Wednesday, January 9, 2013

குரும்பை

நூலின் ஆசிரியர்: கவிஞர் வதிலைபிரபா

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

‘மகாகவி’ இதழின் ஆசிரியரும் உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரும் ஓவியா பதிப்பக உரிமையாளருமான கவிஞர் வதிலைபிரபா அவர்கள் எழுதிய சிறுகதை நூல் இது. இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகள் சார்ந்தும் மண்ணியம் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள விதமும் கதையை நகர்த்திக் கொண்டுசெல்கிற விதமும் படிப்பவர்கள் மனதை ஈர்ப்பதாகவும் மனதில் பதியும்படியாகவும் ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடிக்கும்போதும் வாசகர்கள் மனதில் ஏதோவொரு தாக்கத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டுப் போகிறதாகவும் இருக்கிறது. குடும்ப உறவுகளை தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்ச்சமூகத்தில் இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் குடும்ப உறவுகளின் அருமைபெருமைகளைச் சொல்லி நம் அனைவரையும் குடும்ப உறவுகளின் நிழலில் சற்றே இளைப்பாற வைக்கின்றன.

எய்ட்ஸ் நோயாளியான மாதவனின் மனநிலை, அவனின் மனைவி மகா அவனை வெறுக்காமல் சுட்டுவிரல் பிடித்து ஒரு குழந்தையை கூட்டிச் செல்கிறாள் என முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை. நிர்கதியாய் நிற்கும்போது வாழ்க்கைத் துணையின் அருமையை, உண்மையான அன்பை, அரவணைப்பை உணர்வுப் பூர்வமாக ‘ஈர வேர்’ என்ற இந்தச் சிறுகதையில் கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் கவிதைகளின்மேல் ஆர்வங்கொண்டு சுகந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட கிருஷ்ணன் கவிதைகளை எழுதுவதும் அவன் நண்பன் விடும் சிகரெட் புகையைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் விதமும் இரசிக்கும்படி உள்ளது. அவன் கவிதை எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து அவன் அம்மா ‘ஏண்டா இதுவா உனக்கு சோறு போடப் போவுது வேற ஏதாவது வேலவேட்டி இருந்தாப் பாரு’ என்று சொல்வது உண்மை.   அந்தக் கிருஷ்ணன் காலப்போக்கில் கடற்கரையில் பஜ்ஜி விற்பவனாக வாழ்வதும் அவனுடைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த கவிதை, அவனுடைய மனைவி மூலமாக பஜ்ஜி மடிக்கின்ற தாளாக பூச்செண்டு நாளிதழுக்குக் கிடைப்பதும் என சிறுகதையை மிகவும் விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் சிறுகதை நூலின் ஆசிரியர் கவிஞர் வதிலைபிரபா. அவனின் கவிதை முதல்முறையாய் பூச்செண்டு இதழில் வெளிவருவதும் இந்த விடயம் பற்றி தெரியாத கிருஷ்ணன் தொடர்ந்து பஜ்ஜி விற்கச் செல்வதாக முடிக்கும்போதுதான் இந்தச் சிறுகதையின் தலைப்பு ‘மாய மான்கள்’ என்பதன் அர்த்தம் மறைமுகமாகப் புரிய ஆரம்பிக்கிறது.

‘அம்மா சாமியான இடம்’ என்ற சிறுகதை பூமி வெப்பமயமாதலைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மாதவனின் மகள் அவனிடம் வெப்பம்னா என்ன? சூடுன்னா என்ன? எனக் கேட்டுவிட்டு ‘பூமிக்கு யாருப்பா நெருப்பு வச்சது?’ எனக் கேட்பது வாசகர்களாகிய நம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. ஒரு குழந்தைக் கதாப்பாத்திரத்தின் மூலம் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்க வைத்ததன்மூலம் குழந்தையின் அறிவாற்றலையும் நம்முடைய சமூக அக்கறையின்மையையும் காட்டுகிறது. கையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு ‘வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தா பூமியில் வெப்பம் குறையுமாம். இனிமே அம்மா சாமியான இடம் முழுகாதுல’ எனக் கேட்கும்போது மழலையின் மூலம் கருணையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

எத்தனை வசதிகள் நிறைந்த வீடு என்றபோதும் தன்னுடைய பிள்ளைகள் தன்னுடன் இல்லையே என்ற ஏக்கத்தில் வயதான பெற்றோர் எதிர்பார்த்துக் காத்திருப்பது குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக ‘வீடு’ என்ற சிறுகதை அமைந்திருக்கிறது.

தென்னந்தோப்பா? மகளின் திருமணமா? என்ற நிலை வரும்போது மகளின் திருமணம்தான் முக்கியம் என குரும்பை (தென்னங்குருத்து) விட்ட தென்னந்தோப்பையே விற்கும் நிலை என பெற்ற தகப்பனின் பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறார். குத்தகைக்காரனுக்கெல்லாம் கருணை காட்டிய தன்னுடைய கிணறு தோப்பு தன்னிடம் கிடைத்தபிறகு கிணற்றுத் தண்ணீர் வற்றிப் போனதை நினைத்து சின்னச்சாமி கவுண்டர் மனம் வருந்துவதை வாசகனையும் வருத்தப்பட வைத்து காட்சிப் பதிவுகளாகியிருக்கிறார் ஆசிரியர்.

தன்னுடைய இருமகள்களையும் ஒன்றாகப் பார்க்கும் தாய்ப்பாசத்தை பட்டுச்சேலையின்மூலம் சொல்லிவிட்டுப் போகிறார் ஆசிரியர்.

தலைமுறை இடைவெளியின் காரணமாக கணவன் மனைவி இடையே அன்றாடம் நிகழும் ஊடலையும் அதன்பிறகு நிகழும் கூடலையும் ‘புரிந்துகொள் மனமே’ என்ற சிறுகதையின்மூலம் பக்குவமாக கதை சொல்லியிருக்கிறார்.

‘சிவகாமிப் பாட்டி’ என்ற சிறுகதையில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள நெகிழ்ச்சியான பாசஉறவை உணர்த்துகிறது.

பண்ணையாரிடம் வேலைபார்க்கும் சின்னச்சாமி கூலித்தொழிலாளியாக படும்துன்பத்தை ‘பிழைப்பு’ சிறுகதையின்மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சிறுகதையை படித்த போது நான் சிறுவயதில் படித்த பேரறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை என்ற சிறுகதையை நினைவுபடுத்துகிறது.
கட்டபஞ்சாயத்தின் மூலம் நீதியை புதைக்கும் காட்டுமிராண்டிகளின் நிலையை, நீதிமன்றத்தின்மூலம் நீதி கிடைக்கும் என்ற விடயத்தையை கதாப்பாத்திரங்களின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

குரும்பை – மொத்தத்தில் மண்வாசனையுடன் குடும்ப உறவுகளைச் சொல்லும் பதிவுகள்.