Thursday, July 30, 2020

நிறைமதி

அழகாய் அறிவாய் அமுதாய் தமிழாய்
நிலவாய் பிறந்த நிறைமதி வா வா
மலராய் மணமாய் மனதில் நிறைவாய்
வழியாய் ஒளியாய் வான்மதி வா வா

சங்கத் தமிழாய் தங்கச் சிமிழாய்
எங்கள் மகளாய் இறையே வா வா
பொங்கும் புனலாய் தங்கும் வளமாய்
எங்கும் எழிலாய் எழில்மதி வா வா

பகலவன் ஒளியாய் பௌர்ணமி நிலவாய்
அகிலாய் அகலாய் அழகே வா வா
மகளிவள் ஆற்றாய் மனதில் ஊற்றாய்
முகிலாய் மழையாய் மலர்மதி வா வா

காற்றில் ஒலியாய் கவிதைக் குயிலாய்
கவியாய் தெறிப்பாய் கவிமதி வா வா
பாட்டில் இசையாய் பைந்தமிழ் மொழியாய்
பாட்டாய் காற்றாய் புகழ்மதி வா வா

மழலை குறும்பாய் மலரும் அரும்பாய்
மணியே அணியே மகிழ்மதி வா வா
விழியில் நிறைவாய் வெகுளிச் சிரிப்பாய்
வளமாய் நலமாய் வளர்மதி வா வா

பாப்பா நீயும் சிரித்தா லழகு
பாசம் கொண்டே பார்த்தா லழகு
அப்பா என்றே அழைக்கும் நாளே
அப்பா எனக்கும் அழகோ அழகு

உலகம் உன்னால் அழகோ அழகு
அழகே நீயும் அழகோ அழகு
மழலை மொழியில் மணக்கும் தமிழும்
மகளே உன்னால் அழகோ அழகு

கண்கள் அழகு கால்கள் அழகு
சிரித்தே மயக்கும் செயல்கள் அழகு
முன்னால் தெரியும் முயற்குட்டிப் பற்கள்
மகளே அவையும் அழகோ அழகு

Wednesday, July 8, 2020

முழுநிலவின் முகக்கவசம்

முழுநிலவின் அழகை
மேகங்கள் மறைப்பதைப் போலவே
உன் முக அழகை
முகக் கவசமது
மறைக்கிறது

நானும்
ஏமார்ந்துதான் போகிறேன்
முழுநிலவின் அழகை
இரசிக்க வந்து
ஏமார்ந்து போகும்
குழந்தையை போல...

ஆனாலும் புரிகிறது
மறைப்பது
பாதுகாப்புக் கவசமென்பதால்...