Thursday, April 12, 2012

துளிப்பா

வானமங்கை இரவினிலிடும்
வெண்ணிற நெற்றிப்பொட்டு
வெண்ணிலாத் தட்டு


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

துளிப்பா

வானமங்கை பகலினிலிடும்
மஞ்சள்நிற நெற்றிப்பொட்டு
சூரியன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

Sunday, April 1, 2012

எங்கள் ஏசு

கருணையின் வடிவே எங்கள் ஏசு
கண்ணில் தெரிந்த கடவுள் ஏசு
புனிதம் கொண்ட மனிதன் ஏசு
மனிதம் கொண்ட புனிதன் ஏசு

மீட்பரே எங்கள் மெசியாவே ஏசு
பாவங்கள் போக்கிடும் பரிசுத்தர் ஏசு
அப்பங்கள் உணவான அற்புதம் ஏசு
அன்பின் உருவமே எங்கள் ஏசு

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினமென்று உயர்வாகச் சொல்வோமே
களைப்பிங்கு வந்தாலும் கவனமெலாம் உழைப்பில்தான்
தொழிலெங்கள் இறையென்று தொழில்செய்து வெல்வோம்
உழைப்பெங்கள் மூச்சென்று உழைக்கத்தான் செல்வோம்

அயராது உழைத்திட்டால் அடைந்திடலாம் இலக்கினையே
துயரமிங்கு வந்தாலும் தூள்தூள்தான் நம்முன்னே
உயரத்தில் போனாலும் உணர்வெல்லாம் உழைப்பிலேதான்
முயலாத மனிதர்காள் முன்னேற்றம் உழைப்பில்காண்

எதுவந்த போதினிலும் எடுப்போமே முதலடியை
பொதுவென்று வைப்போமே பொருளைத்தான் இங்கேயே
விதியின்வழி செல்கின்ற வாழ்வுமிங்கு வசப்படுமே
மதியிங்கு கூரானால் மகத்துவம் வாழ்வினிலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) 28-04-2012

காதலோ காதல்

கடந்த மார்ச் 31, 2012 அதிகாலை மூன்று மணிக்கு எழுதிய கவிதை இது.


தாய்போல என்னை தாலாட்டும் காதல்
நாய்போல இங்கு வாலாட்டும் காதல்
சேய்போல என்முன் சிரித்திடும் காதல்
ஓயாமல் என்னை உலுக்கிடும் காதல்

பாசாங்கு இல்லாப் பரவசம் காதல்
இருளான வாழ்வில் ஒளிவீசும் காதல்
விடுமுறை நாளில் விடியலே காதல்
முடிவிலி இல்லாக் கடிகாரம் காதல்

ஆராரோ பாடும் அன்பேதான் காதல்
யார்யாரோ இங்கு யாசிக்கும் காதல்
நேர்நேராய் அமர்ந்து நேசிக்கும் காதல்
வேரடி மண்ணோடு வேராகக் காதல்

கருவினில் வளர்ந்திடும் கணவனே காதல்
கணவனைக் குழவியாய் கவனிக்கும் காதல்
வறுமையின் பிடியினில் வாழ்ந்திடும் காதல்
மறுமைக்கும் இம்மைக்கும் மோட்சமே காதல்

ஆனந்தக் கண்ணீரும் அழுகையும் காதல்
மன்னிப்புக் கொடுக்கும் மனிதமும் காதல்
மழலைகள் அன்பின் மகத்துவம் காதல்
உலகினில் உயர்வாக உலவிடும் காதல்

எல்லோரா சிற்பம்போல் எழில்கொஞ்சும் காதல்
இல்லையிங்கு பிரிவென்று இணைத்திடும் காதல்
தொல்லையிங்கு தந்தாலும் துன்பமில்லை காதல்
எல்லோரும் படித்திடும் இக்கவிதையொரு பாடல்

தாயென்பேன்

எல்லோரா சிற்பம்போல்
எழிலான உனைக்கண்டு
துள்ளாத மனமுந்தான்
தரணிதனில் உண்டோடி?

எல்லோரும் உனைப்போல
எழிலென்று நான்சொல்ல
என்னால்தான் முடியாது

ஏனென்று நீகேட்டால்
என்னவள்தான் நீயென்பேன் – என்
இரண்டாவது தாயென்பேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1.   பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012

நடைபாதை வீடு

நாளுன்னும் பாக்காம
பொழுதுன்னும் பாக்காம
நாங்கஇங்க உழைச்சாலும்
ஓடாத்தான் இளைச்சாலும்
நாணயத்துக்கு மதிப்பில்லே
நாஸ்டா துண்ண வழியில்லே
நடைபாதை வீடாச்சு
நாங்கவிடும் பெருமூச்ச்சு
நாட்டின் பெயரு இந்தியாவாம்

விலைவாசி உயர்ந்திடுச்சு
விளைநிலமும் விலையாச்சு
விவசாயம் நலிஞ்சுடுச்சு
கிராமந்தான் வெறிச்சாச்சு

பால்விலையும் உயர்ந்தாச்சு
பஸ்டிக்கெட் உயர்ந்தாச்சு
டாஸ்மாக் கடைகளிலே
கோடிகளில் வசூலாச்சு

இலவங்கள் தந்தாச்சு
மூளைச்சலவை செஞ்சாச்சு
எங்களுடைய வரிப்பணத்தை
ஏப்பமிங்கு விட்டாச்சு

கோடிகோடி ஊழலாச்சு
பணமுதலை பெருகிடுச்சு
அரசியலும் இங்கேதான்
பணம்சுருட்டும் தொழிலாச்சு

கவுன்சிலர்கள் எல்லோரும்
கல்லாவை நிரப்பியாச்சு
 
எல்லாமே இங்கேதான்
உயர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
எங்களுடைய வாழ்க்கைமட்டும்
இப்படியே இருக்குதய்யா...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்
கோணம் (இணைய இதழ்) - 02-04-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012