Tuesday, September 1, 2020

ஆசிரியர் தினம்

அன்புவழி அழகுமொழி கற்பிக்கும் குருவே
அறியாமை அழிக்கின்ற ஆண்டவனின் உருவே
மண்மேலே கற்பித்தல் முதலான தேவை
மனதிற்கு நிறைவாக மகிழ்வான சேவை

கண்போலே கல்விதனை கற்பித்தல் நலமே
அன்பாலே உலகமெலாம் ஆளுங்கல்வி வளமே
உன்போலே ஆசிரியர் உலகமெலாம் வாழ்க
தன்னிகரு மில்லாதத் தமிழ்போலே ஆள்க

ஆடுகின்ற ஓடுகின்ற அரும்புகளே நிற்க
அறியாமை இருள்நீங்க அனுதினமும் கற்க
பாடுகின்ற குயில்போல பரவசமும் வேண்டும்
பரவசமாய் பாடங்களை படித்திடவும் வேண்டும்

இப்போது தேவையிந்த இணையவழிக் கல்வி
எப்போதும் இளமையாக இருக்குந்தமிழ்ச் செல்வி
தப்பேதும் இல்லையிங்கு தமிழ்வழியே கல்வி
தமிழிலுள்ள அறிவியலை தரணிதனில் சொல்லி

மழலையரே நம்முடைய எதிர்கால உடைமை
மனமுவந்து கற்பித்தல் மகத்தான கடமை
மழலைகளில் பாகுபாடு என்பதுவே மடமை
மண்ணிலிந்த கல்வியது  மனிதர்களின் உரிமை


Thursday, July 30, 2020

நிறைமதி

அழகாய் அறிவாய் அமுதாய் தமிழாய்
நிலவாய் பிறந்த நிறைமதி வா வா
மலராய் மணமாய் மனதில் நிறைவாய்
வழியாய் ஒளியாய் வான்மதி வா வா

சங்கத் தமிழாய் தங்கச் சிமிழாய்
எங்கள் மகளாய் இறையே வா வா
பொங்கும் புனலாய் தங்கும் வளமாய்
எங்கும் எழிலாய் எழில்மதி வா வா

பகலவன் ஒளியாய் பௌர்ணமி நிலவாய்
அகிலாய் அகலாய் அழகே வா வா
மகளிவள் ஆற்றாய் மனதில் ஊற்றாய்
முகிலாய் மழையாய் மலர்மதி வா வா

காற்றில் ஒலியாய் கவிதைக் குயிலாய்
கவியாய் தெறிப்பாய் கவிமதி வா வா
பாட்டில் இசையாய் பைந்தமிழ் மொழியாய்
பாட்டாய் காற்றாய் புகழ்மதி வா வா

மழலை குறும்பாய் மலரும் அரும்பாய்
மணியே அணியே மகிழ்மதி வா வா
விழியில் நிறைவாய் வெகுளிச் சிரிப்பாய்
வளமாய் நலமாய் வளர்மதி வா வா

பாப்பா நீயும் சிரித்தா லழகு
பாசம் கொண்டே பார்த்தா லழகு
அப்பா என்றே அழைக்கும் நாளே
அப்பா எனக்கும் அழகோ அழகு

உலகம் உன்னால் அழகோ அழகு
அழகே நீயும் அழகோ அழகு
மழலை மொழியில் மணக்கும் தமிழும்
மகளே உன்னால் அழகோ அழகு

கண்கள் அழகு கால்கள் அழகு
சிரித்தே மயக்கும் செயல்கள் அழகு
முன்னால் தெரியும் முயற்குட்டிப் பற்கள்
மகளே அவையும் அழகோ அழகு

Wednesday, July 8, 2020

முழுநிலவின் முகக்கவசம்

முழுநிலவின் அழகை
மேகங்கள் மறைப்பதைப் போலவே
உன் முக அழகை
முகக் கவசமது
மறைக்கிறது

நானும்
ஏமார்ந்துதான் போகிறேன்
முழுநிலவின் அழகை
இரசிக்க வந்து
ஏமார்ந்து போகும்
குழந்தையை போல...

ஆனாலும் புரிகிறது
மறைப்பது
பாதுகாப்புக் கவசமென்பதால்...


Friday, April 3, 2020

என் மறுமகளே

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

பொன்னான பெண்ணழகே கண்ணான கண்ணழகே
பொக்கைவாய் சிரிப்பழகே புதுமையான மொழியழகே
பெண்ணாகப் பேரழகே பேரழகின் அழகழகே
அமுதூறும் வாயழகே அழகூறும் சேயழகே
(......அம்மாயி)

தத்திவரும் நடையழகே தாமரைப்பூ முகமழகே
புத்தியுரைத் தமிழழகே புத்தம்புது மலரழகே
தத்தைமொழிப் பேச்சுழகே தாலாட்டும் பாட்டழகே
முத்துமுத்தாய் பல்லழகே முழுநிலவின் முகமழகே
(......அம்மாயி)

மாமனென்று நீயழைக்க மனமெங்கும் மகிழ்வாகும்
பூமணக்கும் காய்கனியும் பிஞ்சுமலர் சிரிப்பினிலே
ஆமெனக்கு அதிசயமே அழகான சித்திரமே
வாமனனாய் வடிவெடுத்த என்தங்கை மகளே வா

அத்தையென நீயுரைக்க உறவிங்கே அழகாகும்
முத்துமுத்தாய் நீபேச முழுநிலவின் புகழ் மங்கும்
சொத்துசுகம் அதிகமில்லை சோகமிங் கெனக்கில்லை
தத்தையிவள் தமிழ்பேச சித்தமதில் கர்வமடி
(......அம்மாயி)

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா