடைய சில நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்ததோடு ‘அழகு ராட்சசி’ என்ற என்னுடைய முதல் நூலின் பத்துப் பிரதிகளையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி என்னை உற்சாகப்படுத்தவும் செய்தார்.

அவருடைய நூல்களின் முன்னுரைகளில் அவரின் வார்த்தைகளோடு ஒரு சில செய்திகளை நான் இங்கே சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

“ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.”

“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.”

இப்படி அவர் தனது புத்தகங்களில் சில பொதுச் சேவைப் பற்றிய தனது நன்றியுணர்வுகளைப் பகிர்ந்து, என்ன காரணம் அண்ணா என்று கேட்டதற்கு, இதைப் பார்க்கையில் இன்னும் பலருக்கு நாமும் இப்படி உதவவேண்டும் எனும் எண்ணம் வரலாமில்லையா அதனால் தான் அதையெல்லாம் புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன் என்றார்.

அதோடு, அவருடைய இல்லத்தில் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தேன். கீழ்க்கண்டவாறு தன்னுடைய மனவுணர்வுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். (அவற்றில் எனக்கு நினைவில் நின்ற சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்)

“இரவு முழுவதும் எழுதிக் கொண்டிருப்பார். எழுதியபடியே தூங்கிப் போவார்.” என்றும்

“திருச்சியில் ஒரே மேடையில் ஐந்து விருதுகளை வாங்க அவருக்குபதிலாக  நான்  சென்றபோது மிகச்சிறப்பாக என்னை வித்யாசாகரின் அம்மா என்றில்லாது தனது தாயைப்போல அவர்கள் வரவேற்று அன்பாகப் பார்த்துக்கொண்டனர் ” என்றும் என்னோடு அந்தம்மையார் தனது மகன் பற்றிய மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டார்.

அண்ணா நமக்குத் தெரிந்து பிறந்தநாள் பாடல், காதல் பாடல் மற்றும் சமூகச் சிந்தனைப் பாடல்களை எழுதியிருந்தாலும் விரைவில் திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகவிருக்கிறார் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன். அவருடைய மனம்போலவே எல்லாம் அவருக்கு நல்லபடியாகவே நடக்கிறது.

இந்த இளம்வயதில் கவிதை, கட்டுரை, புதினம், நாவல், சிறுகதை என முப்பதுக்கும் மேல் நூல்களை இன்னும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அண்ணாவுக்கு சகோதர அன்பிலும் சக படைப்பாளியாகவும் மனமகிழ்ச்சியோடு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

(எப்படியோ சோம்பேறித்தனம் காரணமாகவும் மற்ற சில வேலைகளினாலும் அண்ணாவைப் பற்றி ஒரு பதிவை அப்போதே இடவேண்டும் என்ற எண்ணம் இன்று இந்த இழையோடு சேர்த்து இப்போது தான் நிறைவேறியிருக்கிறது. தமிழோசை கவிஞர் சங்கத்திற்கு எனது நன்றி)