Monday, November 29, 2021

வானொலிப் பைத்தியமாகிய நான்... - ஒப்புதல் வாக்குமூலம். வானொலி என் தொப்புள்கொடி சொந்தம்.

கடந்த 2021 தீபாவளி அன்று நான் வாங்கிய வானொலிப்பெட்டி.




நான் பிறந்த ஆண்டு 1984, ஆகஸ்டு 21. எனக்கு விவரம் தெரிய 1990 க்குப் பிறகு வானொலியின் மத்திய அலையில் (Medium waves) தூத்துக்குடி 100 Mega Waat, திருச்சி 100 Mega Waat மற்றும் இலங்கை ஆகிய நிலையங்கள் அதிக ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். 

அப்போதெல்லாம் பண்பலை நிலையங்கள் (FM) எங்கள் ஊர் பக்கம் கிடையாது. எல்லாமே தூத்துக்குடி, திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் தான். 

இருந்தாலும் சென்னை முதல் அலைவரிசை (Chennai PC) 200 Mega Waat திறனுடன் என்னுடைய ஊர் முனைவென்றியில் எப்பொழுதாவது காற்று வீசும்போது காலை மற்றும் இரவு நேரங்களில் ஏறத்தாழ 700 மைல் கல் தொலைவில் உள்ள சென்னையிலிருந்து பதுங்கிப் பதுங்கிக் கேட்கும்.

இன்னும் சொல்லப்போனால், அதாவது நான் பிறப்பதற்கு முன், சென்னை வானொலி முதல் அலைவரிசையை மத்திய அலையில் ஒலிபரப்புத் துவங்கியபோது கதிர்வீச்சினால் பலர் பாதிப்படைந்தனராம். பறவைகள் மயங்கி விழுந்தனவாம். அதனாலேயே 200 Mega waat திறனாக குறைக்கப் பட்டதாம்.

இந்த 200 Mega Waat திறனால் தான் சென்னையிலிருந்து ஏறத்தாழ 700 மைல்கல் தொலைவில் உள்ள என் ஊர் முனைவென்றியில் என்னால் கேட்க முடிந்தது.

இவை தவிர சிற்றலையில் (Short Waves) விடுதலை புலிகள் தொடர்பான இலண்டன் பிபிசி செய்திகள், சீன வானொலி மற்றும் சிங்கப்பூர் வானொலி (இன்றைய ஒலி 96.8 FM) ஆகியவற்றை என் தாத்தாவின் கடையில் என் மாமா வைத்திருந்த பெரிய panasonic வானொலிப் பெட்டியில் கேட்டதுண்டு.

என் வீட்டில் என் அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர் என்னை வானொலிப் பைத்தியம் என்றே அழைத்தனர்.

மதுரை, திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்கள் மத்திய அலையில்(Medium Waves) குறைந்த ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். வானொலிப்பெட்டியை அந்தந்த வானொலி நிலையங்கள் இருக்கும் திசைநோக்கித் திருப்பினால் இன்னும் தெளிவாக கேட்கும்.

2000 க்குப் பிறகு கோடைக்கானல், மதுரை, காரைக்கால், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பண்பலை ஒலிபரப்புகள் (FM) கிடைக்கத் துவங்கின.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் யாழ், இலங்கை வானொலி தென்றல், capital, வசந்தம், சூரியன், சக்தி, இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, தமிழ்ச்சேவை இலக்கம் ஒன்று (இணைய வானொலி), மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி போன்ற வானொலி நிலையங்களையும் இணையம் வழி  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

2009 ல் நடந்த யுத்தத்தால் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக, தூத்துக்குடி வானொலியின் மத்திய அலை 100 கிலோ வாட் திறனுடன் இருந்த ஒலிபரப்பு கோரோனாவை காரணங்காட்டி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக 100.1 பண்பலையாக (FM) உள்ளூர் வானொலியாக மாற்றப் பட்டிருக்கிறது.

அதன்பிறகு 2007 தொடங்கி சென்னையில் பண்பலை ஒலிபரப்புகளை குறிப்பாக சென்னை வானவில் (Chennai FM Rainbow), FM Gold, Vivid Bharti, சூர்யன், மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ மற்றும் பிக் ஆகிய பண்பலை நிலையங்களோடு சேர்த்து மத்திய அலையில் (MW) சென்னை அலைவரிசை இரண்டு ஒலிபரப்புகளை கேட்டபோதும் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சென்னை முதல் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "இலக்கியம் பேசுவோம்" நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் நேயர்களில் நானும் ஒருவன்.

என் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாதபடி என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது வானொலிப் பெட்டியும் வானொலி நிலையங்களும்.
கடந்த சில ஆண்டுகளாக DRM என்று அழைக்கப் படுகிற டிஜிட்டல் ஒலிபரப்பை சென்னை அலைவரிசை 1, திருச்சி அலைவரிசை 1 ஆகியவை ஒலிபரப்புகின்றன.

இவை தவிர DTH (Direct To Home) என்ற  செயற்கைக்கோள் அலைவரிசைகள் மூலமும் Air Tamil என்ற பெயரில் சென்னையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒலிபரப்பின் வடிவங்கள் மாறினாலும் நிலையங்களின் பெயர் மாறினாலும் என் போன்ற நேயர்களின் வனொலியோடு தொடர்புடைய உணர்வுகள் ஒன்று தான்.
ஒருவேளை நான் சென்னையில் இல்லாமல் பரமக்குடியில் இருந்தால் கூட தற்பொழுதெல்லாம் இணையம் வழி தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் வளர்த்த ஆடு மாடுகள் போல வானொலியும் வானொலி நிலையங்களும் என் போன்றவர்களுக்கு தொப்புள் கொடி உறவு போன்றது.

வானொலி கேட்டு வளர்ந்த கடைசித் தலைமுறை நாம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், வானொலி காற்றலை தொடங்கி இணையம், DTH, DRM என தன்னை உருமாற்றிக் கொண்டு நமக்கு சிரமமின்றி நம்மை வந்தடைகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் நாம் வானொலியைத் தான் கேட்கிறோம் என்ற உணர்வின்றி கூட  smartphone ல் FM app வழியாக, இணையம் வழி, News on Air செயலி (App) வழியாக, இன்று உற்பத்தியாகிற வண்டிகளில் DRM களில் நவீன தொழில்நுட்பத்தில், DTH வழியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, வானொலியை கேட்கும் கடைசித் தலைமுறை நாம் இல்லை.

வானொலி பல்வேறு பரிமாணங்களில் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு, மலையிருந்து உதித்து கடல் நோக்கிப் பாயும் ஆறு போல என்றும் சிரஞ்சீவியாய் நம்முடைய காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும்.

Saturday, November 20, 2021

புயல்மழையும் பெருவெள்ளமும்...

 




பூமிக் குழந்தைக்கு
வானம் என்ற தாயின்
தனங்களான 
மேகங்கள் சுரக்கும் 
தாய்ப்பாலே மழை

பூமி தன் சத்துக்களை 
கொழுப்பாக புரதமாக
பாதுகாத்து வைக்க
தேர்வு செய்யப்பட்ட
இடங்கள் தான்
எலும்பு மஜ்ஜைகளான
ஏரி குளங்கள் கண்மாய்கள்

குழந்தையை ஏமாற்றி
உணவை திருடித் தின்னும்
திருடர்கள் போல்
பூமியின் ஏரி குளங்களை
குடியிருப்புகளாய் மாற்றினோம்

இன்று
ஊட்டச்சத்து குறைந்த
குழந்தை போல 
வறண்டு கிடந்த
பூமியில்
தாயப்பாலெனப் பெய்த
பெருமழையை
சேமித்துவைக்க
இடமின்றி
இயற்கை வளங்களை
சூறையாடிக் கொண்டிருக்கும்
நம்மை தண்டிக்க
பெய்துவிட்டுப் போனது
புயல்மழையும் பெருவெள்ளமும்
வீடுகளில் குடியிருப்புகளில்
புகுந்து...