Sunday, September 15, 2013

வீதிவழியே ஒரு பயணம்

வந்து போனதற்கான
தடயங்கள் ஏதுமின்றி
அமைதியாய்க் கிடக்கின்றது
அந்த வீதி

மணம்வீசி
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன
அந்த மலர்கள்

துள்ளித் திரிந்த
மழலைகளும்
நின்று கவனிக்கின்றன
விபரமேதும் அறியாமல்...

கண்கள் கலங்கும்
வானம்

வீதிவழி மௌனமாய்
ஒரு பயணம்

நெஞ்சமெங்கும்
பிரிவின் வலி

நெருப்பை அணைக்க முயன்று
தோற்றுத்தான் போகின்றன
அந்தக் கண்ணீர்த் துளிகள்

Saturday, September 14, 2013

நம் உரத்தசிந்தனை மாத இதழில் டிராபிக் இராமசாமியைப் பற்றி...

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டில் என் கைகளில் செப்டம்பர் ௨௦௧௩ மாத இதழ் என் கைகளில் கிடைத்தது. வாசிக்கத் துவங்கினேன்.

திரு. உதயம்ராம் அவர்கள் எழுதிய டிராபிக் இராமசாமியைப் பற்றிய கட்டுரை என் கண்களில் பட்டது.

டிராபிக் இராமசாமியைப் பற்றி அவர் தனி ஆளாக போராடிய விதம், அதனால் அவர் கண்கள் பறிபோனது, இருந்தும் தனி ஆளாக இன்னமும் போராடி வரும் விதம் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக அந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருந்தது.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு டிஆர்பி யால் பாதிக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டப் படிப்புப் படித்த மாணவ மாணவிகளுக்காக யாரிடம் உதவி கேட்கலாம் என்று என் நண்பர்களோடு விவாதித்தபோது ஒரு நண்பர் டிராபிக் இராமசாமியி பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு தான் அவரைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

அவரைப் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய கட்டுரையை நம் உரத்த சிந்தனை வெளியிடுவது வரவேற்கத் தக்கது.

கடந்த ௨௦௧௩ பெப்ரவரி மாதம் ௨௬ ல் (26-02-2013) சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நம் உரத்த சிந்தனையின் ௨௯வது ஆண்டு விழாவையொட்டி பார்வையாளனாகப்  பங்குபெற எனக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. நானும் கலந்து கொண்டேன்.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் / நடிகர் பாக்யராஜ் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களின் உரையை நேரில் பார்க்கும் / கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

திரு. உதயம் இராம் அவர்களுக்கும் நம் உரத்த சிந்தனை மாத இதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

(http://vidhai2virutcham.com/2013/02/26/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-29%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/)

Sunday, August 18, 2013

இந்தியர்களின் சுயரூபம்

இந்தியாவை நேசிக்கக் கூடிய தமிழர்கள் இந்தியாவிலும் அதற்குப் பக்கத்து நாடான தமிழ்நாட்டிலும்இலங்கைக்குப் பக்கத்து நாடான தமிழீழத்திலும் ஏனைய பிற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

ஆனால், இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் அந்த நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ்காரர்களுக்கும் தமிழர்கள் இந்தியாவின் மீது (தம் இன அழிப்பிற்குத் துணைபோன பிறகும்) வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் ஈனத் தனமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவே தெரிகிறது. அதற்கு உதாரணமாக ஒரு புதிய திரைப்படம் தமிழர்களை தவறாக சித்தரித்து தவறான செய்திகளைப் பரப்ப தயாராக உள்ளதாக கேள்விப் படுகிறேன். 

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ௨௦௦௭ 2007 ல் (இந்தியாவின் சுயரூபம் எனக்குத் தெரிவதற்கு முன்னால்) நான் எழுதிய ஓர் கவிதையின் சில வரிகள் 

என் இந்தியத்தாய்
நாகரீகத்தை இழந்து...
பண்பாட்டை இழந்து...
பழம்பெருமையை இழந்து...
நவநாகரிகம் என்ற பெயரில்
அம்மணமாய் நிற்கிறாள் பார்!!


தமிழர்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள், அவர்களின் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட ஒரு சில சதித் திட்டங்களை இந்திய அரசும் காங்கிரஸ் அரசும் தீட்டியுள்ளன. 

தமிழனக் கென்று தாய்நா டிரண்டு 
தரணியில் வேண்டும் தோழா வாடா 

 "தமிழா... (இந்தியாவைவிட்டுவிடுதலைகாண் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_2673.html)"

மேலே உள்ள இந்தக் கவிதையை நான் எழுதிய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை பலமுறை மீள்பதிவு செய்து விட்டேன். ஏனெனில் இந்தக் கவிதை யைப்  பகிர்ந்து கொள்ளக் கூடிய தேவை இன்னமும் இருந்துகொண்டே இருக்கிறது. 

மனிதநேயமில்லாத, குடிமக்களின் மேல் அக்கறை இல்லாத இந்திய அரசாங்கத்தை இன்னமும் தமிழன் தாய்நாடாக நினைத்துக் கொண்டிருந்தால் அது அவனுடைய அறியாமை.

விருப்பமுள்ளவர்கள் ஒருமுறை இந்தப் பதிவை படித்துப் பாருங்கள். 


Wednesday, August 14, 2013

அந்தக் காகத்தின் மரணம்

துருப்பிடித்த
இரயில் தண்டவாளமது

அதன்மீது இரயில் சென்றே
பலமாதங்கள் ஆகியிருக்கலாம்

அதன் மிகஅருகில்
காகமொன்று இறந்துகிடக்கிறது

மரணம் நிகழ்ந்து
சிலநாட்கள் ஆகியிருக்கலாம்

இரத்தமில்லை
உடலில் காயங்கள் இல்லை

மின்சாரக் கம்பிகள் உரசியதால்
மின்சாரம் பாய்ந்து
இறந்து கீழே விழுந்திருக்கலாம்

இன்னபிற காகங்கள்
இன்னமும் அதே இடத்தைச் சுற்றிச்சுற்றி
கரைந்து கொண்டிருக்கின்றன
வருத்தத்தைப் பதிவு செய்யவும்...
மரணத்தைத் தெரிவிக்கவும்...

தம் முன்னோர்கள்
காகங்கள் என்பதால்
கைகள் கூப்பி வணங்குகிறான்
அந்த வழிப்போக்கன்
மரணித்த அந்தக் காகத்தை...

Monday, August 12, 2013

அன்னைத் தமிழே

அன்னைத் தமிழினை அன்பு அமிழ்தினை
எண்ணிய பொழுதினில் என்னுள்ளே உற்சாகம்
கண்ணாடி அணிவதுபோல் கதைக்கலாம் பிறமொழியில்
கண்ணுடைக் கருமணியே என்னுடைத் தமிழ்மொழியே

பணம்காசு தேடித்தான் பிறதேசம் போனாலும்
மனமுன்னை நாடுதடி மகளேயென் தமிழ்மொழியே
தினமொரு விலைவாசி திண்டாடும் விசுவாசி
கணமொரு கொலைகொள்ளை காப்பாற்ற வருவாயோ

அன்னையின் மடியிலே அனுதினமும் தவழத்தான்
எண்ணிடும் குழவிபோல் எண்ணமது உருண்டோடும்
கண்ணிலே நீர்சொட்டும் கவிதையிலும் அதுசொட்டும்
என்னுடைத் தமிழரைவிட எவரிங்கு என்சுற்றம்?

அன்னையவள் வேறல்ல அன்னைத்தமிழ் வேறல்ல
என்னைப் பொறுத்தவரை எல்லாமே தாய்த்தமிழே
தண்டமிழே தனித்தமிழே தொன்மொழியே தாய்மொழியே
வண்டமிழே வளர்தமிழே வருவாயே வாய்வழியே

Wednesday, August 7, 2013

என்னுள்ளே இருக்கிறாய்

யாரும் புரட்டாத
கவிதைநூலெனக் கிடக்கிறேன்
காற்றைப் போலவே
பக்கங்களைப் புரட்டி வாசிக்கிறாய்
தலைதிருப்பி ஏதோ யோசிக்கிறாய்

உயிரற்ற பிணமாய்
கிடக்கிறேன்
உன் கொலுசொலிகேட்டு
ஓயாமல் உயிர்த்தெழுகிறேன்
உன்நினைவால் நான்அழுகிறேன்

யாருமற்ற தண்டவாளமாய்
தனியாய்த்தான் தவிக்கிறேன்
இரயிலாய் வந்தெனை
படபடக்க வைக்கிறாய்
தடதடக்க வைக்கிறாய்

தொட்டியில் மீனாய்
கண்ணீர் விடுகிறேன்
ஆக்சிஜன் தந்தெனை
ஆசையாய்த்தான் கொல்கிறாய்
ஆறுதல் நீ சொல்கிறாய்

சாலை நடுவில்
நெரிசலால் நான் தவிக்கிறேன்
என்னொரு கரம்பற்றி
என்னுடன் நடக்கிறாய்
சாலையை கடக்கிறாய்

பெரும் புயல்மழையில்
தொப்பலாய் நனைகிறேன்
எங்கிருந்தோ வந்தொரு
குடையினைத் தருகிறாய்
வீடுவரை வருகிறாய்

அயல்நாட்டுத் தெருவினிலே
வழிமறந்து திரிகிறேன்
அந்நாட்டுப் பெண்ணாக
என்னைத்தான் அழைக்கிறாய்
பார்வையால் நீ துளைக்கிறாய்

நள்ளிரவு தாண்டியும் நான்
தூக்கமின்றித் தவிக்கிறேன்
மெல்ல வரும் தென்றலாய்த்தான்
தலைகோதி விடுகிறாய்
உயிர்வரை தொடுகிறாய்

எப்போதும் உன்நினைவால்
என்னைத்தான் மறக்கிறேன்
என்னுடைத் தமிழ்மொழிபோல்
என்னுள்ளே இருக்கிறாய்
கவிதைவழி நீ பிறக்கிறாய்

Monday, August 5, 2013

காதல்நினைவுகளில்...

காதலைப் பற்றி எழுதாதவன் கவிஞனல்ல. அதற்காக, காதலைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவனும் கவிஞனல்ல.

இது என்னுடைய கருத்து.

எனக்குத் தெரிந்தவரை மகாகவி பாரதி (ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும்) காதலைப் பற்றியும் ஓரிரு கவிதைகளில் சொல்லியிருக்கிறான்.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்.


காதலைப் பற்றி எழுதி ஐந்து மாதங்கள் ஆகின்றன. சற்றுமுன் தோன்றிய ஒரு கவிதை.

நிரந்தரமாய்
தொலைந்துவிட வேண்டுமென்றுதான்
மூழ்குகிறேன்
நம் காதல்நினைவுகளில்...

எப்படியும் என்னை
நிஜ உலகிற்கு அழைத்து வந்துவிடுகிறது....

கடைசியாய் உன் முகம்பார்த்து
உன்னையும் உன் அம்மாவையும்
நான் வழியனுப்ப
நீ பயணித்த
அந்த இரயிலின் சத்தம்

Thursday, August 1, 2013

அவனையறியாமலேயே...

நீண்ட வீதியது 

பார்வையின் எல்லை 
முடியும் தூரத்தில் 
மங்கலாய்த் தெரிகிறது 
ஒரு உருவம்

இருபுறமும் வானுயர்ந்த 
கட்டிடங்கள் 

காற்றில் அசைந்தாடும் 
விளம்பரப் பதாகைகள் 
ஒய்யாரமாய்ப் புன்னகைக்கும் 
விளம்பர நடிகர் நடிகைகள் 

மெல்ல நெருங்குகிறது 
அந்த உருவம் 

சாமி சிலையை 
தலையில் சுமந்தபடி...

எதிர்த் திசையில் 
மெல்ல நெருங்குகிறது 
அந்த உருவம் 

மேல்சட்டை அணியவில்லை 
இடுப்புக்குக் கீழே 
தொடைவரை கட்டிய வேட்டி
நல்ல பூ வேலைப்பாடுகள் 
அமைந்த ஜரிகை

மெல்ல சத்தமின்றி 
கைநீட்டி யாசிக்கின்றான்

களைப்படையவே இல்லை 
அவன்

அமைதி தழுவ 
நடக்கின்றான்

வியந்து பார்க்கின்றேன் 
திரும்பி நின்று...

அவனையறியாமலேயே நானும் 
என்னையறியாமலேயே அவனும் 
எதிரெதிர் நடைபாதையில் 
மெல்லக் கடக்கின்றோம் 
அந்த வீதியை...

Sunday, July 28, 2013

தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பகல்கொள்ளை மற்றும் வழிப்பறி செய்யும் நடத்துநர்களும் அரசாங்கமும் (பாகம் - ௨ இரண்டு)

பிரபஞ்ச வாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அடியேனின் வணக்கம்.

இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை எழுதி ஒரு மாதம் ஆகப் போகிறது. எழுதி அனுப்பிய சில நாட்களிலேயே சிங்கப்பூரில் வசிக்கும் தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் அவர்கள் (எழுத்தேணி அறக்கட்டளையின் உரிமையாளர் - http://ezhutheni.org) என்னுடைய அலைபேசிக்குப் பேசினார். இந்தக் கட்டுரையைப் பற்றிப் பேசினார். தானும் இதேகருத்தைப் நண்பர்களிடமும் சில நாட்களுக்கு முன்பு தான் பேசியதாகவும் அதே கருத்தை நான் கட்டுரையாக வெளியிட்டுருப்பதைக் குறித்தும் பேசினார். சிங்கப்பூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூர் மண்ணில் ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது மிதித்து இங்குள்ள காற்றை சுவாசித்து வீட்டில் தங்கிவிட்டுச் சென்றால் தான் அங்கு வேலை நடப்பதாகச் சொல்கிறார். அதாவது அலைபேசி sim க்கு recharge செய்வது போல.

சில நாட்கள் கழித்த பிறகு வெளிநாட்டிலிருந்து ஒரு அன்பர் பேசும்போது "உங்களுடைய இந்தக் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுப் ப்பா. கட்டுரைக்கான நடை ஒரு சிலருக்குத் தான் சிறப்பாக அமையும். உங்களுக்கு கட்டுரைக்கான நடை நன்றாக, சிறப்பாக அமைந்துள்ளது. நேரம் கிடைக்கும்போது ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வுக் கட்டுரை, நீங்கள் வசிக்கும் ஊரைப் பற்றி என கட்டுரைகளை எழுதுங்க ப்பா." என்றார்.

நானும் கவனித்தேன். இந்தக் கட்டுரைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. வரவேற்பு என்று சொல்வதை விட மன அதிர்வை, மன எழுச்சியை, நாம் ஏமாற்றப் படுகிறோம் என்ற உண்மையை உணரும் தன்மையை ஏற்படுத்திஇருக்கிறது. சிந்திக்க வைத்திருக்கிறது.

எட்டு மாதங்களுக்கு முன்பு கூட அழகு ராட்சசி கவிதை நூல் வெளியிட சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்னுடைய அறைக்கு வந்திருந்த கவிஞர். வதிலைபிரபா ஐயாவும் கூட கட்டுரைத் தொகுப்பு வெளியிடுங்கள் என சிலமுறை அழுத்திச் சொன்னார்.

ஊடகங்கள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யும் உண்மையை என்னைப் போன்று, நம்மைப் போன்ற எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சிலநாட்கள் கழித்தபிறகு அந்த அன்பர் மறுபடி பேசும்போது "அரசியலைப் பற்றி எழுதாதிங்கப் ப்பா. ஒரு சிலர் தங்களை அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சனம் செய்வதாக குற்றம் சாட்டுவார்கள். எனவே அரசியலைப் பற்றி எழுதாதிங்கப் ப்பா. வேறு தலைப்புகளில் எழுதுங்கப் ப்பா." என்றார்.

அவருக்கு நான் சொல்லும் பதில் இது தான்.

உழைப்பவர்களுக்குத் தான் அந்த உழைப்பின் அருமை, அதற்கான பலனான கூலி அல்லது சம்பளத்தின் அருமை தெரியும். மின்சாரம் இல்லாமலேயே மின்சார வரி, தண்ணீர் வராமலேயே தண்ணீர் வரி, வீட்டு வரி, வருமான வரி, சாலை வரி, வருமான வரி (இன்னும் உள்ள வரிகளைச் சேர்த்துக் கொள்ளவும்) என நாம் செலுத்தும் வரிகள் எல்லாம் நம்முடைய நலனுக்காக திரும்பச் செலவிடப்பட வேண்டும். அப்படி செலவிடப் படுவதில்லை. மாறாக, நம்மிடமிருந்து வரிகள் என்ற பெயரில் நம்முடைய உழைப்பை சுரண்டி நம்முடைய பணத்தை கொள்ளையடித்து அரசை ஆளுகின்ற முதல்வர் உட்பட பலரும் கறுப்புப் பணமாகவோ ஊழல் பணமாகவோ பதுக்கி வைத்திருக்கின்றனர். ஆளுங்கட்சி எதிர்கட்சியாகும்போதும் எதிர்கட்சி ஆளுங்கட்சியாகும் போதும் இதே நிலைதான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இப்படியிருந்தால், வாழ்க்கையோடு போராடுபவர்கள், கடைசிவரை போராடிக் கொண்டிருப்பார்கள். ஏழைகள் கடைசிவரை ஏழையாக வாழ்ந்து சாவார்கள். இங்கு அரசியல் தான் எல்லாவற்றையும் மேலாண்மை செய்கிறது. அரசியல் நேர்மையாகி விட்டால், எல்லாம் ஒழுங்காகி விடும்.

வெளிநாட்டிலிருந்து நீங்கள் அனுப்பும் பணத்திற்குக் கூட இத்தனை சதவீதம் அந்நியச் செலாவணி என்ற பெயரில் அரசாங்கம் கொள்ளையடிக்கிறது. ஆனால், கருவூலம் மட்டும் நிறைவதில்லை. ஏனெனில் எல்லாம், ஊழல் பணமாகவும், கறுப்புப் பணமாகவும் பதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், மாதத்திற்கு பலமுறை எரிபொருளின் விலையை ஏற்றுகிறோம் என்று மத்திய அரசும், அதேபோல் விலையேற்றம் என்ற பெயரில் மாநில அரசும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் தான் எல்லாவற்றின் விலையையும் நிர்ணயிக்கும் சக்தி.

(வலிக்க வலிக்க உடையது வாழ்க்கை என்று எழுதியவராயிற்றே அவர். மற்றவர்களின் வலி, வேதனை அவருக்குப் புரியாமல் போய்விடுமா என்ன?..)

சரி. இரண்டாம் பாகத்திற்கு வருவோம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் ஆரம்பக் கட்டணமாக வசூலிக்கப் பட்டது. அப்போதும் வழிப்பறிப் பேருந்துகள்  (அதாங்க சொகுசுப் பேருந்து) ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மடங்கு அதாவது இரண்டு ரூபாய் பயணச்சீட்டு எல்லாம் நான்கு ரூபாய், மூன்று ரூபாய் பயணச்சீட்டுகள் எல்லாம் ஆறு ரூபாய். அதாவது, புரியும் படி சொன்னால், சினிமா தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பது போல்...

இரண்டரை ஆண்குகளுக்கு முன்பு, கருவூலத்தில் பணமில்லை, அதனால், பால் / பேருந்துக் கட்டணம் / மின்சாரம் என தாறுமாறாக விலையுயர்த்தி கோடி கோடியாக வியாபாரம் செய்ய திட்டமிட்டு (மக்கள் நலப் பணித்திட்டங்கள் எல்லாம் தற்போது வியாபாரமாகி விட்டன. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அவ்வளவு எளிதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்யும் வியாபார நுணுக்கம் சார்ந்த மொள்ளமாரித்தனங்களை புரிந்து கொள்ள முடியாது. இங்கேயே கிடந்து அடிமட்டத்திலிருந்து மேலே வர முயற்சி செய்யும் ஏழைகளுக்கும், கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கும் தான் தெரியும் இவர்கள் செய்யும் அரசியல் வியாபார நுணுக்கங்களைப் பற்றி.) விலையை உயர்த்தியது அதிமுக அரசு.

சரி, கருவூலத்தில் பணமில்லை. இரண்டு மடங்காக உயர்த்தி விட்டீர்கள். நியாயமான காரணம். ஏற்றுக் கொள்ளலாம். நியாய விலைப் பேருந்துகளில் தற்போது இரண்டு மடங்கு கட்டணம் அதாவது இரண்டு ரூபாய்க்குப் பதிலாக நான்கு ரூபாய் பயணக் கட்டணம். வழிப்பறிப் பேருந்துகளில் நான்கு மடங்குக் கட்டணம் அதாவது எட்டு ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக நியாய விலைப் பேருந்துகள் ஒழிக்கப்பட்டு தற்போது வழிப்பறிப் பேருந்துகளின் உதவியுடன் நான்கு மடங்குக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தவறு, வழிப்பறி செய்யப்படுகிறது.

ஆக, விலையேற்றம், நியாய விலைக் கட்டணப் பேருந்துகளின் மறைமுக ஒழிப்பு என வழிப்பறிப் பேருந்துகளின் மூலம் நான்கு மடங்கு கட்டணம் வழிப்பறி செய்யப்படுகிறது. முன்பெல்லாம், ஒற்றையடிப் பாதையில் செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்வார்கள் திருடர்கள். தற்போது, பேருந்துகளில் நடத்துனர்களின் உதவியுடன் தமிழ்நாடு அரசு பட்டப்பகலில் அனைவர் முன்னிலையிலும் வழிப்பறி செய்கிறது.

நியாய விலைக் கட்டணப்  பேருந்திற்கும் வழிப்பறிப் பேருந்திற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. எல்லாமே கொள்ளையடிக்கும் வேலை, வியாபாரம். என்ன.. வழிப்பறிப் பேருந்தில் வெளியில் பளபளப்பாக இருக்கும். எழுத்துகளை ஓட விடுவார்கள். மற்றபடி வேகத்திலும் சரி இருக்கைகளின் பராமரிப்பிலும் சரி. இரண்டுமே ஒன்று தான்.

மொள்ளமாரித்தனம் என்பது தரக்குறைவான வார்த்தையில்லை. தற்போதைய காலகட்டத்தில் முதலமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் செய்யும் செயல்களுக்கு நம்முடைய மரியாதை நிமித்தமான பெயர் மொள்ளமாரித்தனம்.

பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐந்துமுனை நிறுத்தத்தில் இறங்குவதற்கு எட்டு ரூபாய் (அதாவது நான்கு மடங்கு). பரமக்குடியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள என்னுடைய ஊர் முனைவென்றிக்கும் அதே எட்டு ரூபாய் (இரண்டு மடங்கு).

தனியார்ச் சிற்றுந்துகளில் (Mini Bus) ஐந்து ரூபாய் தான்.

ஆக, தனியார் பேருந்து நிறுவனங்கள் நியாயமான முறையில் நடந்து கொள்ளும்போது, அரசு போக்குவரத்துக் கழகம், அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு, இரண்டுமடங்கு கட்டணத்திற்குப் பதிலாக நான்கு மடங்கு கட்டணங்கள் வசூலிக்கின்றன. இதற்குப் பேசாமல், முதலமைச்சர் உட்பட இந்தக் கொள்ளையில், வழிப்பறியில் ஈடுபடும் அரசியல் வியாபாரிகள், போக்குவரத்துக் கொள்ளையர்கள் அனைவரும் திருவோடு ஏந்தி தெருவில் இறங்கி பிச்சைஎடுக்கலாமே. நாங்கள் தாராளமாக உங்களுக்கு பிச்சை போடுவோம்.

வடிவேலு ஒரு நகைச்சுவையில் சொல்லுவார். "இதுக்கெதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா திரியுறீங்க".

ஏற்கனவே, அரசு மதுபானக் கடைகள் மூலமாக பலகோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. வியாபாரம் போதவில்லை என்று நமீதாவைக் காட்டி வியாபாரம் செய்கிறீர்கள். கல்வியிலும் கோடி கோடியாய் கொள்ளை நடக்கிறது. வியாபாரம் நடக்கிறது. அதுவும் போதவில்லை என்று பேருந்துகளின் மூலம் வழிப்பறி செய்ய ஆரம்பித்து விட்டது தமிழ்நாடு அரசு.

சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு ஹைக்கூ.

கூட்டிக் கொடுப்பவன் மாமா
கூட்டியும் காட்டியும்
கொடுப்பவன் அரசியல்வாதி

வாழ்க தமிழ்நாடு.

இதன் மூன்றாம் பாகத்தில், என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த கடமையுணர்ச்சி மிகுந்த ஒரு சில நடத்துனர்களைப் பற்றி சொல்லவிருக்கிறேன்.

இந்தக் கட்டுரை தொடரும்.............................

கவிஞர் அ. சரவணராஜ் அண்ணாவின் முகவரி தேவை... - சற்றுமுன் கிடைத்து விட்டது.

என்னுடைய வாழ்வில் ௨௦௦௫ (2005) ம் ஆண்டில் என்னிடம் பழகிய அ. சரவணராஜ் அண்ணா (இவர் ௨௦௦௦ 2000 முதல் ௨௦௦௫  2005 ஆகிய ஐந்து ஆண்டுகளில் ஏதோவொரு ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.)

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் 'துஷ்யந்த் சரவணராஜ் என்ற பெயரில் அவருடைய கவிதையொன்று வெளிவந்திருந்தது. துஷ்யந்த் என்பது அவருடைய ஆண்குழந்தையின் பெயராகத் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. 

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நான் படித்த கணினித் துறையும் அவர் படித்த தமிழ்த்துறையும் அருகருகே உள்ளன. ௨௦௦௪ (2004)  ம் ஆண்டில் என்னுடைய படிப்பை ஆரம்பித்தேன். அவர் அதே ஆண்டில் தன்னுடைய முதுகலை தமிழ் படிப்பின் இரண்டாமாண்டை முடித்து விட்டு சென்று விட்டார். ௨௦௦௫ (2005) ம் ஆண்டில் அவரைப் பற்றி கேள்விப் பட்டு அவர் வேலைபார்த்த கானாடுகாத்தானுக்குச் சென்றேன். அவரைப் பற்றி சொல்லுமாறு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். தன்னைப் பற்றி சொன்னார். காரைக்குடியில் உள்ள என்னுடைய விடுதிக்குத் திரும்பினேன். 

நான் ஆரம்பத்தில் என்னோடு அன்பாக பழகுகிறவர்களைப் பற்றி வாழ்வியல் உண்மை நிகழ்வுகளை உள்வாங்கியோ, அவர்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த வாழ்வியல் நிகழ்வுகளை உள்வாங்கியோ தான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதுவும், அந்த நிகழ்வுகள், மனதில் ஓர் அதிர்வை, பாதிப்பை ஏற்படுத்தி விட்டால், கவிதைக்கான கரு அங்கிருந்து கிடைத்து என்னை எழுதத் தூண்ட ஆரம்பிக்கும். இதற்காக நான் எப்போதும் மெனக்கெட்டதில்லை. இப்படித்தான் ஆரம்பகால கட்டங்களில் நான் எழுத ஆரம்பித்தேன். இப்படி அவருக்காக எழுதிய மூன்று கவிதைகள்.

காதல்க்கவி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_5200.html

சாதனைக்கவி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_1666.html

கவிவள்ளல் - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_6156.html

மறுமுறை அவரைச் சந்திக்கபோது, நான் அவருக்காக எழுதிய காதல்க்கவி என்ற கவிதையை கையெழுத்துப்பிரதியாக அவரிடம் கொடுத்தேன். வாங்கிப் படித்துவிட்டு பத்திரமாய் வைத்துக் கொண்டார். 

நான் அவருக்காக எழுதிய இரண்டாவது மற்றும் மூன்றாவது கவிதைகளை என்னுடைய வகுப்பில் கானாடுகாத்தானிலிருந்து வந்து படிக்கும் ஒரு தோழியிடம் கொடுத்தனுப்பினேன். மறுநாள் அவள் என்னிடம் வந்து "அவரை சந்திக்க இயலவில்லை." என என்னிடமே திருப்பித் தந்து விட்டாள். பல நாட்கள் கழித்தபிறகு நான் மீண்டும் கானாடுகாத்தானுக்குச் சென்றபோது அவரிடம் கொடுத்தேன். அவருடைய அறையில் அவருடைய லுங்கியை அணிந்து கொண்டு பக்கத்தில் உணவகத்தில் உண்டு, அவருடைய அறையில் உறங்கி காலையில் கிளம்பி விடுதிக்கு வந்திருக்கிறேன். அவர் அறையில், இரவு உறங்கும்போது அவர் என்ன செய்கிறார் எனப் பார்த்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு. அவர் TRB க்கும் TNPSC க்கும் படித்துக் கொண்டிருப்பார். 

அவர் தற்போது கோயம்புத்தூரில், அரசுப் பள்ளியில் அரசு ஆசிரியராக நிரந்தர வேலையில் உள்ளார். என்னிடமிருக்கும் அவருடைய அலைபேசி எண்ணுக்கு (௯௯௪௩௩௩௨௧௧௬ 9943332116) கடைசியாக கடந்த ௨௦௦௯ (2009) ல் பேசினேன். அதன்பிறகு அதே எண்ணுக்கு முயற்சி செய்தேன். அழைப்பு மணி போகும். ஆனால், யாரும் பேசுவதில்லை. பலமுறை முயற்சி செய்து விட்டு அந்த எண் காலாவதி ஆகிவிட்டதாக முடிவு செய்து விட்டேன். 

ஆனால், என்னோடு பழகியவர்களுடனான நினைவுகள் எப்போதும் என்னுடனேயே இருக்கும். சில நேரங்களில் என்னையும் மீறி கண்ணீர் வரும். அதிகமாய் வலிக்கும். தனிமையில் எங்காவது சுற்றித் திரிவதுண்டு. 

௨௦௦௯ ம் (2009) ஆண்டில் அவருடைய முதல் கவிதைநூல் 'விழிநீர் வழியே விழுகிறாய்' கோவை விஜயா பதிப்பகம் மூலமாக வெளிவந்திருந்தது. கோவை விஜயா பதிப்பகம் தொலைபேசி எண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு பேசி அவர் பெயரைச் சொல்லி அவருடைய கவிதைநூலின் பெயரைச் சொல்லி அவர் அலைபேசி எண்கள் வேண்டும், அவருடைய கோவை முகவரி வேண்டும் என்றேன். "அவர் இங்கு அடிக்கடி வருவார். ஒரு வாரம் கழித்துப் பேசுங்கள்" என்றார்கள். அதன்பிறகு சில வாரங்கள் கழித்துப் பேசினேன். "அவர் இன்னும் வரவில்லை. வந்தால் வாங்கி வைக்கிறோம்." என்றனர். 

கோவையில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்களுக்கும் ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிற்கும் அவருடைய அலைபேசி எண்கள், முகவரி தெரிய வாய்ப்புகள் உள்ளன, அவர்கள் இந்த மின்னஞ்சலைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். எனவே, இந்த மின்னஞ்சல் மூலமாக, அவருடைய முகவரி குறித்து கேட்கலாமா என்று நினைத்து இந்த மின்னஞ்சலை எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு எண்ணம். மீண்டும் அதே அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்து முயற்சித்தேன். சரவணராஜ் அண்ணா பேசினார். மூன்றரை ஆண்டுகள் கழித்தபிறகு இன்று சில மணிநேரங்களுக்கு முன் பேசினேன். என்னை அவருக்கு நினைவுபடுத்தினேன். ஆனந்தவிகடனில் ஒன்றரை மாதங்களுக்கு முன் அவருடைய கவிதை 'துஷ்யந்த சரவணராஜ்' என்று அவருடைய மகன் பெயரில் வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே அவர் "மகனுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் எனக்கு மகள் பிறந்து பிறந்திருக்கிறாள். சமீப காலங்களாக என்னுடைய கவிதைகள் தொடர்ந்து ஆனந்தவிகடனில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆசிரியர் குழுவிலிருந்து அடிக்கடி எனக்கு அழைப்பு வரும். உங்களுடைய அழைப்பைப் பார்த்தவுடன் அவர்கள் தான் அழைக்கிறார்கள் என நினைத்து விட்டேன்." என்றார். பிறகு "என்னுடைய இரு கவிதை நூல்களை தங்களுக்கு அனுப்ப வேண்டும். தங்களுடைய கோவை முகவரி அனுப்புங்கள்." என்றேன். அனுப்பி வைப்பதாகச் சொன்னார். 

இந்த மின்னஞ்சல் மூலமாக அவரின் அலைபேசி மற்றும் முகவரி கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு இந்த மின்னஞ்சலை எழுத ஆரம்பித்தேன். அனுப்புவதற்குள் தற்போது நான் அவரிடம் பேசி விட்டேன். 

நன்றி.