Sunday, December 25, 2022

கீழடிக்கு இணையாக நான் பிறந்த ஊர் முனைவென்றி. நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர் - அழகு ராட்சசி கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய இளையான்குடி முதிய கவிஞர்


 
















என் சிறு வயதில் என் தாத்தாவிடம் (அம்மாவின் அப்பா) என் ஊர் முனைவென்றி யின் பெயர்க்காரணம் குறித்து கேட்டேன். அவர் இரு விதமான பதில்களை பெயர்க்காரணங்களாக கூறினார்.

1. முனைவண்டி - என் ஊர் வழியே பழங்காலத்தில் மாட்டு வண்டிகள் வரிசையாக செல்லும்போது என் ஊர் வரும்போது ஒரு வண்டியின் அச்சாணி உடைந்ததாம். அதனால் முனை உடைந்த வண்டி முனைவண்டி என்று பெயர் சூட்டப்பட்டு முனைவென்றி யானது.

2. பழங்காலத்தில் ஒரு போர் நடந்து வெற்றி பெற்ற முனை இந்த ஊர். ஆதலால் இந்த ஊருக்கு வெற்றி முனை என்றாகி முனைவெற்றி -> முனைவென்றி என்றானது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி, இளையான்குடியிலிருந்து கவிஞர். ஹிதாயத்துல்லா என்ற முதியவரிடமிருந்து என் முதல் கவிதை நூலான "அழகு இராட்சசி" க்கு விமர்சன கடிதம் வந்தது.

அந்த விமர்சனத்தில் என் ஊர் முனைவென்றியை பற்றி சில வரிகள் இப்படி குறிப்பிட்டிருந்தார்.

தன பெயரிலேயே வெற்றியைப் பெற்றிருக்கின்ற முனைவென்றி கிராமம் ஒரு கீர்த்தியுள்ள கிராமம். நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர்.

ஆக, என் ஊர் முனைவென்றியில் ஏதோவொரு போர் நடந்திருக்கிறது. அந்தப் போரில் வெற்றி பெற்றதால் வெற்றி முனை -> முனைவெற்றி -> முனைவென்றி என்றாகியிருக்கிறது. ஆக, என் தாத்தா சொன்ன இரண்டாவது காரணப்பெயர் தான் சரி. அவர் ஏதோவொரு போர் நடந்ததாகச் சொன்னார். ஆனால் என்ன போர் நடந்தது எதனால் நடந்தது என்பது சொல்லவில்லை. 

இப்போது இந்த இளையான்குடி கவிஞர் சொன்னபிறகு அந்தப் போர் நிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக நடந்த போர் என்பது உறுதியாகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பதிவு.

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.  செய்தி. - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

சில மாதங்களில் என் ஊரில் முதுமக்கள் தாழியை கண்டறிந்த ஐயா ராசேந்திரன் என்ற தொல்லியல் துறை சார்ந்த பேராசிரியருடன் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பி வைத்த தரவுகளை சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்ச்சாலை தொல்லியல் துறையில் நேரில் சென்று சமர்ப்பித்தேன். சில மாதங்களில் எழும்பூரிலிருந்து அவருக்கு அழைப்பு வந்து அதில் "அக்கறை வரிசைப்படி நீங்கள் கொடுத்த முனைவென்றி மற்றும் இன்னொரு ஊரிலும் தொல்லியல் துறை சார்பில் அரசாங்கத்திலிருந்து ஆராய்ச்சி துவங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தாக அவர் என்னிடம் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், முனைவென்றியை குறித்து ஒரு ஆய்வுநூல் எழுதி முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் அரபு நாடான ஷார்ஜாவில் முனைவென்றி குறித்து பேசப்போகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை (26-12-2022) இளையான்குடிக்கு பயணமாகிறேன் அந்தக் கவிஞர் ஹிதாயத்துல்லா என்ற முதியவரை சந்த்திக்க... என் ஊரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள...

இன்னுமொரு செய்தி.

என் அப்பாவிடம் சில தினங்களுக்கு முன் என் அப்பத்தா வீரம்மாள் என்றாய் சிட்டுவைப் பற்றி (என் அப்பாவின் அம்மா) கேட்டேன்.

"என் அப்பத்தாவின் சொந்த ஊர் முனைவென்றி. என் அப்பத்தாவின் அம்மா அப்பா தங்களின் சிறு வயதிலேயே முனைவென்றியிலிருந்து பர்மா சென்று அங்கு தான் என் அப்பத்தா பிறந்ததாகவும் என் அப்பத்தாவின் அப்பா அம்மா பர்மாவிலேயே நிலங்கள் வாங்கி அந்த நிலங்களில் விவசாய வேலை செய்ய அந்த நாட்டு மக்களை பணியாட்களாக அமர்த்திருந்தனர். அந்த காலத்திலேயே பர்மா வேறு ஒரு நாட்டில் சொந்த வீடு மற்றும் நிலங்களோடு விவாசாயப் பணியாளர்களை நியமித்து பெரும் செல்வந்தர்களாக நம் முன்னோர்கள் பர்மாவில் வாழ்ந்து வந்தது சாதாரண விஷயமல்ல. ஆனால், பர்மாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பத்தா போன்ற தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களையும் பிறநாட்டு மக்களையும் பார்மா நாடு விரட்டி விட்டதாகவும் அங்கிருந்து என் அப்பத்தா கட்டிய துணியோடு மீண்டும் முனைவென்றிக்குத் திரும்பியதாவும் இங்கு தன் மாமா முறையான கமுதிக்கு அருகிலுள்ள நீராவிக் கரிசல்குளம் என்ற ஊரில் வசித்த என் ஐயா தர்மலிங்கம் சேர்வை (என் அப்பாவின் அப்பா) யை திருமணம் செய்து கொண்டாள்." என அப்பா தெரிவித்தார்.

இன்னும் சில தினங்கள் என் ஊரான முனைவென்றியில் தான் இருப்பேன். என் அப்பத்தாவைப் பற்றியும் என் ஊரைப் பற்றியும் இன்னும் நிறைய செய்திகளை சேகரித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

நன்றி.