பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/T0tlz_2vJgs?feature=share
எங்கள் வீட்டு குட்டி இளவரசி நிறைமதிக்கு எட்டாவது பிறந்தநாள் (31-07-2026).
என் முதல் மகள் ரிதன்யா வுக்கு பெயர் வைக்கும் உரிமையை என் மனைவி எடுத்துக் கொண்டு என் மூத்த மகளுக்கு ரிதன்யா என்று பெயர் வைத்தாள்.
என் இளைய மகள் பிறந்தபோது ஹரிணி என்று என் மனைவி பெயர் முடிவு செய்து விட்டாள். ஆனால், இளைய மகளுக்குப் பெயர் வைக்கும் உரிமையை என் மனைவியிடம் போராடிப் பெற்றுக் கொண்டேன்.
கடந்த 2010 ஆம் ஆண்டு "நிலவழகி" என்றபெயரில் எழுதிய கவிதை இது.
எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக்கொண்டிருக்கும்
உன் அழகைப்
பார்த்து இரசிக்க
மேகக் கூட்டங்களை
விலக்கியபடியே
முந்தியடித்துக் கொண்டு
வந்து நிற்கிறது
அந்த நிலா!!
ஆதலால், என் இளைய மகளுக்கு நிலவழகி என்று பெயர் வைக்க முடிவு செய்தேன். என் அப்பா தான் நிறைமதி என்று பெயர் வை. நிலவழகி, நிறைமதி இரண்டுமே நிலாவைக் குறித்த பெயர்கள் தான் என்றார்.
நிறைமதி என்ற பெயருக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
1. பௌர்ணமி (முழு நிலா) Full Moon.
2. நிறைய அறிவு உடையவள் ( நிறை - நிறைந்த, முழுமையான, பூரணத்துவமான, மதி - நிலா, அறிவு ) Completeness in terms of knowledge.
2008 மற்றும் 2014 ஆகிய கால கட்டங்களுக்கிடையில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என் அம்மாவுக்கு நள்ளிரவில் தொடர்ந்து விடாமல் பலமுறை phone calls செய்து "இங்கு சென்னையில் எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை. நீ ஏன் என்னிடம் பேசவில்லை" என்றெல்லாம் அம்மாவைத் திட்டும் அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்த காலமெல்லாம் உண்டு. ஆனால், என் குழந்தைகள் பிறந்தவுடன் "நான் யார் யாருடைய அன்பு கிடைக்காமல், பிரிவைத் தாங்க முடியாமல் அழுதேனோ, மன அழுத்தத்தில் முடங்கிப் போனேனோ அவர்கள் அனைவரின் மொத்த உருவங்களை என் குழந்தைகள் உருவில் பார்த்துப் பார்த்துக் கொஞ்சி வருகிறேன்.அவர்கள் என்னை நினைத்தாலும், மறந்தாலும் அவர்கள் நினைவை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் இங்கு இந்த மண்ணில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் நினைவு எனக்குள்ளே இருந்து கொண்டே தான் இருக்கிறது.
என் குழந்தைகள் தூங்குவதற்கு முன் எனக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு என்னிடமிருந்து முத்தம் வாங்கிக்கொண்டு "Good night அப்பா, sweet dreams, I love you அப்பா" என்று சொல்லி விட்டுத் தான் தூங்குகிறார்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக work from home உடன் என் குழந்தைகளை நான் வளர்த்து பராமரித்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தைகளைப் பிரியாமல் என் கண்களுக்கு எட்டும் தூரத்தில் வளர்ப்பது என்பது எனக்குக் கிடைத்த வரம்.
இந்தப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலில் "எங்க வீட்டு தேவதேவதையே" என்று வரும் மெட்டைப் பாடும்போதெல்லாம் ஏதோ திருவிழாவில் துள்ளிக் குதித்து ஆடுவது போன்றதொரு மகிழ்ச்சி.
முதல் இரண்டு வரிகளுக்கு ஒரு விதமான மெட்டு, அடுத்த நான்கு வரிகளுக்கு வேறு விதமான மெட்டு, அடுத்த நான்கு வரிகளுக்கு வேறு விதமான மெட்டு.
நம் குழந்தைகள் என்பவர்கள் நம் குழந்தைகள் மட்டுமல்ல. அவர்கள் 20,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவன் தொடங்கி நம் முன்னோர்கள் அனைவரின் ஒட்டுமொத்த சாயல்.
என் அப்பத்தா 2018 நவம்பரில் இறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 31-07-2019 ல் நிறைமதி பிறந்தாள். அவள் சாப்பிட சம்மணம் போட்டு உட்காரும் போதெல்லாம் என் அப்பத்தா இடது கையால் இடது காலை தூக்கி அணைத்துக் கொண்டு சாப்பிடுவதைப் போலவே சாப்பிடுகிறாள். என் இளைய மகள் நிறைமதி என் அப்பத்தாவைப் பார்த்ததே இல்லை.
நம் முன்னோர்கள் நம் குழந்தைகள் உருவில் மறு பிறவி எடுத்து நம்மோடு வாழ்கிறார்கள்.
பொங்கு மெங்கள் செல்லக்குட்டி நிலவழகி
எங்க வீட்டு தேவதேவதையே
உள்ளமெங்கும் அன்பின் பூமழையே
கங்கை நதி போல உன் மனமே
மங்கை மதி அறிவின் பூரணமே
உந்தன் அன்பு உள்ளம்
எந்தன் அழகுச் செல்லம்
சொந்தம் கண்டால் துள்ளும்
கண்கள் கவிதை சொல்லும்
---
உன்னப் பத்தி சொல்லப்போனா கவிதை கொட்டும் - செல்லம்
உந்தன் அன்பில் எந்தன் கண்ணில் கண்ணீர் சொட்டும்
எந்தன் மனம் மகிழ்ச்சி பொங்கிடுமே
அந்தக் கணம் அழகாய்த் தங்கிடுமே
உந்தன் குரல் இனிக்கும் செண்பகமே
உந்தன் உள்ளம் என்றும் அன்பகமே
எங்கள் வீட்டுத் தங்கம்
மங்கை மனதில் எங்கும்
கங்கை வெள்ளம் பொங்கும்
செங்கை கீர்த்தி தங்கும்
---
எங்க வீட்டு குட்டிக்குட்டி இளவரசி - அழகு
பொங்கு மெங்கள் செல்லக்குட்டி நிலவழகி
எங்க வீட்டு தேவதேவதையே
உள்ளமெங்கும் அன்பின் பூமழையே
கங்கை நதி போல உன் மனமே
மங்கை மதி அறிவின் பூரணமே




